Blog Archive

Monday, March 02, 2015

சில சில் நினைவுகள் 4

 இ னிதாக வாழ வேண்டும்            1966  ஏப்ரல்  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
 ஏப்ரில்  மாதம்  வந்தது.  சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்தது.   சேலம்   இதுவரை போகாத ஊர்.    எப்படி இருக்குமோ தெரியாது. அதற்குள்   சென்னையிலிருந்து மாமனாருக்கு  உடல் நலம் சரியில்லை  என்றும்  இருவரையும் உடனே புறப்படச் சொல்லித் தொலைபேசி அழைப்பு வந்தது.                                                                                                                                                                                                                                                                           ரயில்   டிக்கட்கள்  வாங்கி  வந்துவிட்டோம். மாமனாருக்குக் கழுத்தில்  ஏதோ கட்டி வந்து  அறுவை சிகித்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.           அது  வேறுவிதமாகத் திரும்பலாம் என்ற ஐயத்தில்  இவரை அழைத்திருக்கிறார்கள்.                                                                                                                                                                                                                                                            நாங்கள் சென்ற அடுத்த நாள்  ஆபரேஷன்.    மாமியார் மாமனாரோடு    அடையார் கான்சர் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். கூடவே  இவரும்.   அவ்வளவு பெரிய வீட்டில்    நானும் பாட்டியும் தாத்தாவும் தான்.  மாடிப்படி வளைவில்  ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அதன் உட்புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு   வெளியே  தொலைவில் தெரியும் சாலையைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.


                                                          நான்கு மணி நேரம் கழித்து  அழைப்பு வந்தது.   ஒரு பெரிய கிரிக்கெட்  பந்து அளவில் கட்டி எடுக்கப் பட்டதாகவும்                ஆனால் அது கான்சர் கட்டி இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆஜிப் பாட்டி பகவான் சந்நிதியில் விளக்கேற்றி    வணங்கினார். எதற்குமே அஞ்சாத  பெண்மணி. கலங்கியதை அப்போதுதான் பார்த்தேன்.  


                                                                                                                                                           ஆள்கட்டு,வண்டி என்று எதற்கும் குறைவில்லாத நாட்கள். வாழ்வில் ஏதாவது தவறு நடந்துவிடப்போகிறதே என்று பயந்த தாயாக இருந்தார்.         நீ வந்த வேளை உங்க மாமனாருக்கு இந்த உடம்பு வந்தது   என்று யாரும்  சொல்லாமல் இருக்கவேணுமே என்று பயந்தேன் என்றார்.   பாவம்.


  அடுத்த இரண்டு நாளில் இவர்     புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.    பாட்டி அவள் இங்கே இருக்கட்டும். நல்ல சாப்பாடே   சாப்பிடுவது இல்லை போலிருக்கே.என்னடா பாத்துக்கறே அவளை  என்று செல்லமாக அதட்டினார்.    அவள் சாப்பிடுவதே இல்லை ஆஜி. நான் எப்ப வேலையை முடிந்து வருகிறேனோ அதுவரை  பட்டினிதான்      என்று சிரித்தவண்ணம் சொன்னவரை.,


எல்லாம் தெரியும்டா  இப்போதைக்கு ஐந்து மாதத்துக்கு உண்டான    பூச்சூட்டல்,புடவை வாங்கிச் செய்யவேண்டியதைச் செய்து அவள் பாட்டியோட அனுப்புகிறேன் என்றார்,. அடுத்த வாரம் வரட்டுமா. நானே கார் கொண்டுவந்து கூட்டிப் போகிறேன்     என்ற பதில் வந்தது.   ம்ஹூம் சொன்ன பேச்சைக் கேளு. கிளம்பற வழியைப் பாரு. அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்க அப்பா வீட்டுக்கு  வந்துடட்டும்.  அப்புறம் பார்க்கலாம் என்றதும்  இவர்  முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும்.


                          மாடியில் அறையில் அவரது பெட்டியை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இறங்குபவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.   என்னம்மா நான் இல்லாமல் இங்க தைரியமா இருப்பியா என்று கேட்டார்.     ம்ம்ம் இருப்பேன். நீங்க பத்திரம் என்றவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். என்ன  அம்மா பாடு ஜாலி போல இருக்கே.   சமைக்க    வேண்டாம். ஊஞ்சலாடலாம். பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு நினைப்பா.


.....சரி சரி இரு.  நாந்தான் வருவேன். யாரோடயும் நீ கிளம்பவேண்டாம் என்று புறப்பட்டார்.  டாக்சி வந்து ஏறிச் செல்பவரைப் பார்த்து   எனக்கே கஷ்டமாக இருந்தது,. அதற்குள் தாத்தா வாசலுக்கு வந்து    புருஷா ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது உள்ள போ என்று அதட்டும் குரல் கேட்டது. அவசரமாக     நகர்ந்து ஊஞ்சல்  கூடத்துக்கு வந்துவிட்டேன்.                                                                                                                                                                                                                                    
 ஒரு வாரத்தில் மாமாவும் வீட்டுக்கு வந்துவிட்டார்.  பாரிஜாதத்துக்கு என்று தனியாகத் தறி போடுபவர் முத்துச் செட்டியார். அவரிடம் சொல்லி   கறுப்புக் கலந்த நீலப்  புடவை   அழகான நட்சத்திரங்கள்   பதித்த  புடவை சொல்லி  அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.  ஒரு நல்ல நாள் பார்த்து  புரசவாக்கத்துக்குத் தொலைபேசிப் பாட்டியிடம் செய்தி  சொன்னார்  மாமியார்.                                                                                                                                                                          

   பாட்டியும் நல்ல திரட்டுப் பால்  கிளறி மாமாவிடம் அனுப்பினார். சுலபமாக     அந்த வீட்டுப் பெண்கள் பத்துப் பேரை அழைத்து   ஒரு நாள் சாயந்திரம்      அந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு    கோவிலும் போய் வந்தாச்சு,.   அதற்குள் புதுக்கோட்டையிலிருந்து நான்கு தடவை ஃபோன் வந்தாச்சு.     இன்னும் கிளம்பவில்லையா. சிநேகிதனோட திருமணம்  இந்த மாதக் கடைசியில் வருகிறது. நான் வரப் போகிறேன். என்னோட திரும்பி வந்துவிடு என்றார்.    

 நாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நான் ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல , பின்னால் ம்க்கூம் என்ற மாமாவின் கனைப்புக் குரலில் நான் விழித்துக் கொண்டேன்.                                        தேவ் சாப்  பேசி முடிச்சுட்டாரா. இல்ல நீ ஃபோன்   வழியாகவே ஊருக்குப் போகிறாயா  என்றார்.    ஒரே  கூச்சமாகி விட்டது.

  ஒரு வழியாகத் தோழனின்  திருமண நாளுக்கு முதல் நாள் வந்தார்.   நாளை சாயந்திரம்   ரயில் டிக்கட் வாங்கி வந்தாச்சு.    உனக்குப் பட்டுப் புடவை கூடக் கொண்டுவந்திருக்கிறேன். என்று எங்கள் திருமணப் புடவையை எடுத்துக் காட்டினார்.                                                
  எத்தனை முன்னேற்பாடு என்று சிரிப்பே வந்தது.                         அப்புறம் அடுத்த நாள் கிளம்பி  புதுக்கோட்டை வந்து  இரண்டு வாரங்களில் சேலத்துக்குக்  கிளம்பினோம்.

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது // சரியான அதட்டல்...

துளசி கோபால் said...

வாவ்!!!!

பட்டுக் கருநீலம் புடவை பதித்த நல்வயிரம். நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களுடன்!!!!!

அப்பாதுரை said...

எனக்கும் புடவை கலர் தான் பளிச்னு பட்டுச்சு..
திரட்டுப்பாலும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். பெரியவர்கள் சரியான நேரத்தில் புத்தி சொன்னார்கள் .கேட்டொம்.

வல்லிசிம்ஹன் said...

துளசிமா பாட்டையும் போட்டுவிட்டேன். கண்ணம்மாவுக்குப் பதில் கண்ணா என்றிருந்திருக்க வேணுமோ/

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் எனக்கும் மிகப் பிடித்த புடவை. துரை. எளிமையானதும் அழகானதும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

பதிவில் வேண்டாத விளம்பரங்கள் வருகின்றன. என்ன செய்வதென்று தெரியவில்லை.

இலவசக்கொத்தனார் said...

Beautiful Picture.

Geetha Sambasivam said...

நினைக்க நினைக்க இனிக்கும் நினைவுகள். அருமை வல்லி. தொடர்ந்து சொல்லி வாருங்கள், எல்லாத்தையும் தொகுத்து மின்னூலாகப் போட்டுடலாம். நான் தொகுத்துத் தரேன்.

ஸ்ரீராம். said...

இனிமையான தருணங்கள். அருகில் ஆள் இருப்பது தெரியாமல் போன் பேசி மாட்டிக் கொண்டது சுவாரஸ்யம்! :))))

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகளை நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் வெகு அழகு. நட்சத்திரங்கள் பதித்த கருநீலப்புடவை கற்பனையில் விரிகிறது!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கொத்ஸ். நல்ல மனம் நல்ல படம் நல்ல மனிதர்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. நல்ல யோசனைதான். உங்களுக்குப் பிடித்தது போல எல்லோருக்கும் பிடிக்கணுமே.ஒரே ஒரு புத்தகம் எனக்கு மட்டும் செய்துகொள்கிறேன். நான் இருக்கும் வரை என்னோடு இருக்கும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் அந்த வயசுக்கான விளையாட்டுகள் ஸ்ரீராம். தன்னையே மறந்து என்ன பேசினோமோ தெரியாது.மாமாவுக்கு அறுவை சிகித்சை நடந்து பேச முடியாத நிலை.ஆனாலும் கம்பீரமான சத்தம் மட்டும் வெளியே வரும்.ஒரு வருடத்தில் சாதாரண்மாகப் பேச ஆரம்பித்தார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. மிக மெல்லிதான பட்டு. பட்டுப்போல வழவழப்பு. ரசனை மிகுந்தவர்கள் என் புக்ககத்தார்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.....

Mahal Periyavar. said...

' நீ இங்கே தனியாக இருப்பியா ? ' என்று கேட்பது தனக்கு மனைவியை விட்டு பிரிந்து இருக்கபோவதின் ஏக்கம் வெளிப்படுத்துகிறது.

Mahal Periyavar. said...

'நீ தனியாக இங்கே இருப்பியா?'என்று கேட்பதில் அவருக்கு மனைவியை விட்டு பிரிந்து இருக்க மனமிலை என்று தெளிவாகிறது.

மாதேவி said...

சிறகடித்துப்பறக்கும் நினைவுகள்.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

Geetha Sambasivam said...

மறுபடி படிச்சேன். நல்ல அருமையான நினைவலைகள். எல்லோரும் சொல்றாப்போல் அந்தப் புடைவை என் மனக்கண்ணிலும் வந்தது. ஆனால் என்னிடம் இருந்தது சுங்கடி. ஒரிஜினல். அதுவும் தறி போட்டது தான், கறுப்பில் ஆனந்தா நீலப் புட்டாப் போட்டு அன்னப் பக்ஷி பார்டர், தலைப்பு! :)))) அப்போ விலை நூற்றைம்பது ரூபாய். ஜரிகை ஒரிஜினல். இப்போல்லாம் அப்படிச் சுங்கடியே கிடைக்கிறதில்லை. :))))

வல்லிசிம்ஹன் said...

வேறு என்ன எழுதுவது என்று விளங்காமல் இதைப் புதுப்பித்தேன் கீதா.
இப்ப வரும் சுங்கடி எல்லாம் எதில் சேர்த்தி. மதுரை சுங்கடியும் இப்போது இல்லை என்றே நினைக்கிறேன்.