எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நல்ல படியாக உற்றார் ஒத்துழைப்புடன் பெரியோர் ஆசிகளுடன் சிரஞ்சீவி வைகுந்தனின்
ஆண்டு நிறைவு நடந்தேறியது.
என் நண்பர்கள் என்று ஒரு நூறு பேரையாவது அழைத்துச் சிறப்பாக
அமைய வேண்டும் என்ற ஆசை.
அதற்கும் ஒரு நாள் வரும் என்றே நினைக்கிறேன்.
ஆண்டு நிறைவு பூர்த்தியான குழந்தைக்கு திருமலை சென்று முடி இறக்குதல் வழக்கம்.
ஏற்கனவே ஏற்பாடு செய்தது போல சில நண்பர்களால் வர முடியவில்லை.
அதனால் ரயிலில் செல்லும் யோசனையைக் கைவிட்டு
டிராவல்ஸ் வண்டி ஏற்பாடு செய்து கொண்டோம்.
மதியம் 3 மணிக்குக் கிளம்பினோம்.
ஆஹா.பயணம் என்றால் சாலையில் மிதப்போம் என்று நான் நினைக்கவில்லை.
வண்டி ஓட்டி அப்பொழுதுதான் திருப்பதியிலிருந்து
திரும்பி வந்திருந்தாராம்.
எங்களை வண்டியில் திணித்த கையோடு விமானத்தை ரன்வேயில் கிளப்புவது போல
ஒரு உறுமலோடு அந்த இன்னோவா வைக் கிளப்பினதுதான் தெரியும்.
சென்னைத்தெருக்களில் இத்தனை வேகமாக வண்டியை ஓட்டக் கூடியவரை இப்போதுதான் பார்க்கிறேன்:(
மருமகள் , பேரனை மார்போடு இறுக்கிக் கொண்டுதான் பயணம் செய்தாள்.
பல்வலி உடம்பு வலியோடு புறப்பட்டு வந்த சிங்கத்துக்கு அது கூட மறக்கும் அளவிற்கு வேகம்.!!
நடுவில் ஒரே ஒரு இடத்தில் நிறுத்தி ஓய்வெடுத்தோம். மீண்டும் சீறியவண்டிக்கு இருட்டில் கண்
தெரியாததால் மெதுவாகச் செல்ல வேண்டிய அவசியம் வந்தது.
இலாவிட்டால் ஆந்திரவாடுகள் ஒரு பத்து நபர்களாவது பரலோகம் போயிருப்பார்கள்.:(
''எங்க கம்பனில நாமே பெஸ்ட் ட்ரைவரு. மூணு மணில திருப்பதி. நாலு மணில ஹைதராபாது""
என்றேல்லாம் சொல்லிவந்தார்.
அதிகாலை 3 மணிக்கு வேங்கடேச தரிசனம் முடிந்தது.
ஜெருகண்டி இல்லை.
அமைதியான வரிசை. அவரும் கர்ப்பக் கிரகத்திலிருந்து
பெரிய பெருமாளாகக் கண் கொள்ளாமல் காட்சி அளித்தார்.
அவர் என்னைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார். அது போதும்.
இவ்வளவு கால்வலி கைவலி, பணம் செலவழித்துப் போயும் அந்த ஒரு
செகண்ட் மட்டும் பார்த்தால் போதுமா.
வேற வழியே கிடையாதா. புரியவில்லை.
தங்கும் வசதிகளுக்குக் குறைவில்லை. இயற்கை வளங்களுக்குக் குறைவில்லை.
சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை.
சுற்றுலாத் தலமாகி விட்டது.அவ்வளவுதான்.
மலையெல்லாம் அவர்தான். காற்றும் மரமும் அவர்தான்.
திருமலை ஏழுமலைகளும் செழித்து நான் தான் அவன். அவன்தான் நாங்கள் என்று சொல்கின்றனவோ.
''திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னைப் பார்ப்பதற்குச்
சொல்லு வழி .. கொஞ்சம் லேசா''
இது எங்கள் பாட்டு இப்போது.
இரண்டு நல்ல வேலைகள் நடந்தன.
பேரன் கதறலுக்கு பயப்படாமல் ,ஒரு சிறு கீறல் கூட
விழாமல் முடிஅகற்றிய அந்தக் கலைஞருக்கு மனம் நிறைந்த நன்றி.
எத்தனையோ சிரமம் இருந்தாலும், ஒரு க்ஷணமே அவனைப் பார்த்தாலும்
அந்தக் கருணை ஒன்றே போதும் என்று நினைக்க வைக்கிறானே
அந்த ஈசன்.
அந்தப் பெருமை மறக்க முடியாது.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.
பி.கு
அன்பு கவிநயாவுக்காக
பாலாஜியும் ,திருமலாவும் படங்களாகப் பதிந்திருக்கிறேன்.;)
12 comments:
//ஒரு க்ஷணமே அவனைப் பார்த்தாலும்//
உண்மைதான்.
வாகன ஓட்டியை மெதுவாகச் செல்லுமாறு சொல்லியும் கேட்கவில்லையோ:(!
உண்மைதான் வல்லியம்மா....ஒரு சில செகண்ட் தரிசனம் என்றாலும், மனம் எவ்வளவு ஒருமுகமாகிறது...லயிக்கிறது. புண்ய க்ஷேத்ரத்தின் பெருமையும்,பெரிய பெருமாளின் பெருமையும் அல்லவா இது?
சிரஞ்சீவி வைகுந்தனின்
ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ பெருமாள் எல்லா வளங்களும் நலங்களும் அருள்வார் குழந்தைக்கு.
வாழ்க வளமுடன்.
//ஒரு க்ஷணமே அவனைப் பார்த்தாலும்
அந்தக் கருணை ஒன்றே போதும் என்று நினைக்க வைக்கிறானே//
உண்மைதான் வல்லிம்மா.. எல்லா சிரமங்களும் மறந்தும் போகுதே :-)
அதுவரை பட்ட சிரமங்கள் பெருமாளின் முக தரிசனம் பட்டதும் பறந்தோடுவதோடு கண்ணிலும் நீர் பெருகும் மர்மம்தான் விளங்குவதே இல்லை! "தேவாதி தேவா...திருமலை வாசா...பாடினேன் உன்னை ஸ்ரீ வெங்கடேசா...ஸ்ரீ வெங்கடேசா...
கோவிந்தா என்று நம்மை அழைக்க வைத்து சந்நிதி அருகில் போனதும் கண்கலங்க வைத்து
உள்ளம் முழுவதும் நிறைய வைக்கும் வல்லாளன்.
அவனைப் பார்க்க எத்தனை சிரமமும் படலாம் என்று எண்ண வைத்துவிடுவான்:)
இல்லை ராமலக்ஷ்மி , அவர் வேற ஊர்க்காரர். வேகம்,பான் பராக்
காதில் நாங்கள் சொல்வது விழாத வகையில் ஒரு பாட்டு வரிசை.!!!
பரவாயில்லை.நல்லபடியாக வந்துவிட்டோமே!
வரணும் மௌலி. க்ஷேத்ர மஹிமையும், ஸ்வாமி மஹிமையும் ஒவ்வொரு முறையும் புதுமையாகக் காட்சி அளிக்கின்றன.
நாங்கள் போன போது ப்ரம்மோத்சவத்துக்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.
அத்தனை சிற்றஞ்சிறுகாலையில்
கோவிந்தன் தரிசனம் குளிர்ச்சியாக இருந்தது.
அன்பு கோமதி வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.
குழந்தைக்கு அனைவரின் ஆசிகளும் எப்பொழுதும் தேவை.
அதெப்படி ஸ்ரீராம் நாம் எல்லோரும் ஒரே மாதிரி செய்கிறோம்.அதுவரை கோவிந்த நாமம் வாயில் .
அவன்தரிசனம் கண்டதும் வாய் மூடும் கண்கள் திறந்து நீர் வழியும்.
எதற்காக என்று தெரியாமல் ஒருகரைதல்.
மஹா மந்திர வாதிதான் வெங்கடேசன்.
எல்லாம் நல்லபடி முடிந்ததுக்கு பெருமாளுக்கு நன்றி. சில டிரைவர்கள் அப்படித் தான் வேகமாய் ஓட்டறாங்க. என்ன சொன்னாலும் கேட்பதே இல்லை.
கோவிந்தனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு :( தரிசனம் நல்லபடி அமைந்தது அறிந்து மகிழ்ச்சி அம்மா.
அன்பு மீனா,
உகாதி நன்னாள் வாழ்த்துகள வருகைக்கு மிக நன்றிமா.
Post a Comment