Blog Archive

Monday, April 28, 2014

சில்லென்று சில நினைவுகள் 9

பிற்காலத்தில் இதோட போராட இப்பவே பயிற்சியோ                                                                                                                                        அக்டோபரும் சென்றது. அந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி தீபாவளி. டவுனுக்கு நானும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து அதே ஹாஜிமூசாவில்  கத்தான் சில்க் புடவை வாங்கிக்  கொண்டேன்.  இவரிடம் தலை தீபாவளிக்கு வரச் சொல்லி அப்பா கடிதம் எழுதி, தொலைபேசி  அவரும் வரேன் என்று சொல்லியாச்சு.  10  ஆம் தேதி இரவுதான் வரமுடியும் என்றும் சொல்லிவிட்டார்.                                                                                                                                                                     தம்பிக்கு  அத்திம்பேர் சீக்கிரம் வந்தால் நிறைய பட்டாசு வெடிக்கலாம் என்ற       ஆர்வம்.. அவர்தான் கையில் பட்டாசை வைத்துக் கொண்டு   எப்படி வெடிப்பது என்பதையெல்லாம் சொல்லித் தருவதாகச் சொல்லி இருந்தாரே   !!!!   ஆம் தேதி வருவதாகச் சொல்லி இருந்ததால்    சின்னத்தம்பி செண்ட்ரல்     பஸ் ச்டாண்டுக்குச் சாயந்திரமே போய் விட்டான். அங்கிருந்து  பூத்திலிருந்து அவன் ஃபோன் செய்து அத்திம்பேர் வரவில்லை என்று சொல்லவும்   வாசலில் புது புல்லட் வண்டியின் தட தட சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது..     வாசல் விளக்கு வெளிச்சத்தீல் அப்பா     ..என்னப்பா  பைக்கில் இவ்வளவு தூரம் வந்தியா என்று கேட்டதற்கு  ஒரே சிரிப்புதான் பதில்.  நான் அவசரமாக எழுந்திருப்பதை அம்மா கண்ணாலயே கண்டித்தார். நேத்துதான் பொய் வலி வந்துட்டுப் போயிருக்கு. அவசரப் படாமல் வாசலுக்குப் போ என்றார்.                                    என் அவசரம் எனக்குத் தெரியும்:))     சொட்டச் சொட்ட நனைந்த சட்டையும் பாண்டுமாக வாசலில் நின்ற போது கோபம்தான் வந்தது. .. ஏன் சொன்னபடி பஸ்ஸில் வரவில்லை என்றால்.......  லாரி  டெலிவரி டைம்மா. .பஸ்ஸில் வர எல்லாம் நேரமில்லை.  பெட்டியைப் பாக் செய்து வைத்திருந்தேன். இது   கணபதியோட வண்டபுதுசா வாங்கி இருக்கான்,. கொடுடா டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன்னு  அங்க 6  மணிக்குக் கிளம்பினேன். இதோ பத்து மணிக்கு வந்துட்டேன் பாரு  என்றவரைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.                                                    வழியெல்லாம் நல்ல மழை. மதுரை வந்ததும் தான்   விட்டது. அம்மாகிட்டக் காஃபி கொடுக்கச் சொல்லு என்றவர்    பெட்டியைத் திறந்தார்.   .  நான் வந்தபிறகுதான் பார்க்கணும் என்றபடி  குளிக்கச் சென்றார்.   இந்த அகாலக் குளியல் எல்லாம் எனக்குப் பழகிவிட்டது. அப்பாவும் அம்மாவும்     திகைப்புடன் பார்த்தபடி இருந்தார்கள்.                                                                                                                               அப்புறமென்ன.  கும்மாளம்தான்.  மச்சினனுக்கு அணு குண்டு, எனக்கு மணிப்பூர் சில்க் புடவை, ஆர்ய பவன் ஸ்வீட்ஸ்...அம்மாவுக்கு யூகலிப்டஸ் ஆயில்,  அப்பாவுக்கு சேலம் வெற்றிலை என்று என்னேன்னவோ. இதெல்லாம் இவருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்.  என்று புன்னகையோடு       பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதப் பாரு ஆஜி அனுப்பின கற்பகம் பச்சைப் பட்டுப் புடவை என்று இன்னோரு புடவையை நீட்டினார்.                                                                                                  


மகிழ்ச்சி       மத்தாப்பு                                                                                                                                                                                                                 அதற்குள் வந்துவிட்ட தம்பி பைக்கைப் பார்த்து வாசலிலேயே நின்று விட்டான்.    யாய்ய்ய்ய்  என்று ஒரே கூச்சல்.  யாரோடது பைக். அச்சோ நியூ  புல்லட். அப்பா என்ன வேகம் தெரியுமா.  என்ன மெஜஸ்டிக் சவுண்ட் தெரியுமா. அப்படியே ஹார்ட் பீட்  மாதிரியெ     ரிதிமிக்காக் கேக்கும். .அத்திம்பேர் லாஸ்ட் பஸ்ல வரேன்னுட்டு   பைக்ல வந்தாச்சா..கார்த்தால எனக்கு ஒரு ரவுண்ட் கூட்டிக் கொண்டு போகணும் என்றான். நான் உனக்கு ஓட்டவே சொல்லித்தரேன்    இப்ப வா. இதெல்லம் எடுத்துக்கோ என்று அவனிடம் வெடிகளைக் கொடுத்தார்.    .அப்பாதான்  அவனை ஆசுவாசப் படுத்தி எல்லாம் நாளைக்கு. இப்ப  சாப்பாடு. கைகால் அலம்பு என்று உத்தரவிட்டதும், அம்மா இலைகளைப் போடவும்  சாப்பிட உட்கார்ன்ந்தாச்சு. அம்மாவும் அப்பாவும் பரிமாற நாங்கள் மூவரும் சாப்பிட்டோம்.                                                                                                      மருதாணி  கொண்டு வந்து அம்மா கைகளில்   இடவும்  யூ ஆர் ஸ்டில்    அ  பேபி. அண்ட் யூ ஆர் கோயிங் டு ஹேவ் ஒன்  என்று பெரிய ஜோக் சொல்கிற மாதிரி முகத்தை    வைத்துக் கொண்டார்.....................ஒரு வேலை அம்மாவுக்கு உதவி செய்யலையா என்றதும் அப்பா மெதுவாக இரண்டு நாட்கள் முன்  வலி வந்ததைப் பற்றியும் அனைவரும் பயந்ததைப் பற்றியும் சொல்ல  இவர் அமைதியாகிவிட்டார்.   அதே யோசனையோடு தூங்கவும் போயாச்சு.          அடுத்த நாள் மங்களாமாக                     புத்தாடை,லேகியம்,பட்சணங்கள் என்று    போனது. இரண்டு மூன்று தடவை மாப்பிள்ளையும் மச்சினனும் திருப்பரங்குன்ற  சாலையில்     ரைட்  சென்று வந்தார்கள்.    அப்போது ஆரம்பித்தது  வலி. முணுமுணுவென்று ஆரம்பித்து சுயரூபம் தெரிய சாயந்திரம் ஆனது.   இவருக்கு அடுத்த நாள் காலை கிளம்பவேண்டும். அந்தக் கவலை இந்தப் பயம் எல்லாம் சேர்ந்து கொள்ள அவர்கைகளைப் பிடித்தவண்ணம் மாடிப்படிகளில் உட்கார்ந்திருந்தேன்.   யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த தம்பி அம்மாவிடம் போய்ச் சொல்லிவிட்டான் ஆண்டாள் அழறாம்மா  ..............                                                                                                                        அதற்குள் சேலத்திலிருந்து ஃபோன்  அழைப்பு.    அடுத்த நாள் பெரிய தொழிலதிபர்  வொர்க்ஷாப்பைப் பார்க்க வருவதாக.   உடனே கிளம்பி விட்டார்.  ஒண்ணும் ஆகாதுமா. பையன் வந்ததும் நானும் வந்துவிடுவேன் என்றபடி புல்லட்டின் சத்தத்தோடு கிளம்பினார்.    அந்த நேரம் தன் பொறுப்பு நிறைந்த வேலையை   வெறுத்தது கண்கூடாகத் தெரிந்தது.                                                                  அம்மா என்னைப் பக்கத்துவீட்டு மிஸஸ்.டானியலை வரவழைத்துக் காண்பித்தார்.இது நிஜ வலிதான்மா. நாம் உடனே  டிவிஎஸ் ஹாஸ்பிடலுக்குக்   கிளம்பிடலாம்,  என்றதும்     அப்பா அம்மா முகம் வெளுத்துவிட்டது. இன்னும் மூணு வாரங்கள்        இருக்கிறதே  டாக்டர் சொன்ன நேரம் வர     என்று அப்பா கவலை. உடனே அந்த அம்மா,இந்தப் பொண்ணு நாலு மணி நேரமாவது வலியோடு இருந்திருக்கிறாள்.   நாம் போவதுதான் நல்லது என்றதும் எல்லோரும்ம்  வேண்டும் என்கிற     துணிமணிகளை    எடுத்துக் கொண்டு சொக்கிகுளம் அடைந்தோம். ஹாஸ்பிட்டலில் கால் வைத்ததும்   வலி நின்று விட்டது.    பரிசோத்த  டாக்டர்கள் நீங்க எல்லோரும்     கிளம்புங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.   இன்னும் 24 மணிநேரமாவது ஆகும் என்று விட்டனர். பசுமலை தள்ளி இருப்பதால் திருப்பி அனுப்பவில்லை என்னை.  பெற்றோருக்கு  இன்னும் கவலை. பாவம். நாந்தான் நான் தைரியமாத்தான் இருப்பேன்மா. அவருக்கு மட்டும்  காலையில் போன்    செய்துவிடுங்கள் என்றேன்.     11 ஆம் தேதி போச்சு. 12 ஆம் தேதி போச்சு. 12 ஆம் தேதி இரவில் நல்ல வலி வந்து  13 ஆம் தேதி அதிகாலையில்                                                                                                                       சிங்கத்தின் புதல்வன் பிறந்தான்.      .அரைமணிநேரத்தில் சிவந்த கண்களோடு அம்மவும் அப்பாவும்.  வந்தனர். குழந்தைக்கு வேண்டிய  பழைய சட்டைகள்  , இடுப்புத்துணி என்று எல்லாம் கொண்டுவந்து அரை மணி நேரம் இருந்துவிட்டுப் போனார்கள். அப்போதுதான் தனிமையை தீவிரமாக உணர்ந்தேன். பிறந்தவன் தூங்கினானோ தூங்கினானோ அப்படித்தூங்கினான்.     ஒரே மொட்டைத்தலை. சிகப்பு முகம் நீளமான ஒல்லியான உடம்பு. மூன்றரை   கிலோ எடை. .    இனி  புண்யாகவசனம் அன்று பார்ப்போமா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இதழ் மொட்டு விரிந்திட  புன்னகை புரியும் சின்னப் பாப்பா.                                                                                                                                                                

9 comments:

துளசி கோபால் said...

கைக்குழந்தையைக் கவனிச்சுக்குங்கோ!

இப்ப என்ன பதிவு வேண்டி இருக்காம்:-)))))

வாசிக்க வாசிக்க அந்த நாளுக்கே போயிட்டேன்ப்பா. புது புல்லட்டில் ஒரு ரைடு உங்களுக்குத்தான் கிடைக்கலை, இல்லே!!!!!

ஸ்ரீராம். said...

அந்த ஹாஸ்பிட்டலின் அருகே ரேஸ் கோர்ஸ் காலனியில்தான் எங்கள் வீடு... சொல்லியனுப்பியிருக்கக் கூடாதோ... வந்து பார்த்திருப்பேனே...! :))))

அதன் அருகிலேயே உள்ள தெருவில்தான் எங்கள் ஆஸ்தான ஹோமியோபதி டாக்டர் கே வி அனந்த நாராயணன் இருந்தார். (அலோபதி எம் எஸ் அவர்)

வல்லிசிம்ஹன் said...

:)))துளசி மா. புல்லட்டில் இரண்டு தடவை போனோம். நான் சேலம் போனபிறகு. அதான் இரண்டு மாதங்களீல் போய் விட்டேனே. பாப்பா நான் அவர் சேலம் தூசிக்கிடையில் பறந்து யேற்காடு மலையேறிவிட்டு வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அப்போ ஸ்ரீராமுக்கு 3,4 வயசு இருக்குமோ. குழந்தைகள் வந்து பார்த்தால் குழந்தை சந்தோஷப் பட்டிருக்கும். எங்களுக்கு கிருஷ்ணன் என்று நல்ல டாக்டரைத் தெரியும். அவரும் அங்கே தான் இருந்தார்.

வெங்கட் நாகராஜ் said...

குட்டிக்கண்ணன் வந்தாச்சா....

அப்புறம் சிங்கம் எப்ப வந்தார்....

நினைவுகள் தொடரட்டும். தலைப்பில்
"சில்லென்று சில நினைவுகள் 9" எனப் பார்த்தவுடன் எட்டாம் பகுதி படிக்கவில்லையே என நினைத்து இதற்கு முந்தைய பகுதியைப் பார்த்தேன் - ஏழு என்றது! படிக்காமல் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா....

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். நம்பர் எழுதுவதில் ஒரு பதிவை விட்டு விட்டேன். நீங்கள் சொன்னது நல்லதாகப் போச்சு நன்றி. மாற்றிவிட்டேன் மா.கண்ணன் வந்தே விட்டான் மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே.>}}}}

கோமதி அரசு said...

அருமையான நினைவுகள்.
முதல் குழந்தை பிறந்ததை மறக்கவே முடியாது. நினைவுகள் என்றும் இனிமையானது.

மாதேவி said...

கண்ணன் வந்தான் மகிழ்ச்சிதந்தான்....