கோஆப்டெக்ஸ் கோயம்பத்தூர் |
ஒரு அமைதியான சாலை தடாகம் ரோடு |
ஒப்பனக்காரத்தெரு பழைய படம் |
ஆர்.எஸ் புரம் |
ஒரு நிமிடம் கடிதத்தை மீண்டும் படித்தாள் மைதிலி.
அக்கா ரங்கத்துக்கு(ரங்கநாயகி) கல்யாணம் ஆகி 15 வருடங்களில்
இப்போதுதான் தீபாவளி நேரத்தில் வருகிறாள். அவள் பசங்க இருவரும் 12 வயது இரட்டையர்.
மைதிலியின் இரட்டைப் பெண்கள் போல.
72ஆம் வருடத்தில் நான்கு குழந்தைகள் அதிசயம் தான். எல்லோரும்
இரண்டோடு நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீனிவாசனுக்கும் மைதிலிக்கும் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை விடவில்லை. இளவயது. வருங்கால யோசனையெல்லாம். கிடையாது.
கருத்தரித்ததும் ,ஸ்ரீனிவாசனின் அம்மா வந்திருந்தார்.
உன் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் இந்த விலைவாசியில்குழந்தைகளை எப்படி வளர்ப்பாய். முன் யோசனை வேண்டாமா.
அவளும் பூஞ்சையாக இருக்கிறாள்.
லேடி டாக்டரிடம் போய்விட்டு வாருங்கள் என்று புத்திமதி சொன்னார்.
இருவரும் தயக்கத்தோடு டாக்டர் நீலாவை அணுக
நாட்கணக்கைக் கணித்து 8 வாரங்கள் கழிந்த விட்டன.
எனக்கென்னவோ இரட்டையாக இருக்க சான்ஸ் இருப்பதக தோன்றுகிறது.
அப்போது ஸ்கான் கிடையாது. எக்ஸ்ரெ உண்டு.
கருக்கலைப்பெல்லாம் வேண்டாம் . சந்தோஷமாகக் குழந்தைகளை வளருங்கள் என்று சொல்லிவிட்டார்.
அப்படி இப்படி என்று குழந்தைகளுக்கு நான்கு வயதும் ஆகிவிட்டது. பிரசவத்தின் போது உறுதுணையாக இருந்தாவர்கள்
பக்கத்து வீட்டு லீலா நாயரும், முதல் வீட்டுச் செட்டியார் அம்மாவும் தான்.ஒரு மாதத்திற்கு மைதிலியின் அம்மாவும், மறு மாதத்துக்கு மாமியாரும் வந்தார்கள்.
பிறகு மைதிலியே பார்த்துக் கொண்டுவிட்டாள்.
வேளைக்குச் சாப்பிடும் குழந்தைகள்.
படுத்தல் கிடையாது. அனுசரணையான கணவன்.
அவர்கள் இருந்த வீடு தடாகம் ரோடில் வேலாண்டிபாளையம் அருகே இருந்தது.
சீனுவின் தோழர் வெளிநாடு போவது நிச்சயமானதும், தான் கட்டிய பெரிய வீட்டை
இவர்களுக்கு 125 ரூபாய் வாடகைக்குக் கொடுத்தார்.
குழந்தைகளின் அதிர்ஷ்டம் சீனுவின் வேலையிலும் உயர்வு..ஹெட் க்ளார்க் ஆனார். சம்பளமும் 900ரூபாய் ஆனது.
போனஸ் பணம் 400 மட்டும் வரக் காரணம், சீனுவுக்குக் கடன்களைத் திருப்ப வேண்டிய நிர்ப்பந்தம்
இப்போது இந்தக் கடிதம்.
குழந்தைகள் திரும்பும் சத்தம் கேட்டது 8 வயது மாதவ்,6 வயது கேசவ்,
யுகேஜிக்கு வந்துவிட்ட சந்திரிகா மாளவிகா ஒரே அச்சில் இருக்கும் இரட்டையர். ஒன்று சாந்த்,இன்னோன்று மாலு.
அவளை மட்டும் ஃபேஷனாச் சாந்த் னு கூப்பிடறியே ,என்னையும் மால்னு கூப்பிடு
என்று மாலு அடம் பிடிக்கும் அழகு நன்றாக இருக்கும்.
ஹை! அத்தை வரா.கடிதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு கேசவ்
சந்தோஷத்தில் கூவினான்.
ஆமாண்டா.அப்பா வரட்டும் .அதற்குள் நீங்கள் டிபன் சாப்பிட்டுத் தயாராயிருங்கள். கடைக்குப் போகணும்.
ஹோம் வொர்க்?
வந்து செய்து கொள்ளலாம்.சீக்கிரம் என்றாள் மைதிலி.
சைக்கிள் சப்தம் வாசலில் கேட்டது. சீனு உள்ளே வர உடனே களயபரம். அத்தை வரா. முராரி முரளி வராங்க.
நாம ட்ரெஸ் எடுக்கப் போணும் அப்பா''
சைக்கிளை உள்ளே நிறுத்திவிட்டு விஷயங்களைக் கிரஹித்துக் கொண்டான் சீனு.
முதல் வேலை அக்கா அத்திம்பேர் குழந்தைகளுக்கு ஜவுளி எடுத்துவிடலாம்.
பிறகு நம்மைப் பற்றி யோசிக்கலாம். கிளம்புங்க. பஸ் பிடித்து ஒப்பனக்காரத்தெரு போக நாழியாகிவிடும் என்றாள் மைதிலி.
வர்ணாலயாவில் அப்போது சேல். 35 ரூபாயில் வீக்கொ புடவை கிடைத்தது.
அத்திம்பேருக்கும் எட்டுமுழ வேஷ்டி கொஞ்சம் ஜரிகை போட்டு நாற்பது ரூபாயில் கிடைத்தது.
முராரி முரளிக்கு ராஜேஷ் கன்னா ஃபேஷனில் புஷ் ஷர்ட் வாங்கிக் கொண்டார்கள். கேசவ்,மாதவ் பட்ஜெட்டில் துண்டு விழ காக்கி நிஜாரும்
கைத்தறி சட்டைகளும் வாங்கினார்கள்.
பெண்களுக்குப் பாவாடை ஆசையைத் தவிர்த்து நல்ல சீட்டியில் துணி எடுத்தாள் மைதிலி. தானே தைத்துவிடலாமே!!
நிறைந்த மனத்துடன் வீடு திரும்பினர்.
அடுத்த நாள் பட்சண ஏற்பாடுகளுக்கு சீனுவின் ஆபீஸில் எல்லோரும் பணம் போட்டு ஒரு டின் எண்ணெய் வாங்கிப் பிரித்துக் கொண்டார்கள். பட்டாசும் அதே போல.
கோயம்பத்தூரில் பால் நன்றாகவும் இருக்கும். லிட்டர் ஒரு ரூபாய்தான்.
ரங்கம் வரும் அன்று திரட்டிப்பால் செய்துவிடலாம்.
மனங்கொம்பு, மனோகரம் இரண்டும் உடனடியாகச் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே செட்டியார் அம்மா குரல் கேட்டது.
இப்போ பேச நேரம் இல்லையே என்றபடி வெளியே வந்தவள் அந்த அம்மாவோடு நிற்கும் புடவைக்காரரைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள். என்ன்ம்மா இது யாரு?
ஆந்திராவிலிருந்து வந்து இருக்கார்.
போச்சம்பள்ளி காட்டனாம். வித விதமா இருக்கு. 25 ரூபாய்தான்.
நீ எடுத்துக்கறியா என்று அந்த அம்மா கேட்டதும்
இரண்டு மாதமாக் கொடுக்கலாம் என்றால் எடுத்துக் கொள்ளுகிறேன் என்றாள் மைதிலி.
ரெண்டு மாசம்னா முப்பது கொடுக்கணும்மா என்றார் வியாபாரி.
புடவை கூடவே ரவிக்கைத் துணியும் இருக்குமா என்றதும் மறு பேச்சுப் பேசவில்லை மைதிலி. நல்ல நீல நிறத்தில் மாங்காய் பார்டர் போட்ட
மஞ்சள் வண்ணப் புடவையை எடுத்துக் கொண்டாள்..
கையோடு 15 ரூபாயையும் எண்ணிக் கொடுத்தாள்.
***********************************************************
தவிர்க்க முடியாத காரணத்தால் மைதிலி புராணம் நளையும் தொடரும்:)
நாளைக்கு மின்வெட்டு இல்லாமல் இருந்தால்!!!!!!!!!!!!!!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
25 comments:
அழகான நடையில் அருமையாகச் செல்கிறது.
நாளை மின் வெட்டு இல்லாதிருக்கட்டும்:)!
நன்றி சரன்சக்தி.முயற்சித்தேன். முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.
கதை சொன்னாலே என்குழந்தைகள் மூணு நாளில் முடிச்சுடுவியா என்று கேட்பார்கள். அவர்கள் தூக்கம் தடுப்பதால் கதை நீளும்.
இப்போது அதே தவறைச் செய்கிறேனோ:)ராமலக்ஷ்மி நன்றி மா.
முடித்துவிடுகிறேன்.
அருமையா இருக்கு. இந்தப் போச்சம்பள்ளிக் காட்டனுக்கு ரொம்பவே ஆசைப் பட்டுக் கடைசியில் எனக்கு 83-இல் ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறந்த வீட்டுப் புடைவையாகக் கிடைத்தது. அப்போ அம்மா இருந்தா. அம்மாதான் எனக்கு, மன்னி,தம்பி மனைவி மூணு பேருக்கும் ஒரே மாதிரியில் புடைவை செலக்ட் செய்து வாங்குவாள். எனக்கு சந்தனக் கலரில் ஆரஞ்சு போச்சம்பள்ளிக் கட்டங்கள் கொண்ட புடைவை, மன்னிக்குப் பச்சை, தம்பி மனைவிக்கு நீலம் பிடிக்கும் என்பதால் அவளுக்கு நீலம். :))))
பட்சணங்கள் என்றதும் எங்க மாமியார் செய்யறது தான் நினைப்பு வருது. எங்க பையர் பக்ஷண ஃபாக்டரி என்றே சொல்வார். அந்த மாதிரி நாங்க இரண்டு பேரும் ஒருவாரம் பக்ஷணம் செய்வோம். அதுக்கு முன்னால் எண்ணெய் சேகரிப்பு; பின்னர் மெஷினில் மாவு அரைத்தல்னு சரியா இருக்கும். பண்ணி வைச்சதும் அது கிட்டேயே நான் போக மாட்டேன். :))) சாப்பிடறச்சே கொஞ்சம் போல மிக்சர் மட்டும் போட்டுப்பேன். :))))
அடடா, அப்படியில்லை:). அடுத்த பாகம் அறிய ஆவல்.
கீதா கூட்டுக் குடும்பமாக இருந்தது நன்றாகவே இருக்கும். நானும் பத்துவருடங்களே வெளியில் இருந்தேன். அதற்குப் பிறகு சென்னை வந்தாச்சு.
அதற்குப் பிறகு அரிசி உப்புமா பண்ணினால் கூட அரைப்படி அரிசி அரைச்சுதான் கட்டுப் படியாகும் .
தீபாவளி,ஸ்ரீஜயந்தி என்றால் கேட்கவே வேண்டாம். பாட்டியைப் பார்க்க வருகிறவர்களுக்கு டப்பா கட்டிக் கொடுக்க தனியா நிறைய செய்யணும். நானும் மாமியாரும் சமையல் செய்பவரும் சேர்ந்து செய்து குவிப்போம். தீபாவளி மருந்து அரைப்பது மட்டும் நான்.:)
எத்தனை நினைவுகள்!!அம்மா இருந்தால் அது தனி தான்.எங்க அம்மாவும் ஒரே மாதிரி செய்வார்.இப்பவும் தம்பி விட்டுக் கொடுக்காமல் செய்கிறான். நன்றாக இருக்க வேண்டும்.
ஆமாம் எண்ணெய் வாசனை என்னை விட்டுப் போகவே இரண்டு நாட்கள் ஆகும். :)கீதா சமைப்பவர்கள் எல்லோருக்கும் இது பொருந்தும்!
அன்பு ராமலக்ஷ்மி,
I get carried away when I spin stories:)அதான் சொன்னேன்பா. நோ வொர்ரீஸ்!!சரியா.
போச்சம்பள்ளி காட்டன் புடவை வெறும் இருபத்தி ஐந்து ரூபா தானா....
நாளைக்கு மின்வெட்டு இல்லாமல் இருக்கட்டும் ....
அந்தக்கால கதை அதற்கு தகுந்தாற்போல புகைப்படங்கள் - 72 ஆம் ஆண்டுக்கே போய் விட்டோம்.
சரளமான நடை ரசிக்க வைக்கிறது.
நாளையும் வருகிறேன்.
கதை கேக்க கேக்க எனக்கு ஆசையா இருக்கு. கொசுவத்தி ஏத்தி வச்சுட்டீங்க வல்லி.
ம்ம்ம்....அப்புறம்?
தடாகம் ரோட் மிக அழகாக இருக்கிறது.
எவ்வளவு அடைசல் ஒப்பணக்காரத் தெருவில்?
முன்பெல்லாம் ஒருவாரம் பட்சணம் செய்யும் வேலை நடக்கும், இப்போது ஒரு வாரம் பதிவு போடும் வேலை! :)) அந்தக் காலம் அந்தக் காலம்தான்!
நன்றி தினபதிவு.இணைக்கப் பார்க்கிறேன்.
ஆமாம் வெங்கட். நானே வாங்கி இருக்கிறேன்.சீக்கிரம் சாயம் போய்விடும்.
அந்த வயதில் எல்லாமே சரியாகத் தோன்றும்.ஒரு செட் ,7 அடுக்குப் பாத்திரங்கள் வாங்கலாம்:)
வருகைக்கு நன்றி மா.
வரணும் ரஞ்சனி.
நம் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களையும் அவர்கள் கதையையும் பார்க்கிறோம்.சிலது மனதில் பதிகிறது.
இதே போல எத்தனையோ நிகழ்ச்சிகள்.
நீங்களும் சேர்ந்து கூட வருவதில் மிக மிக மகிழ்ச்சிமா.
இந்த அம்மாவுக்கு இதே வழக்கமாப் போச்சுன்னு யாராவது சொல்லாத வரை ஓகே:0) கொசுவத்தி இப்ப ரொம்ப முக்கியம் . டெங்குவை விரட்டணுமே. துளசி!!
கோயம்பத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர்.1969லிருந்து 73 வரை அங்கே இருந்தோம் ஸ்ரீராம்.
நாங்கள் இருந்த வீட்டிலிருந்து முதல் மாடி ஜன்னல் வழியாகப் பார்த்தால் அந்த ரோடில் வரும் வண்டிகளின் வெளிச்சம் இதமாக இருக்கும்.குட்டிகுரங்குகள் போல இந்த மூன்று குழந்தைகளும் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அப்பாவின் ஜாவா வருகிறதா என்று பார்ப்பார்கள்.அவர் பத்துமணிக்கு வந்தாலும் காத்திருந்துவிட்டுத் தான் தூங்கப் போவார்கள்.
ஆமாம் பதிவு போடத்தான் வேணும்.:)பட்சணம் செய்வது/வாங்குவது மற்றவர்களுக்குக் கொடுக்கத்தான். எங்களுக்குக் கொஞ்சம் போதும். உடல் நலம் காக்க:)நன்றி மா.
கோயம்பத்தூரில் பால் நன்றாகவும் இருக்கும். லிட்டர் ஒரு ரூபாய்தான்.
ரங்கம் வரும் அன்று திரட்டிப்பால் செய்துவிடலாம்
>>
எனக்கொரு பார்சல்
தங்களது பதிவும், படங்களும் என்னை கோவைக்கே இழுத்து சென்று விட்டது. அப்போ இருக்கற ஓப்பணக்கார வீதி பார்க்கும் போதே ஆச்சரியப்படுத்துகிறது.....என்ன இருந்தாலும் எனக்கு பிடித்தது கோவை தான். ஒருநாளும் வியர்வை என்பதே இருந்ததில்லை. சிறுவாணித் தண்ணீரும், மரியாதையாக பேசும் மக்களும். என் அப்பா, அம்மா, தம்பியோடு இருந்த நாட்களும். மீண்டும் வரவே வராது....
அம்மா ட்ரம் ட்ரம்மாக தான் பட்சணங்கள் செய்வார். குழந்தைகள் பத்து நாட்களாவது வைத்திருந்து சாப்பிடட்டும் என. அம்மாவுக்கு ஏற்ற மகளாக நானும் பட்சணங்கள் செய்வதுண்டு.
ஆரணிக்கே அனுப்பட்டுமா ராஜி:)
இல்லை சென்னைக்கு வரும்போது தரலாமா.
உண்மைதான் ஆதி. நல்ல ஊர். சுகமான சீதோஷ்ணம்.நல்ல தியேட்டர்கள். நல்ல படங்கள் ஆங்கிலப் படங்கள். அன்னபூர்ணா ஹோட்டல். கிருஷ்ணா பால்கோவா.வளமான காய்கறிகள். ஆர்.எஸ் புரம் பானிப்பூரி கடை.ராம்நகர் ராமர் கோவில். புராணமாப் போய்விட்டது:)
வருத்தம் வேண்டாம்மா. இணையத்தில் உங்களுக்கு உறவுகள் நிறைய உண்டு.
மலரும் நினைவுகளில் தீபாவளி. சுவாரஸ்யம் தொடர்கின்றேன்.
எங்கள் கோவையை
தங்கள் பதிவில் பார்த்து ரொம்ப சந்தோஷம் ..
மிகவும் மனதைத்தொட்ட பதிவு! என்னை 1972 க்கே கூட்டிச்சென்றது! நன்றி
Post a Comment