Blog Archive

Monday, July 22, 2019

1603,நோயுற்ற மனம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்
நோயுற்ற மனம்.
+++++++++++++++++++++++
அன்பின் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் முகனூலில் 
கொடுத்திருந்த  இந்த அம்மாவின் படமும்
கவிதையும் மனதை உலுக்கி விட்டன.
மறைந்த  அம்மா, மற்றும் சில முதியோர் நினைவுக்கு
வந்துவிட்டனர்.
அம்மாவாவது ஒரு வாரம் மட்டுமே சிரமப்பட்டார்.

நாலைந்து வருடங்கள் சிரமப்பட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
எப்படித்தான் இந்த மன அழற்சி வருமோ தெரியவில்லை.

செல்லம்மா பாட்டியும் அப்படித்தான் நோயில் விழுந்தார்.
குளியலறையில் விழுந்து பினமண்டையில் பட்ட அடி
அவரது வலிமையான மனத்தைத் தாக்கிவிட்டது.
மெல்ல மெல்ல முன்னேறியது முதலில் தெரியவில்லை.
நிகழ்வது மறந்து, கடந்த காலத்துப் பயங்கள்
அவரை ஆக்கிரமித்தன.

நல்ல நிகழ்ச்சிகள் அவருக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
கணவரை விளித்த வண்ணம் இருப்பார்.

அவர்தான் ஊன்றுகோல். அவரிடம் மகன் மக்கள் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை  என்று வருத்தப் படுவார்.
சிலசமயம் நல்ல தெளிவு கிடைக்கும்.
அந்த சமயங்களில் நானும் இருந்தால் நல்ல குறும்புடன்
சிரிக்க சிரிக்க பேசுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக மூளை நரம்புகள் செயலிழக்க
பேச்சும் குறைந்தது. உட்கார முடியவில்லை. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியும்
கவனித்துக் கொள்ள நர்ஸும் ஏற்பாடு செய்யப் பட்டது.
மகன் நன்றாகக் கவனித்துக் கொண்டார். மருமகளோ அதற்கு மேல்.
படுத்தே இருந்ததால் நிமோனியா வந்து மூன்று மாதங்களுக்கு
முன் மறைந்தார்.வாழ்க்கையின் கடைசி வருடங்கள் 
அவர் மனதில் பதியவில்லை.
எனக்குத் தெரிந்த இன்னோருவர் மிகப் பிரமாதமாக
வெளி நாட்டு  அலுவலகம் ,,

அரசாங்க வேலையில் இருந்த  எஞ்சினீயர்.
 சிங்கத்தின் நண்பர்களில்  ஒருவர்.
ரிடயராகிச் சென்னை வந்த   சில நாட்களில்
பார்கின்சன் வியாதி, கூடவே மறதி, ஆட்டம் கொண்ட
உடம்பு.
பார்க்க அத்தனை களையான முகம் ,அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக
இயங்கிய அந்த மனம்,
எல்லாம் கரையத் தொடங்கின. 
மனைவி மிக உன்னதமாகப் பார்த்துக் கொண்டார்.
சிங்கம் மறைந்த இரண்டாண்டுகளில் 
அவரும் இறைவனடி ஏகினார்.
83 வயது என்பதே ஒரு ஆறுதல். நல்ல மருத்துவர்களின் கவனிப்பு
எல்லாம் இருந்தது. குடும்பத்துக்காக உழைத்தவர்
குடும்பத்துடன் பேசாமல் சென்றார்.

இந்த வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது.
அது ஆயுளை நீட்டிக்கலாம்.
மனதை இயக்கும் மூளையை சரிப்படுத்துவதில்லை.
பார்க்கலாம் இதற்கும் சிகித்சை வரலாம்.
சிகிச்சை  வரும்.  அனைவரும்  பூர்ண  ஆரோக்கியத்துடன் 
இருக்கப் பிரார்த்தனைகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

23 comments:

துரை செல்வராஜூ said...

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்வினை அம்பாள் அனுக்ரஹிக்க வேண்டும்...

அவளன்றி வேறு கதியில்லை...

ஜீவி said...

படிக்க படிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.
வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரைமா.
அன்னையின் அருள் எப்பொழுதும் நம்மைக்காக்கும்.
அந்தப் படமும் கவிதையும் கொடுத்த
பாதிப்பில் எழுதிவிட்டேன் பா.
நலம் நிறை வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கும்.
இதெல்லாம் நூற்றில் 5 நபர்களுக்கு வரலாம் மா.

நான் சொன்னவர்களின் வீட்டுப் பெரியவர்கள்
நீள் நெடு வாழ்வு வாழ்ந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்தவர்கள் தான்.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
இந்த ஊரில் தான் நிறைய வயசானவர்களை இப்படிப் பார்க்கிறேன்.

மருந்தும் நிறைய .கவனிப்பும் நிறைய. ஆயுளும் நிறைய.

எங்க பாட்டி எல்லாம் 96 வயது வரை நன்றாகவே
இருந்தார். நவீன உலகம்தான் இப்படி மாறி இருக்கிறது.

KILLERGEE Devakottai said...

சட்டென மனதை கனக்க வைத்தது பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
மன்னிக்கணும். எல்லோர் மனதையும் வருத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.

வருடாவருடம் உடல் பரிசோதனை, உடற்பயிற்சி
மருத்துவர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவேண்டும்
அனைவரின் சுகமும் நிச்சயம்.

ஸ்ரீராம். said...

வணக்கம்மா....

இரண்டு சம்பவங்களிலும் பாஸிட்டிவ், மற்றும் நெகிழ்ச்சியான விஷயம் என்ன என்றால் சம்பந்தப்பட்டவர்களை அக்கறையுடன் பார்த்துக்கொள்ள ஆட்கள் இருந்தார்கள் என்பதுதான்.

ஸ்ரீராம். said...

கம்பீரமாக இருந்தவர் இதுமாதிரி நோயினால் படும் அவஸ்தைகளைப் பார்க்க ரொம்பவும் கஷ்டமாய் இருக்கும். என் அப்பாவிடம் எனக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. வியாழனில் பகிர எழுதி வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு வியாழனில் பகிரவேண்டும்.

ஸ்ரீராம். said...

என் பேஸ்புக் கவிதை பற்றி இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி அம்மா. அங்கு சட்டென இதற்குக் கிடைத்த பின்னூட்டங்கள் நெகிழ்ச்சியாய் இருந்தன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். நற்காலை வணக்கம்மா.


முன்பு லேசாக அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டதை
அறிவேன்.
நான் சொன்ன பாட்டிக்கு,தாத்தா மறைந்தது கூடத் தெரியாது.
திருப்பதி போயிருக்கிறார், நிலங்கள் பார்க்க தஞ்சாவூர்
போயிருக்கிறார் என்று சொல்வார்கள்.

என்னவோ இப்படி ஒரு நோய் .வெளியே போகும் வழக்கம் இல்லாத்தால் குடும்பம்
பிழைத்தது.
இன்னோரு பாட்டிக்கு மறதி வந்து அடிக்கடி வெளியே போய் விட்டு
திரும்ப வழி தெரியாமல் இருப்பார்.
ரொம்ப சோதனைமா.
உங்கள் கவிதைதான் என்னை எழுத வைத்தது. அருமையான
சொற்கள். மனதை உருக வைத்து விட்ட படம்.
அந்த மேஜை கூட அம்மா பக்கத்தில் இருந்த மேஜை மாதிரி
இருக்கு. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
வயதாகும் காலத்தில் இளையோரின் ஏச்சுக்கு உட்படாமல் காலம் கழிய வேண்டும்.
அந்தச் செல்லம்மா பாட்டிக்கும், சிங்கத்தின் நண்பருக்கும்
ஆதரவு கிடைத்தது அவர்கள் நற்கர்ம பலந்தான்.
இறைவன் எல்லோரையும் நலமாக வைக்கட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கணத்துப் போனது

கோமதி அரசு said...

என் சின்ன மாமனார் நினைவு இல்லாமல் மூன்று வருடம் படுத்த படுக்கை. ஆனால் மாமியார் பேரை மட்டும் மறக்காமல் அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
மற்றவர்கள் யாரையும் நினைவு இல்லை.

மாமனார் நினைவுடன் படுத்த படுக்கையாக மூன்று வருடம்.

அவர்களை போசிக்கவும் அன்புடன் கவனித்துக் கொள்ளும் உறவுகளும் இருந்தன.

யாரும் கவனித்துக் கொள்ள ஆள் இல்லாதவர்களுக்கு இந்த நோய் வந்தால் மிகவும் கஷ்டம்.

நீங்கள் சொல்வது போல் எல்லோரையும் நலமுடன் வைக்கவேண்டும் இறைவன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் கனக்கிறது...

Geetha Sambasivam said...

என்னவோ போங்க! இதை எல்லாம் பார்த்தால் கவலையாகவும் இருக்கு! அவ்வளவு நாட்கள் ஜீவித்திருக்கணுமா என்றும் தோன்றுகிறது. என் மாமியார் 93 வயது வரைக்கும் ஞாபகசக்திக்குப் பஞ்சமில்லாமல் இருந்தார். அதோடு அவரால் முடிந்த வேலைகளையும் செய்தார். தன் துணியை இறப்பதற்கு ஆறு மாசம் முன்னர் வரை தானே தோய்த்துக் கொண்டார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா. நலமாக இருக்க வேண்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எல்லாம் நவீன யுகம் செய்யும் வேலை. பூர்வ கர்மா பலன்..
இது பாரம்பர்யமாக வருவதில்லை என்கிறார்கள்.
எதனால் வருகிறது என்றும் தெரியவில்லை.

நாம் தினந்தோறும் செய்யும் பிரார்த்தனைகளில்
நிம்மதியான சுகத்துக்கு வேண்டிக்கொள்வதும் ஒன்றாகி விட்டது.

எத்தனை வயது இருக்கணும்னு
அவன் எழுதி வைத்திருக்கிறானோ.

இருக்கும் வரை யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது,.
அதுதான் விருப்பம் மா.
பகவான் காப்பாத்துவான்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
இறைவனை அனுதினம் வணங்குவதும் ,நெறிமுறைகளை
விடாமல் கடைப்பிடிப்பதையும்
நம் முன்னோர்கள் விடவில்லை.
மேலும் நாமும் அவர்களுக்கு மனக்கவலை கொடுக்கவில்லை.

நான் சொன்ன இருவருக்கும் உடல் உபாதையைத் தவிர மன உளைச்சலும் இருந்தது.

கவனிக்க ஆள் இருந்ததால் சமாளிக்க முடிந்தது.
இறைவன் காக்கட்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
இறைவன் காப்பான் மா. எல்லோருக்கும் சேர்த்து நாம் வேண்டிக்கொள்வோம்.

மாதேவி said...

மனம் கனக்கிறது. அனைவரும் நலமேவாழ வேண்டுவோம்.

Thulasidharan V Thillaiakathu said...

எதுவும் நம் கையில் இல்லையே வல்லிமா....நல்லதே நடக்கட்டும். நடக்கும்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் அதுதான் உண்மையான மனப்பாடு.
இன்று இருப்பது உண்மை நாளை அவன் கையில்.

வெங்கட் நாகராஜ் said...

குடும்பத்துக்காக உழைத்தவர் குடும்பத்துடன் பேசாமல் சென்றார்... வருத்தம் தரும் நிகழ்வுகள். கஷ்டப்பட்டு இறைவனடி சேர்வது கொடுமை. இரவு தூங்கி, துயிலிலேயே மரணிப்பது தான் சிறப்பு. அது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லையே...

அனைவரும் நலமுடன் இருக்க எனது பிரார்த்தனைகள்...