Blog Archive

Sunday, October 15, 2017

பயணங்கள் 2 ஆம் பாதம்

😊 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆமாம் .செகண்ட்  லெக் னும் வைத்துக்கொள்ளலாம். மீன ராசிக்குப் பாத ரஜ்ஜு என்பதால் பாதம் 2 என்றும்  வைத்துக் கொள்ளலாம்.😊
அதிகாலை 4 மணிக்கு எல்லோரும் தயார். நானும் தம்பிகளும்  பேச்சிலேயே தூங்கி விழித்தோம். யார் முன் ஸீட். யார் பின் ஸீட் இல்லை என்றால்  ட்ரங்க்  என்று சொல்லப் படும் டிக்கி.
இந்த வண்டியில் அந்த வண்டிக்குள்ளேயே இருந்ததால், அப்பா உணவுப் பொருட்களையும் எங்களையும் ஒரு ஜமுக்காளம் விரித்து உட்கார வைத்தார்.
 எங்களுக்கு முன் இருந்த இருக்கையில் அம்மா,சித்தி,பாட்டி,அப்பா.
வண்டி ஓட்டுநர் மாயாண்டி. அவர் அருகில் தாத்தாவும் சித்தப்பாவும்.
78 வயசில் தாத்தா மிக்க  கம்பீரமாக, வெள்ளைப் பஞ்சகச்சமும், வெள்ளை முக்கால் கை  சட்டையுமாக   இருப்பார். அவருக்கு என் முதல் தம்பி முரளியை ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்.

அடக்கமே உருவெடுத்து வந்த ராகவன் இவன் என்பார்.
நான் வாயாடி, சின்னவன் ரங்கனுக்கு விஷமம்
நாங்கள் இந்த லேபில் 😀😀 எல்லாம் தட்டிவிட்டு எப்போதும் போலவே இருப்போம்.
இந்தப் படமும்  அந்தப் பயணங்களில் எடுத்ததுதான்.
 அன்று  பயணம் எடுத்த நேரம்   6 மணியாவது இருக்கும்.
திரு நெல்வேலியில் உறவினர் வீட்டுக்குப் போய் விட்டு, நேரே திருக்குறுங்குடி சென்றுவிட்டோம்.
அப்போது  தாத்தாவீடும் அவரது தம்பி வீடும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. இருவீட்டுக்கும் ஒரே கிணறு.
முதல் முதலில் அது போல ஒரு கிராமத்துவீட்டைப் பார்ப்பது மிக வேடிக்கை..

வீட்டு வாசலில் திண்ணை.
உள்ளே பெரிய கூடம். அதை அடுத்து உரல், ஆட்டும்  உரால், மாவரைக்கும் யந்திரம். ஒரு பக்கம் கிணறு. அதில் ஒரு தடுப்பு.
தடுப்புக்கு அப்பால்  தாத்தாவின் தம்பி வீட்டு  சகடை  உருளும் சத்தம்.
தாத்தாவின் தம்பி இறந்துவிட்டதால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார்கள்.
பாட்டி முகத்தில் இருந்த ஆனந்தம்  சொல்லி முடியாது.

அப்பாவும் சித்தப்பாவும் தாங்கள் விளையாட்டுத் தோழர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற யோசனையில்.
 புழக்கடையில் முருங்கை மரம், கீரைப் பாத்திகள், கொய்யா மரம்
எல்லாம் இருந்தது.
பாட்டியிடம் பயணக்களைப்பே இல்லை.
சீக்கிரமாக அடுப்பை மூட்டி,  விசாரிக்க வந்திருந்த தன தோழிகளிடம் சொல்லிப் பாலுக்கு ஏற்பாடு செய்தார்.
இரவு   சாப்பாட்டுக்கு நாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பண்டங்கள் செலவாயின.
பாட்டி   ,வழக்கம் போல்  எங்கள்  அனைவருக்கும் சேர்த்து
கலந்து கொண்டு  வந்து , தாங்கள் வளர்ந்த கதை, அக்கா,தங்கைகள் பற்றிச் சொன்னபடியே  உணவுஉட்டினார்.
 மறு  நாள் காலை அழகிய நம்பியைத் தரிசிக்கத் தாத்தா அழைத்துச் சென்றார். வீட்டுத் துளசியும் கற்கண்டும் தான் கோவிலில் கொடுப்பார். தேங்காய் உடைக்கும் வழக்கமே கிடையாது. எனக்கு அந்தக் கோவில் படிகள் நினைவில் இருக்கின்றன . பெருமாள் உருவம் கூட நினைவில் இல்லை.பெரிய பெரிய சிலைகளும் ,யானையும்
வீட்டுக்கு வருகை தந்த  நம்பி மாமாக்களும்,
அழிக்கதவு போட்ட பெரிய வீடுகளும்  இது எந்த ஊருக்கும் பொருந்தும்  மனதில்
வந்து போகின்றன. அடுத்த நாள் ஸ்ரீவைகுண்டம் பெருமாள்.
பிறகு நாங்குநேரி,





17 comments:

ஸ்ரீராம். said...

வாசல் திண்ணை. உள்ளே பெரிய கூடம். இரண்டு வீடுகளுக்கும் பொதுவானக்கிணறு... வர்ணனைகள் வீட்டை கண்முன் நிறுத்துகின்றன. தாத்தாவின் கம்பீரமும் மனக்கண்ணில் தெரிகிறது.

நெல்லைத் தமிழன் said...

படிக்க ரசனையாக இருக்கிறது. நானும் என் கிராமத்துக்கு நீண்ட வருடங்கள் கழித்துச் செல்வதுபோல் இருக்கிறது.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு கீழந்த்தம் சென்றபோது அந்த ஊர் வெகுவாக அந்நியப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். இந்த வீட்டிலா இத்தனை வாண்டுகள் இருந்தோம், இந்தத் தெருவின் புழுதியிலா இளமைக்காலம் கழிந்தது என்று தோன்றியது. தாமிரவருணியைப் பார்த்த மாத்திரத்தில் வருத்தம் தோன்றியது.

நல்லவேளை.. நீங்கள் சிறுவயது பயணத்தை நினைவுகூறுகிறீர்கள். இப்போது சென்றால் அதே உணர்வைப் பெற முடியுமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பழைய வீடுகளில் உள்ள அழகே தனி. குறிப்பாக திண்ணை. இப்போதெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் அனைத்தையும் தொலைத்துக்கொண்டுவருகிறோம்.

Geetha Sambasivam said...

அற்புதமான நினைவுகள். சின்ன வயசுப் பயணம் எப்போவுமே மறக்க முடியாமல் இருக்கும். அதுவும் உடன்பிறந்தோரிடம் பேசிக் கொண்டும், வம்பு வளர்த்துக் கொண்டும் போகும்போது கேட்கவே வேண்டாம்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா அருமையான நினைவுகள்...என்னையும் ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டீகள்...நீங்கள் இங்குக் கொடுத்திருப்பது போல் கருப்பு வெள்ளை, சேஃபியா படங்கள் வீட்டில் இருக்கின்றன. அத்தைகள் பாட்டி, பாட்டியின் மாமியார் அதான் தாத்தாவின் அம்மா...பாட்டியும் தாத்தாவும் கஸின்ஸ் தான்...பாட்டியின் அம்மா , பாட்டியின் சித்தி என்று பல படங்கள்...இருக்கின்றன..

தங்களது நல்ல நினைவுகளின் தொகுப்பு.....

நடிகை மேனகா கூடத் திருக்குறுங்குடிதான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வீட்டின் வர்ணனை அருமை வல்லிம்மா....அப்படியே அந்த வீடு மனதில் வந்து போனது...

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் ,பகல்வேளையில் கூட இருட்டாக இருந்தது.
அரிசி மூட்டை அடுக்கும் அறை ஒன்று இருந்தது.
பூச்சி ஏதாவது இருக்கும் என்று அப்பா அனுமதிக்கவில்லை.
இப்போது அந்த வீடு இல்லை. யாருக்கோ விற்றாகிவிட்டது. நிலங்களும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்,
அதற்கப்புறம் அங்கே போகவே இல்லை.
நல்ல நினைவுகளே இருக்கின்றன.
மற்ற இடங்கள், சென்னை பாட்டிவீடு, திருமங்கலம்
எல்லாமே சிறிய இடங்களாகவும்,
முழுவதும் புழுதி படிந்த நெருக்கம் நிறைந்த
இடங்களாக இருந்தன. நாம் வளர்ந்து
காலங்கள் மாறி ,இதுதான் வாழ்க்கை.
இப்போது திருக்குறுங்குடி திரு வேணு ஸ்ரீனிவாசன்
அவர்களின் முயற்சியில் வெகு பிரமாதமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு. ஜம்புலிங்கம். காலப் போக்கில் எல்லாம் மாறிவிட்டது. இனி பால்கனிதான் திண்ணை. இப்படிப் பேசிக் கொள்கிறோமே இதுதான் ஆற்றங்கரை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. ஒரு எதிர்பார்ப்பு இல்லை. வெறும் அன்பு மட்டுமே காண்பித்த பெரியவர்கள்.
அவர்களுக்கு அடங்கிய குழந்தைகளாக நாங்கள். இப்பொழுது போல கையில் செல்ஃபோன் இருந்தால் தான் வெளியே கிளம்பும் குழந்தைகள் மாதிரி இல்லை.

இந்த நவ நாகரிக உலகம் என்னை மிரட்டுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
உங்கள் வேரும் அங்கிருந்து ஆரம்பிக்கிறதா. என்ன ஆச்சர்யம்.
என்னால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்பொழுது அங்கே போனால் எந்த இடம் என்று சொல்லமுடியாது.

கோவிலுக்கு அடுத்த தெரு.திருக்குறுங்குடியில் அத்தனை
பேரும் ஒன்றுக்கொள் ஒன்றாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
நானும் என் ஒன்றுவிட்ட அத்தை மகனையே மணந்தேன்.
அம்மா கீழ நத்தத்தைச் சேர்ந்தவர். அப்பாவுக்கு உறவில்லை.
உங்கள் படங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறது.மிக நன்றி மா.. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

நடிகை மேனகா... ராமனின் மோகனம் பாட்டில் வருவாரே.
அழகான முகம். புது செய்தி. நன்றி கீதா மா.

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லைத் தமிழனும் கீழநத்தம்...

என் தாத்தாவின் பெற்றோர் முதலில் திருவனந்தபுரத்தில்தான் இருந்திருக்கிறார்கள்...வேர் திருக்குறுங்குடி என்றாலும்...தாத்தா அங்கும் வளர்ந்திருக்கிறார்...அப்புறம் இறுதியில் திருக்குறுங்குடி...என் அம்மா சைடும் கீழநத்தம் வேர் உண்டு...

எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது வல்லிம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ராமனின் மோகனம் பாட்டில் வரும் அவரேதான்...வல்லிம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமேன்னு பாடத்தோன்றுகிறது கீதா.
தாத்தாவும் திருக்குறுங்குடியில் நிறைய நாட்கள் இல்லை.
பெற்றோர் தவறியதால் சித்தியுடன் வளர்ந்திருக்கிறார்.
சித்தியின் குழந்தைகளுக்கு இவர் முத்தண்ணா.
கல்லிடைக்குறிச்சியில்.
திருவனந்தபுரத்தில் உறவினர் உண்டு.
சித்தியின் பெண் மரக்கடை சுந்தரம் ஐய்யங்காரை மணந்து
TVS சம்பந்தம் ஆனது.
பிற்காலத்தில் அனைவரும் மதுரை வந்து சேர்ந்தனர்.
மிகமிக நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் விவரனங்களை அறிந்து அப்பாவிடம் சொல்லிக் கேட்கிறேன் வல்லிம்மா...

மிக்க நன்றி தீபாவளியில் பிசியாக இருந்து எப்படியோ உங்கள் அடுத்த பதிவுகளை மிஸ் செய்துவிட்டோம் இதோ தொடர்கிறோம்

கீதா

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு துளசி,
கோவில் ஜீயருக்கு என் தம்பி நினைவிருக்கலாம்,
அவன் பெயர் ராகவன்.