Thursday, May 30, 2013
அப்பா 1921- மே 30 பிறந்த நாள்
வணங்கிய தெய்வம் |
தன்னைப் பற்றியப் புகழோ பேச்சோ விரும்ப மாட்டார்.
எப்பொழுதும் கீதை.
இல்லாவிட்டால் குழந்தைகளுக்காக நல்ல விஷயங்களை
எழுதிவைப்பார்.
அபார்ட்மெண்டில் குடியிருந்ததால் பொக்கிஷதார் பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்ததால் அந்தக் கணக்குகளைச் சரி பார்ப்பார்.
பேத்தியை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் கொண்டு போய் விடுவார்.
வீட்டுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டிய
பொருட்களை பட்டியல் போட்டுக் கொள்வார். கடைக்குப் போவதும்
கோவிலுக்குப் போவதும் மிகவும் பிடித்த விஷயங்கள்.
பாண்டிபஜார் வழியே நான் ஏதோ வேலையாகப் போய்க் கொண்டிருப்பேன் பஸ்ஸில். திடிரென்று அப்பா பண்டியன் காஃபிப் பொடி
கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருப்பார்.''அப்பா'' என்று வாயோட முணுமுணுப்பதோடு பஸ்ஸில் போய்விடுவேன்.
வீட்டுக்குப் போகும் வரையிலும் அப்பாவின் உருவம் கண்ணிலேயெ நிற்கும்.
வீட்டுக்கு வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது
தொலைபேசி கூப்பிடும். மகள் எடுத்துவிட்டு,அம்மா.....தாத்தா
ஃபோன்ல.
அவசரமாக வருவேன். ஏம்மா பாண்டிபசார்வழியாப் பஸ்ஸில போனியா?
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ஆமாம்பா. ஜோசியர் வீட்டுக்குப் போய்
வந்தேன்.
ஜன்னலில் உன் முகம் மாதிரி தெரிந்தது.
நீதானா என்று சந்தேகம். இவ்வளவு தூரம் வந்த பொண்ணு
வீட்டுக்கு வருவியேன்னு நினைச்சேன்.
குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு
இரவு சமையலுக்கு நேரமாகிவிட்டதுப்பா.
சாரி.!!
அடடா இல்லம்மா.இவ்வளவு சாயந்திர வேளையில் தனியாகப் போகிறாயே.
உன் வேலைகளில் பாதி எனக்குக் கொடேன்.
நானும் நன்றாகச் செய்து கொடுக்கிறேன்.
இனிமேல் உங்கள் வீட்டுக்கு வந்து....
ஏன்மா இது உனக்கும் வீடுதான்...அப்பா சிரிக்கும் சத்தம் கேட்கும்.
சரிப்பா நம்ம வீட்டுக்கு வந்து, உன்னையும் அழைத்துக் கொண்டு
ஜாதகங்கள் விஷயமாக நாம் யோசித்து முடிவு செய்யலாம்.
ஆமாம் இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால் செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)
குறுக்கே அம்மா குரல். பொண் குரல் கேட்டால் அப்பாவுக்குத் தனி உற்சாகம்.
ஏம்மா நீயும் சேர்ந்துக்கோயேன். உனக்குத்தான் எல்லாவற்றிலும் ஆசைகள் நிறைய. நான் அம்மாவைக் கிண்டலடிப்பேன்.
அம்மாவை ஒண்ணும் சொல்லாதே ஆண்டாள்.
அவளுக்குத் தெரியாததே கிடையாது.
இந்த அப்பா இயங்குவது அம்மாவுடைய சக்தியால்தான்!!!
சாமி. உங்க வைஃபை ஒண்ணும் சொல்லலைப்பா.
நாம் எல்லாம் சேர்ந்து இந்தத் திருமணத்தை முடிக்கலாம்
என்பதோடு அந்தத் தொலைபேசி சம்பாஷணை முடியும்.
இப்பொழுது நினைக்கிறேன் பாண்டி பசார் பக்கம் போகும்போது
அம்மாவீட்டுக்கும் போயிருக்கலாமோ.
இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய நேரம்.
அப்பா உன்னை மாதிரி தந்தை இனிப் பிறக்கப் போவதில்லை.
எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பாய்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.
வணக்கங்கள் நமஸ்காரங்களுடன்
உன் குடும்பம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
15 comments:
உங்கள் தந்தையும் மே மாதம் பிறந்தவரா? என் தந்தையும்! மே ஆறு! அப்பாவின் உழைப்பு, அப்பாப்பாவின் கம்பீரம், அப்பாவின் அன்பு என்றுமே நினைவில் நிற்பவைதான். அதென்னவோ அப்பாக்கள் சுறுசுறுப்பாக தான் இருந்திருக்கிறார்கள்! மகனாக நான் என்னைக் குறித்துச் சொல்லிக் கொள்கிறேன்!
ஒரு நொடியில் அப்பாவும் உங்களை பஸ்ஸில் பார்த்திருக்கிறார் என்பது ஒரு சிலிர்ப்புதான். அந்த அன்பு.. அதே போல அப்பாக்கள் அம்மாக்களை விட்டுக்கொடுப்பப்பதே இல்லை.
அப்பாவிற்கு வணக்கம். மிக அருமையான பதிவு.
பஸ்ஸில் நீங்களும் அப்பாவை பார்த்து இருக்கிறீர்கள், அப்பாவும் உங்களை பார்த்து இருக்கிறார்கள். அதுதான் அன்பின் பலம்.
//இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய நேரம்.//
இன்று நானும் நிறைய நேரங்களை அவர்களுடன் நல்லபடியாக கழித்து இருக்கலாம், அப்படி இருந்து இருக்கலாம், இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைத்தேன்.
அப்பாவுடன் களித்த காலங்களை நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொண்டு இருப்போம்.
அப்பாவும், அம்மாவும் அன்பு செய்து வாழ்ந்த காலங்கள் வசந்த காலம்.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் பா அன்பைத் தவிர வேறெதுவும் அறியாத அப்பா.
கடமை,கண்ணியம் என்றெல்லாம் சொல்கிறார்களே.
அதன் முழு உருவம் என் பெற்றோரும், தம்பிகளும்.
மகளுக்கு வந்த வரன் அத்தனையையும் பார்த்து
சம்பந்தப் பட்டவர்களுக்கு எழுதிப் போட்டு,
ஜாதகங்களை ஒப்பிட்டு, பிள்ளை வீட்டுக்கு என்னுடன் வந்து
அப்பா செய்திருக்கும் உதவிகளுக்கு
கணக்கே இல்லை.
நிறைவுடன் நன்றி சொல்கிறேன் அப்பா.
அன்பின் ஸ்ரீராம்,
''ஒரு நொடியில் அப்பாவும் உங்களை பஸ்ஸில் பார்த்திருக்கிறார் என்பது ஒரு சிலிர்ப்புதான். அந்த அன்பு.. அதே போல அப்பாக்கள் அம்மாக்களை விட்டுக்கொடுப்பப்பதே இல்லை.''
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேல் அதீத பாசம்.
அந்த அளவுக்கு நான் அந்த அன்பைத் திருப்பவில்லை என்றே தோன்றும்.
தினம் காலையில் ஒரு குட் மார்னிங்க் ஃபோன்.
மாலையில் ஒரு குட் ஈவனிங்க் ஃபோன்.
காஸ் சிலிண்டர் வரவில்லையா, நான் கொண்டு வந்து தருகிறேன்.
இது ஒரு உதாரணம் தான்.
அம்மாவும் அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டார்.'
அப்பாவும் அதே. திவ்ய தம்பதிகள்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
எத்தனையோ நினைவுகள் வந்து போகின்றன.
அப்பா எப்பொழுதும் சொல்வார்.
பெற்றோரின் பாசம் என்பது கீழே விழும் தண்ணீர் போல.
மீண்டும் மேலே வரும் என்று எதிர்பார்க்க முடியாது மா''
நான் தான் அதற்கு ஒரு உதாரணம்.
நம் குழந்தைகள் எத்தனையோ அருமையாக
இருக்கிறார்கள். தாத்தா பாட்டியின் ஆசிகள்
எப்பொழுதும் மக்களுடன் இருக்க வேண்டும்.
''அப்பாவுடன் களித்த காலங்களை நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொண்டு இருப்போம்.
அப்பாவும், அம்மாவும் அன்பு செய்து வாழ்ந்த காலங்கள் வசந்த காலம்.''
மிக மிக உண்மை. அப்படியே இருப்போம்.
நன்றி மா.
பதிவை படித்ததும் மனம் நெகிழ்ந்து விட்டது அம்மா விழிகளில் நீர்....
எனது கருத்து என்ன ஆனது ?
ஸ்ஃபாமில் இருக்கலாம் பாருங்கள் அம்மா.
அப்பாவின் அன்பு..... வார்த்தைகளால் வடித்துவிடமுடியாத அன்பு அப்பாவுடையது. படிக்கும்போதே மனதில் நெகிழ்ச்சி.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
பெற்றோரை என்றும் மறக்க முடியாது கூடாது.
அவர்களுக்கு மட்டுமே எதையும் எதிர்பாராத அன்பு இருக்கும்.
பெற்றோரைத் துன்புறுத்தும் மக்களையும் பார்க்கிறோம்.
இறைவன் தான் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
சுகமாக வாழுங்கள் ஜி.
ஸ்பாமில் போய்ப் பார்க்கிறேன். இரண்டு கருத்துகள் வந்திருக்கின்றன
அப்பா.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
கண்டிப்பு காட்டத் தெரியாத பா.
கருணை தியாகம் இது மட்டுமே அவருக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களில்
என் அப்பாவைப் பார்க்கிறேன்.
உங்கள் குடும்பமும் அமோகமாக இருக்க வேண்டும்.
இத்தனை உள்ளங்கள் என்னை நலம் நினைப்பதைக் கண்டால்
மிக மகிழ்வார்.
சுயலாபம் நினைக்காத அப்பா.
தாத்தாவிற்கு நமஸ்காரங்கள் அம்மா.
அருமையான அப்பா உங்களுக்கு! அப்பாவின் கண்ணில் மகள் எங்கிருந்தாலும் பட்டுவிடுவாள் போலும்!
நிஜம்மாகவே அம்மா மனம் நெகிழ்ந்து விட்டது! என்ன அன்பு!!
கண்டிப்பாக அம்மா அப்பா வை மறக்க முடியாது. தனிதான். எத்தனை வயதானாலும். அருமை!!! அருமையான அப்பா அருமையான தாத்தாவாக இருந்திருக்கிறார்!
ரசித்து வாசித்தேன் அம்மா.
கீதா
அன்பின் கீதாமா,
அப்பாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
என் பெரிய தம்பிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததும்
அவருக்கு உயிர் வாழ இஷ்டம் இல்லாமல்
போனது.
பேத்தி கல்யாணம் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, அந்தக் கல்யாணத்தைப்'
பார்க்காமல் பெருமாள் கிட்டப்
போய்விட்டார்.
தம்பி அதற்கப்புறம் 20 வருடங்கள் நலமாக
இருந்தான்.
பாவம் அப்பா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
தாத்தா உங்களை எல்லாம் பார்க்கவில்லையே
என்று தோன்றுகிறது.
அதுவும் உங்க அப்பாவைப் பார்த்து,
திருக்குறுங்குடி என்றும் சொல்லிவிட்டால்
கீழே விழுந்து சேவித்து விடுவார்.
உன்னதமான நல்ல மனிதர்.
அவர் மறைந்த போதுதான், அவருக்கு இத்தனை
மனிதர்களைத் தெரிந்து வைத்துள்ளார் என்று எங்களுக்குத்
தெரிந்தது.
யாரெல்லாமோ என்னை விசாரித்து நல்ல மனுஷன் மா
என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
அப்பாவை பற்றிய நெகிழ்ச்சியான பகிர்வு.
அப்பா என்றாலே சுறுசுறுப்பானவர்கள் எதை சொல்ல எதைவிட. இருக்கும் காலம் வரை அவர்கள் உதவியின்றி வாழ்ந்ததில்லை நாங்கள்.என்றும் போற்றி வணங்குவோம் அவர்களை.
Post a Comment