முந்திய அத்தியாயத்தில் சாரதாவும்,கோபாலன் சாரும் கிளம்பிச் சென்றதைச் சொல்லி இருந்தேன்.
எங்களுக்கு இது அதிர்ச்சி என்றால்,
திரு வில்லியம்ஸ் முகத்தைக் கண்ணால்
பார்க்க முடியவில்லை.
ஒரு நொடியில் முக பாவத்தைச் சரி செய்து கொண்டார்.''எல்லோரும்
வந்து கௌரவித்ததற்கு மிக நன்றி.
இறைவன் என்றும் நம்முடன் இருப்பார்.
மணி 12 ஐ நெருங்குகிறது. மீண்டும் புது வருடத்துக்குச் சந்திக்கலாம்.''
என்று கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுத் தன்
அறைக்குள் சென்று விட்டார்.
அறையின் கலகலப்புச் சட்டென்று ஓய்ந்தது.
எலிசபெத் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா என்று
கவனித்தாள்.
'' அவர்கள் தான் முக்கியமா, நாங்கள் முக்கியம்
இல்லையா'' என்று முகம் சுளித்தாள் டாக்டர் சுசீலா.
மற்ற நண்பர்கள் திரு வில்லியம்சின் கறார் நடவடிக்கைகளுக்குப்
பழகியவர்கள். இதற்கு மேலும் போதை ஏறினால்
தங்கியிருக்கும் இடத்துக்குப் போவது தடுமாறிவிடும்
என்ற யோசனையில் மகிழ்ச்சியுடனே கிளம்பினார்கள்.
அதுதான் புது வருடத்துக்கு வருவோமே ,அப்போது பேசிக்கொள்ளலாம்
என்று புறப்பட்டார்கள்.
சிலர் காலையில் கோவை செல்ல முடிவெடுத்து மற்ற
தோழர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.
இண்டர்காம் அழைப்பு கேட்டு
கணவனின் அறைக்குச் சென்றாள் எலிசபெத்.
''உன் அத்தை பெண்ணைப் புறப்படச் சொல். இனி இங்கே
மெல்ல வெளியே வந்த எலிசபெத் எங்களைக் கண்டதும்
பக்கம் வந்து'' நீங்களும் ஊருக்குக் கிளம்ப வேண்டுமா?''
என்று கேட்க நாங்களும் தலையசைத்தோம்.
''ஒரு நிமிடம் ,!!!ஐய்யர் வந்து விட்டாரா பார்க்கிறேன்" என்ற படி வெளி
போர்டிகோ அருகில் சென்றாள்.
அதற்குள் இண்டர்காம் ஒலிக்க சிங்கம் எடுத்தார்.
''டேய் சிம்மு, நீங்கள் இன்று இரவு தங்கி விடுங்கள்.
காலையில் பலகாரம் சாப்பிட்டுக் கிளம்பலாம்"
என்று வில்லியம்சின் குரல் கேட்டது.
அந்த மனுஷனுக்குப் பாம்புச் செவியோ
என்று நான் வியந்தேன்.
நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து 60 கஜ தூரம்
இருக்கும் அவரது அறை.கதவும் மூடி இருக்கிறது.:))
உள்ளே வந்த எலிசபெத்திடம், செய்தியைச் சொன்னார்
சிங்கம்.
"ஓ நல்லதாச்சு , குழந்தைகள் தூங்குகிறார்கள்.அதை ஒட்டி இன்னோரு அறை
இருக்கிறது.நீங்கள் உறங்கிக் கொள்ளலாம் "
என்றாள்.
எனக்கோ காலையிலிருந்து உடை மாற்றாமல்
சங்கடம்.ஆனால் குளிர் என்னைப் பேச விடவில்லை.
இரவு வணக்கம் சொல்லிவிட்டு அந்த பச்சை வண்ண
அறைக்குள் சென்றோம்.
ஆமாம் அந்த வீட்டில் ஏழு வண்ணங்களுக்கும் அறைகள் இருந்தன,
பச்சை வண்ண அறையில் திரைச்சீலைகள் இளம்பச்சை.
உட்காரும் சோஃபா, கட்டில்கள் ஆழ்ந்த பச்சை நிறம்,.
கட்டிலின் மேல் மெத்தை விரிப்புகள் ஆலிவ் பச்சை.
குழந்தைகளைத் தொந்தரவு செய்யாமல்
நாங்களும் உறங்கிவிட்டோம்.
வீட்டின் சத்தங்களுக்கு நடுவே வாசல் கதவுகள்
அடைக்கப் படும் சத்தமும்,
நாய்கள் அவிழ்த்து விடப்படும் சத்தமும் கேட்டது.
உறங்கி எழுந்திருக்கும் போது சிங்கமும் குழந்தைகளும்
குளியலறையில் சிரிக்கும் சப்தம் கேட்டது.
நான் எழுந்து அறையை ஒட்டிய ஃப்ரென்ச் விண்டோஸ்
வழியாகத் தோட்டத்தை ரசித்துக்
கொண்டிருந்தேன்,.
''அம்மா!! என்ற குரல் கேட்டது.திரும்பினால்
த்ரேசா கைகளில் பெரிய தட்டில்
காப்பி, பிஸ்கட்,பால் என்று வைத்து
நின்று கொண்டிருந்தாள்.
"உள்ள வாம்மா" என்றதும் ''அம்மா உங்களை சாப்பாட்டு மேஜைக்கு வரச் சொன்னார்''
என்று வெளியே சென்றாள்.
ஒரு 36 மணி நேரத்துக்குள் என்னவெல்லாம் அனுபவம்
என்று வியந்து கொண்டு,
சிங்கத்தையும் குழந்தைகளையும்
அழைத்தேன்,
நானும் முகம் கழுவி சுத்தம் செய்து கொண்ட பின்னர்
குடும்பம் சாப்பாட்டு அறைக்கு நகர்ந்தது.
''என்னடா எல்லோரும் தூங்கினீர்களா?'' என்ற
பெரிய குரல் கேட்க , ஆமாம் பில் என்றார் சிங்கம்.
''ஹவ் அபௌட் யூ மிஸஸ் சிம்மு.? சௌகரியமாக
இருந்ததா?'' என்ற விசாரிப்புடன்
குழந்தைகளையும் உட்காரச் சொன்னார்.
எலிசபெத் புத்தம் புதிய புன்னகையுடன்
அழகாக உடை உடுத்த் இருந்த பெண்களுடன் வந்தார்.
உலகத்திலேயே மிருதுவான இட்டிலி, சட்டினி மிளகாய்ப்
பொடி எல்லாம் சத்தம் இல்லாமல்
பரிமாறப் பட்டன.
சின்னவனைப் பார்த்து ''நெய் ,சர்க்கரை வேண்டுமாடா
உனக்கு ?''என்று கேட்டதும் மேலும் கீழும் தலையாட்டினான்.
""
குழந்தைகளுக்கு நிறைய நெய்யும் சர்க்கரையும் வை வெள்ளைச்சாமி"
என்று அந்த சமையல்காரரிடம் சொல்ல அவரும்
பணிவாகக் கொண்டு வைத்தார்.
''நாங்கள் கிளம்பலாமா பில். ? கோவையில் வேலை இருக்கிறது''
என்றார் சிங்கம்.
"ஆல் இன் குட் டைம்:)"" இப்பவே சனிக் கிழமை மதியம் ஆகப்
போகிறது. ஒரு நாள் உன் வொர்க்ஷாப் நஷ்டப்பட்டு விடுமா?
என்னோடு எஸ்டேட் சுற்றிப் பார்க்கக் குழந்தைகளோடு வா.
பிறகு ஊருக்குப் போவதைப் பார்க்கலாம்" என்றார்.
பசங்களும், சிங்கம், திரு வில்லியம்ஸ் பெரிய ஜீப்பில் ஏறிக் கொண்டு
வெளியே சென்றார்கள்.
என்னுடன் நீ வா என்று எலிசபெத் அழைக்க
வெளியில் சென்று படிகளில் உட்கார்ந்தோம்.
''இரவு என்ன நடந்தது என்று தெரிய வேண்டாமா?"
என்றாள்.'' அவசியமானால் சொல்லுங்கள்.''
என்றேன்.
அந்தப் பெண் சாரதா அழுததும் நான் என் தவறை உணர்ந்து விட்டேன்.
என் கணவர் அப்படிப்பட்ட மனிதரே அல்ல.
கோபம் பெரிதாக வருமே தவிர நல்ல குணவான்.
தவறிழைத்திருக்க மாட்டார். அதுவும் கோபாலன் மாதிரி சாதுவான
மனிதனுக்கு அவர் வேறு விதமாகத் தீங்கிழைக்க
இறைவன் சாட்சியாக நினைக்க மாட்டார்.
நேற்று இரவு வெகு நேரம் பேசினோம்.
பைபிள் படித்தே படுக்கச் சென்றோம்.
இனி எங்கள் வாழ்வில் சாத்தானுக்கு இடம் இல்லை"
அதனால் நீ நிம்மதியாகப் புறப்படு. உங்க வீட்டுக்காரரை அனேகமாக
எங்க வீட்டுக்காருடன் தான் பார்க்கப்
போகிறாய்.எங்க வீட்டுக்காரருக்கு உலகமே குடும்பமாக இருந்தால்
சந்தோஷமாக இருப்பார்.''
என்று முடித்தவளை மகிழ்ச்சியுடன் பார்த்தேன்.
உள்ளே சென்றோம் அங்கே எங்களுக்குக்
கொடுக்கப் பட்டிருந்த அறையில் மிகக் கச்சிதமாக
பைகள் வைக்கப் பட்டிருந்தன.
எங்களுடைய க்ருஸ்துமஸ் பரிசு உன் குடும்பத்துக்கு.
மகிழ்ச்சியுடன் அணிந்து கொள் என்று என் கையில் ஒரு பையைக்
கொடுத்தாள்.
அழகான சந்தேரி காட்டன் புடவை அரக்கு வர்ணத்தில்
நீலப் பூக்களுடன் அமைதியாக அவள் கையில்
உட்கார்ந்திருந்தது.
மற்ற பைகளில் பெரிய கேக், ஃப்ரூட் பன், ஆரஞ்சுப் பழங்கள்,
மாதுளம்பழங்கள், ஒரு பெரிய பாக்கெட் காப்பிப் பொடி, டீத்தூள்
எல்லாம் இருந்தன,
எனக்கு மிகத் திகைப்பாக இருந்தது.
அன்று இரவு,
நில்கிரி ரயிலில் ஏற்றி விட்டார் வில்லியம்ஸ்... 70 நிமிடங்களில்
கோவை வந்து விட்டோம்.
ரயில் நிலையத்திலிருந்த டாக்சி எடுத்துக் கொண்டு
வீடு வருவதற்குள்
குழந்தைகள் தூங்கி விட்டார்கள்.
அடுத்த வீட்டை நோக்கினேன். இருளில் ஆழ்ந்திருந்தது.
அடுத்த ஒரு வாரத்துக்கு அங்கு ஆரவாரமே இல்லை.
பிறகு ஒரு நாள் சாரதா நம் வீட்டிற்கு வந்தார்.
அந்த மதிய வேளையில் அவரின் அழகு
இன்னும் அதீதமாகத் தெரிந்தது.
''குருவாயூர் போய் வந்தோம் ரேவதி.
நான் நம்பிக் கொண்டிருந்த நிகழ்ச்சியும் இன்னும்
எட்டு மாதங்களில் நடக்கப் போகிறது''
என்ற வார்த்தையைக் கேட்டதும்
எனக்கு வந்த ஆனந்தத்தைச் சொல்லி முடியாது.
அப்படியே அவரை அணைத்துக் கொண்டேன்.
''நீயும் போன வார நிகழ்ச்சிகளை மறந்து விடு.
இதோ நாளை புது வருடம்.
இன்னும் கொஞ்ச நாட்களில் திருச்சூர் சென்று விடுவோம்.
அம்மா வீடும் குருவாயூரப்பனும் பக்கம்."
இனிமேல் திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன் எங்களுக்கு
சம்பந்தம் இல்லை.
எங்க வீட்டுக்காரருக்கு வருத்தம் தான்.
வரப் போகும் பையன் எல்லாவற்றையும்
மாற்றி விடுவான்" என்றார்.
அவர்கள் செல்வது வருத்தம் தான். எதிர்வீட்டில் புதிதாகச்
செட்டியார் குடும்பம் வந்திருந்தது, அவர்கள் வீட்டிலும் மூன்று
பெண் குழந்தைகள்.
மாறிக் கொண்டே இருப்பதுதானே வாழ்க்கை.!!!
சாரதா கோபாலனுக்கு மகிழ்ச்
சியுடன் விடை கொடுத்தோம்.
திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன் மாதம் ஒரு முறையாவது
வந்து விட்டுப் போவார்கள்.
சிங்கத்துக்கு மேன்மையான தோழர் கிடைத்தார்.
எனக்கும் தான்!!!! உயர்ந்த தோழி கிடைத்தாள்.
70களில் நடந்த இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்ததில்
இந்த ஆறு நாட்களும் உதகையில் இருந்த உணர்வு எனக்கு.
மிகைப்பட சொல்லவில்லை. இருந்தும் மிக நீளம் தான்.
எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். நட்புகளுக்கு
மிக மிகநன்றி . நல்ல நட்பு கொஞ்சம் சிதைந்தாலும்
கோபாலன் திரு வில்லியம்ஸ் இருவருக்கும்
நட்பைப் புதுப்பித்துக் கொள்ள
மீண்டும் ஒரு கட்டிடம் காரணமாக இருந்தது.
சென்னையில் வீடு கட்ட விழைந்த போது
அழைத்த கம்பெனியின் பங்குதாரராகக்
கோபாலன் வந்த போது மீண்டும் நட்பு துளிர்த்தது.
மீண்டும் அந்த நால்வரும் சேர்ந்தனர்.
முன் போல இல்லாவிடினும் கசப்பு இல்லை.
சுபம் மங்களம்.
11 comments:
மகிழ்ச்சி இறுதியில் சுபமாக இருந்தது நன்று.
உடைந்த கண்ணாடியை ஓட்ட வைத்தாலு முன்போல இருக்காதுதானே? சுசீலா என்ன ஆனார் என்று சொல்லவில்லை நீங்கள். நெகிழ்ச்சியான அனுபவம். திரு வில்லியம்ஸ் வீட்டு அனுபவங்கள் ஆடம்பரமான திரைப்படக் காட்சிகளை நினைவுபடுத்துவது போல இருந்தது.
நல்ல நட்பு காலங்கள் கடந்தும் மீண்டது மனதுக்கு மகிழ்ச்சி.
அன்பை கொடுத்து அன்பை பெற்று வாழ்தல் இனிது.
ஊட்டி படங்கள், பயண அனுபவங்கள், நட்புகளின் உரையாடல் அனைத்தும் அருமையாக எழுதி விட்டீர்கள்.
அருமையான பதிவு.
நட்பு வாழ்க வளமுடன்.
Below the belt தாக்குதல்னா, சட்னு ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து கதை கட்டுவதுதான். நல்ல நட்பைக் கெடுத்துவிடும் அது.
நீங்க ரொம்பவே பாலிஷ்டாக எழுதியிருக்கீங்க.
படிக்க நன்றாக இருந்தது.
அன்பின் தேவகோட்டைஜி,
நலமாக இருக்க வாழ்த்துகள்.
நல்ல படி முடிந்ததற்கு அந்தத் தம்பதிகளின் நேர்மையும்,
கடவுள் நம்பிக்கையும்
காரணம். பாதிக்கப் பட இருந்தவர்களும் தங்களைக்
காத்துக் கொண்டார்கள்.
பொறுமையாகப் படித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா.
ஆடம்பர திரைப்படங்களின் ஷூட்டிங்க் எல்லாம்
இவர்கள் மாதிரி வீடு வைத்திருப்பவர்கள் இடத்தில் தானே நடக்கிறது:)
இவர்களுக்கு அந்த மாதிரி நிலைமை இல்லை.
இப்போது மாப்பிள்ளைகள் கையில் அந்த எஸ்டேட்.
பாதி இடத்தை ரிசார்ட்டாக ஆக்கிவிட்டார்களாம்.
நான் பார்த்ததை அப்படியே எழுதினேன்.
அந்த டாக்டரைப் பற்றி எனக்கு செய்தி ஏதும்
வரவில்லை. கோவையில் நாங்கள் இருந்த இடம் சபர்ப்.
அவர்கள் இருந்த இடம் டவுன் பக்கம்.
நாட்டம் இல்லாததால் தெரிந்து
கொள்ளவில்லை. தொடர்ந்து வந்து அடித்ததற்கு
மிக மிக நன்றி மா.மிக உயர்ந்த மனிதர்கள். நாங்களும் எல்லை தாண்டி அங்கே சென்றதில்லை.
அதுவே நட்புக்கு ஆதாரம்.திரு வில்லியம்சும், மனைவியும்
குழந்தைகளுக்கு பழங்கள், இனிப்பு என்று
அங்கிருந்து வரும் லாரியில் அனுப்பி விடுவார்கள்!!!
நல்ல நட்பு காலங்கள் கடந்தும் மீண்டது மனதுக்கு மகிழ்ச்சி.
அன்பை கொடுத்து அன்பை பெற்று வாழ்தல் இனிது.//////////////////////////////////
அன்பு கோமதி வாழ்க வளமுடன் மா.
நட்பு உணர்வு சிறிதேனும் இல்லாவிட்டால்
மிகக் கஷ்டமாகி இருக்கும் அம்மா.
அவர் நல்ல மனிதர். எல்லோருடனும் ஒத்து வாழ வேண்டும் என்று
நினைப்பவர்.
பணம்,பதவி என்று வித்யாசம் பார்க்க மாட்டார்.
அவளும் அப்படியே.
உங்களுக்கும் இந்தச் சம்பவக் கோர்வை சுவாரஸ்யமாக
இருந்தது என்று நம்புகிறேன் மா.
விடாமல் படித்ததற்கு மிக நன்றி மா.
Below the belt தாக்குதல்னா, சட்னு ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து கதை கட்டுவதுதான். நல்ல நட்பைக் கெடுத்துவிடும் அது.//////////////////Absolutely right ma.
@Murali Seshan,எனக்குக் காதில் விழுந்ததை எழுத மனம் வரவில்லை.
அந்த அழுக்கை மீண்டும் புதுப்பிக்க வேண்டாமே என்றே
எழுதவில்லை.
சரியாகக் கண்டு பிடித்தீர்கள் அன்பு முரளிமா.!!!
எலிசபெத் வில்லியம்ஸ் நெடு நாள் என்னுடன் கடிதத் தொடர்பில் இருந்தாள்.
அத்தனை கடிதங்களூம் சென்னையில் இருக்கின்றன.
வெரி இன்னொசெண்ட். சிங்கத்துக்கு அவர் ஒரு பெரிய அண்ணா
போல இருந்தார். 60 வயதில் இறந்துவிட்டார்.
அவளும் தொடர்ந்தாள்.
இப்போது தொடர்பில் யாருமே இல்லை.
படித்து கருத்தும் சொன்னதே மிக மகிழ்ச்சிமா.
மீண்டும் நட்புகள் சேர்த்து கொண்டது மகிழ்ச்சியே.
தொடராகத் தந்தீர்கள் ஆவலுடன் படித்தோம்.நன்றி.
அன்பின் மாதேவி,
நீங்கள் படித்ததே மிக மகிழ்ச்சிமா.
நல்ல நட்புகள் தொலைந்து போவதில்லை.
மனம் நிறை நன்றி.
பதிவு வழி சொன்ன விஷயங்கள் நன்று. நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.
Post a Comment