Blog Archive

Sunday, November 22, 2020

வல்லிசிம்ஹன்திண்டுக்கல்/மதுரை/  திண்டுக்கல்   1961
++++++++++++++++++++++++++++++++++++++++++++

எதோ நினைவுகள்    பாடல் பின்னணியில், எழுத  ஒரு ஊக்கம்.
 பாட்டியும் எங்களுடன் வந்து தங்க ஒரு யோசனை இருந்ததால் 
 வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.
 பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பக்கம் ,அதாவது பின் வாசல்   வழியாகப் போனால்  ஒரு குறுக்கு ரோடு வரும். அது வழியாக  மெயின் ரோடு. அதைக் கடந்தால் பன்றிமலை சுவாமிகள் பங்களா  வரும்.
அதற்கு எதிராகப் பத்து வீடுகள்   வரிசையாகக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
5 ஆம் நம்பர் வீட்டுக்கு நாங்கள்  கிரஹப் பிரவேசம் செய்தோம் .
கார்த்திகை மாதம் என்று நினைக்கிறேன்.
 வீடுகளுக்கு சுற்றி நல்ல சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. அடக்கமான வீடு. வாசலில் மூங்கில் தப்பைகளால் அழி போட்டு அடைத்த பெரிய வராந்தா.
அதற்கப்புறம் ஒரு வராந்தா, முடிவில் பெரிய கூடம். கூடத்துக்கு  இரு  வாசல் ஒன்று தனி அரைக்கும், இன்னொன்று சமையலறைக்கு. பிறகு இப்பொழுது  சொல்லப்படும்   யுடிலிட்டி வெராந்தா.  பாத்திரங்கள் தேய்க்க. 
 தண்ணீர் நிரப்ப இரண்டு பெரிய தவலை களும் அண்டாக்களும். கொண்ட நல்ல முற்றம்.
 அங்கே இருந்து இறங்கினால் குளிக்கும் அறையும் ,தோய்க்கும் கல்லும்.
 ஒரு துளி மண்ணோ ,செடியோ இல்லை. அம்மா எப்படியோ துளசி மாடம் வாங்கி துளசியும் நட்டு விட்டார்.
பத்துவீடுகள் முடிவில் ஒரு பெரிய  கிணறு. அப்பாடி  நல்ல தண்ணீர்க்  கிணறு. அதற்குப் பின்னால் வயல் வெளி. அதற்குப் 
பிறகு ரயில் பாதை. தூரத்தில்  சவுந்திரராஜா மில்ஸ் வீடு. தனி விமானம் வைத்திருந்தவர்கள்.

பத்து வீடுகளுக்கு வெளியே அழகான பிள்ளையார் கோவில். அரச மரத்தடிப் பிள்ளையார்.
தினம் காலையில் நானும் பக்கத்து வீட்டு  ஜில்லுவும்,
தம்பி ரங்கனும்   8 .15ற்கு கிளம்பிவிடுவோம்.
மாதா மாதம் அப்பா மதுரை சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் காரியங்களை முடித்து வருவார்.
சித்தப்பா நல்லபடியாக வீடு ஒன்று கட்டி முடித்தார். தாத்தா வருஷாப்திகம்  முடிந்ததும்  கிரஹப் பிரவேசம் நடத்த தீர்மானம்.
எங்கள்  நாட்கள்  ஆனந்தமாக விளையாட்டும் தோழர்கள் தோழிகளோடு ஆட்ட ஓட்டத்தோடு 
ஓடியது.    நானும் ஒன்பதாம் வகுப்பு போயாச்சு. முரளி எட்டாம் வகுப்பு, ரங்கன் ஆறாம் வகுப்பு செயின்ட் மேரி பள்ளியில் சேர்ந்தாச்சு.
அடுத்த புரட்டாசியில்  மதுரைக்கு நாங்கள் சென்று திரும்பும் போது பாட்டி எங்களோடு வந்துவிட்டார்.
பிறகென்ன ஒரே சந்தோஷம் தான்.

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் இனிமையானவை

Geetha Sambasivam said...

பாட்டி, தாத்தாவுடன் கழியக் கிடைத்த நாட்களே சொர்க்கம் தான். எனக்கு அப்பா வழியில் தாத்தா மட்டும் தான். பாட்டி அப்பாவின் சின்ன வயசிலேயே போய் விட்டார். அம்மா வழியில் இருவரும் உண்டு. நாங்கள் அடிக்கடி அங்கே போயிடுவோம்.

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.
முன்பு படித்து இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் படிக்க தூண்டும் நினைவுகள் பகிர்வு.

எனக்கு என் சிறு வயது நினைவுகள் வந்து விட்டது நாளை அப்பாவின் நினைவுதினம் அவர்களின் அன்பு, பாசம் எல்லாம் நினைக்க நினைக்க ஆனந்தம் தரும்.

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள்.  பழைய நினைவுகள் எப்போதுமே சந்தோஷம்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதன் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தான் வசிக்கிறோம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
ஆமாம் மா. அசை போட இனிய நாட்கள் எல்லாமே
சிறு வயதோடு சம்பந்தப் பட்டவை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எனக்கும் அம்மாவின் அப்பாவோடு பழகும் வாய்ப்பு இல்லை.
அதை ஈடு கட்ட, அம்மா பாட்டி 90 வயது வரை இருந்தார்.

இந்த மதுரைப் பாட்டியும் என் 14 வயது வரை
இருந்தார்.
அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது.
ஒரே ஒரு மருந்துதான் கொடுத்திருந்தார்கள்.

மிக நன்றி மா. நாம் நல்ல பாட்டிகளாக நிறைவாக இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
உண்மைதான். முன்பு எழுதினதை எனக்கு நினைவுக்குக்
கொண்டு வந்தது முகனூல் மெமரீஸ்.
மீண்டும் படித்ததற்கு மிக நன்றி மா.அப்பாவின் நினைவு நாள் நல ஆசிகளைக் கொடுக்கட்டும்.
என்றும் வாழ்க வளமுடன்.



வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். பசித்தவனின் பழங்கணக்குமா.
மிக மகிழ்ச்சியான நினைவுகள். எல்லோருக்கும்
நலம் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
வனக்கம். வாழ்த்துகள்.
கிருஷ்ணா ராவ் தெருவிலிருந்து ஒரு கிலோமீட்டர்
என்றால் எந்தப் பக்கம்.?
திண்டுக்கல் வெகுவாக மாறி இருக்குமே.
நான் சொல்வது 60 ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்தது.
இப்பொழுதும் வர ஆசைதான்.
அந்த வீட்டிலிருந்து இடப்பக்கம் பள்ளிக்கூடம். வலப்பக்கம்
கோபால சமுத்திரம் என்ற ஒரு இடம்
இருந்ததாக நினைவு.

வந்தாலும் வருவேன் உங்களை எல்லாம் பார்க்க. நன்றிமா.