
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆநந்ததிற்கு ஒரு மிஸ்ஸ்ட் கால் கொடுத்த அடுத்த பதிவு இந்தப் பதிவாக இருப்பது சந்தோஷமாக இல்லை.
என் அடுத்தவீட்டுத் தோழி தனியாக வசிப்பவர். ஒரு பெண் அதுவும் மும்பையில் வாசம்.
தோழி என்னைவிட 7 வயது மூத்தவர்.
ஆர்தரைடிஸ், ரத்த அழுத்தம் எல்லா விதமான நோய்களால்
பாதிக்கப் பட்டாலும் மிகவும் உற்சாகமான மனுஷி.
நிறைய நண்பர்கள். அக்கா தங்கைகள்.
அவர்களெ அரண்டு போகிறமாதிரி வந்தது இந்த மிட்நைட் ஃபோன் கால்.
தனியாக வாழ்ந்தாலும் அயராமல் கச்சேரி,கல்யாணம் என்று வளைய வருபவர்,.
நேற்று காலை அவரிடமிருந்து ஒரு பதட்டமான அழைப்பு.
என்ன ஆச்சு அம்மா என்று கேட்டால்.
நேற்று ராத்திரி நல்ல தூக்கத்திலிருந்து ஃபோன் அடித்ததில் எழுந்துவிட்டேன்.
எடுத்துக் கேட்டால் பதிலே இல்லை. ரொம்ப பயமாக இருக்கிறது. எனக்கு அதற்கப்புறம் தூக்கமே இல்லை.
கொஞ்சம் வரமுடியுமா என்றார்.
பதட்டத்துக்குக் காரணம் அவரது உறவினர் ஒருவர் புற்றுநோயால்
அவதிப் பட்டுக் கொண்டிருப்பதுதான்.
அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்ற கவலை.
நான் போன போது விசாரிக்கையில் ,மிஸ்ஸ்ட் கால் தெரியும் இல்லையா என்று கேட்டேன்.
ஆமாம், காலர் ஐடி வைத்திருக்கிறேன்.
உடனே எடுத்துப் பார்த்ததில் சரியாக இரவு 1.30க்கு
ஒரு நம்பர் பதிவாகி இருந்தது.
கொஞ்சம் யோசித்த பிறகு உங்களுக்கு இது யார்னு தெரியணுமா. இல்லை விட்டுவிடலாமா, என்ற போது வந்ததே அவருக்குக் கோபம்.
அதெப்படி விடமுடியும். யார் அவனோ. திருப்பி இன்னிக்கு ராத்திரி அழைத்தால் என்ன செய்வது.
ஏதாவது செய்யணும் என்றார்.
எப்படி யென்று கொஞ்சம் யோசித்து சரி பிஎஸென் எல் இணையத்தளத்தில் தேடலாம் என்று அவரது கணினியைத் திறந்தேன்.
இந்த நம்பருக்கான பெயர் கிடைக்கவில்லை.
அடுத்த ஸ்டெப் 197.
அவர்களை அழைத்த போது நிலைமையை விவரித்து எங்களுக்கு அந்த நம்பரின் அடையாளம் வேண்டும் என்று கேட்டேன்.
என் அழைப்பை அட்டெண்ட் செய்த பெண் மிகப் பரிவாக
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
எண்ணையும் எடுத்து, மொத்தம் 20 செகண்டுகளில்
அந்த எண்ணுக்குறியவரின் பெயர், விலாசம் எல்லாம் கொடுத்துவிட்டார்.
என் தோழிக்கு யார் என்னவென்று கூடத் தெரியவில்லை. அந்த மாதிரி ஒரு
தெரு பெயர் கூடக் கேள்விப்பட்டதில்லை.
என்ன செய்யலாம் என்று தொலைபேசி உதவியாளரிடமே கேட்டேன்.
அவர் இந்த விஷயத்தையே அப்படியே விட்டுவிடச் சொன்னார்.
ஏன்பா இந்தமாதிரி நடுராத்திரி கூட யாராவது போன் செய்வாங்களா
அவர் முதலில் நிதானத்தில் இருந்திருக்க மாட்டார்.
தவறான நம்பரை டயல் செய்திருக்கலாம்.
இல்லையே அந்த நம்பரை நான் அழைத்தேனே
அவன் எடுக்கவே இல்லயே...என்று சில நல்லவார்த்தைகளால்
என் தோழி திட்டினார்.
நாம் இதைக் கிளறுவதால் நமக்குத்தான் நஷ்டம். இது போல் இன்னோரு தடவை அழைப்பு வந்தால்
பிறகு ஆக்ஷன் எடுக்கலாம். பொறுமையாக இருங்கள்.
உங்கள் உறவினர்கள் இடம் இரவு வேளையில் போன் செய்யவேண்டாம் என்றும், அப்படி ஏதாவது எமர்ஜென்சி என்றால் கைபேசியில்
அழைக்கவும் சொல்லச் சொல்லிவிட ஐடியா கொடுத்தார்,.
ஆகக் கூடி என் தோழியின் தூக்கம் போயிற்று,.
நேற்று இரவு தங்கைவீட்டு க்குத் தூங்கப் போய்விட்டார்.
இந்தப் பதிவு எழுதிவைத்து இரண்டு நாட்கள் ஆச்சு. அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பதிவிடுகிறேன்.
இந்தப் பதிவில் நான் நன்றி சொல்லவிரும்புவது சென்னைத் தொலைபேசியின் உதவியைத்தான்.
அந்த பெண்மணி மிக நிதானமாகப் பேசி எங்களை ஒரு நிதானத்துக்கு
கொண்டுவந்தார்.
தோழி ஜப்பானில் இருந்துவிட்டு இப்போது பத்துவருடங்களாகத்தான்
சென்னையில் இருக்கிறார். கணவரும் இல்லை.
விட்டிருந்தால் இந்த விஷயத்தை அடித்துத் துவைத்துப் போட்டிருப்பார்,.
பாவம்.
இதற்காகவாவது கணினி யில் உலவும்போது
தொலைபேசி எண்ணெல்லாம் கொடுக்காமல் இருக்கவும்,
முகநூல் பக்கத்தில் குறைந்த விஷயங்களைக் கொடுக்கவும்
சொல்லி விட்டு வந்தேன்.
ஏனெனில் அவரும் கிட்டத்தட்ட இருபது வருடங்களாகக்
கணினித் தொடர்பில் இருப்பவர்தான்:)