|
பட்டுப் போல பூனைகுட்டிகள் |
|
Aபீங்கானில் பாவைவிளக்கு |
|
டேலியாப்பூ |
|
காலம் மாறுகிறது |
முப்பெருந்தேவியரும் கொலுவிருந்து நம்மைக்காக்கும் காலங்கள் இறைவன் உலகைப் படைத்த நாளிலிருந்து நடை பெறுகிறது.
தயை,கருணை,அன்பு,இரக்கம் எல்லாக் குணங்களும் கொண்ட தாய்களாக
அவர்கள் நம் வீட்டைச் சிறப்பிக்க வருவது இந்த நவராத்தி நாட்களில்.
நவராத்திரி ஐந்து காலங்களில் வெவ்வேறு நாமங்களோடு வந்தாலும் நம் தம்ழ்நாட்டில் இந்த புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுமே கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன.
அன்னையைர் மூவருக்கும் மூன்று நாட்கள் ஒதுக்கி,முதலில் துர்கா,பிறகு லக்ஷ்மி தேவி,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை
ஆவாஹனம் செய்து பிரத்தியேகப் பூகைகள் செய்வதும்
வழக்கம் என்று புகுந்த வீட்டுப் பாட்டி சொல்லிக் கொடுத்தது.
1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம். பெண்ணுக்கு வயது எட்டு.
அவளோ நச்சரிக்க ஆரம்பித்தாள்.
அம்மா கொலு அம்மா கொலு என்று.
பாட்டி சரின்னு சொன்னால் வைக்கலாம் என்று நல்ல நேரம் பார்த்து(!)
பாட்டியிடம் வரம் கேட்டேன்.
நிறைய பேர் வந்து போகிற இடம்.
இத்தனூண்டு கூடத்தில் எங்கே வைப்பாய்.
உனக்குப் படிகள் கூடக் கிடையாதே.
முதலில் பொம்மை எல்லாம் இங்க இல்லையே .எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேனே.
ஒரே ஒரு லக்ஷ்மி ,சாயமெல்லாம் போய் ஆனால் மகாக் களையோடு இருக்கிறாள்.
அவளை வைத்து ஆரம்பி. பின் 'மகளே உன் சமத்து என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
கச்சேரி ரோடு ராஜ கல்யாண மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்களாம்.
|
அம்பாள் |
|
குழலூதும் கண்ணன் பளிங்கில் |
அங்கே போய்ப் பார்த்து வேலையை முடி என்று அனுப்பினார்.
பூனைக்குட்டிகள், ஒரு அம்பாள்,இரண்டு பாவைகள்,ஒரு கிருஷ்ணன் இவை 48 ரூபாயில் வாங்கிவிட்டோம்.
பஸ் சார்ஜுக்கு ஒரு ரூபாய்,கொறிக்க வேர்க்கடலை...
சந்தோஷமாகத் திரும்பி வந்தோம்:)
பாட்டியிடம் காட்டினால்
'அடி காமாட்சி என்று முகத்தில் கைவைத்தார்.
இதில மூணு படி எப்படித் தேத்துவே என்றும் கேட்டார்.
பொண்ணொட படிப்பு மேஜை ரெடி
தேநீர் வைக்கும் டீ டேபிள் ரெடி.
கடைசியாக சின்னவனின் உட்காரும் ஸ்டூல்
இவற்றைப் பரபரவென்று ஜன்னலோரம் வடக்குப் பார்த்து வைத்தோம்.
மாமனாரோட சலவை வேஷ்டியைக் கேட்டு வாங்கி வந்தான் பெரியவன்.
நடு நாயகமாக மஹாலஷ்மி முகம் நிறையப் புன்னகையோடு அமர்ந்தாள்
அவளுக்குப் பக்கத்தில் அம்பாள். அந்தப் பக்கம் சரஸ்வதிபடம்.
இரண்டாம்படிக்கு கிருஷ்ணனும் பாவை விளக்குகளும் ,சுற்றிவர சின்னவனின் டின்கி டாய் கார்கள்.
மூன்றாம் படிக்கு பூனைக் குட்டிகளும் இன்ன்னும் கையில் கிடைத்த
குட்டி ப்ளாஸ்டிக் பொம்மைகளும்.
ஈஸி சேரில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பாட்டி.
இப்ப என்ன.? கோலம் நைவேத்யம் எல்லாம் வேண்டாமா
என்றார்.
எனக்குத் தெரிந்த மயில் கோலம் அரிசிமாவு,காப்பிபொடி, ராபின் ப்ளு, மஞ்சள் பொடி குங்குமம் என்று கலந்து கோலம் போட்டு ஸ்ரீராமஜயமும் எழுதிவிட்டேன்.
மாமியார் உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
கமலா வா வா,. இந்த நண்டும் சிண்டும் வைத்த கொலுவைப் பார் என்று கூவினார்.
கொலுவா என்றபடி வந்த மாமியாருக்கு முதலில் சிரிப்பு வந்தாலும்
கையோடு கேசரி கிளறி
கொலு முன் வைத்தார்.
முதல் முதல் வைத்த கொலு விருத்தியாகட்டும்.
சாயந்திரம் சுண்டல் செய்துவிடலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்:)
அடுத்த பதிவில் இந்நாளைய கொலுவைப் படமெடுத்துப் போடுகிறேன்:))))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்