தண்ணீர்
எப்போதும் கீழ்நோக்கித் தான் பாயும் அதுபோல
அன்பும் நம் எண்ணங்களும்
நமக்குப் பின் வரும் சந்ததியை நோக்கியே
தொடரும்..
தந்தையின் கை நீளும் மகனின் தோளை அரவணைக்க
மகனின் கை தேடும் தன் பிள்ளையின் பிஞ்சுக் கரத்தைப் பிடிக்க.
பிள்ளையின் கரத்தில்
தாத்தா வாங்கின குட்டி மோட்டார் கார்.
பால்யூ அவர்கள் எழுதின சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
தவிப்பு என்று அந்தக் கதையின் தலைப்பு.
பேரனைத் தாத்தா கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அவன் அங்கு போய் ஆறு மாதம் ஆகியும் திரும்பவில்லை.
சென்னையில் இருக்கும் தந்தைக்கு மகனைப் பார்க்கும் ஆவல். அதற்குள் மனைவி இரண்டாவது கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது. அவளோ என்னுடைய இந்த நிலையில் அவனைப் பார்த்துக் கொள்வது கடினம். அவன் உங்கள் அப்பாவுடனேயே இருக்கட்டும் என்று விடுகிறாள்.
முத்துப்பேட்டை கிராமத்தில் இறங்கும்
இந்தத் தகப்பன் மகனைத் தேடி ஓடத் ,தந்தை அவன் உடல் நலம் விசாரிக்கிறார்.
பதில் சொல்லாமல் தன் மகனைத் தேடுகிறான். அதிகாலை வேளையில் வாயில் விரலை வைத்துப் பல் தேய்க்கும்
அந்தப் பிஞ்சோ கொஞ்ச நேரம் கழித்தே புரிந்து கொள்கிறது.
யப்பா.....என்று ஓடி வருகிறது.
அவன் கிராமத்தில் இருக்க்கும் நான்கு நாளும் அவனுடனேயே
ஒட்டிக் கொள்கிறது.
அப்பா கிளம்பும் நேரமும் வருகிறது.
அப்பாவோட ஊருக்கு வரியா கண்ணா
என்று கேட்டால்
துளி கூடத்தயக்கம் இல்லாமல் தாத்தாவின் தோளைத் தழுவிக் கொள்கிறது
குழந்தை..நீயும் இங்க இரு என்கிறது,.
தாத்தாவும் சொல்கிறார்.
''நீ தான் எங்களை மறந்து நாட்களைக் கழிக்கிறாய்.
இவனாவது எங்களிடம் இருக்கட்டும் என்று
ஆதரவாக பேரனை அணைத்துக் கொள்கிறார்..
ரயிலில் ஏறும் மகனின் தொண்டையில்
தவிப்பு உருள்கிறது.
தன்னை ஈந்தவரையும் தான் ஈந்தமகவையும்
விட்டுப் பிரியும் சோகம்.
இது போல கதைகளை இப்பொழுது படிக்க முடியவில்லையே
என்ற தவிப்பு எனக்கும்:)
ஆசிரியர் பால்யூவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. குமுதம் பத்திரிகை வந்ததும் படிப்பது பால்யூவின் பக்கம் தான்.
அவ்வளவு பிரபலம்.
சிறுகதைகளை நாம் தேடிப் படிக்கவேண்டி இருக்கிறது இப்போது.
என்னுடைய இளமைக்காலங்களைப் பற்றிப் பேசினால், ஒரு விகடன் என்றால் மூன்று, கல்கி என்றால் மூன்று, குமுதம் என்றால் இரண்டாவது இருக்கும். ஏனெனில் தொடர்கதைகளும் நிறைய வரும்.
தற்கால நிலை....ம்ஹூம் நான் சொல்வதாக இல்லை.
இப்போது இந்தப் பதிவில் பால்யூ அவர்கள் 1948 இலிருந்து எழுதின கதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தகத்தை நான் வாங்கினது எட்டு வருடங்களுக்கு முன்னால்..
இப்போது கிடைக்கும் என்றே நம்புகிறேன். தொலைபேசி எண்ணும் இருக்கிறது. வாங்கிப் படியுங்கள். நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.:)
23 comments:
தலை முறை மாற்றம் கதைகளைப் படைப்பதிலும்.
நல்ல பகிர்வு வல்லிம்மா.
நல்ல கதைதான் ..!
உணர்வுகளைப் பேசும் சிறுகதை மனசில நின்னதுல ஆச்சரியமில்ல. இப்பல்லாம் பத்திரிகைள்ல சிறுகதையே காணாமப் போய்டுச்சே வல்லிம்மா... அப்றம்ல மனசைத் தொடுற கதை படிக்க முடியலயேங்கற உங்கள ஏக்கம்லாம்...
தாத்தா பாட்டி பாசம் நிறைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை அது கால மாற்றமா ..நீங்க சொல்லும் தலைமுறை மாற்றமா ? கதை படிக்கும் ஆவல் என்னிலும் தொற்றிக்கொண்டது .
இந்தச் சிறுகதையின் கருவும் நீங்கள் சொல்லியிருக்கும் விதமும் மனதைத் தொடுகிறது. படிக்கிற ஆசையைத் தூண்டுது. ‘த வே ஹோம்’ என்ற படம் நினைவுக்கு வருகிறது. (அதுசரி... சுராபின்னா என்ன? தெரியலையே... என் தலை வெடிக்கறதுக்குள்ள சொல்லிடுங்க வல்லிம்மா)
படிச்சு முடிச்சதும் பத்திரமா எடுத்து வையுங்க. ஒருத்தி வர்றாளாம், அதை இரவல் வாங்க:-)
ஆமாம் ராமலக்ஷ்மி. எல்லா விதத்திலும் வாழ்வு மாறிவிட்டது.
கதைகளும் வேறு மாதிரி ஆகிவிட்டன.நன்றி மா
வரணும் வரலாற்றுச் சுவடுகள். முதல் வருகைக்கும் நல்ல விமரிசனத்துக்கும் நன்றி.
ஆமாம் நிரூ. நாமா கதையை எழுதிக் கொள்ள வேண்டியதுதான்.
அப்பதான் சிறுகதைகள் வரும்:)
வரணும் சசிகலா.எல்லோரும் வேற வேற ஊரில இருக்கும்போது சிலசமயம் முடிவதில்லை. தாத்தா பாட்டி பாசம் விட்டே போகாது. கூடவே இருக்கும்போது இன்னும் பலம் பெறுகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பார்த்துக் கொள்ளும்போது இன்னும் அதிகரிக்கிறது.
பழைய நாள் வழக்கம் வேறு. இந்த நாள் வழக்கம் வேறு.
உங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
கணேஷ், நாம் இப்படித்தானே வளர்ந்தோம். நான் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டு அம்மாவுடன் போகாமல் இருந்த நாளும் உண்டு:)
சரி இப்ப சுராபி
சுஜாதா ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர்
கலவை. சரியா:)
ஓ.எடுத்துவச்சா போச்சு துளசிமா;)
மாருதியின் படமும் அருமை!
இப்போதைய சஞ்சிகைகளில் என்ன எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. படிப்பதே இல்லை. :-(
நல்ல்வேலைதான். தம்பி வாசுதேவன்.சஞ்சிகைகளில் வருவது அரசியலும் திரைப்படமும் தான். எப்பவாவது நல்ல சிறுகதைகள் கிடைக்கும்.
ஆமாம் அட்டைப்படம் மாருதி கைவண்ணத்திலந்த நாட்களைக் காட்டுகிறது:)
சமீப காலங்களில் குமுதம் பார்க்கவே போரடிக்கிறது. குமுதத்துக்கு விகடன் தேவலாம். ஆனால் அதிலும் சினிமா நியூஸ் ரொம்ப ஓவர். சமீப விகடனில் இரண்டு நல்ல சிறுகதைகள் படித்தேன். பார்க்கும்போதே படிக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். அந்த வகையில் கவர்ந்த கதைகளாக இருந்தன.
உண்மைதான் ஸ்ரீராம்.
வைரமுத்து அவர்களின் தொடர் முடிந்தது.குமுதம் வாங்குவதை நிறுத்திவிட்டேன்.கல்கியில் படிக்கும் விஷயங்கள் இருக்கு. புதியதலைமுறை நிறைய விஷய தானம் செய்கிறது.
சிறுகதைகளைத்தான் தேட வேண்டி இருக்கிறது.
தலைமுறை பந்தம் is a subtle loop. அழகாகச் சொல்கிறது 'மோடர் கார்'.
'பால்யூ பக்கங்கள்'ன்னே ஒரு சிறப்புப் பகுதி வந்துட்டிருந்ததா ஞாபகம்..
பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
ஆமாம் துரை.ஒரு நீண்ட சங்கிலி. மெல்லிசு கூட.
வாங்கப்பா சாரல்.பால்யூ பக்கங்கள் நினைவிருக்கிறது. பிறகு லைட்ஸ் ஆன் சுனில் வந்ததுன்னு நினைக்கிறேன்.
தண்ணீர்
எப்போதும் கீழ்நோக்கித் தான் பாயும் அதுபோல
அன்பும் நம் எண்ணங்களும்
நமக்குப் பின் வரும் சந்ததியை நோக்கியே
தொடரும்..//
அருமையான வாசகங்கள்
பால்யூவின் சிறுகதையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
நன்றி ஸாதிகா.
உலக இயல்பே அதுதான். பெரியவர்களும் அதை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
நல்ல பகிர்வு அக்கா. எனக்கு படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.
Post a Comment