Blog Archive

Friday, April 29, 2022

--சாப்பிட்டாச்சா? அம்மா.

வல்லிசிம்ஹன்

Thank you Muguntha. 


சிறுகதை    

--சாப்பிட்டாச்சா...---

சங்கரனுக்கு மிகப் பசியாய் இருந்தது. நேற்று இரவு 7 மணிக்கு சாப்பிட்டது. இப்பொழுது மணி காலை 8.45  ஆகிவிட்டது. சங்கரனுக்கு கொஞ்சம் அசிடிட்டி பிரச்சினை  உண்டு.  ஆகவே தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட்டு விடுவார். அதனால் மறுநாள் காலை   எட்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிடலாம் என்றால் அப்பொழுதுதான் உணவு தயாராகிக் கொண்டிருக்கும். ஏன் லேட் என்று கேட்கமுடியாது. "ஆம்பளைங்க தான் பேப்பர் படிக்கணுமா... லேடிஸ் எல்லாம் பேப்பர் படிக்க கூடாதா ?"  என்று காலையில் பெண்ணுரிமை வாதம் ஆரம்பித்துவிடும். "ஏம்மா... நீ படிக்க வேண்டியதுதானே... யாரு உன்னை தடுத்தா? " என்பதுபோல் பதில் பேசினால் " ஆமா...ஆம்பளைங்களுக்கு என்ன கவலை?  ரிட்டயர் ஆனா பேப்பர் படிக்க வேண்டியது... தூங்க வேண்டியது... டிவி பார்க்க வேண்டியது.. வாட்ஸ்அப் பார்க்க வேண்டியது... பேஸ்புக்கில் எழுத வேண்டியது... பெண்களுக்கு என்ன ரிட்டயர்மென்டா... ஒன்னா?"  என்று பேச்சு நீண்டு கொண்டே போகும். மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் அவர்களுக்கும் உண்டு என்றாலும்   வம்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிடும்போது மட்டும்தான் வாயை திறக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்றைய கதையே வேறு. காலை வழக்கம்போல் காபி குடித்துவிட்டு பிறகு வாக்கிங் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். வந்தவுடன் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  மகள் தாரணியை நகரத்தில் இருந்த  பிரபலமான மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்திருக்கிறார்கள்.  குழந்தை பிறந்துவிட்டது. இதோ காலை சாப்பிட்டவுடன் அங்குதான் போக வேண்டும். அதற்கு இடையே  தொலைபேசி அழைப்பு.

" அப்பா... என் பிரண்டு சுமத்திரா வீடு தெரியுமா?...  அதான்பா...டி நகர்... பசுல்லா ரோட்ல சிக்னல் இருந்து இரண்டாவது கட்டிங்...கிரி தெருவுல...  என் கூட வேலை பார்க்கிறவள் அப்பா…"
 
மகள் ஒரு அரசு அலுவலகத்தில்  வேலை பார்க்கிறாள். அங்கு சுமித்ரா வீட்டுக்கு ஓரிருமுறை  போயிருக்கிறார். 

" ம்… சொல்லு…".

"அவ வீட்ல  பேபிக்கு கிரிப் இருக்குது.  குடுக்குறதா சொன்னா. போய் வாங்கிட்டு வந்துருங்க அப்பா…"  என்றாள்.

வெளியே போக வேண்டும் என்று சொன்னதாலோ என்னவோ அவருக்கு பசிப்பது போல இருந்தது. இருந்தாலும் உடனே எட்டு மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு பசுல்லா ரோடு  வந்தாகிவிட்டது. வரும் வழியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியே வரும் மசால் தோசை வாசமும், பூரிக் கிழங்கு, சாம்பார் வாசமும் ஏற்கனவே எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்த பசியை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்தன. சாதாரணமாகவே பசி தாங்க மாட்டார் சங்கரன். இதற்கிடையில் இப்படி ஒரு தூண்டுதல்.  மணி எட்டரை.  சுமித்ரா வீட்டில் சுமித்ரா இல்லை. அவர் கணவர்தான் இருந்தார். 

" கொஞ்சம் இருங்க சார்...   இங்க  ஸ்கூல்ல குழந்தையை விட இப்பதான் போயிருக்கா... பத்து நிமிஷத்துல வந்திடுவா…" என்றார்.

 மணி  ஒன்பது ஆகிவிட்டது. இன்னும் சுமித்ராவை காணோம். பத்து நிமிடத்திற்கு எத்தனை நிமிடங்கள் என்று சங்கரனுக்குத் தெரியவில்லை.  வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு வயிற்றுக்குள் போராடிக்கொண்டிருந்த பசிக்கு பகவத்கீதை சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேட்டில் இருந்த கம்பிகளை பலமுறை எண்ணிவிட்டார். இருபத்தி நாலாவது முறை எண்ணும்பொழுது சுமித்ரா  வீட்டுக்குள் வந்து விட்டாள்.
 
"அப்பா நீங்களா!… சாரிப்பா...  ஸ்கூல்ல கொஞ்சம் நேரமாயிடுச்சுப்பா... ஒரு டீச்சரை பார்த்தேன்... தாரணி கூட போன் பண்ணா.. இருங்க...எடுத்து வச்சிருக்கேன்... தரேன்.."  என்று உள்ளே போனவள்தான். 

சரி, எப்படியும் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டுக்கு போய்விடலாம். சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் என்று வடிவேலுவை போல் 'பிளான்' பண்ணிக்கொண்டிருந்தார்.  உள்ளே போன சுமித்ராவை பத்து நிமிடமாக காணவில்லை. மணி ஒன்பதரை நெருங்கிக்கொண்டிருந்தது. பசியோ  எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிக்    கொண்டு இருந்தது. அதற்கிடையில் அவர் கணவர் ஸ்கூட்டரில்  கிளம்பிப் போய் விட்டார்.  

சங்கரன் ஒரு குரல் கொடுத்தார் "சுமித்ரா!  என்னம்மா.. ரெடியா?".  அவரா குரல் கொடுத்தார்.  வயிற்றிலிருந்த பசி  அவரை அந்தக்  குரல் கொடுக்க வைத்தது.

 " ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க.. தா வந்தர்றேன்…" என்றாள் சுமித்ரா

. " வெயிட் அ மினிட் பார் 5 மினிட்ஸா?... முருகா! அல்லா! ஏசு! " என்று ஒரு சர்வமத பிரார்த்தனையில் இறங்கினார்.   நல்லவேளை ஒன்பதே முக்காலுக்கு சுமித்ரா வெளியே வந்துவிட்டாள். 

" ஒன்னும் இல்லப்பா... கயிறு வைத்து கட்டிக் கொடுத்தேன்…" என்றாள்.

" அப்படியா!.. பரவாயில்லை…" என்று சொல்லிக்கொண்டே இன்னும் இவளுக்கு ஆபிசுக்கு நேரம் ஆகவில்லையா என்ன? என்ற தேவையில்லாத    எண்ணத்தை ஓரங்கட்டிவிட்டு வண்டியில் பாய்ந்து ஏறி ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் வண்டியை முடுக்கினர் .

வீட்டு வாசலில் அவசரமாக வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிரிப்பை தூக்கிக்கொண்டு உள்ளே  பாய்ந்த போது மணி பத்து. " என்னம்மா கோமு... சாப்பாடு ரெடியா? " என்று ஏறக்குறைய கதறினார். " ஏங்க எப்ப பார்த்தாலும் உங்களுக்கு அவசரம்தான்... சாப்பாடு எல்லாம் ரெடிதான்... அதுக்குள்ள உங்க மக போன் பண்ணிட்டா... பிரேக் ஃபாஸ்ட்  உடனே கொடுத்து விடனுமாம்... அங்க சாப்பாடு சரியில்லை... பிரேக்பாஸ்ட் கொடுத்து விடும்மான்னா..பசியோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு...பச்ச உடம்பு...  கேரியர்ல எடுத்து வைத்திருக்கிறேன்... உங்களுக்கும் சேர்த்து... எடுத்துட்டு போங்க... இங்க சாப்பிட்டுட்டு இருந்தா நேரம் ஆயிடும்…".

 அடச்சே என்றாகிவிட்டது சங்கரனுக்கு. தாரணி மகள் என்பது சங்கரனுக்குத் தெரியும். 
தெரியுமா?.

 "சரி கொடுத்து தொல.. பிஸ்கட்... கிஸ்கட் ஏதாவது இருக்கா.. அவசரத்துக்கு வாயில போட்டுக்கிறேன்…"  என்றார்.

 "வாங்கிட்டு வந்தா தான் இருக்கும்…" என்று எரியும் தீயில் தீயில் எண்ணெய்யை ஊற்றியதும் அல்லாமல் இரண்டு விறகு கட்டையும் சொருகினார் சகதர்மிணி. 

'ஏதாவது வாயில் போட்டு வை... கொஞ்சம் உள்ளே தள்ளினால்  அவசரத் தேவையை சமாளிக்கலாம் ' என்று வயிறு ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது.  துறைமுகத்தில் தொங்கும் 10ம் எண் அபாயக் கூண்டை அலட்சியம் செய்யும் மீனவன் போல கேரியரைப் பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தார் சங்கரன்.  எப்படியும் இங்கிருந்து ஆஸ்பத்திரிக்குப் போக அரை மணி நேரமாவது ஆகும். அதுவும் டிராபிக் ஒழுங்கா இருந்தா. அது வரை நாம ஒழுங்கா இருப்பமா?.. மயக்கம் வந்துவிடுமா? என்று வானிலை அறிக்கை போல் குழம்பிய மனதை பொருட்படுத்தாமல்  எப்படியோ தட்டி முட்டி வாகனத்தை ஓட்டி ஆஸ்பத்திரி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே ஓடினார். நாலாவது மாடியில் வார்டு. லிப்டை நோக்கி ஓடினார். லிஃப்ட் க்கு வெளியே கூட்டம், குழப்பம்.

" லிப்ட் பிராப்ளம் சார்... இருக்கிற லிப்ட் ஒன்லி பார் பேஷண்ட்ஸ்.. " என்று மருத்துவமனை பணியாளர் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்.  இது என்ன டிசைன்னே புரியலையே?. 'அட... போங்கப்பா... நம்ம அவசரம் உனக்கு தெரிய மாட்டேங்குது. சரி...விடு...படியிலே போய்க் கொள்ளலாம். ஆனா முடியுமா?... ' என்ற மனதை, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த பசி "முடியும்... முடியும்... போ " என்றது. எப்படியோ தட்டுத் தடுமாறி மூச்சிரைக்க நாலாவது மாடிக்கு வந்து பெல்லை அழுத்தினார். கதவு பாதி திறந்தது.

தாரிணி மட்டும் எட்டிப்பார்த்தாள். " அப்பா!  கொஞ்சம் வெளிய இருங்க... ஃபீடிங் டைம் ….நர்ஸ் வந்துட்டாங்க…" என்றாள்.

" சாப்பாடு எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்…" என்றார் சங்கரன்.

 தாரணி அதைக் கவனித்ததாக தெரியவில்லை. கதவு மட்டும் மூடிக்கொண்டது. வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கடிகாரத்தைப் பார்த்தார். 11மணி நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாளும் இவ்வளவு தாமதமாக சாப்பிட்டதில்லை. பசி தாங்கமாட்டார். அதுவும் 12 மணி நேரத்திற்கு மேல். ஆனால் இடையில் ஒரு காப்பி குடித்திருக்கிறார் காலையில். அதெல்லாம் அவர் பசிக்கு எந்த மூலை. போகிறவர் வருகிறவர் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இவனுங்க எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பானுக... என்று அவருக்கு தோன்றியது. என்ன வெட்கங்கெட்ட மனது... பசி எப்படி படுத்துகிறது?.. இவள் எப்பொழுது ஃபீடிங்கை முடிக்க... நான் எப்படி சாப்பிடுவது... அடச்சே நானும் மனுஷனா! பேரன் பசித்திருந்தா  பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறதே...  பசி ஒரு வெட்கம் கெட்ட விஷயம்  என்று அவருக்குத் தோன்றியது. கண்கள் கதவையே பார்த்துக் கொண்டிருந்தன. எப்பொழுது திறக்கும் என்று. சரி! சரி! கேன்டீனில் போய் சாப்பிடலாம் என்றால் ஒருவேளை கதவைத் திறந்து மகள் நம்மை தேடுவாள் என்ற எண்ணம் வந்தது. என்னப்பா... நீங்க பொறுப்பே இல்லாமல்... ஒரு பத்து நிமிஷம் இருக்க மாட்டீங்களா... என்று பொறுப்போடு கேட்பாள் மகள். சாந்தி!  சாந்தி! என்று பசியை புத்தரை போல் சாந்தப்படுத்த முயன்று கொண்டிருந்தார். "சரி... ஒரு பத்து நிமிடம் பார்ப்போம்" என்று ஒரு சமாதானம் சொல்லிக் கொண்டார். மணி பதினொன்றறையை நெருங்கிவிட்டது. கடத்தல்காரர்கள் கொடுக்கும் கெடுவைப் போல பசியும் ஏதாவது நேரக் கெடு கொடுத்து இருக்கிறதா? என்று அவருக்குப் புரியவில்லை. நல்லவேளை கதவு திறந்து விட்டது. நர்சும் வெளியே வந்துவிட்டார். கொஞ்சம்  கூட வெட்கம் இல்லாமல் கதவை தள்ளி கொண்டு உள்ளே ஏறக்குறைய ஓடினார் சங்கரன்.  எங்கே அந்தக் கேரியர்?... கேரியரை கண் கண்டுபிடித்துவிட்டது. ஆனால் அதற்கு  முன்னால் அவர் மாப்பிள்ளை சீனிவாசன்.  கொஞ்சம் சமாளித்துக்கொண்டு "என்ன மாப்பிள்ளை... இந்த நேரத்தில்…" என்றார். மாப்பிள்ளை கல்லூரியில் பேராசிரியர். 
"காலையில் ஸ்பெஷல் கிளாஸ்  இருந்தது மாமா... இப்போ ஃப்ரீ... காலையில வீட்டில் சாப்பிடல…. சரி.. தாரணியையும், குழந்தையையும்  பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்னு நினைச்சேன். அப்படியே லேட்டாயிடுச்சு. தாரிணிதான் சாப்பாடு நிறைய இருக்கு. இங்கே சாப்பிடுங்கன்னா... அத்தை ரொம்ப டேஸ்டா பண்ணி இருக்கிறார்கள் இன்று…" ஒரு சின்ன ஏப்பம் விட்டுக் கொண்டு கேரியரை மூடினார். மாப்பிள்ளை.
" ஹீ… ஹீ…  " எனறு சமாளித்தாலும் சங்கரனுக்கு வந்த கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை. சரி கேன்டீனுக்கு ஓடுவோம் என்று முடிவு செய்துகொண்டு "வெரிகுட் மாப்பிள்ளை... " என்று அர்த்தமில்லாமல் சொல்லிவிட்டு ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியே வந்தார். 

அதற்குள் போன் தம்பி கணேசனிடம் இருந்து. கணேசன் இவரை விட பத்து வயது சிறியவன். வீடு நங்கநல்லூரில். அம்மா வயதான காலத்தில் கணேசனுடன் இருக்கிறாள். தம்பி ஆடிட்டர். பெரிய வீடு. சுமுகமான மருமகள், பேரன், பேத்திகள்.
அம்மா தன்னுடன் இருக்க வேண்டும் என்பது சங்கரனின் ஆசையாக இருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அதைவிட அதிகமாக இருந்தது.
 
போனை எடுத்து "என்னடா கணேசா இந்த நேரத்துல... ஆபிசுக்கு போகலையா " என்றார்.

 "இல்லேன்னா... ஒரு பிரச்சனை... அம்மாவுக்கு…" தம்பி.
 
"என்னடா... என்ன ஆச்சு அம்மாவுக்கு ? "  என்று பதறினார் சங்கரன். 

" இல்லன்னா காலையில டிபன் சாப்பிட்டுவிட்டு அம்மா வழக்கம்போல பேப்பர் படிக்க பேப்பரை எடுத்துட்டு சேரில் உட்கார்ந்தாள். சேர்ல சரியா கவனித்து உட்காராமல் நேரா கீழ விழுந்துட்டா... பிட்டியில் அடி... நம்ம தாரிணி இருக்கிற ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணி இருக்கிறேன்... ஆர்த்தோ பார்த்துவிட்டார்... ஒரு ஸ்கேன் பண்ணலாம் அப்படின்னார். இப்போதைக்கு அட்மிட் பண்ணிருங்க... வயசானவங்களா இருக்கிறார்கள்... அதுதான் ஒரு ஸ்கேன் ஒரு பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்கு அனுப்புறேன்னு…. செவந்த் ஃப்ளோர்ல ரூம் நம்பர் பத்து...  இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்கேனுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க... நீ ஆஸ்பிட்டல்ல இருந்தா வா அண்ணா…" என்றான். 

"தம்பி இங்கதாண்டா  தாரணி ரூம்ல இருக்கேன்.. இதோ இப்ப வரேன்.." என்றார் சங்கரன். 

ஏற்கனவே அம்மா, தம்பி வீட்டில் இருப்பது அவருக்கு மிகுந்த குற்ற உணர்ச்சி. இப்பொழுது அம்மா கீழே விழுந்து விட்டார். தானே தள்ளிவிட்டது மாதிரி அவருக்கு ஒரு தன்னிரக்கம். ஒருவேளை நம்மிடம் இருந்தால் விழுந்து இருக்க மாட்டாளோ. சீச்சீ நம்மைவிட தம்பி வீட்டில் தான் அதிக கவனிப்பு ஜாஸ்தி. அவருடைய சிந்தனைகளிலும் குழப்பத்திலும் அவருடைய பசி இருந்த இடம் தெரியவில்லை. ஆனால் முகத்திலும், உடலிலும் சோர்வு. லிஃப்ட்டுக்கு கூட காத்திருக்காமல் மடமடவென்று ஏழாவது மாடியில் அம்மா ரூமை அடைந்து கதவைத் தட்டினார். தம்பி ரூமைத் திறந்தார். 

"என்னெண்ணா...  உடனே வந்துட்டீங்களா!  "என்று வியப்பைக் காட்டினான். 

"ஆமாண்டா... அம்மா எங்க ?" என்றார். 

அம்மா கட்டிலில் கிழிந்துபோன நாராக கிடந்தாள். 84 வயது கீழே விழும் வயதா... அம்மா அருகில் சென்று நாற்காலியில் அமர்ந்தார். கண்களை மூடி அரை மயக்கத்தில் இருந்து அம்மாவின் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு மெல்ல தடவிக் கொடுத்தார். சிகப்புக்கல் பதித்த  அந்த வளையல்கள்  கையில் தட்டுப்பட்டது. அம்மாவுக்கு 25 வருட திருமண நிறைவுக்கு வாங்கி கொடுத்திருந்தார் . அம்மா எப்பவும் சொல்வார் " சங்கரா இது கையில இருந்தா நீ என் பக்கத்துல இருக்க மாதிரி இருக்குதுடா" னு. ஸ்பரிசம்பட்டு அம்மா கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.

 "சங்கரா வாடா… " என்று ஏதோ  ஈனஸ்வரத்தில் முணுமுணுத்தார். 

 "என்னம்மா.." என்றார் சங்கரன். 

" அண்ணா... அம்மா வாய்க்கிட்ட காத வெச்சு கேளு…" என்றான் கணேசன். 

காதை மெல்ல அம்மாவின் வாய் அருகே கொண்டு சென்றார்.  மெலிந்த தன் கைகளால் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார் அம்மா.  எங்கிருந்தோ கேட்பது போன்ற மெல்லிய குரலில் ஈனஸ்வரத்தில்  "சங்கரா சாப்பிட்டியாடா…" என்றாள். 

சங்கரனின் கண்களில் கரகரவென்று  மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர். அம்மாவை பார்த்தார். வலியில் மயக்கத்தில் கண்மூடி இருந்தது. இருந்தாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை கைகளால் துடைத்துக் கொண்டார் சங்கரன். மெல்ல முதுகை கைகளால் வருடும்  உணர்வில் தலையை திருப்பினார். கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் தம்பி. " அண்ணா காலையில் சக்கரை பொங்கல் பண்ணினோம்... அம்மாவுக்கு உன் நினைப்புதான்... சங்கரனுக்கு ரொம்ப பிடிக்கும்...  ரொம்ப பிடிக்கும்னு  உருகிப் போயிட்டா... அப்புறம் கீழ விழுந்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்போதுகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை கைகளால் துடைத்துக் கொண்டார் சங்கரன். மெல்ல முதுகை கைகளால் வருடும்  உணர்வில் தலையை திருப்பினார். கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் தம்பி. " அண்ணா காலையில் சக்கரை பொங்கல் பண்ணினோம்... அம்மாவுக்கு உன் நினைப்புதான்... சங்கரனுக்கு ரொம்ப பிடிக்கும்...  ரொம்ப பிடிக்கும்னு  உருகிப் போயிட்டா... அப்புறம் கீழ விழுந்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்போது கூட மறக்காமல்...  சங்கரன் வருவான்டா என்ன பாக்க...  கொஞ்சம்  எடுத்திட்டு வாடா ஆஸ்பத்திரிக்கு... சாப்பிடுவான்னா " என்றான் தம்பி. இப்பொழுது தாங்க முடியாமல் அழுகை வர, அடக்கமுயன்று உடல் குலுங்கினார் சங்கரன். என்னவென்று புரியாமல் மெல்ல அணைத்துக்கொண்டு தம்பி சொன்னான் "அம்மாவுக்கு ஒன்னும் இல்லண்ணா... சரியாயிடும்…".

ரா.ரவிச்சந்திரன்

 பி.கு.

இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு பொறியாக அமைந்தது Ms. Uma Shashikant  அவர்களின் ஒரு பதிவுதான்

அதன் முதல் பத்தி. என்னுடைய வாழ்விலும் அது பலமுறை நடந்திருக்கிறது. அதன் பாதிப்பு தான் இந்தக் கதை. சம்பவங்கள் முழுதும் கற்பனையே.

 ஒரு குழந்தையின் "அம்மா!.." என்ற குரலுக்கும், ஒரு பிச்சைக்காரனின் "அம்மா..." என்ற குரலுக்கும் வேற்றுமை உண்டு இல்லையா ?. அதுபோலத்தான் "சாப்பிட்டாயா…" என்று அந்த வார்த்தையை உச்சரிக்கும் தாயின்  குரலுக்கும். 
அதில் இருக்கும் ஆன்ம சுத்தியும், பரிவும் வேறு யார் சொல்லும்போதும் இருப்பதில்லை.  எத்தனை வயதானாலும் தன் பிள்ளைகளின் பசி தாய்க்குத் தான் தெரியும்.
வாட்ஸ்அப் பகிர்வு.
நெஞ்சை  நெகிழ  வைத்தது. 


20 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? ஜுரம் குணமாகி உடல் நலமாகி விட்டீர்களா? பூரணமாக தங்கள் உடல் நலம் குணமாக இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

பதிவு அருமை. சிறுகதை நன்றாக உள்ளது. எழுதியவருக்கு என் அன்பான பாராட்டுக்கள். பசியின் தவிப்பை நன்றாக கதாசிரியர் விவரித்திருக்கிறார்.அந்த பசி தவிப்பின் வார்த்தைகள் இயல்பாக வந்து விழுந்திருக்கின்றன. இறுதியில் அந்த தாயின் "சாப்பிட்டாச்சா?" என்ற பாசம் மிகுந்த கேள்வி பிறந்ததும் கதையின் நாயகர் மட்டும் அழவில்லை. என் கண்களிலும் கண்ணீர் மடமடவென்று பெருக்கெடுத்து விட்டது. உணர்வு மிகுந்த கதை. ஒரு தாய் பாசத்திற்கும், அன்பிற்கும் நிகராக உலகில் வேறு எதுவுமில்லை. கதை முடிந்ததும் மனது பாரமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்களின் அன்பு விசாரிப்புக்கு மிக நன்றிமா.

முன்பே ஷெட்யூல் செய்து வைத்ததால் இந்தப் பதிவுகள்
வெளியாகி விட்டன.

ஜுரம் 5 நாட்களோடு முடிந்தது.
மூக்கடைப்பும், சளியும் தான் விடாமல்
படுத்துகிறது.ஓய்வெடுத்தாலும் தீராத
களைப்பும்.,கண்ணெரிச்சலும்.

வயதானதால் நேரம் எடுக்கிறது.

''தாயின் "சாப்பிட்டாச்சா?" என்ற பாசம் மிகுந்த கேள்வி பிறந்ததும் கதையின் நாயகர் மட்டும் அழவில்லை. என் கண்களிலும் கண்ணீர் மடமடவென்று பெருக்கெடுத்து''

அம்மாக்களால் மட்டுமே காட்ட முடிந்த பாசம்.
அம்மாவுக்குப் பிறகு மனைவிக்கு வந்தால்
நன்றாக இருக்கும்.

பசிதான் எத்தனை பாடு படுத்துகிறது.

நன்றி மா.

ஸ்ரீராம். said...

சங்கரன் பேசாமல் டி நகர் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம்!  ஆனால் அம்மாவிடம் அந்த அன்பின் நெகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதே...  அருமையான கதை.  நன்றி அம்மா.

ஸ்ரீராம். said...

இவ்வளவு பசி ஒருவருக்கு வருமா என்பது எனக்கு ஆச்சர்யம்.  எனென்றால் நான் ஒரு நாள் முழுக்க சாப்பிடவில்லை என்றால் கூட இப்படி தவிப்பு வராது.  ஆனால் பாஸுக்கு பசி முற்றினால் தலை சுற்றி, குமட்டி என்று என்னென்னவோ செய்து விடும்.

ஸ்ரீராம். said...

உங்கள் கமெண்ட் பாக்ஸ் இன்னும் மாறாதது ஆச்சர்யம்.  பழைய மாதிரியே இருக்கிறது.

Geetha Sambasivam said...

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கு ரேவதி! நீங்க இந்தியா வந்து ஶ்ரீரங்கம் வருவதற்குள்ளாக இங்கே வெயிலின் தாக்கம் குறையும் என நம்புவோம். இந்தக் கதை முகநூலில் "மத்யமர்" தளத்தில் எழுதி இருந்தார்கள். அப்போவே இரண்டு மூன்று முறை பகிர்ந்து கொண்டிருந்தனர். இப்போ இங்கேயும் வந்து படிப்பதன் மூலம் அம்மா என்பவள் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாய்க் கவனிப்பாள் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. ஆனாலும் மனைவி இத்தனை அலட்சியமாய்க் கணவன் உடல்நிலை பற்றி அறிந்திருந்தும் அசட்டையாக இருப்பதை ஏற்கவும் முடியவில்லை. குறைந்த பட்சமாக ஒரு தம்பளர் ஹார்லிக்ஸாவது கொடுக்கலாமே!

Jayakumar Chandrasekaran said...

கதை என்பது தெரிகிறது. ஆனாலும் நெகிழ வைக்கிறது. யாருக்கு என்ன பிடிக்கும் என்பது அம்மாவுக்கே தெரியம். 

Jayakumar

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நானும் அதுபோலத்தான் நினைத்தேன்.
மெயின் கரு பசி.

பசி வந்திடப் பத்தும் பறக்கிறது.
அம்மாவைப் பார்த்ததும் கொஞ்சம் மனுஷத்தனம்
வருகிறது போல.

இவ்வளவு அசட்டையாக ஒரு மனைவி இருப்பாளா
என்றும் தோன்றியது.

வல்லிசிம்ஹன் said...

பசி, சர்க்கரை நோயில் இருந்தால்
கொஞ்சம் படுத்தும் . இல்லாவிட்டாலும்
பசி சிலரால் பொறுத்துக் கொள்ள முடியும்
பலரால் முடியாது.
பாஸுக்கு எப்பவுமே வேலை இருக்கும் இல்லையாமா.

அப்பொழுது களைப்பாகத் தான் இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.
நன்றி மா. பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

கமெண்ட்ட் பாக்ஸ் எல்லா இடத்திலும் மாறுகிறது.
இங்கே ஏன் மாறவில்லை தெரியவில்லை:)

ஓல்ட் ப்ளாகர் டெம்ப்ளேட் என்பதால் இருக்கலாம் பா.
நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

''உங்கள் உடல்நலம் எப்படி இருக்கு ரேவதி! நீங்க இந்தியா வந்து ஶ்ரீரங்கம் வருவதற்குள்ளாக இங்கே வெயிலின் தாக்கம் குறையும் என நம்புவோம்.''

இப்போது தேவலை மா.
வெய்யிலும் , தொற்றும் கொஞ்சம் பயமாகத்தான்
இருக்கிறது.
உங்களை எல்லாம் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே
மனசு ஆசைப் படுகிறது.

பகவத் சங்கல்பம்.

ஓ !!!மத்யமரில் ஏற்கனவே வந்து விட்டதா.

நான் அந்தப் பக்கம் போவதில்லை.
நான் தம்பி முகுந்தன் அனுப்பியதால்

வாட்ஸாப்பில் வந்திருக்கிறது என்று
நினைத்தேன் மா.

அம்மா தான் இதில் முக்கியம்.
அலையும் மனதாகப் பிள்ளையைச் சொல்லி இருக்கிறார்கள்
என்று தோன்றுகிறது.

நன்றி மா. பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் ஸார்,
வணக்கம்.
இந்த செய்தி சொல்லுவது உண்மைதான்.
அம்மாவைப் போல யாராலேயும் நம்மைக் கவனிக்க
முடியாது. அந்தப் பாசமே தனி தான்.
மிக நன்றி மா.

மாதேவி said...

மனதை தொட்டது .அம்மா என்றால் அம்மாதான் .கதை ஓட்டம் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள் .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.

இந்தக் கதையை என் தம்பி அனுப்பினான்.
அன்னையர் தினம் இங்கே இன்று கொண்டாடுகிறார்கள்.

இந்த வாரத்தில் பதிவில் வெளியிட்டதே மகிழ்ச்சி மா.

மிக மிக நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

கதையைப் படித்து நெகிழ்ந்துவிட்டேன். வேறு வார்த்தைகள் இல்லை.

துளசிதரன்

கோமதி அரசு said...

கதை நெகிழ்வு.

சப்பிட்டாயா என்று அம்மா கேட்பதும் உடைந்து அழும் சங்கரனும் மனதை கனக்க வியத்து விட்டார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மனதை தொட்ட கதை. அம்மா எப்போதும் கேட்கும் கேள்வி..... சாப்பிட்டயா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

கதை என்றாலும் கரு உயிர் உள்ளதாக
எழுதி இருக்கிறார்.
நம் எல்லோருக்கும் பொதுவான கருத்து. நன்றி மா. அன்னையர் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
அம்மா தான் எப்பொழுதுமே கொடுக்கும் கை.
நாமும் அம்மாக்கள் தான் இருந்தும் நம் அம்மா,
பாட்டிகள் காண்பித்த அளவுக்கு நான் அருமையாக
இருக்கிறேனா என்று தெரியவில்லை.

அதைக் குழந்தைகள் தான் சொல்ல வேண்டும்.

என்றும் நலமுடன் இருங்கள் .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள் மா.
மிக உண்மையான வார்த்தை.
அம்மா வயிற்றைத்தான் பார்ப்பாள்
என்று மாமியார் சொல்வார்.
அம்மாக்குப் பிறகு மனைவியரும்
கணவர்களைக் கவனிக்கிறார்கள்.
என்றும் குடும்பத்துடன் வாழ்க வளமுடன்.