Blog Archive

Tuesday, August 24, 2021

சுண்டைக்காயும் சுமை கூலியும்

வல்லிசிம்ஹன்
சுண்டைக்காய் மாடவீதியில் இறைபடுமே,
இங்கே கிடைக்கவில்லையே என்று ஒரே விசாரம்:)

என்னவோ அப்போதெல்லாம் வாங்கி வாங்கி
அனுபவித்தது போல.:)
இதெல்லாம் ஆவணியில் விற்கும் போது.

சுண்டைக்காய்,மணத்தக்காளி, அரி நெல்லிக்காய்
என்றும் ,மாங்காய் இஞ்சி, தஞ்சாவூர்க் குடமிளகாய் என்றும்
ஊரிலிருந்து வரும்.

எல்லாம் புரட்டாசி வெய்யிலில் 
போட்டு எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.
மார்கழி மாசத்துக்குப் பிரயோசனப்படும் என்று 
பாட்டி வழி காட்ட நான் செய்து
முடித்து அது அதற்கான ஜாடிகளில்
போட்டு வைப்போம்.

இதற்காகவே வரும் பெண் வயிற்றுப் பேரன்,
"ஆஜி, ஊறுகாயெல்லாம் போட்டியா"
நான் பாட்டில் கொண்டு வந்திருக்கேன் 
என்று எடுத்துப் போவார்.
பெரிய குடும்பம் அப்படி எல்லோரும் எடுத்துக் கொண்டது 
போக நமக்கு இன்னோரு தடவை 
போடுவோம்:)
இது தவிர, சுண்டைக்காய் போட்டு சாம்பார், வத்தக் குழம்பு
எல்லாம்
திகட்டிப் போகும் அளவுக்கு செய்யப்படும்.

இதெல்லாம் எங்கள் மதுரை சுண்டைக்காய்க்கு ஈடாகாது
என்று மனதில் முனகிக் கொள்வேன்.
மலை சுண்டைக்காயை ,அப்பா டவுன் சந்தைக்குப் போகும்போது வாங்கி வருவார்,.

நல்ல பெரிதாகக் கசப்பில்லாமல் இருக்கும்.
அதை நன்றாக அலம்பி,
உரலில் போட்டு இடித்துக் கொடுப்பேன்.

பருப்புப் போட்டு சாம்பார்ப்பொடியும் , புளியும்
கொதிக்கும் போது,
இந்த இடித்த சுண்டைக்காயை நல்லெண்ணெயில் வதக்கி
சேர்த்தால் நிமிஷத்தில் வெந்துவிடும்
சிறந்த வாசனையுடன்  அன்று சாதம் இன்னோரு கைப்பிடி 
சாப்பிடலாம்.

இங்கே சுண்டைக்காய் விற்கப்படுவதில்லை.
விளைவதுமில்லை. அதான் அணிலார், முயலார் எல்லாம் வந்து வேரோடு
கெல்லிப் போட்டு சாப்பிட்டு விட்டுப் போகிறார்களே.:(

அட்லாண்டாவில் மகளுடைய நாத்தனார் இருக்கிறார்.
அவருக்கு சுண்டைக்காயைக் கடையில் பார்த்ததும்,
அண்ணா மனைவி நினைவுவர
''வாங்கி வைக்கிறேன்,
நீ ஃபெடெக்ஸ் வழியா எடுத்துக்கோ ''என்றார்.
அத்தேரிமாக்கு என்று ஃபெடெக்ஸுக்குத் தொலைபேசி
கேட்டால் 35 டாலர் ஆகும் என்றார்கள்,
அதாவது அங்கிருந்து இங்கே கொண்டுவர!!!
சுண்டைக்காய் கொள் பணம் 6 டாலர்.
பார்சல் பணம் 35 .
சரியாப் போச்சா:))
வந்த உடன் உப்பில் ஊறப் போட்டு,
ஒரு வாரமாக வறுத்து
தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு தீர்ந்தும் 
போய் விட்டது. 
ஆமாம் 300 கிராம் சுண்டைக்காய் எவ்வளவு நாள் வரும்!!!!!!










17 comments:

மாதேவி said...

சுண்டங்காய் கால்பணம் சுமைகூலி ...:)
ரசித்து சுவைத்து சாப்பிட்டு இருப்பீர்களே. அதுவே மகிழ்ச்சி.

இங்கு வீட்டில் காய்த்து வத்தல் போட்டு வைத்தாகிவிட்டது. இப்பொழுதும் காய்கள் வருகின்றன நேற்றும் சமைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
வீட்டில் காய்க்கிறதா,? அட!!! நல்லதே அம்மா.

நம் வீட்டில் அங்கே மணத்தக்காளியும் உண்டு.
அப்படியே பறித்து சாப்பிடுவோம்.
சுண்டைக்காய் சர்க்கரை வியாதிக்கும் நல்லது
என்பார்கள்.
நல்லதாகப் பறித்து சுவைத்து சாப்பிடுங்கள்.

விலையும் கூலியும் பார்த்தீர்கள் அல்லவா.
பழமொழி எல்லாம் எப்படிப்
பலிக்கிறது:))))))))

கோமதி அரசு said...

சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் தான்.
இங்கு மதுரையிலிருந்து வாங்கி அனுப்புவேன். அனுப்பும் கூலி அதிகம் தான்.

என்ன செய்வது உடலுக்கு நல்லது. மாயவரத்தில் கிடைக்கும் பச்சை சுண்டைக்காய், காய்ந்த சுண்டைக்காய் எல்லாம். காய்ந்த சுண்டைக்காய் மோர் , உப்பு போடாமல் கிடைக்கும் வாங்கி உப்பு மோர் போட்டு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்வேன்.தோட்டத்தில் மணத்தக்காளி காய்க்கும் கிடைக்கும் காய்களை மோர் போட்டு காய வைத்து எடுத்து வைப்பேன்.

இரண்டு செய்முறைகளும் நன்றாக இருக்கிறது. முதல் செய்முறை மாதிரியே அடுத்த வத்தக்குழம்புக்கும் சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் அவர் பெரிய வெங்காயம் போடுகிறார். சின்ன வெங்காயம் கிடைக்காத ஊர் போலும். சுண்டைக்காய் தட்டிதான் போட வேண்டும், அல்லது கத்தியால் கீறி போட வேண்டும் இல்லையென்றால் வெடிக்கும் வதக்கும் போது. அதை செய்கிறார். வத்த குழம்பு சொல்பவர்.

ஸ்ரீராம். said...

​இதோ எங்கள் தெருமுனையில் தானாக வளர்ந்து நிற்கிறது சுண்டை. எவ்வளவு பூக்கள், காய்கள். திடுமென காய்கள் காணாமல் போகும். யார் பறித்துக் கொண்டு போவார்களோ... அதுவும் சளைக்காமல் காய்களைக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது!​ சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் எனும் வார்த்தை எவ்வளவு மெய்யாகிப் போனது!

நெல்லைத் தமிழன் said...

ஹாஹாஹா... பல நேரங்களில் சுண்டைக்காய் கால் பணம்தான்.

இங்க வளாகத்தில் ஒரு தடவை விளைந்துகிடந்ததை செக்யூரிட்டியை வைத்துப் பறித்துத் தரச் சொன்னேன். இன்னொரு இடத்தில் பார்த்து வைத்திருக்கிறேன். செக்யூரிட்டி பறித்துத் தருவாரான்னு தெரியலை.

அதை பருப்புசிலி மட்டும் பண்ணிச் சாப்பிடுவோம்.

மைலாப்பூர்ல, யார் என்று எதை வாங்குவார்கள் என்று அறிந்து, அதற்கேற்ற காய்களை கடை பரப்பி அதிக விலைக்கு விற்பார்கள். அமாவாசையான வாழைக்காய் பொருட்கள் விலை அதிகமாகவும் துவாதசிக்கு ஆத்திக்கீரையும் விற்பனைக்கு வரும்.

வெங்கட் நாகராஜ் said...

சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் - சரியாகத் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை - நெய்வேலியில் நிறையவே இருந்தது. இங்கே கிடைப்பதில்லை. ஊரிலிருந்து வரும்போது வற்றலாக எடுத்து வருவதுண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

சுண்டைக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும்...

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, அருமையான சுண்டைக்காய்க்கு, கூலி அதிகம் கொடுக்கலாம் , தப்பில்லை! இங்கு சேலத்திலும் சுண்டைக்காய் கிடைக்கிறது. சுண்டைக்காய் வத்தல் குழம்பும் , சுட்ட அப்பளமும் எனக்கு மிக பிடிக்கும்.

Geetha Sambasivam said...

நான் நிறைய வாங்கி வைத்துக் கொண்டு மாவடு ஜலத்தில் ஊறப்போட்டுக் காய வைத்து எடுத்துக் கொள்வேன். பையர், பெண்ணிற்கு எல்லாம் அவங்க வரச்சேயோ, நாங்க போகும்போதோ நிறையக் கொண்டு போய்க் கொடுத்துடுவேன். மணத்தக்காளி வத்தல், மிதுக்க வத்தல் போன்றவையும் இப்படித்தான். மணத்தக்காளி மட்டும் மோரில் ஊற வைப்பேன். மற்றக் கொத்தவரை, அவரை, கத்திரி, வெண்டை, பாகல் வற்றல்களும் உண்டு. அவ்வப்போது வறுத்தும் தொட்டுக் கொள்ளலாமே! அதிலும் கொத்தவரைக் காயை விட வற்றல் ரொம்பவே ருசி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
அதே தான் மா. பாதிக்கு மேல்
பார்சலில் அமெரிக்காவுக்கு அனுப்பதான்
நேரம் இருந்தது:)

தீபாவளி பலகாரம் கூட அப்படித்தான்.
நீங்களும் சுண்டைக்காய் முதல் அனுப்பி இருக்கிறீர்கள்.
அம்மா மனம் இதுதான்.மாயவரத்தில் இன்னும் வளப்பமாக இருந்திருக்கும்.
நம் மதுரையில் கொடைக்கானலில் இருந்து வரும்
பெரிய சத்துள்ள சுண்டைக்காய்
அபோதெல்லாம் கிடைக்கும்.

பசுமலையில் வீட்டில் நாட்டு சுண்டைக்காய் செடி இருந்தது.
இப்போது அந்த வழியில் வயல்களைக் கூடக் காணோம்.
எல்லாமே வீடுகள் தான்.
அட்லாண்ட்டாவில் கிடைக்கிறதா பாருங்கள்.
எல்லாக் காய்கறிகளும் மலர்களும்
கிடைப்பதாகச் சொன்னார்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சுண்டைக்காயை நாம் செய்வது போல
அதக்கியே செய்கிறார்கள் இரண்டாம் பதிவில்.
குழம்பு கொதித்துக் கடைசியில் வதக்கின சுண்டைக்காயைச்
சேர்ப்பார்கள் போல இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

நல்ல வளப்பமான பூமியாக இருக்கும் என்று தெரிகிறது.
மழை பெய்ததும் வந்திருக்குமோ?
கிடைக்கும் போது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை.
இங்கே வந்த பிறகு எல்லாவற்றுக்கும் ஆசைப் படுகிறது மனம்:))))))))

முடிந்தால் நீங்களும் செய்து சாப்பிடுங்கள்.
வெறும் வதக்கலே நன்றாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
சுண்டைக்காய் பருப்புசிலி
பாட்டி செய்வார் ..பிறந்தகப் பாட்டி.
ருசியாகச் சாப்பிடத் தெரிந்தவர்களே ருசியாகச் செய்தும் கொடுப்பார்கள்.

உங்கள் வாட்ச் மேனிடம் சொல்லி நிறையப்
பறித்து நன்றாகச் சாப்பிடுங்கள்.ஆனால் ஒரு விஷயம், குழந்தைகள்
ரசிப்பார்களோ தெரியாது:)))

வல்லிசிம்ஹன் said...

மைலாப்பூர், மாங்காடு, தி.நகர் ஸ்டேஷன், பனகல்
பார்க் என்று பார்த்துக் கொண்டு வந்தால் '
அன்றைய திதி நினைவில் வந்து விடும்மா.

நமக்கு சிபாரிசு வேறு செய்வார்கள்
மாட்டுக்குக் கொடுக்கச் சொல்லி!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தில்லியில் சுண்டைக்காய் இல்லையா?? அதிசயமாக
இருக்கிறதே.
முருங்கை மரம் வைக்கத் தெரிந்தவர்கள்
அகத்தி, சுண்டைக்காய் செடி வளர்க்க மாட்டார்களோ.!!!

அடுத்த தடவை பச்சை சுண்டைக்காயே வாங்கி வந்துவிடுங்கள்.
உப்பில் போட்டால் ஆச்சு.

நெய்வேலி அப்படியே அரண் கட்டி நிற்கிறது
உங்கள் மனதில்.
ஆமாம் நிறையக் கிடைத்தால்
அப்போது அதன் மதிப்பு மனசில் உரைப்பதில்லை.
இங்கே மகளுக்கும் சுண்டை பிடிக்கும் என்பதால்
வரவழைத்தாள்.
நானாகக் கேட்க மாட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

சுண்டை,
பாகல், மணத்தக்காளி எல்லாமே
வயிற்று நல்லது. கிடைக்கும் போது சாப்பிடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
என்ன பொருத்தம் அவற்றுள் என்ன பொருத்தம்!!!
வத்தக் குழம்பு, சுடுசாதம், காய்ச்சின அப்பளம்
கல்யாண சாப்பாடுதான்.
நல்ல ருசி உங்களுக்கு. நிறைய வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
அம்மா.
வாழ்வு இதமாக இருக்கும்.