எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று திருப்பாவை 23 ஆம் நாள். சீரிய சிங்காசனத்தில் இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளச் சொல்கிறாள்..
ஆண்டாளுக்கு கண்ணனின் நடையழகு பார்க்க வேண்டுமாம்.
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.
அவன் தீவிழித்துப் பார்ப்பது, கொடியவர்களை வீழ்த்த.
ஹிரண்யனை வீழ்த்தும் பார்வை. ராவணனை
அதிர வைத்த பார்வை.
துரியோதனன் சபையில் கண்ணனை அவமதிக்கக்
காத்திருக்கிறான்.
கண்ணன் உள்ளே நுழைகிறான். யாரும் எழுந்திருக்கவில்லை. அரசனுக்குப்
பயந்து.
கண்ணனின் கண்ணைப் பார்த்த அடுத்த கணம் துரியோதனனின் உடல் எழுந்துவிட்டதாம்.
அதனால் அடியவர்களாகிய நாம்,சிங்கம் என்று பயப்படவேண்டாம்.
அது சீரிய சிங்கம்.
ஆண்டாள் பாவைக்காக இத்தனை நாள் மாய உறக்கத்தில் இருந்த சிங்கத்தின் உறக்கம் கலைந்து விழித்ததாம்.
இவர்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் தாமரைக் கண்கள் சிவந்து விரிந்தனவாம்.
அடியவர்கள் அருகில் இருந்தால் பகவானின் கண்கள் தாமரைச் சிவப்பு கொள்ளுமாம். அவர்கள் சற்றே அகன்றாலும் அவர் கண்கள் வெளுத்துவிடுமாம்.!!
பூவைப் பூ வண்ணா,நீ உன் சிம்ம கதியில் நடந்து வந்து
எங்களுக்கு அருள வேண்டும் என்று சொல்லிவிட்டுப் பிறகு சொன்னோமே என்று வருந்தினாளாம்.
இந்தக் கண்ணன் நடந்த நடை போதாதா. நான் வேறு நடக்கச் சொல்லிவிட்டேனே.
இந்தப் பாதங்களை குளிர்சந்தனம் பூசிப் பூஜிக்க அல்லவா வேண்டும்.
என்று உணர்ந்து அடுத்த பாசுரத்தில்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ) போற்றிப் பாடுகிறாள்.
இன்றைய பாடல்
மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போல நீ பூவைப் பூவண்ணா உன்
கோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
மேலிருக்கும் படங்கள் ஸ்ரிவில்லிபுத்தூர்க் காட்சிகள்.
உபயம் விஜய் டிவி.
எழுதியிருப்பது உபவே. திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் திருப்பாவை உரையிலிருந்து உணர்ந்ததை எழுதினேன்.
6 comments:
படங்களுடன் நல்ல பகிர்வு. கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்குமாமே....தற்காலக் கவிஞர் சொல்கிறார்.
திருவில்லிபுத்தூர் காட்சிகள் அருமை. மாரிமலை..? மாரிமழை என்றுதானே பாடல் துவங்கும் என்று படித்த நினைவு. தெரியலை... சீரிய சிங்கம் என்ற வார்த்தை அருமை. ரசித்துப் படித்தேன்.
அழகான படங்களுடன் நல்ல இடுகை...அளித்தமைக்கு நன்றிகள் வல்லியம்மா....கீழே இருக்கும் இடுகையைப் பார்தீர்களா?....
http://maduraiyampathi.blogspot.com/2012/01/2012.html
உண்மைதான். நாம் நல்லதைச் சொன்னால் பலிக்கத்தானே வேண்டும்.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் உபந்யாசத்தைக் கேட்டால் போதும்.அரை நாளாவது தப்பு வார்த்தைகள் பேசாமல் இருக்கலாம்.ஆண்டாளும் அதையே தான் சொல்கிறால் . பொய்க் குறள் ஓதோம் என்று.!!!
வரணும் கணேஷ். அது மாரி மலை தான்.
மாரிக்காலத்தில் சிங்கள் மலைக் குகையில் சென்று உறங்குமாம். நம் நரசிங்கமும் அஹோபில குகையில் தானே இருக்கிறார்.கருணையில்,அருளில்,தயவில் கண்ணன் சீரிய சிங்கம்தான். யாதவ சிம்ஹம்.
அன்பு மௌலி, பார்த்தேன் ரசித்தேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவளுக்கு உங்களைப் போன்றவர்கள் தான் அருள் ஒளி கொடுக்க வேண்டும்.
கண்கொள்ளாக்காட்சியம்மா. மிகவும் நன்றி.
Post a Comment