Blog Archive

Saturday, August 07, 2021

முன்னம் ஒரு காலத்துலே 5




வல்லிசிம்ஹன்

இங்கே வில்லியம்ஸ் தம்பதிகளைப் பற்றி
சொல்லியாக வேண்டும். 
அவளாவது பல வித  விஷயங்களுக்கு ஆசைப் படுவாள்.
அவருக்கு  சுடச் சுட சுவையான உணவு,
வீட்டு சுத்தம், காப்பி ,டீ எஸ்டேட்  வளப்பம்,
குழந்தைகள் நலம் இதுதான் குறிக்கோளே.

மிக மிக ஏழைகளிடமும்  கனிவோடு தான் 
பழகுவார். அவர்கள் சென்னை வரும்போது கூடப் 
பார்த்திருக்கிறேன். 
ஊனமுற்றவர்களுக்கு  பிறர் அறியாமல் உதவி செய்வார்.

நண்பர்களிடம் மிகப் பாசம் வைப்பார்.
படிக்கும் பைபிள் வாசகங்களுக்கு மீறி நடந்ததில்லை.



 எலிசபெத் வில்லியம்சுக்கு கணவரின் பல்வேறு
நண்பர்களைப் பற்றி எப்போதுமே
குறை இருந்தது.
 அவரும் பணம் , கம்பீரம்,ஆளுமை எல்லாம் கொண்டிருந்ததால்
அவளுக்குத் தானும் அவரோடு எல்லா இடங்களுக்கும் 
செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது.

அவருக்கு நண்பர்களே உலகம்.
அவரது வியாபாரத்துக்கும் ,புதிதாக அவர் ஆரம்பித்திருந்த இரண்டு
பஸ் சர்வீஸ்கள்  வளர்வதற்கும்
அவர்கள் உதவியாக
இருந்ததால் பல வேறு நகரங்களுக்கு

அவர் செல்லும்போது அந்த நட்புகளின் 
தோழமை அவருக்கு உறு துணையாக  இருந்தது.
அந்த விதத்தில் கோபாலனும் சிங்கமும்
இன்னோரு வக்கீல் நண்பரும்
அவருடன் செல்வார்கள்.(வேலை என்று  ஒன்று இல்லாவிட்டால்  சிங்கம்
முழு நேர உதவியும்  செய்திருப்பார்:))00))

இந்த நண்பர்களை எலிசபெத்துக்கும் தெரியும்.
அவர்களது மனைவிகளும்
வந்து போவதுண்டு. 
கோபாலன் கூனூருக்கு வந்து போவார். சாரதாம்மா
வந்ததில்லை.

முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த டாக்டரம்மா
 எலிசபெத்தின் அம்மா வழி உறவினர்.
அவர் சொல்லி தான் ,இந்த கோபாலன் தம்பதியினர் மேல்
அவளுக்கு  வேற்றுமை உணர்வு வந்திருக்கிறது.

இந்த சங்கடத்தில் பழைய நிகழ்வு ஒன்று அடங்கி
இருந்தது. கோவையைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் குடும்பமும்
திரு வில்லியம்ஸின் குடும்பமும் வெகு நாட்களாக
நட்பு கொண்டு இருந்தவர்கள். 17வருடங்களுக்கு முன்
டாக்டர் சுசீலா விக்டருக்கு ,வில்லியம்சை மணம் முடிக்க 
அவளின் பெற்றோர் நினைத்திருந்த போது,

 எலிசபெத்தின் குடும்பத்தை 

வில்லியம்சின் பெற்றோர் சந்தித்துப் பேசி ,  திருமணத்தை
முடித்துவிட்டனர்.


இது  சுசீலாவைப்  பொறுத்தவரை மிகப் பெரிய ஏமாற்றம்.
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான சுசீலா
அதற்குப் பின் படித்து முடித்து ,தனக்கான தனி க்ளினிக்கையும்
ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தாள்.
மணம் முடிக்கவில்லை.
மக்கட்பேறு வைத்தியராக இருந்ததால்
சாரதாவும், கோபாலனும் அவளிடம் சென்று வைத்தியம் 
செய்து கொண்டவர்கள்.
அவர்கள் வீட்டுக்கு திரு வில்லியம்ஸ் வருவதும்
அவளுக்குத் தெரியும். 
கோபாலனும் திரு வில்லியம்சும் கல்லூரிகாலத்திலிருந்தே
நண்பர்கள்.சாரதா கோபாலன் திருமணம் கூடப்
பிறகு நடந்ததுதான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.09  Friday  Breaking News...மாலை. பெரிய மழை வருவதாக தொலைக்காட்சி செய்தி.
அது வருவதற்கு முன் எழுதி முடிக்கப் 
பார்க்கிறேன். முடியவில்லை என்றால் 
சனிக்கிழமை காலை , இந்திய நேரம் மாலைதான்
முடியும்:)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாரதாவின் அழகும், குணமும் கோபாலின்
நற்குணமும்
டாக்டர் சுசீலாவுக்குத் தெரியவில்லை.
அந்தத் தம்பதியினரின் ஒற்றுமையும்,
திரு வில்லியம்சின் நேர்மையும்
அவளுக்குப் பிடிபடவில்லை.

தப்பு என்று அவளுக்கு மனதில் பட்டதை
எலிசபெத்திடம் சொல்லி கலக்கி இருந்தாள். 
கையில் கோப்பையுடன் அவளை நாடிப் போனாள்.
கூடவே அவளுக்குத் துணையாக இன்னொரு பெண்
அவள் சொல்வதை அங்கீகரிக்க.

அந்த வீட்டில் உண்டு களித்து,அங்கேயே மன வேறுபாட்டை விதைப்பது
அவளைப் பொறுத்தவரையில் தவறாகப்
படவில்லை.
சாராதாவை ஏற்கனவே சீண்டி அவளைக் காயப் படுத்தியது 
போதாதென்று என்னை நோக்கிப் பேசத் திரும்பியவளை  வழி மறித்து

''நீங்கள் உணவு விடுதி நடத்தி வந்ததாகக்
கேள்விப்பட்டேன்,. உங்கள் குடும்பம் பாலக்காட்டில்
அதற்கு பெயர் பெற்றதாமே?'' ''கணவனின் தோழர்கள் உனக்கும் தோழர்களா?""
இதுதான்  அவள் பேசிய வார்த்தைகளின் சுருக்கம்.

ஏற்கனவே  சஞ்சலத்தில் இருந்த சாரதாவால்
பதில் சொல்ல முடியவில்லை.
என்ன கேட்கிறாள் என்று அவளுக்குப் புரியவில்லை.
அவள் தந்தை ,, குருவாயூரப்பன் பெயரில் ஒரு 
உணவு விடுதிதான் நடத்தி வந்தார்.
அவரிடம் இருந்து  பல கேரள உணவு வகைகளைக்
கற்றுக் கொண்டிருந்தாள்.
சுபாவத்திலேயே இனிமையான பெண்ணாக 
இருந்ததால் வேறுபாடு பார்க்காமல் 
திரு வில்லியம்ஸ் அவர்கள் வரும் நாட்களில்

நல்ல மனதுடன் தான் செய்து கொடுப்பாள்.

22 வயதிலிருந்து இந்த பத்து வருடங்களாகக்
கோவையில் சாயி பாபா காலனியில் 
இதே வீட்டில் இருந்து வருகிறாள்.
ஒரு சோகமும் கிடையாது. இருவரிடமும் தேக 
ஆரோக்கியத்திலும் குறை இல்லை.
கோபாலன்  குடும்பத்தில் தாமதமாகத் தான்
குழந்தை பாக்கியம் உண்டு என்றும் தெரியும்.

கோபாலனின் அண்ணாவுக்குத் திருமணமாகி 12 
வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது.
அவளுடைய பிறந்த வீட்டில் அவளையும்  சேர்த்து
ஐந்து குழந்தைகள். 2 அக்கா, 2 தம்பிகள்.
அதனால் தன் குடும்பத்தைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை.
இங்கு வந்த இடத்தில் இந்த டாக்டர் சுசீலா 
தன்னை ஏதோ தாங்கலாகப் பேசுகிறாள்
என்று தெரிந்தது. காரணம் தான் புரியவில்லை.

அந்த இடத்தைவிட்டு நகரவே முயன்றாள்.
நானும் அவள் அருகில் நின்று கொண்டேன்.
காதோடு'' இனிமேல் அந்த பானத்தைத் தொடாதீர்கள்''
என்றதும் தலை அசைத்துவிட்டு
''இவர்களுக்கு என் மேல் என்ன கோபம்?''
என்று கேட்க, எனக்குத் தெரிந்ததைச் சொல்லி
''அவளுக்கு வெறும் பொறாமை''

''அவர்கள் வீட்டுக்கு திரு வில்லியம்ஸ் வருவதில்லை.
உங்கள் வீட்டுக்கு வருகிறார்" என்று முடித்தேன்.

சட்டென்று புரிந்தவளாகத் திரும்பிய சாரதாவின்
கோபத்தைக் கண்டு பயந்தேன்.

'' உங்கள் இருவரையும் போல ஈன குணம்
எங்களுக்குக் கிடையாது. மனிதர்களையும்,
பரஸ்பர நேசத்தையும் புரிந்து கொள்ளுங்கள்"
என்று தணிந்த குரலில் சொல்லி விட்டுக்
கணவரைத் தேடினாள். அருகிலேயே
கோபாலன் நிற்பதைக் கண்டு ,ஒரு நொடி
தயங்கினவள் '' எனக்கு  உடல் நலம் சரியில்லை.
நாம் கிளம்பலாம்'' என்றாள்.

மனைவியின் கண்களில் நீர் கண்டு பதைத்தவர்
வேறொன்றும் சொல்லாமல் , திரு வில்லியம்ஸை
நோக்கிக் கண்ணாலெயே  விடை பெற்றார்.

வீட்டின் முன்புறத்துக்கு வந்தவர்களை
மலைக்குளிர் தாக்கியது.
'' சார் ,ஐயா உங்களை வுட்லாண்ட்ஸ்  ஹோட்டலில் இறக்கி விடச் சொன்னார்.''
என்ற சுந்தரம் ஐய்யர் குரல் கேட்க

வேறு வழி யோசிக்க முடியாமல்
இருவரும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

செல்லும் நண்பனைக் கண்டு திகைத்தவராய் வில்லியம்ஸ் 
நிற்க நானும் சிங்கமும்
அவரை நோக்கியபடி நின்றோம்....தொடரும்














இசை கேட்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த சங்கம் திரைப்படப் பாடல்.




 

16 comments:

வல்லிசிம்ஹன் said...

மிக நீண்ட பதிவு. பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி. என்னால் நடந்ததைச் சுருக்க முடியவில்லை.

ஸ்ரீராம். said...

படித்தேன். பொறாமை என்னென்ன செய்யத் தூண்டுகிறது... இரண்டு காணொளிகளும் தெரியவில்லை. சங்கம் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். அருமையான படம்.

நெல்லைத் தமிழன் said...

சகுனி க்கு பெண்பால் பெயர் என்ன என்பதையும் வல்லிம்மா எழுதியிருக்கலாம். டாக்டர் சுசீலா மெதுவாக ஊசியைச் செலுத்துவதாகத் தோன்றுகிறது.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, தங்கள் எழுத்து நடை, என்னை அவ்விடமே அழைத்து சென்று காண்பித்தது போல தோன்றியது. சிறு பொறியாய் தோன்றிய பொறாமை குணம் இத்தனை பேரின் மன உளைச்சலுக்கு வித்திட்டதோ...இது போல எத்தனையோ அம்மா. அவர்களின் இனிய தாம்பத்யத்தில் கல் எரிய நினைத்திருக்கிறாள். எலிசபெத் சிறிது யோசித்திருந்தால், அந்த டாக்டர் அம்மாவை, மெல்ல புறக்கணித்திருக்கலாம். நட்புகளிலும் தேவையில்லாத மன வேதனை. முன்னொரு காலத்திலேயே இப்படி என்றால், இப்பொழுது எத்தனை தொழில்நுட்பங்கள் திசைதிருப்ப? ரொம்பவும் சாமர்த்தியம் வேண்டும் அம்மா. தொடருக்காக காத்திருக்கிறேன்! நல்லதொரு கதைக்கு நன்றிம்மா!

KILLERGEE Devakottai said...

பொறாமை என்றும் எங்கும் இருக்கிறது...

'சகுனி'க்கு பெண்பால் 'சகுளி' என்று சொல்லலாமா ?

தொடர்கிறேன் அம்மா சங்கம் பாடல் கேட்டேன் இணைப்பு யூட்டியுப்புக்கு சென்றது..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மற்றொருவரின் சந்தோஷத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆமையை
நம் பக்கம் வரவிடுவது தவறு.
நல்ல சம நோக்கு இருந்தால் தடுத்து விடலாம்.
அதுதான் வாழ்க்கை.
காணொளியை யூ டியூப் சென்றுதான் பார்க்க வேண்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

சகுனியின் வேர் காந்தாரிக்கு இழைக்கப்பட்டதாக
அவன் நினைத்த அதர்மம்.

இந்தப் பெண்ணுக்கு அது காரணம் இல்லை. இது சுய நலம்.
புத்திசாலிகள் நிதானமாக இருப்பார்கள்.
இது கொஞ்சம் பரிதாபம் தான்.தன் வாழ்வையும்
கெடுத்துக் கொண்டு மற்றவர்களையும்
வாழ விடாத ஆத்மா.

கோமதி அரசு said...

கதை போக்கு மாறுபடுகிறது. பொறமை மேகம் கண்ணை மறைக்கிறது.
நட்பு முறிய இந்த சந்தேகம் ஒரு காரணமா?

தானும் வாழாமல், பிறர் வாழ்வையும் கெடுக்கும் புத்தி .
தொடர்கிறேன். பாடல்களை யூப் -டியூப்பில் கேட்டேன்.

கோமதி அரசு said...

பாடல் தேர்வு அருமை. சந்தேகத்தால் நண்பன் மேல் ஏற்பட்ட விரக்தியில் பாடும் பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
ரசித்துப் படித்திருக்கிறீர்கள். நன்றி.
ஒரு நன்மை இல்லா நினைப்பு
எத்தனை புன்மைகளைக் கிளப்புகிறது இல்லையா?

ஏற்கனவே கலைந்திருந்த எலிசபெத்தின் மனதை மேலும் கலங்க
வைப்பது எளிதாக இருந்தது.
நிதானமில்லாத திரவம் வேறு உள்ளே செல்லும்போது
உணர்ச்சிகள் மேலிடுவதும் சகஜமே.

இப்பொழுதோ ஒரு நொடியில் எல்லாக்
கலகத்தையும் நிறைவேற்றி விடலாம்.
மன திடம் குறைந்தால் அழுக்கு புகுவது எளிதாகிறது:(
என்ன செய்யலாம். வாழ்க்கை
நல்ல தருணங்களை நோக்கி நகரட்டும்.
மிக நன்றி மா. கொடுத்த உற்சாகம் என்னை நல்லபடியாக
எழுதத் தூண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
மிக மிக மகிழ்ச்சி உங்கள் பின்னோட்டத்தைக்
கண்டு எழுகிறது.
சங்கம் பாடலை யூடியூபில் கண்டு அனுபவித்ததைச் சொல்கிறேன்.
அந்தப்படம் 1963 யில் வந்த போதும்
கண்ணீர் வந்தது. நேற்றும் மனம் வருந்தியது.
வீணான சந்தேகத்தால்
நாம் இழக்கும் அன்பு எத்தனையோ.

நம் வாழ்வில் சகுனியோ சகுளியோ குறுக்கிடாமல் இறைவனே காக்க வேண்டும். நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

மற்றவர் வாழப் பொறுக்காத பெண்மை
தீங்கே விளைவிக்கிறது.
'there is nothing more fearful than a woman scorned"
பழைய ஆங்கில வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
தன்னை நிராகரித்ததை ஏற்க முடியாத மனப்பான்மை

அந்தப் பெண் சுசீலாவை மாற்றியது.
அவளால் வில்லியம்சை மறக்க முடியவில்லை.

தேர்ந்தெடுத்த அம்பு சாரதா ஆகிவிட்டாள்.
அடிபடாமல் இருக்க எலிஸ்பெத் இன்னும்
பத்திரமாக இருந்திருக்க வேண்டும்..

வாழ்வில் கற்றுக் கொள்ள இறைவன் அளிக்கும் தருணங்கள்
இவை.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் யூடியூபில் சென்று கேட்டதே எனக்கு மகிழ்ச்சிமா.
அந்தப் பாட்டில் கணவனுக்கு சந்தேகம். இந்த சம்பவத்தில்
மனைவிக்கு:(

வாழ்வின் நிலையாமை தெரிந்தால் இத்தனை
கலகம் நடக்குமா.
சில பெண்கள் நல்ல கணவரைச் சந்தேகிப்பதும்
நட்பை சந்தேகிப்பதும் நன்மைக்குப் புறம்பட்ட செயல்.
எல்லாம் நன்மையாக முடியட்டும்.
மிக மிக நன்றி அன்புத் தங்கச்சி.
வாழ்க வளமுடன்.

மாதேவி said...

சிலரின் பொறாமை குணத்தால் நல்ல நட்புகளும் சிதைந்து விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு மாதேவி.
மகிழ்ச்சியைப் பரப்பாமல் வெறுப்பைச் சேர்ப்பவர்களை
என்னவென்றூ அழைப்பது.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

சிலர் இப்படித்தான் அடுத்தவர்களை நோகடிக்கவே பிறந்தவர்களாக இருக்கிறார்கள். இன்று தான் படிக்க முடிந்ததும்மா. தொடர்கிறேன்.