Blog Archive

Friday, January 21, 2022

அதிசயம்ஒற்றுமை,அன்பு.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் என்றும் வளமாக வாழ வேண்டும்.
எது  விந்தை ...எது அதிசயம்.
இவை காலங்காலமாக 
நான்  ,நாம் ஆராய்ந்து வரும் உண்மை.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் சொல்லி இருக்கும் கவிதை
போல பெற்றோர் பிள்ளைகள் 
உறவு மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குக் கிடைத்த கூட்டுக் குடும்பம்
என் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை.
அவர்களுக்கு ஆதரவாக இருந்தது பெரும்பாலும் என் பெற்றோர்.

அதனால அங்கே ஆகர்ஷணை அதிகம்.

சிங்கத்தின் அம்மா மிக அருமையாக இருப்பார். இருந்தாலும்
12 பேரன் பேத்திகளுக்கு நடுவே
நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகை
கொஞ்சம் மட்டுப் படும்:)

அதனாலயே அவர்கள் இன்னும் உரம் பெற்றார்கள்.
அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்போது நான் பாட்டியாக இருக்கும் போது
இளைய தலைமுறைகளின் சொற்களைக் கேட்டுக் 
கொள்கிறேன். அவர்களுக்கே உண்டான வேலை அழுத்தம், படிப்பு அழுத்தம்
எல்லா வற்றையும் பார்க்கும் போது இன்னும்
கொஞ்சம் பரிவுதான் காட்ட வேண்டி இருக்கிறது.

மிகவும் பிடித்த படங்கள் ஆனந்தம், பாண்டவர் பூமி,
எங்கள் குடும்பம் பெரிசு, மக்களைப் பெற்ற மகராசி 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்  நம் குடும்பத்தைக் கவனித்தது போலவே
இப்பொழுது நம் மக்கள் அவர்கள் குடும்பத்தை க்
கவனிக்கிறார்கள்.

நம்மைக் கண்காணிக்க வீட்டில் மாமியார்,பாட்டி எல்லோரும் இருந்தார்கள்.
இப்போது இவர்களுக்கு அந்தத் தொந்தரவும் இல்லை.:)

சம்சாரம் மின்சாரம் படத்தில் வரும் அழும் லக்ஷ்மி மாதிரி
இருக்க இப்போது யாரும் தயாரில்லை.

பெற்றோர்களே முதலில் அவர்களைத் தனிக் குடித்தனம்
வைக்கவே ஆசைப் படுகிறார்கள்.:)

எப்படியோ எல்லோரும் அவரவர் கணவனையும், பெண்டாட்டியையும்
,குழந்தைகளையும் நல்லபடியாகக்
கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இருக்கலாம் தான். நமக்கும் வயது 80க்கு மேல் ஆகும்போது?

யாராவது வேண்டாமா. தனி வீட்டில் குடி இருக்கும் மூன்று
பெண்களை எனக்குத் தெரியும். 80க்கு மேல் வயதானவர்கள்தான்.

நலம் வாழப் பிரார்த்தனைகள்.
17 comments:

Geetha Sambasivam said...

அந்தக் கால வாழ்க்கையை இப்போது அசை போடவே முடியும். எங்க குழந்தைகளுக்குக்கூட்டுக்குடும்ப வாழ்க்கை அனுபவங்கள் நிறையவே உண்டு. நீங்க சொல்றாப்போல் நாத்தனார் குழந்தைகளுக்குப் பின்னரே இவங்க. ஆகவே அவங்களுக்கும் எல்லாமும் பழகி விட்டது. நல்ல அருமையான அலசல். என் அம்மாவழிப் பாட்டி வீட்டில் ஐந்து பெண்கள், நான்கு பிள்ளைகள். நாங்கள் பெண் வயிற்றுப் பேரன், பேத்திகள் எல்லோருமே பிள்ளை வயிற்றுக்குழந்தைகளை விட மிகப் பெரியவர்களாகப் போய்விட்டோம். ஆகவே அவங்களோட நாங்க என்னதான் பேசிக் களித்தாலும் வயது வித்தியாசம் இடிக்கவே செய்யும். :)

KILLERGEE Devakottai said...

சிறந்த கருத்துக்கள் அம்மா.
கூட்டுக்குடும்பம் எனக்கு என்றுமே பிடித்தமான விடயம். என்ன செய்வது இன்று காலச்சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பதிவு. கூட்டுக்குடும்பம் நல்ல விஷயம் ஆனால் இப்போதைய வாழ்க்கைச் சூழலில் அது கொஞ்சம் கடினம் தான்.

எனக்குச் சிறு வயதில் கூட்டுக் குடும்ப அனுபவம் இல்லை. ஆனால் இங்கு கேரளத்தில் சிறு இடங்களில், கிராமங்களில் இப்போதும் கூட்டுக் குடும்பங்கள் இருக்கின்றன.

எங்கள் வீட்டில் என் அக்கா (வாய் பேச இயலாது, செவியும் கேட்காது பிறவியிலேயே) திருமணம் செய்து கொள்ளவில்லை என்னோடுதான் இருக்கிறார். என் பெற்றோர் இருந்தவரை என்னோடு/எங்களோடுதான் இருந்தார்கள். மனதிற்குத் திருப்தி தந்த, தரும் விஷயம்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்போதைய வாழ்க்கைச் சூழலில் இருவரும் வேலைக்குப்போகும் சூழலில் கூட்டுக் குடும்பம் என்பது கொஞ்சம் கடினமான விஷயம்.

ஏனென்றால் இருவரும் வெளியே சென்று வேலை பார்க்க வேண்டிய சூழல். எல்லோரும் பணக்காரர்கள் இல்லையே. ஒருகுழந்தையை ஜஸ்ட் நர்சரி சேர்க்க வேண்டும் என்றாலும் பணம் நிறைய செலவாகிறது. பல செலவுகளைச் சரிக்கட்ட இருவரும் வேலைக்குப் போக வேண்டியதாகிறது.

பெண்களும் படித்து நல்ல வேலைக்குப் போகிறார்கள் நல்ல விஷயம் தானே.

அப்போது அவர்களுடன் பெரியவர்கள் இருக்க நேர்ந்தால் அவர்கள் இளையவர்களை உங்களைப் போல புரிந்து கொள்பவர்கள் என்றால் நலல்து. அல்லாமல் புரிந்துகொள்ளாமல் இருந்தால் தாங்கள் காலத்தைப் போல வாழ வேண்டும் என்று நினைத்தால் இளையவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் கஷ்டம்தான்.

ஒருவருக்கொருவர் புரிதல் இருந்தால் எல்லாமே நல்லபடியாக இருக்கும்.

எப்படி இருந்தாலும் பெரியவர்களைக் கவனித்துக் கொண்டாலே போதும்

கீதா

ஸ்ரீராம். said...

அந்தக் கால கூட்டுக் குடும்பம் போல சேர்ந்து வாழ இனி வகையில்லை. முதலில் அளவான குழந்தைகள். சித்தப்பா, சித்தி, அத்தை முறைகள் அருகி வருகின்றன. இரண்டாவது புதிய வேலை வாய்ப்புகள். ஒரே இடத்தில் இல்லாமல் ஆங்காங்கே மாறி மாறி இருக்க வேண்டிய சூழல். அதைத் தவிர்க்க முடியாத அளவு விலைவாசி. மூன்றாவது டெக்னாலஜி முன்னேற்றங்கள். கவனக்கலைப்பு சமாச்சாரங்கள் அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

இப்போது அது நடக்க ஹேதுவே இல்லை. முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகள்.
இது அனைவருக்கும் மகன் ,மகள் மருமகன்,மருமகள்

குழந்தைகள் எல்லோருக்கும் பொருந்தும்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாரம்பரியமே
மாறுகிறதாமே.
நாம் தான் அனுசரித்துப் போக வேண்டியது தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

'அந்தக் கால வாழ்க்கையை நினைத்துக் கூடப்
பார்க்க முடியாது'

நீங்கள் சொல்வது எல்லாம் நிஜம்.

பெண் வழி வாரிசுகள், பிள்ளை வழி வாரிசுகள்.
தனிதான்.
உள்ளே போக வேண்டிய அவசியம் இல்லை:)
காலம் காலமாகத் தொடர்வது.

எங்கள் வீட்டில்லும் நாங்கள் மூவரும் பெரியவர்கள்.
மத்த கசின் எல்லோரும் பத்தும் பத்துக்கு
மேலேயும் வயது வித்தையாசம் கடைசி
நாலு பேர் என் குழந்தைகள் வயசு:)

இதை எல்லாம் மீறி நம் குழந்தைகளையும் இறைவன்
காத்துத் தான் வருகிறான். சோடை போகவில்லை.

இப்படியே இருந்தால் போதும்.
மிக நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கூட்டுக்குடும்பத்தை பற்றி நன்றாக அலசி உள்ளீர்கள். இதில் என் பதிவையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே அந்த மாதிரி அண்ணன்கள், தம்பிகள் என சேர்ந்திருந்த குடும்பங்கள் அந்த காலத்தோடு போச்சு. இப்போதுள்ள படிப்பு, அதன் சம்பந்தபட்ட வேலைகள் என வேறு வேறு ஊர்களுக்கு பிரிந்த காலங்கள் வந்து,இப்போது ஒரே ஊரில் இருந்தால் கூட "நீ நல்லாயிருக்கிறாயா?""நான் நலமாக இருக்கிறேன்."என்று விசு பட லக்ஷ்மி மாதிரி கேட்டுக் கொள்ளும் காலங்கள் வந்து விட்டது. காரணம் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள், பணத்தின் அதன் பயன்பாட்டின் வித்தியாசங்கள், முக்கியமாக ஆசை எனும் மாய வலை இவற்றில் விழுந்து இப்படிபட்ட பிரிவுகள் உண்டாகி விட்டன.

நீங்கள் சொல்வது போல் நம் காலத்தில் மாமனார் மாமியாரை நாம் அவர்களின் கடைசி காலம் வரை மனங்கோணாமல் வைத்துக் கொண்டோம். இப்போது மூன்று முடிச்சு போடும் போதே ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒவ்வொரு ஆளாக உதறி விட பார்க்கிறார்கள். காலம் அதி விரைவாக எங்கோ போய்க் கொண்டு உள்ளது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

தாங்கள் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை. இனி இந்த பாடல்களில்தான் இப்படியான ஒற்றுமையான குடும்பங்களை பார்க்க முடியும். வானத்தைப்போல, தவசி போன்ற நல்ல கருத்துள்ள படங்களை எத்தனையோ தடவை பார்த்தாயிற்று.எனக்கு மிகவும் பிடித்த படங்கள். நல்ல அலசலான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

என்றும் நலமுடன் இருங்கள்.

இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பங்கள்
நடைமுறைக்கு ஒத்துவராது.
நீங்கள் உங்கள் சகோதரியைப் பராமரிப்பது
எவ்வளவு பெரிய விஷயம்.
இந்தக் காலத்தில் நடக்கிற காரியமா இது!!

உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்.

இங்கேயும் சில பெற்றோர் அருமையாகப்
பார்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.

ஒரு கேரளாவைச் சேர்ந்த பெண், தன் மாமியார், '
அம்மா இருவரையும் வீட்டில் வைத்துக்
கவனிக்கிறார்.
மாமியார் கிறிஸ்துவ மதம். அம்மா பிராம்மண ஐயர்.
ஒற்றுமைக்கும் மேன்மைக்கும் எடுத்துக்காட்டு.

மிக நன்றி மா துளசிதரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நீங்கள் எல்லோருமே எனக்கு அடுத்த தலைமுறை.
நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
பெரியவர்கள் ந்றைய விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஸ்டிரெஸ் இல்லாமல் வாழப்
பழக வேண்டும்.

பாங்களூரில் மகளின் தோழியின் மாமியாருக்கு 84
வயதாகிறது. இன்னும் ஆரோக்கியமாகத் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டு
மருமகள் மகன் பேரன் என்று கட்டுப்பாடுடன்
இருக்கிறார்.நல்ல குடும்பம்.
அந்தப் பொண்ணும் ரொம்ப நல்லது.
''அல்லாமல் புரிந்துகொள்ளாமல் இருந்தால் தாங்கள் காலத்தைப் போல வாழ வேண்டும் என்று நினைத்தால் இளையவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் கஷ்டம்தான்.

ஒருவருக்கொருவர் புரிதல் இருந்தால் எல்லாமே நல்லபடியாக இருக்கும்.

எப்படி இருந்தாலும் பெரியவர்களைக் கவனித்துக் கொண்டாலே போதும்''
இதுதான் மா தேவை.
மிக நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள் அப்பா,.

நீங்கள் சொல்வதுதான் யதார்த்தமாக
நடக்கிறது. அருகி வரும் உறவுகளைக்
கண்டு கொஞ்சம் மனம் வலிப்பதென்னவோ உண்மை.

சட்டென்று அடுத்த தலைமுறையின் ஒரு வாரிசு
ஒரு செய்தி வாட்ஸாப்பில் எப்படி இருக்கே என்று கேட்டால் மனம் நிறைந்து விடுகிறது.

எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டி வருகிறது.

என் தலைமுறையினர் இன்னும் அதே
நட்புடன் இருக்கிறார்கள்.
இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்துப்

பிறந்தவர்களுக்கு நிஜமாகவே நேரம் இல்லை.
Immediate Family என்று குறுகிவிட்டது அவர்கள் வட்டம்.
என்ன செய்யலாம்:(
நமக்கும் நல்ல உறவுகள் இருந்தன என்று நல்லதை
நினைத்து அமைதி கொள்ள வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

என் கணவரின் பாட்டி, தாத்தா,
என் மாமியார் மாமனார் நாத்தனார்கள்.,
மற்ற பெரியவர்கள் என்று பெரிய குடும்பம்.
எல்லோரிடமும் அனுசரித்தே போக வேண்டும்.

அதுவே பழகியும் போனது.

''நீங்கள் சொல்வது போல் நம் காலத்தில் மாமனார் மாமியாரை நாம் அவர்களின் கடைசி காலம் வரை மனங்கோணாமல் வைத்துக் கொண்டோம். இப்போது மூன்று முடிச்சு போடும் போதே ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒவ்வொரு ஆளாக உதறி விட பார்க்கிறார்கள். காலம் அதி விரைவாக எங்கோ போய்க் கொண்டு உள்ளது. ஒன்றும் சொல்வதற்கில்லை.''

பெருமூச்சுடன் ஒப்புக் கொள்கிறேன்.
நம் இஷ்டம் என்று இப்போது ஒன்றும் இல்லை.

பேசாமலிருக்கக் கற்றுக் கொண்டு அமைந்து விடவேண்டும்.
இதோ இந்த வலைப் பதிவு மேடைதான்
நமக்குக் கிடைத்த சுதந்திரம்.
அதற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அன்பான எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்வதற்கு மிக நன்றி மா,

நெல்லைத்தமிழன் said...

உங்கள் பதிவுகளில் மிகவும் பிடித்தது, நீங்க அதன் உள்ளீடாக நாட்டு நடப்பு, அனுபவம் என்று கோடிட்டுக் காண்பிப்பதுதான். மூத்தோர் சொல் அமுதம்தான்.

இப்போது எனக்குத் தோன்றுகிறது. தாத்தா பாட்டி கூடவே இருப்பது, சிசிடிவி கேமரா போல பேரன் பேத்திகளை நல்வழிக்குக் கொண்டு செல்லும்.

நிறையபேர் நினைப்பது, உறவு என்பது மட்டுமே நம் வாரிசுகள் நம்மை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளப் போதுமானது என்று. முடிந்த அளவு, நம் சரீரத்தால் அவர்களுக்கு உதவியாக இருப்பதும் நல்லது.

வீட்டின் தலைவர் என்ற கான்சப்ட்தான் தனித்தனி ஆசைகளைக் கட்டுப்படுத்தியது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டுத் தலைவரிடம் கொடுத்து அவர் குடும்பத்தை வழிநடத்துவது. (யானைகள் கூட்டம் போன்று). அந்த கான்சப்பட் மசென்ற தலைமுறையோடு மறைந்துவிட்டது, நஷ்டம்தான்

நம் குழந்தைகளிடமே நமக்கு அன்பில் வேறுபாடு உண்டு. அப்போ பேரன் பேத்திகளிடத்திலும் அது இருக்கத்தான் செய்யும்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

நலமுடன் இருங்கள்.
''வீட்டின் தலைவர் என்ற கான்சப்ட்தான் தனித்தனி ஆசைகளைக் கட்டுப்படுத்தியது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டுத் தலைவரிடம் கொடுத்து அவர் குடும்பத்தை வழிநடத்துவது. (யானைகள் கூட்டம் போன்று). அந்த கான்சப்பட் மசென்ற தலைமுறையோடு மறைந்துவிட்டது, நஷ்டம்தான்

நம் குழந்தைகளிடமே நமக்கு அன்பில் வேறுபாடு உண்டு. அப்போ பேரன் பேத்திகளிடத்திலும் அது இருக்கத்தான் செய்யும்."

ஹ்ம்ம்ம்ம். குழந்தைகளிடம் வேறுபாடு ஏது அப்பா.
நாம் பெற்ற குழந்தைகளிடம்
எதற்கு வித்தியாசம் காண்பிக்கப் போகிறோம்?

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பழகும் முறை
மாறுபடலாம்.
அப்பாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா
வேண்டும் புரிந்து கொள்ள.
மகள் அம்மாவைச் சார்ந்து பேசுவாள்.
பையன் களுக்கு அப்பா ஹீரோ:)

நாம் இந்த பழக்கம் பாசம் எல்லாவற்றையும்
புன்னகையோடு கடப்போம்.
நம் மனதில் அவர்கள் எப்போதும் குழந்தைகள்தான்.

அதே பாசம் தான் இப்போது பேரக் குழந்தைகளிடம்.
பேத்திகள் ஒட்டும் அளவு பேரங்களுக்கு
அவ்வளவு ஒட்டுதல் வருவது கொஞ்சமே சிரமம்.

பசங்க பெத்த பெண்களும் அதே.
பெண் பெத்த பிள்ளைகளும் அதே:)

என் அம்மா பாட்டிக்கு நாn முதல் பேத்தி.
அதனால் ஒரு பதினைந்து வயது வரை ஏகப்பட்ட செல்லம்.
பிறகு தன் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள்
பிறந்த இன்னும் அந்தப் பாசம் விரிவடைந்தது.
என் மாமாக்கள் பசங்கள் 57 வயதிலிருந்து 30 வயது வரை இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் பெரிய அக்கா:)

மாதேவி said...

காலமாற்றங்கள் உறவுகளை பிரித்தே வைத்துள்ளன.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மைதான்.
தானாகவே பிரிந்து செல்லும் உறவுகளை மேலும் தள்ளி
வைக்கிறது தொற்று.:(

வெங்கட் நாகராஜ் said...

கூட்டுக் குடும்பம் குறித்த சிறப்பான அலசல். இன்றைய சூழ்நிலை இப்படி இருக்க அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. முன்புபோல விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் பலருக்கும் இல்லை. பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அவரவரும் தனக்கான சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பு.