About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, August 02, 2007

ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே

நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட்,


பெண்ணுக்கு எத்தனை பட்டுப்புடவை,நாத்தனார்களுக்குச் சீர்,
கல்யாண சாப்பாடு மெனு எல்லாம் விவாதிக்கப் பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய அப்பளம் வடகம்,வடாம் எல்லாம் பெண்வீட்டார் கீழநத்தம் வந்து இறங்கிய அடுத்த நாளிலிருந்து தயாரிக்கப்பட்டன.
அவர்கள் ஒரு மாதம் முன்னதாகவே எம்.சி.எம் ஸ்கூல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்ததுமே திருநெல்வேலி எக்ஸ்பிரசில் வந்து இறங்கிவிட்டார்கள்.
ஸ்ரீவீரராகவனின் சகோதரசகோதரிகள், திருமதி ருக்குமணியின் அக்கா,தங்கைகள்,பெற்றோர்,பெண்ணின் நான்கு குட்டி சகோதரர்கள் (12,10,6,4)எல்லோரும் வெய்யில் வீணாகாமல் கிராமத்துக்கு வந்தார்கள்.


திருமதி ருக்குமணி...எங்க அம்மா வழிப்பாட்டி..சீனிம்மாவின் மூத்த சகோதரியும் இளளய சகோதரியும் சமையல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்களவாசலை அடைத்து அழகான பந்தல் போடப்பட்டது. பிள்ளைவீட்டார் வீட்டு முன்பாகவும் பந்தலும் கோலங்களும் போடப்பட்டன.


பிள்ளைவீட்டார் வரும் நாளும் வந்தது.அவர்கள் வீட்டு மனிதர்களாக ஐம்பது நபர்கள் தான் வரமுடிந்தது. மற்றவர்கள் பெண்ணை திருநெல்வேலியில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்.
வந்திறங்கியதும் உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் முடிந்தது.

மாப்பிள்ளைக்குத் தோழனாக அவர் சகோதரரே இருந்ததால் அநேகமாக அவர் திருமணமும் அப்போதே நிச்சயமானதாக அம்மா சொல்லுவார்.

அடுத்த நாள் ஜானுவாசம் . காலையிலிருந்தே பரபரப்பு. திருநெல்வேலியிலிருந்து ஏற்பாடாகி இருந்த சாரட் வண்டிக்காரன் திடீரென உடல்நலமில்லை என்று ஆளனுப்பிவிட்டான். அவன் குதிரைகள் நலமாக இருந்தன நல்லவேளை:)))

அதனால் வேறு ஆள் ஏற்பாடு செய்ய பெண்ணின் மாமா விரைந்தார்.
கையோடு இன்னோரு குதிரைக்காரனோடு அந்த சாரட்டிலேயே கீழநத்தம் வந்துவிட்டார். அதுவே பெரிய அதிசயமாகிவிட்டது அந்தத் தெரு மக்களுக்கு. எட்டாம் வீட்டுக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. எட்டாம்வீடு என்று அழைக்கப் படுவது பெருமாள் கோவிலுக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் வீடு.

இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.


ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதியிலிருந்து ஊர்வலம் புறப்படுவதாக திட்டமகோவிலில் சர்க்கரைப்பொங்கல் ஏற்பாடு ஆகீஇருந்தது.
பெண்வீட்டாரும்,மாப்பிள்ளைவீட்டாரும் ஒரு எட்டில் கோவிலுக்கு வந்து விட்டனர். அலங்கரம் செய்யப்பட்ட சாரட்டும் ஒரு ஒல்லிக் குதிரைக்காரரும்
அவரைவிடச் சுமாரான வெள்ளளக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.
அதில் ஒரு குதிரைக்கு வயிறு சரியில்லை. எந்தப் புல்லைச் சாப்பிட்டதோ.


ஸ்ரீவேணுகோபல சுவாமிக்கு அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வினியோகம் செய்து, மாப்பிள்ளைக்கு வேஷ்டி,ஷர்ட்,சூட் எல்லாம் வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து சம்பிரதாயமாகக் கொடுக்கப்பட்டது.

சி.நாராயணனுக்கு குதிரை வண்டி பழக்கம் என்றாலும் இது போல ஓப்பன் ஊர்வலம் வந்ததில்லை.
தயங்கியவாறு தன் அக்காபிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். நான்கு பசங்களும் உற்சாகக் கோஷமிட ஊர்வலம் கிளம்பியது.
நான்கு தப்படி போயிருக்காது.,அதற்குள் பாண்டு வாத்தியக்காரர், ஒரு யானை பிளிறன மாதீரி ஒரு நோட் வாசிக்கவும் குதிரை மிரண்டது.

ஒரே தாவல், அடுத்த குதிரையும் மிரள நான்கு கால்களும் மேலே தூக்க சாரட் கவிழ்ந்தது.

அனைவரும் ஆ என்று அலறுவதற்கு முன்னாலேயே மாப்பிள்ளையும் குழந்தைகளும் வெளில வந்தாச்சு. ஒரு சிராய்ப்பு கூட இல்லை.

அப்பாவின் சித்தி கொஞ்சம் கடுபிடு பண்ணினாராம்.

சகுனமே சரியில்லையே.அது எப்படி இந்த மமதிரி உலகத்த்திலே இல்லாத குதிரை கொண்டுவந்தார் உங்க சம்பந்தி என்றெல்லாம் பேச்சு வர,
மமப்பிள்ளை அசராமல் இருந்ததால் மேற்கொண்டு சிரிப்புகளுடன்

ஒரு வழியாக நடந்தே ஜானுவாசம் நடந்து முடிந்தது.

சாயந்திர நிச்சயதார்த்தம் எல்லாம் நிறைவேறி, பந்திக்கு அமர்ந்தபோது மீண்டும் ஒரு சின்ன பிரச்சினை.

மாப்பிள்ளையின் மாமாவைச் சரியாக உபசாரம் செய்து சாப்பிடக் கூப்பிடவில்லை என்று. உடனே ஒரு வயதானவர்கள் படை பிள்ளை தங்கியிருக்கும் வீட்டீற்குக் காசி அல்வாவோடு போய் அழைத்துவிட்டு வந்தார்கள்.

அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.

இலைகள் போடப்பட்டு உட்கார்ந்தவர்களுக்கு நல்ல விருந்துபசாரம் நடந்தது.

திரட்டிப்பால், மைசூர்பாகு அன்றைய இனிப்பு. வழக்கம்போல கதம்ப சாதம்,சித்திரான்னம்,தயிர்ப்பச்சடி,உருளைக்கிழங்கு பொடிமாஸ்,வாழைக்காய் வறுவல் ,திருக்கண்ணமுது என்று எளிமையான சமையல் தான்.

அடுத்த நாள் விடிந்து காலையிலேயே முகூர்த்தம்.

மாப்பிள்ளையை நல்ல படியாகக் கவனித்துக்கொள்ள இங்கிருந்து இரண்டு பேர் பக்கத்திலேயே இருந்து வென்னீர் வைத்துக் கொடுத்து உண்மையயன அன்பில் திக்கு முக்காட வைத்ததாக அப்பா பின்னாட்களில் சொல்வார்.


இப்படியாகத்தானே சௌபாக்கியவதி ஜெயலட்சுமிக்கும் சிரஞ்சீவி நாராயணனுக்கும் இனிதே கல்யாண வைபவம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு எந்த வித சங்கடமும் இல்லாமல் கட்டுசசதத்துடன், ஏகப்பட்ட பொரித்த பொரிக்காத அப்பளக் கூடைகள்,முறுக்கு சம்புடங்கள்,திரட்டிப்பாலோடு வெள்ளிக்குடம், என்று பலவித சீர் செனத்தியோடு புக்ககம் புகுந்தாள் சேச்சிப் பாப்பா என்கிற புஷ்பாவாக இருந்து மாறிய ஜெயலட்சுமி நாராயணன். சுபம்.
மேற்கொண்டு 1943ல் திருமணம் நடந்தாளும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டது 1945ல் தான். சென்னையில் மிச்சப் படிப்பை முடித்து 15 வயதில்தான் அப்பாவும் அம்மாவும் அப்பாவுக்குப் போஸ்டிங் ஆன கயத்தாறுக்குத் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார்கள். அது தனிக்கதை.:)))


Post a Comment