Monday, October 16, 2017

பயணங்கள் 3 ஆம் பகுதி

Nambi AARU.
 அனுமனை அன்பில் அரவணைக்கும் இராமன். ஸ்ரீவைகுண்டம்  கோயில் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிமை தழைக்கும் இனிய   தீபாவளி   வாழ்த்துக்கள்.   பயணங்கள் 3 ஆம் பகுதி
++++++++++++++++++++++++++++++++++
வண்டியை ஓட்டிய மாயாண்டி, எங்களுடையப் பிந்தியப் பயணங்களுக்கும் வந்தார்.
சுகமாகப் பயணம் செய்ய அவருடைய  ஓட்டுதலும், நகைச்சுவை உணர்வும் காரணம்.
 தாத்தாவிடம் அளவில்லாத மரியாதை.
உள்ளே  திண்ணையில் வந்து படுத்துக் கொள்ளப்பா என்றாலும் வரமாட்டார்.
வண்டியிலும் படுக்க மாட்டார். கோவிலில் போய்ப் படுத்துக்கொண்டு நம்பி ஆற்றில் குளித்துவிட்டு, 
white and white dress போட்டுக் கொண்டு வந்துவிடுவார்.
இத்தனை அன்பு,மரியாதைக்கு அவருடைய
நல்ல குணமும் மதுரை அக்காப் பாட்டியின்
 கரிசனமும் தான்
காரணம்.
 குறுங்குடிப் பாட்டி, அவர் பெயரே அதுதான்
 தன் தோழியைப் பார்க்கவந்துவிட்டுக்
கை நிறைய முறுக்கு, திரட்டிப்பால், எல்லாம் கொடுத்து,
அதைச் சேமிக்க ஒரு வெண்கலப்
பானையும் கொடுத்துவிட்டுப் போனார்.
அடுத்த நாள் பயணத்துக்கு அது உதவியது.
 ஸ்ரீவைகுண்டம் போனதும் தாத்தா  சென்றது தான் போஸ்ட்மாஸ்டராக இருந்த
தபால் அலுவலகத்துக்குத்தான்.
 அங்குதான் ரிடயரானதும். அப்பாவும் ,சித்தப்பாவும்
தாங்கள் அங்கு அனுபவித்த ,
செய்த லீலைகளை மீண்டும் சொல்லி மகிழ்ந்தார்கள்.
 அங்குதான் அத்தைகளுக்குப் பிரசவங்கள் நடந்ததாம்.
தாத்தாவிடம் புது பென்சில் கேட்க பயந்து  கொண்டு,
வாசலில் இருந்த தூணைச் சுற்றிச் சுற்றி வருவாராம் அப்பா.
அத்தை எனக்குச் சொல்லி இருக்கிறார்.
 லக்ஷ்மி அத்தைக்கு  மனசு கேக்காமல் ,சிபாரிசு செய்து
இன்னோரு பென்சில் வாங்கித்தருவாராம்.
 அவ்வளவு பயம் முத்தண்ணாவிடம். ஆமாம் அப்பா ,சித்தப்பாக்களுக்கும் தாத்தா
முத்தண்ணா தான்.
அதே போல ராஜகோபாலச் சித்தப்பா,
பரிட்சைக்குப் படிக்கும் மும்முரத்தில் , தூக்கம் கண்ணைச் சுழற்ற
 பக்கத்தில் இருந்த அரிக்கேன்   விளக்கின் மேல் சாய்ந்து கன்னம் முழுவதும் சுட்டுக் கொண்டாராம். இது அப்பா சொன்னது.
படிப்பவர்களுக்குச் சந்தேகம் வரலாம், இது கோவில் பயணமா ,
இல்லை வாழ்க்கைப் பயணமா என்று..
இரண்டும் என்று வைத்துக் கொள்ளலாமே.
பேசி மகிழ்ந்துகொண்டே கோவிலைச் சென்றடைந்தோம்.
தாத்தாவுக்கு அங்கே தனி மரியாதை.
 ஒவ்வொரு சிற்பமாகத் தன் கைத்தடியினால் சுட்டி,
எங்களுக்குக் கதை சொன்னது நினைவுக்கு வருகிறது.
என்ன கதை என்று கூகிளாரிடம் தான் கேட்க வேண்டும்.

16 comments:

ஸ்ரீராம். said...

என் பாஸின் சித்தப்பா பெயரும் ராஜகோபால்! அவர்கள் வீட்டிலும் ஒரு முத்தண்ணா உண்டு. பெரியப்பா! வாழ்க்கைப் பயணத்தின் பல பாதைகளில் கோவில் பயணமும் ஒன்று.தொடருங்கள் அம்மா.

நெல்லைத் தமிழன் said...

ராமன் அனுமன் சிற்பம் அருமை. பயணம், அதைத் தொடர்ந்து எழும் நினைவுகள் ரசனையாகத்தான் இருக்கிறது.

உங்களுக்கு எங்களின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பூ விழி said...

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்
பயணங்களில் பயணிக்கவில்லை இன்னமும் வருகிறேன்

Geetha Sambasivam said...

ராமன் மனதைக் கவர்ந்தான். எனக்கும் ராஜகோபாலப் பெரியப்பா உண்டு. பயணம் இனிமை எனில் சிறுவயதுப் பயணம் மிக மிக இனிமை! இவ்வளவு நுட்பமாகச் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களே!

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம்.நினைவுப் பயணம்.
யாதோன் கி பாராத். நன்றி ராஜா.
இனிய தீபாவளி இன்பம் கொண்டு வரட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அக்காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மரியாதை தந்தனர், உண்மையான நேசப் பரிமாற்றம் இருந்தது.இப்போதெல்லாம் அதுபோன்றவற்றை நினைத்துப் பார்க்கமுடியவில்லை...இனிய தீபாவளி வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நானும் உங்களை நெ. த .என்றே அழைக்கட்டுமா.
இதெல்லாம் தான் நம்மை ஒன்று சேர்க்கின்றன.
ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு வீட்டிலும் நினைவுகள் ஏராளம். அதைச் சொல்பவர்களும் அன்று இருந்தார்கள். தீபாவளி இனிமை சேர்க்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி,
நிதானமாக வாருங்கள். உங்கள் பதிவுகளின் அருமை பிரமிக்க வைக்கிறது என்னை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, தாத்தா நிறைய புத்திமதி சொல்வார்.
பாட்டி அரவணைத்துக் கதை சொல்வார்.
அம்மாவோட அம்மாவும் அப்படியே.
அதனால் தான் எழுதுகிறேனோ என்னவோ.
நன்றி மா.

Angel said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
நீங்கள் சொல்வது மிக உண்மை.
இனி வரும் காலம் நலமாக இருக்க வேண்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், நன்றி மா. தீப ஒளியில் உலகம் குறை தீரட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: தாமதமாக வந்ததால் தீபாவளிக்கு வாழ்த்த முடியாமல் போனது. தீபாவளி நன்றாக ந்டந்திருக்கும் என்று நினைக்கிறோம் வல்லிம்மா. பயணம் என்றால் சாலைவழிப் பயணம் மட்டுமா என்ன வாழ்க்கையும் பயணம் தானே! அருமையான நினைவுகள் கூடிய மிக மிக அன்பான அக்காலத்துப் பெரிய குடும்பம்!! கண் முன்னே விரிகிறது. தொடர்கிறோம் வல்லிம்மா

கீதா: துளசியின் கருத்துடன்....வல்லிம்மா நீங்க அப்போ மலைநம்பிக் கோயிலுக்குப் போகலையா?படத்தைப் பார்த்ததும் மலைநம்பிக் கோயில் அருகே உள்ள ஆறு மற்றும் சுனை போல் இருக்கிறது. இனிதான பயணம் தங்களின் இரு பயணுமே...தொடர்கிறோம் அம்மா..

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் வீட்டில் கூட முத்தண்ணா தாத்தா, முத்தாதாத்தா என்று அழைக்கப்பட்ட தாத்தாக்கள் இருந்தார்கள்...குறுங்குடி சென்ற தலைமுறை வரை அந்தப் பெயர் வந்தது அதாவது என் தலை முறை வரை...நம்பி என்ற பெயரும்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி ,
வீட்டுக்கு மூத்தவர் முத்தண்ணா ஆகிவிடுகிறார்.
அம்மா வழிப் பாட்டியின் அண்ணாவும் முத்தா மாமா தான்.
உங்கள் இருவரின் அருமையான கருத்துகளும் என்னை
தாத்தா பாட்டி நினைவில் மூழ்கடிக்கின்றன.
ஆமாம் பெரியவர்களின் பாதுகாப்பில் மகிழ்ந்திருந்த நாட்கள்....
இத்தனை வருடங்கள் ஆகியும் அதிகாலைப் பட்சிகளின் ஒலி,
அப்போதிருந்த பசுமையான வயல்கள், பெரிய பெரிய மரங்கள்,
சரேலென்று ஏறி இறங்கும் பாதை ஒன்றும் மறக்கவில்லை.

அன்பு கீதா,
மலை நம்பிக் கோவிலுக்குப் போனோம். ஒரு கோவிலையும் விடவில்லை. நடுவில் ஒரு ஆறு போல் ஒன்றைக் கடந்தது மாதிரி நினைவு.
நீங்கள் சொன்ன சுனை அதுதானோ., நம்பி பெயர் மாதிரி மங்கை பெயரும் உண்டு.