Blog Archive

Monday, November 09, 2020

நலம். நலமே அறிய ஆவல்.

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனைகள்.

இங்கு அதிகரித்து வரும் தொற்றிலிருந்து
விடுபட பெரும் முயற்சிகள் நடந்து வரும்போது,
எங்கள் சப்டிவிஷன் ஹாஸ்பிடலில் இனி

இடம் இல்லை என்ற செய்தி படிக்கும் போது இன்னும் திகைப்பாக
இருக்கிறது.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உணவுண்ட
செவிலியர் குழு பாதிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலைமையில் வைத்தியரை அணுகி
சந்திக்கவே பயம் வருகிறது.

இப்போது இன்னாட்டு அதிபர் தேர்தலில்
வெற்றி பெற்றவர்கள் விதிமுறைகளை அனுசரிக்கிறார்கள்.

அவர்கள் வெற்றியைக் கொண்டாடிய மக்களைக்
காணும்போதும் நம் மனம் கலவரப்படுகிறது.
ஆனால் அவர்கள் இத்தனை நாள் அனுபவித்த 
வேதனைகள் தீர்ந்தன என்ற நம்பிக்கையோடு தெருவில்
கூடிய விதம் ஆச்சரியப்பட வைத்தது.

இங்கே ஒரு எலியின் கதை நினைவுக்கு வந்தது.
விவசாயிகளுக்கு மிகவும் எதிரியாகச் செயல்படும் என்று தாத்தா
 சொல்வார்.
தன்வளையில் கொண்டு போய்த் தானியக் கதிர்களை வைத்து
விடுமாம். தானும் உண்ணாதாம்.
அதை அதன் வளையிலிருந்து 
வெளியேற்றுவது மிக மிக சிரமம்.
ஒரு இடத்தில் அடைத்தால் இன்னோரு இடத்தில்
வெளிவரும் என்பார்,
இந்த ஊரிலும் ஒரு பெரிய பெருச்சாளி அது போல இருக்கிறது.

அதை அதனுடைய வீட்டிலிருந்து அகற்ற
அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னால் முடிந்த அளவு
சேதம் ஏற்படுத்திவிட்டே அது போகும் என்று
நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நேர்மை உடன்பாடு,ஒற்றுமை
எல்லாம் அதனிடம் செல்லாது.
வெளியே வந்தால் தூக்கிச் செல்ல 
அதைவிடப் பெரிய கழுகுகள் காத்திருக்கின்றன.

அவைகளிடமும் இதற்கு நேர்த்திக்கடன் இருக்கிறதாம்.
பார்க்கலாம். என்ன நடக்கின்றது என்று,.
நலமே நடக்கவேண்டும்.



16 comments:

Angel said...

வல்லிம்மா நாங்க நலமாயிருக்கோம் ..எல்லாரும் நலமுடன் இருக்க தினமும் பிரார்த்திக்கின்றேன் .இங்கே செகண்ட் lockdown ..பூனை எலி பெருச்சாளி கதை ரசித்தேன் :)) 

ஸ்ரீராம். said...

இந்தியாவில் மோசமானத்தான் இருப்பதாக எங்கள் அனுபவங்களிலிருந்து தெரிகிறது.  பார்க்கும் இடமே எல்லாம் தோற்று ஏற்பட்டுக்கொண்டு வருகிறது.  ஆனால் குறைவதாகச் சொல்கிறார்கள்.  என்ன சொல்ல...   எப்போது நீங்குமோ இந்தத்தொல்லை...

Geetha Sambasivam said...

விரைவில் அனைத்தும் சரியாகப் பிரார்த்திப்போம். நல்லதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
வாங்க வாங்க. இங்கே தொற்று அதிகமாகத்தான் இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே போவதில்லை. யாருமே.
ஏதோ மனதில் தோன்றிய பூனையையும், எலியையும்
உபமானமாக எடுத்துக் கொண்டேன்:)
காலம் நல்ல படியாகச் செல்லட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இங்கே அதிகமாகவே இருக்கிறது.
ஒரு நாளுக்கு 100,000. இந்த மாகாணத்தில் மட்டும்.
என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரிய கழுகுகள் காத்திருக்கின்றன.....யதார்த்தம்.

Thulasidharan thilaiakathu said...

இங்கும் கூடிக் கொண்டேதான் போவது போல் தெரிகிறது. என்னவோ சிம்ப்டமே இல்லாமல் தாக்குவதாகவும் சொல்லப்படுகிறது. என்னவோ நல்லது நடந்தால் சரி அம்மா

பூனை எலி கதை பூடகமாகச் சொல்லும் விஷயத்தை ரசித்தேன்...!!!!!!!!

கீதா

கோமதி அரசு said...

அனைவரும் நலமாக வாழ நாள்தோறும் பிரார்த்தனைகள் செய்து வருவோம், அது மட்டுமே நம்மால் முடியும். அப்புறம் இறைவன் விருப்பம்.

சொந்தங்கள் நல்லது கெட்டதுக்கு வரவில்லை என்று கோபித்துக் கொள்கிறார்கள். நிலமையின் தீவிரம் தெரிய மாட்டேன் என்கிறது.

ஏதும் செய்வது அறியாமல் இருக்கிறோம். தனியாக இருக்கும் நாம் அவர்களின் உதவியை நாட வேண்டி உள்ளது.

இறைவன் தான் இயல்பு வாழ்க்கை வாழ கருணைபுரியவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாவது அலை அடித்து விடுமோ என்று தான் இங்கு உள்ளது...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இங்கும் (பெங்களூர்) தொற்று அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். இல்லை போலவும் இயல்பாக உள்ளார்கள். மக்களும் வாகனங்களில் தைரியமாக அங்குமிங்கும் பயணித்தபடி
உள்ளார்கள். ஒன்றும் புரியவில்லை.. இது நீங்கள் கூறுவது போல எதில் கொண்டு விடப்போகிறதோ? நாங்கள் எங்கும் வெளியில் செல்வதே கிடையாது. தீபாவளிக்கு புதுத் துணிகள் கூட ஆன்லைனில்தான் வாங்கினோம். கடந்த 8 மாதங்களாக வெளியில் சென்று எதுவும் வாங்குவதை தவிர்த்து வருகிறோம். நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். முடிந்தவரை நாம் ஒதுங்கி இருப்போம். இறைவனை நானும் பிரார்த்தித்தபடி உள்ளேன்.

எலிக்கதை நன்றாக உள்ளது. இந்தக்கதை யாரை குறிப்பிடுகிறது என்ற விளக்கம் எனக்குப் புரியவுல்லை. இருந்தலும் ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் வேண்டும் கீதாமா.

நம்மால் மற்றவர்க்குத் தொந்தரவு வேண்டாம்.
மற்றவரால் நமக்குத் தொந்தரவு வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு முனைவர் ஐயா. பொந்தை விட்டு வெளியே வந்தால்
ஆபத்து என்று அதற்கும் தெரியும்.
அதுதான் இந்த ஆர்ப்பாட்டம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

எலி போட்ட தொற்று நாடகம் இப்போது பேசப்படுகிறது.
என்ன செய்யலாம். நமக்கு இதெல்லாம் பார்த்து பழக்கம் ஆகிவிட்டது நம்மூரில்.
அதமன் அலட்சியத்தால்
இறந்தவர்களின் தொகை 3ஒ லட்சத்தை அணுகிக் கொண்டிருக்கிறது.

நாட்டைச் சரி செய்தார்களானால் மேம்படும்.
இங்கே மாஸ்க் இல்லாமல் வெளியே போக முடியாது.
சென்னையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறாது.
அதுவும் என் வயது உறவுகளை,நட்புகளை நினைக்க இன்னும் மனம்
சங்கடப் படுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
நீங்கள் உறுதியாக இருங்கள்.

55 வயதுக்கு மேல் இன்னும் ஜாக்கிரதை தேவை.
பெண்ணின் தோழி வீட்டில்
அவர்கள் அம்மா இறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு
அங்கு வேலை செய்த பெண்ணிற்குத்
தொற்று வந்திருக்கிறது.
நாம்தான் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும்.

பிறகு அவதிப் பட்டால் யாரும் வரப் போவதில்லை.
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
பண்டிகைக் கூட்டத்தைப் பார்த்தேன்.
இலேசாகக் குளிர் பரவும்போது
இது அதிகரிக்கும் என்று கணித்து சொல்கிறார்கள்.

எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை அப்பா.
இறைவன் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
எலிக்கதை இங்கிருக்கும் அரசியல் நிலைமை.
நியாயத்தை ஒத்துக்கொள்ளாத ஒரு தலைமையைப் பற்றித்தான்.

பெங்களூரில்
என்னுடைய உறவினர்கள் அவர்கள் பெண்ணுடன் தங்கி இருக்கும் வளாகத்தில்
ஏகப்பட்ட தொற்று.
ஜன்னல்களைக் கூடத் திறக்க அஞ்சுகிறார்கள்.

மூன்றாவது மாடியில் இருப்பதால்,
மகளும் ,மாப்பிள்ளையுமே சில நேரங்களில் தான் வெளியே செல்கிறார்கள்.

மற்றபடி எல்லாமே நீங்கள் சொல்வது தான் யதார்த்தமாக நாம் செய்ய வேண்டியது,.
பத்திரமாக இருங்கள் அம்மா.