Blog Archive

Friday, April 29, 2016

இலை உதிர் காலம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

              அன்பு, முயற்சி, பொறுமை,அஞ்சாமை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டு என் தாய் மாமா  ஸ்ரீ. கீழ நத்தம் வீரராகவன் ராமஸ்வாமி.
   படிக்காத புத்தகங்கள் இல்லை.
அறியாத ஆங்கிலம் இல்லை.  நட்புகள்  அனேகம்.
இசை ரசிகர். பாடவும் பாடுவார். என்னைத் தூளியில் போட்டு சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடினதை என் அறுபது வயதில் சொல்லி சிரிக்கவைத்தவர்.
  குடும்பத்தில் அத்தனை நபர்களுடைய பிறந்த நாள்,தலைமுறை விவரம் எல்லாம் பதிந்து வைத்திருந்தார்.
இந்த எண்பது வயதுக்காரர் குடி இருந்தது மூன்றாவது மாடியில். எனக்கோ
மாடியேறத்தடை. தொலைபேசியில் முடிந்தவரை பேசி இருந்தேன். கால மாற்றத்தில் வெளி நாடு வந்ததில் அதிகத் தொடர்பில்லை.
வாய்த்த மனைவியோ சொக்கத்தங்கம்.   அயராமல் உழைப்பவர்.
பெற்ற பிள்ளைகள்  விளையாட்டுத்துறை வல்லுனர்கள்.
விமர்சகர்கள். பத்திரிகைகளில்  எழுதுபவர்கள்.
இந்த நல்ல குடும்பத்தை விட்டு
 புதன் இரவு இறைவனடி ஏகினார்.
அனாயச மரணம்.  மூச்சு விடமுடியவில்லை என்று சொல்லி , ஆம்புலன்ஸ் வருமுன்
மறைந்துவிட்டார்.  நாங்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
 அஞ்சலிகள் அன்பு மாமா.


Sunday, April 24, 2016

கோடைகாலம் தென்றலாக ஒரு பிரார்த்தனை

நயாகரா 
ரைன் நதி இரவு நேரத்தில்






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நீரோட்டம் படங்கள் கொஞ்சமாவது சென்னையின் தாகத்தைத் தணிக்கட்டும். சீதோஷ்ணம் உச்ச
கட்டத்தில் 106 டிகிரிக்குப் போனதாகப் படித்தேன்.

உயிர்கள் படும் அவஸ்தையை எண்ணிக் கலக்கம் வருகிறது.

சீக்கிரம் மழை வரட்டும். இல்லை வெப்பமாவது தணியட்டும்.
Add caption
Add caption
ரைன்  அருவி.

Friday, April 22, 2016

ஏதோ நினைவுகள்...2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 #வாழ்வெனும்சக்கரம்
++++++++++++++++++++++++++++++++

 பத்து வருடங்கள் மேலே
பத்துவருடங்கள்  மெல்ல மெல்ல
கீழே  வருவதும் போவதும் தெரியவில்லை.

  ஆனாலும் பெரியவர்கள் அனுபவித்தது எல்லாம் எனக்கும்
நடப்பது போலத் தோன்றுகிறது.

   அவர்களுக்கு அளவிட முடியாத  பொறுமை இருந்தது.
சஹஸ்ர நாமம், பாதுகா சஹஸ்ரம்,  ரகுவீர கத்யம்
நாலாயிர திவ்யப்  பிரபந்தம் எல்லாம் கரதலைப் பாடமாக இருந்தது.
 நானோ  காலையின் இரண்டு மணி நேரம்
கடவுளுக்கு ஒதுக்கிவைத்துவிட்ட  திருப்தியில்
முக நூல்.வாட்ஸாப், வலைப்பதிவு என்று வந்துவிடுகிறேன்.

பெண் தன் குழந்தைகளையும் ,கணவரையும் கவனித்து அனுப்பிவிட்டு,தனக்கான
வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
யாராவது  கண்டிக்க ஆளில்லை என்றால் கிழங்கள் இப்படித்தான் போல இருக்கிறது.

Thursday, April 21, 2016

ஏதோ நினைவுகள்....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பாராட்டு, மனதாரப் பாராட்டப் படுவது சில உயிர்களுக்கே   வாய்க்கும்.

அதில் யாரும் என் எங்கள் சிங்கத்துக்குக் குறை வைக்கவில்லை.

1983 லிருந்து தோட்டம் போட ,மண்ணைக் கிளறி,
கடப்பாறையால் தோண்டி,
நீர் பாய்ச்சி  வீட்டுமுன் இருந்த  கட்டாந்தரையைப் பசுமையாக்கினார்.
வித விதமான பூக்களின் விதைகளை வாங்கித் தூவி

பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக
அமைந்த தோட்டம் விரிவடைந்தது.
 இரண்டு மாமரங்கள். தென்னை,வாழை என்று மரங்கள்.
செம்பருத்தி வகைவகையாக.
கருவேப்பிலை வானளவு உயர்ந்தது,.
அதைத்தவிர கள்ளி வகையறா.
பொன்சாயில் எலுமிச்சை, சப்போட்டா,ஆலமரம் எல்லாம் வளர்ந்தன. அதில் பழுத்த
சப்போட்டா அவ்வளவு இனிமை,.
மனம் கொள்ளாப் பெருமையுடன் அந்த செடிகளைப் பார்த்த வண்ணம் இருப்பார்.

ஏதாவது வெளி நாடுகள். போவது அவ்வளவு  இஷ்டமில்லை. செடிகள் வாடிப் போகும். இல்லை மழையில்  அழுகிவிடும் என்று பயம். தகுந்த ஆட்களைக் கண்காணிக்க வைத்துவிட்டுத்தான் அதுவும் எனக்காகக் கிளம்புவார்.
  சினேகிதர்கள் யாராவது வந்தால் ,எல்லாம் இவளுக்காகத் தான் நான் கிளம்பறேன் பா.
இதெல்லாம் என் குழந்தைகள். வேறு யாரும் பார்த்துக் கொள்ள முடியாது என்று மனமில்லாமல் தான்  கிளம்புவார்..

Monday, April 18, 2016

இறைவன் இருக்கின்றான்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  நான்கு வருடங்களுக்கு முன்  ஒரு பெரியவருக்கு மூளையில் ரத்தக் கட்டி வந்து அதை
 இஸபெல்லில் அற்புதமாக எடுத்த விதம். அவர் மனைவி துணைக்கு நின்றது.
நானும் சிங்கமும் முடிந்த உதவிகளைச் செய்தது எல்லாம் எழுதி இருந்தேன்.
அதற்குப் பிறகு பிரளயமாக வந்தவை பல.
அதே வருடம் சிங்கம் இறைவனடி சேர்ந்த போது
குடும்பத்தோடு வந்த அந்த முதியவர் குலுங்கி அழுதது என்னையே கலங்க வைத்தது.

நான் அவர்களைச் சமாதானப் படுத்த வேண்டிய நிலைமை.
ஆறு மாதங்கள் கடந்தது. நான் அமெரிக்கா வந்த சில நாட்களில் 
பெரியவரின் மனைவி இதய பாதிப்பில்  காலத்தைக் கடந்துவிட்டார்.

அதுவே ஆறாத சோகமாக இருக்கும் போது, அவரது மகன் சாலையில் விழுந்த
ஒரே காரணத்தில் நிமிடங்களில் இறைவனடி அடைந்து விட்டார்.57 வயதுக்கு 
சர்க்கரை கொடுத்த பரிசு.

அதையும் கேசவன் சரணங்களில்  விட்டுவிட்டார்.

பக்கத்தில்  வசித்து வந்த மகளும்  இதே துக்கத்தில் 
சர்க்கரை அளவு அதிகமாகி இரண்டு நாட்கள் முன் தாயார் பெருமாளைச் சேர்ந்துவிட்டார்.

80க்கும் மேல்  சிலவருடங்களைக் கடந்துவிட்ட பெரியவருக்கு இனி 
சோதனை எதுவும் வேண்டாம்.

யாருக்குத் துன்பம்  வந்தாலும் சுந்தரகாண்டம் படித்து
அவர்களுக்கு  நிம்மதி  கிடைக்கச் செய்வார்.
அதே ராமன் அவரைப் பார்த்துக் கொள்ளட்டும்.

நான் இங்கிருந்து அனுப்பவதெல்லாம் பிரார்த்தனைகளே.

Friday, April 15, 2016

ஸ்ரீராம நவமி வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ராமா தயாபரா.ஶ்ரீராமா கிருபாகரா
சீதா மனோகரா,தசரத ந ந்தன
கௌசல்ய குமாரா,அருமை சகோதரா
ஆஞ்சநேயனை அணைத்துக கரை ஏற்றினாய்.
எங்களையும் காத்தருள்வாய.
இன்று நவமி நாளைக் கௌரவிக்க வந்த எம்பெருமானே,
குழந்தை ராமா !!!!
என்றும் எங்களுக்குத் துணை இரு.

Wednesday, April 13, 2016

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  இன்னுமொரு வருடம் பிறந்து வருகிறது.
அனைவருக்கும் துர்முகி வருடம் இனிமையையும்,நோயில்லா வாழ்வையும்,
வளங்களையும் வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
 நல் வாழ்த்துகளும் ஆசிகளும் இல்லங்களை நிறைக்கட்டும்.

Friday, April 08, 2016

யுகாதி சிந்தனைகள்.................2003

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Rameswaram
yugaathi   Balaji

  2003  மார்ச் 23   யுகாதி
++++++++++++++++++++++++++++++++
2003 ஆரம்பத்திலிருந்து  ஒரே கோவில் மயம் தான். ஜனவரி மாதம் ராமேஸ்வரம், ஸேதுக்கரை,
நவபாஷணம் என்று வேண்டுதல் பிரார்த்தனைகள். பிள்ளைகள் இருவரின் திருமணம் சீக்கிரம் வர அனைத்துக் கடவுள்களிடமும் அப்ப்ளிகேஷன்கள்.
தம்பி ரங்கன்  அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அருமையாக  அழைத்துச் சென்றான்.

இறைவன் ஒரே வருடத்தில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறானே. 
என்று என் மேலேயே கண் பட்டுக் கொண்டென்.
அடுத்து   திருச்சி,ஸ்ரீரங்கம், சமயபுரம்,கும்பகோணம் என்று மாப்பிள்ளை பெண் முதல் பேரனோடு
ஒரு சுற்றுலா. 
என் பிறந்த நாளன்று சென்னை வந்து சேர்ந்தோம். சம்பந்தி வீட்டி ல் அருமையான சாப்பாடு அள்ளிக் கொடுத்தார்கள்.
அப்பொழுதும் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
 ஏதோ வேலை விஷயமாக  வெளியே இருந்தவன், தாமதாக வாழ்த்து சொல்வதாக வருத்தப் பட்டான். எங்கள் வீட்டுக் கடைக்குட்டி என்பதால் எல்லோரும் அவன் மேல் உரிமை எடுத்துக்கொள்வோம். 

மீண்டும் யுகாதிக்கு  திருப்பதி போவதாகத் திட்டம். அனைவரும் திருப்பதி கூட்டம் பற்றி பயமுறுத்தினார்கள்.
அன்று கூட்டமே இல்லை.
   சுகமே சென்று சுகமே வந்தோம். தனியாக  நின்று கோவிந்தனிடம் இரண்டு நிமிடம் ஒன்றும் பேசாமல்
கண்ணீர்   அர்ச்சித்து.  ,உண்டியலை சேவித்து  மகிழ்வுடன்  திரும்பினோம்.

மனம் கொள்ளா மகிழ்ச்சி.

அம்மா  சொன்ன ஜாக்கிரதையெல்லாம் கேட்டுக் கொண்டேன். 
விழாமல் திரும்பவா. அன்னிக்கு உன் ஜன்ம நட்சத்திரம். என்னுடன் நீ இல்லையே ந்னு நினைக்கவில்லை. பகவானுடன் நீ இருந்தது மகிழ்ச்சி என்று தொலைபேசியில் வாழ்த்தினாள்.

வாழ்க்கையின் அன்புகளையும் ஆதரவுகளையும் நினைக்கிறேன்.
எல்லோருக்கும் இனிய உகாதி வாழ்த்துகள்.

கூழாங்கற்கள் சிறுகதைத் தொகுப்பு..என் எண்ணங்கள்...1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எனக்குத் தெரிந்து புரிந்த வற்றை இங்கே கொடுக்கிறேன்.

திருகனவுப் பிரியன் எழுதி அருமையாக வெளிவந்திருக்கிறது
கூழாங்கற்கள்  சிறுகதைகளின் தொகுப்பு.
அனுப்பி வைத்த திரு ரத்னவேல் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

பெரியவர்கள் எழுதின அணிந்துரைகளும், திரு கனவுப்பிரியன் எழுதி இருக்கும் முன்னுரையும் என்னைக் கரைய வைத்தன.சிலபகுதிகளைப் பதிவிடுகிறேன்.


 எழுத்தாளர் திரு.கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் புதினம் ,திரு .ரத்னவேல் அய்யா
மிக முக்கியமாக திரு .ரத்னவேல் அவர்களுக்குதான் என் நன்றி துளசி.
என் ஸ்ரீவில்லிபுத்தூர் பந்தம் இத்தனை வருடங்கள் கழித்து என்னை வந்தடைந்திருக்கிறது.
தேவதா கீதா அவர்கள் புத்தகவிமரிசனத்தில் எப்பொது படிக்கப் போகிறேனோ என்று புலம்பியிருந்தேன். ஐயா அவர்கள் ,எனக்கு இன்பாக்ஸில் செய்தி கொடுத்து இதோ புத்தகமும் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய முயற்சி.
அவர் அதை மிக சுலபமாகச் செய்துவிட்டார். எந்த போஸ்ட் ஆஃபீசில் அப்பா வேலை பார்த்தாரோ
அதே போஸ்டாஃபீஸிலிருந்து எனக்குப் புத்தகம். அப்பாவின் ஆதரவாகவே
பார்க்கிறேன். N.Rathna Vel avarkaLukku en NanRikaLஅனுப்பி இங்கே வந்து விட்டது. முகவுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளை இனிதான் அணுக வேண்டும் கனவுபிரியனுக்கும் திரு.ரத்னவேல் சாருக்கும் மிக மிக நன்றி,

2,கூழாங்கற்கள்+++++++++++++2
முதல் கதை படித்து முடித்தேன். அந்தமடம் இல்லாவிட்டால் சந்தைமடம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையைச் சொல்வதாக இல்லை.

கருத்து வழுக்கிக் கொண்டு செல்லும் சிமெண்ட் ரோடு போல.
ஒரு அனாவசிய வார்த்தை இல்லை. நான் இதுவரை கண்டிராத மக்கள்.
முக்கியமாக அனைத்துக் கலைகளும் கற்ற ஒரு அரிய மனிதன். அவனை முழுவதும் பயன்படுத்திக் கொண்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியில் அனுப்பப் படுகிறான். அவனுக்குக்
கவலையில்லை. ஆயிரம் தொழில் அவன் கையில்.
எங்கு வேண்டுமானாலும் பிழைக்க வழி தெரியும்.





ஆனால் இந்தக் கருவை அழகாகக் கையாண்டிருக்கும் திரு கனவுப் பிரியனின்
கைவண்ணம் தான் அதிசயிக்க வைக்கிறது.வாழ்த்துகள்  .

கூழாங்கற்கள். .....3
அழகான கூழாங்கற்களை மகளுக்காகச் சேர்க்கும் இனிய
தந்தையின் வாழ்வு திசைமாறும் அழகை
அருமையாக வடித்திருக்கிறார். அயல் நாட்டில் வாழும் மக்களிடையே 
இயல்பாக இருக்கும் போட்டி,அது மாறும் விதம் எல்லாமே
நெகிழ்வு.
கூழாங்கற்கள் 4
+++++++++++++++++++++
திறமை வாய்ந்த தந்தையை பெற்ற மக்களின் கதை.
இப்படிக்கூட ஒரு தந்தை. அவருக்கான அருமையான மகன் கள்.
மிகவும் ரசித்த கதை.இது வரை அறியாத நடை களம்.
‪#‎கனவுப்பிரியன்‬

Monday, April 04, 2016

மாங்காய் எண்ணெய் மாங்காய்

 எண்ணெய் மாங்காய்  .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++இந்த ஊறுகாய்க்கு   எந்த மாங்காயும் பொருத்தம். ஊறு காய் போட்டபிறகு
 வெய்யிலில் எடுத்து   வைத்து வைத்து எடுக்கவேண்டும்.

கொஞ்சம் இளசு  கொஞ்சம் முத்தின வகையாக இருக்கும் மாங்காய்கள் ஆறு எடுத்துக் கொள்ளணும்.

நன்றாக அலம்பித் துடைத்துக் கொண்டு பிறகு துண்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
கையளவு தான் இதுக்கு.
ஐந்து அளவு மாங்காய்த் துண்டுகளுக்கு   ஒரு அளவு உப்பு பொடித்தது.
உப்பு அளவிற்கு ஒன்றேகால் அளவு மிளகாய்ப்   பொடி
முதலில் மாங்காய்த்துண்டுகளையும் உப்பு பொடியையும் கலந்து வைத்து விடவேண்டும்.
இரண்டு நாட்களில்   ஊறித் தண்ணீர்   விட்டு விடும் .

அடுத்து  அரைக் கிலோ எண்ணெய் அடுப்பில் வைத்துக் கடுகை
வெடித்ததும்,மிளகாய்ப் பொடி , வறுத்துப் பொடி  செய்த   மெந்தியப் பொடி
பெருங்காயம் வறுத்துப் பொடி  செய்தது, மஞ்சள் பொடி  6 ஸ்பூன் எல்லாவற்றையும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
அதே சூட்டோட , மாங்காயில் இருந்த உப்பு ஜலத்தை சேர்க்கவேண்டும்.மீண்டும் அடுப்பை ஏற்றி, சிறிய  உஷ்ணத்தில் பதினைந்து நிமிஷங்கள் வைத்திருந்து    தண்ணிர்  வற்றியவுடன்
அதில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு இறக்கிவிடவேண்டும்.
ஆறினவுடன் ஜாடியில்  சேர்த்துவிடவேண்டும்.
ஜாடி குளிர்ந்தவுடன் வேடுகட்ட வேண்டியது தான்.

இதற்குப் பராமரிப்பு கவனம் வேண்டும். நல்ல வெய்யில் வந்தவுடன் ,கிணத்து மேட்டிலோ இல்லை பால்கனியிலோ வேடுகட்டின துணியோடு வைக்க வேண்டும் .
நான் கு  நாட்களில் எண்ணெய் மாங்காய் ரெடி.


















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்