Tuesday, April 03, 2018

மாசி மாத வற்றல்,வடாம் கதையின் ....12 ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாசி முடிந்து பங்குனியும் பிறந்தாச்சு. காரடை நோன்பின் அடையாளமாக
 கன்னிப் பெண்கள் கழுத்தில்  மஞ்சள் நூல் பளிச்சிட்டது.
வெய்யில் அதிகரிக்க, முஹூர்த்த நாள் அழைப்புகளும் வரத்துவங்கின.

சீர் பக்ஷணங்கள் செய்வதில் ஜயம்மா மிகச் சிறந்தவர்.
ஒரு சில அழைப்புகளை ஏற்றுக் கொண்டார்.

பருப்புத் தேங்காய் வித விதமான உட்பொருட்கள் உள்ளே வைத்து செய்வதில் கெட்டிக்காரர்.
முந்திரிப்பருப்பு, பாதாம்,நிலக்கடலை, மனோகரம், மிட்டாய்கள் பருப்புத் தேங்காய்
என்று ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தன.,

செங்கமலம், வேதா இருவரையும்  ,பருப்புத்தேங்காய் கூட்டில்
அழுத்தி வைக்க மட்டும் சொன்னார்.
வெய்யில்,வேளையில் அடுப்படியில் அவர்களை உட்கார் வைக்க
மனமில்லை.

சீனு , மந்தைவெளிக்குச் சென்று கோதண்டராமனையும்
 பத்ரிக்கு வர அழைப்பு விடுத்தார்.
மேற்கொண்டு கல்யாண கான்ட்ராக்ட்களை எடுத்துக் கொள்ள வில்லை.
அவருடைய தம்பி கண்ணனும் இதே தொழிலில் பக்கத்து வீட்டில் இருப்பதால்
பெண்களைத் தனியே விடும் சங்கடமும் இல்லை.

வைகாசி பிறந்தவுடன் எல்லோரும் கிளம்புவதாக ஏற்பாடு.
மாதுவுக்கு ஜட்ஜ் மீனாக்ஷிசுந்தரம், தன் கோட்டாவில், ஜெயின் காலேஜில்
இடம் வாங்கிக் கொடுத்தார்.
எதிர்காலத்தைப் பற்றிக் கவலையிலேயே இருந்த அவனுக்கு,
முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.

ஜட்ஜ் வீட்டில் அவனுக்குக் கார் ஓட்டப் பயிற்சிக்கூடத்தில் சேர்த்து விடுவதாக
அழைப்பு வந்தது. எளிதில் கற்றுக் கொண்டு பரீட்சையில் தேர்ச்சியும்
பெற்றான்.
கீதுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
முதல் தடவை ஒரு வண்டி ஓட்டிக் கொண்டு வந்த மகனைப் பார்த்துப் பூரித்துப் போனாள்.

ஜட்ஜ் வீட்டில் ட்ரைவராக இருந்த வயது முதிர்ந்த பழனி ஓய்வு பெறவும்
அந்த வேலையில் மாது அமர்ந்தான்.
காலையில் ஜட்ஜ் மாமாவுக்கு கடற்கரை நடைப் பயிற்சிக்கும், மாலையில்
அந்த வீட்டு மாமியின் ,கோவில், தோழிகள் வீடு என்று அழைத்துப் போவதற்கும் அவனுக்கு
 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.
மயிலை வீதிகள் நெரிசல் இல்லாமல் இருந்த காலம் அது.

வைகாசி பிறப்பதற்கு முன்பே ,ஜயம்மா,கீதா,சீனு மூவரும் கோதண்ட ராமன்
வீட்டுக்குப் போய், அவரது தங்கையிடம் மாது அங்கு வந்து  தங்க அனுமதி கேட்டார்கள்.
அத்தைக்குக் குழந்தைகள் இல்லை.
வீடும் மூன்று அறைகளோடு காற்றோட்டமாக இருந்தது.
மாது வந்தால் தனக்குத் துணையாக இருக்கும். தொந்தரவில்லை
என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

ஊருக்குக் கிளம்பும் நாள்., சீனு ,மாதுவிடம்,ஆயிரம் ரூபாட்த் தனியாகக் கொடுத்து,
அத்தைக்கு வேண்டும் என்கிற காய்கறி, வீட்டு பொருட்கள் எல்லாம் சொல்லாமலயே வாங்கி வைக்குமாறு சொல்லிக் கொடுத்தார்.
 இத்தனை பணம் எதுக்கு மாமா என்ற மாதுவிடம், அவசரத்துக்கு வைத்துக் கொள்.
இந்தியன் பாங்க் அங்க பக்கத்துல இருக்கு.  அழகாக இரண்டு பாண்ட், சட்டை தைத்துக் கொள்.
 நன்னு ஜான் டெய்லர் அளவாகத் தைப்பார்.
லஸ் நல்லியில் துணி வாங்கி தைக்கக் கொடு.
இரண்டு டவல் உடம்பு துடைக்க வாங்கிக்கோ.
கர்சீஃப் ஒரு டஜன் இருக்கட்டும். குளிக்கிற சோப், துணி தோய்க்க சோப்
,நல்ல வெள்ளை வேஷ்டி எட்டு முழத்தில் இரண்டு ரங்காச்சாரி கடையில் வாங்கிக்கோ
என்று வரிசையாகச் சொல்லும் மாமாவின் பரிவைக் கண்டு
மாதுவுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
மாமா,மாமி,அம்மாவை நிற்க வைத்து நமஸ்கரித்தான்.
நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
நீங்களும் நல்ல படியாகப் போய் வாருங்கள் என்றான்.

ஏற்கனவே அவனும் மாமாவுமாகக் கடைகளுக்குச் சென்று அனைவருக்கும் ஸ்வெட்டர்,ஷால்
என்று வாங்கி வந்திருந்தார்கள். ரயிலில்  சாப்பிடத் தோதாகச் சப்பாத்தி, இட்லி,
 வகையறாவை எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள், சாயந்திரம் கிளம்பும் க்ராண்ட் ட்ரங்க் வண்டியில் சீனு,ஜயம்மா, கீது ,கோதண்ட ராமன் தம்பதிகள் கிளம்பினார்கள்.
லஸ் வினாயகரிடம் விடைபெற்றே கிளம்பினார்கள்.

அன்று மதியம் கோதண்டராமன் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார்.
நிம்மதியாக வீட்டைப் பூட்டி சாவியை மாதுவின் கையில் கொடுத்துவிட்டு
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இரண்டு டாக்சியில் கிளம்பினார்கள்.

அத்தையும்,பெண்களும், மாதுவும் வண்டி கிளம்பும் வரை இருந்துவிட்டு
மகிழ்ச்சியாக விடை கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு நடந்த மகிழ்வான நிகழ்வுகள், நான்கு வருடங்களில்
நிறைவேறின. செங்கமலம், மாதவன் மனைவியானாள்.

வேதாவுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
இப்போதைக்கு இந்த உழைப்புக் குடும்பத்துக்கு விடை கொடுப்போம்.
கூட வந்த அனைவருக்கும் மிக மிக நன்றி. சுபம்.

9 comments:

ஸ்ரீராம். said...

சம்பவங்கள் திடீர் வேகம் பிடித்து பறந்து, சட்டென சுபம் போட்டு விட்டீர்கள். அழகிய இரு படங்களை இணைத்திருக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அட! மாசி மாத வற்றல் வடாம் கதை சுபமாய் முடிந்ததே!!! அதான் செங்கமலம் மாதுவின் மனைவியானது!!!

வாசிக்க வாசிக்க அப்படியே நிகழ்வுகள் விரிந்தது!! மனதில்! முகங்கள் தெரியாவிட்டாலும் மனம் உருவம் கொடுத்துவிடுமே!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,

வடகம்,வற்றல் சீசன் முடியவில்லை.
இருந்தாலும் ஜயம்மா,கீதுவுக்கு மாற்றம் தேவைப்பட்டது.

மாதுவுக்குக் கொஞ்சம் சுதந்திரம் தேவை. எல்லாவற்றையும் யோசித்து

தான் ,இந்த பத்ரி நாத் பயணத்துக்குத் தீர்மானம் செய்தார்.

திரும்பி வந்த பிறகும் இதே வேலை. இன்னும் உற்சாகமாகச் செய்யலாமே.
அதனால் தான் இப்பொழுது அவர்களுக்கு ஒரு ப்ரேக் கொடுத்துவிட்டேன்.

தினம் பார்த்த மனிதர்கள். நல்லவர்கள் .நன்றாக இருக்கட்டும்.
முடிவுரை அடுத்தாற்போல எழுத்கிறேன் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். நல்லது நடக்கப் போகிறது என்றால் சுபம் போடணும்.
கொஞ்சம் பாசஞ்சர் வேகத்திலிருந்து எக்ஸ்ப்ரஸ் வேகம் எடுத்துவிட்டது.
அடுத்த ஸ்டேஷனுக்கு வரும்போது அவர்களைப் பார்க்கலாம்
ஸ்ரீராம். பெண்கள் படம் போட்டது, மனைவிகள் தேடும் பையன் களுக்காக.

கரந்தை ஜெயக்குமார் said...

திடீரென்று முடிந்தாற் போன்ற உணர்வு ஏற்பட்டது
அருமை

நெ.த. said...

இரண்டு ஓவியங்களும் மிக அருமை. சீர் பட்சணங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். கதையும் உடனே முடிப்பதற்காக வேகம் எடுத்துவிட்டது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வரிசையாக செக் அப் கள் வருகிறது நெல்லைத் தமிழன்
பயணம் போல் போக வேண்டி இருக்கிறது.

பெண் தன் வேலையை நிறுத்திவிட்டு அழைத்துப் போகிறாள்.
டாக்டரோ முதுகு வலிக்கும் படியாக எதையும் செய்யாதேர்கள் என்று
கட்டளை இடுகிறார்.

சின்னச் சின்ன பதிவாக போடலாம் என்று பூர்த்தி செய்தேன். தவறாமல்
கருத்துரைத்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக் குமார் அலுத்துக் கொள்ளாமல் அம்மாவின் எழுத்தப் படித்ததற்கு மிக நன்றி. கதையா இல்லை. இன்னோரு கதை எழுதலாம் சரியா.