Blog Archive

Saturday, June 29, 2019

முன்னும் பின்னும் ....

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  இருக்க வேண்டும் .

முன்னும்  பின்னும் ....

2012  ஒரு நாள் காலை .
 4 மணி. எஸ்விபிசி  காட்சி ஆரம்பித்து சுப்ரபாதம்,
மக்கள் தொலைகாட்சி கந்த ஷஷ்டி கவசம்
சங்கரா டிவி  ஸ்ரீ கணேஷ் ஷர்மா   பிரவசனம் எல்லாம் கேட்டு முடித்துக் கணினி திறந்து
உலகமெங்கும் உள்ள தமிழ் வலை உலகில்
கருத்துக் களை   மேய்ந்து, நம்  பின்னூட்டங்களைப்  பதிந்து
நிமிரவும்,
சிங்கம்  காப்பி குடித்து முடித்து  ஹிந்துவை அலசி, எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை என்று தினசரி அலுப்பைக் காட்டிவிட்டு,
தோட்டத்தில் தன்  செடிக் குழந்தைகளைக்
கவனிக்கப் போகவும் என் உதவிக்கு வரும்,ராணி உள்ளே வரவும் சரியாக இருக்கும்.

இன்னாம்மா, பாப்பாவெல்லாம் பேசிடுச்சா. எப்படி இருக்காங்க எல்லாம்
இப்பவே பாத்திரம் எல்லாம் போட்டுடு,
மதியம் வரமாட்டேன்.
ஆசுபத்திரிக்குப் போகணும், முதுகெல்லாம் வலிக்குது என்றதும் ,

செய்யும் வரை செய்துட்டுப்போ,
நாளைக்குப் பார்த்துக்கலாம்  என்று சொல்லி என் குளியல்,கடவுள் உபாசனை
எல்லாம் முடிக்கவும் ,சிங்கம் இரண்டாம் காப்பி
கேட்கவும் சரியாக இருக்கும்.

காப்பி கொடுக்கும் போதே சொல்வார், எங்க போகணுமா லிஸ்ட் போட்டுக்கோ,
எத்தனை மணிக்குன்னு சொல்லு ,அப்புறம் மாறக்கூடாது.
இப்ப போலாமா.

இப்ப எப்படிப் போகிறது,சமையல் மாமி வரணும்,
இஸ்திரிக்குக் கொடுக்கணும், துணிகளை மாடியில் உலர்த்தணும்  பத்தரையாவது ஆகும்//

சரி என் மிச்ச வேலைகளை பார்க்கிறேன்.
  பாங்க்  வேலை இருக்கு,
அப்படியே காயலான் கடைக்குப் போய்விட்டு வருவேன். தேடாதே,, 1 மணி ஆகும் //

சரி வெய்யிலுக்கு முன்னால்
வந்துடுங்கோ. எனக்கும் கொஞ்சம் பணம் எடுக்கணும் செக் தரேன் என்று கொடுப்பேன்.

எல்லோரும் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப மீண்டும் கணினி, ரேடியோ மிர்ச்சி என்று
என்று பொழுது போகும்,
நல்ல பசி எடுக்கும் போது,,,, சிங்கம் வராது.
நான் சாப்பிட்டுவிடுவேன்.
பிறகு அவர் வர,

சமையலில் தனக்குப் பிடித்ததை மட்டும் சாப்பிட்டுவிட்டு மத்திய ஒய்வு எடுத்துக் கொள்வார்.

மீண்டும் 3 மணி அளவில் என்ன போகலாமா என் வேலையைப் பார்க்கட்டுமா  என்பார் .
இஸ்திரி செய்து துணிகள் வாங்கி வைக்கணும், ஒரு கதை
பாதியில் இருக்கு முடிக்கணும்
இன்னும் ஒரு மணி நேரத்தில போகலாமா என்பேன்.

ஏம்மா கரெக்ட்டா நான் ஜிம் போகிற நேரம் உனக்கு,மருந்து,மல்லிப்பூ ,ராகவேந்திரர் எல்லாம்
போகணுமா. ஆறு மணிக்கு வரேன்// என்று கிளம்பிவிடுவார்.
ஆறு மணிக்கு வரும்போது கூடவே வால்  மாதிரி இரண்டு நண்பர்கள் வந்துவிடுவார்கள்.
ஆண்ட்டி  சவுக்கியமா. அங்கிள் இன்னிக்கு எவ்வளவு வெயிட் தூக்கினார் தெரியுமா என்று பேச உட்கார்ந்து விடுவார்கள்.

அவனுக்கு காப்பி கொடு  என்று குளிக்கப் போவார்.

எப்படி ஆண்ட்டி பொழுது போகிறது உங்களுக்கு.
அவராவது நிறைய வெளியில் போகிறார் .
நீங்கள் சிரியல் பார்த்துப் பொழுது கழித்து விடுவீர்களா என்று அந்தப் பிள்ளை கேட்கும்.

மேலேயிருந்து குரல் வரும் ஆண்ட்டிக்கு நேரமே கிடையாதுப்பா.
தினம் 24 மணி நேரமும்  வேலைதான் என்று சிரிக்கும் சத்தம் கேட்கும்.
ஆமாம்ப்பா     அசட்டுக்கு  அறுபத்தி நாழியும் வேலைன்னு எங்க மாமியாரே சொல்லி இருக்கார் என்பேன் நானும் சிரித்தபடி.

இனிமேல் இந்த மாலைப் பொழுதில் அவரை வண்டி எடுக்கச் சொல்ல முடியாது.
நாளை பார்க்கலாம் என்ற முடிவுடன்,எழுதி வைத்த லிஸ்ட்டில் தேதியை மாற்றுவேன்.

அவைகளும் இனிய நாட்கள் தான்.









22 comments:

KILLERGEE Devakottai said...

நினைவுகளை வைத்துதான் பலரது காலம் கடந்து போகிறது அம்மா...

Geetha Sambasivam said...

கண்ணில் நீர் வந்துவிட்டது. என்றாலும் இனிய நினைவுகள், இனிய நினைவுகளே!

ஸ்ரீராம். said...

ஆம்... அந்த இனிய நாட்கள். அந்தக் குரல் உங்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதை டைப் அடிக்கும்போது யதேச்சையாக பாஸ் நீங்கள் கொடுத்த ஆஞ்சநேயரை எடுத்துக்காட்டுகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம்மா.
இருக்கும் வரை நினைவுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் மிக அன்பான
கணவர். நன்றியுடனே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
இனிய காலை வணக்கம். கணினி சரியாகி விட்டதா.
நானும் வேறு என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன்.
அவரையும்,வீட்டையும் சுற்றித்தான் மனம் செல்கிறது.

பரவாயில்லை எவ்வளவோ தேறிவிட்டேன் மா.
என்றும் நலமுடன் இருங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய நினைவுகள்

ஜீவி said...

வல்லிம்மா, இங்கேயும் அப்படித்தான், அங்கேயும் அப்படித்தான் என்று
எல்லோர் வீட்டிலும் நடப்பதை தாய்க்குலத்தின் கருணையோடு சொல்லி விட்டீர்கள்.

அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சமையலறையில், அண்னன் டிவி கிரிக்கெட் மேட்சில், அக்கா கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டு...

நெல்லைத்தமிழன் said...

மனதை நெகிழவைத்த பதிவு.

நான் பார்த்த வரையில், எப்போதும் ஜிம் போகின்ற, ரெகுலராக நடைப்பயிற்சி செய்கின்றவர்கள் நிறைய நாட்கள் இருப்பதில்லை. இது எதனால் என்று தெரியலை. நானும் ரெகுலராக ஜிம், நடைப்பயிற்சி மேற்கொண்டவன் கடந்த 8 மாதங்களுக்குமேல் அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை இயக்க வைக்கும் இனிய நினைவுகள்...

கோமதி அரசு said...

நினைவுகள் ! நினைவுகள் ! நீங்கா நினைவுகள்.
மனதில் எப்போது, எதை எடுத்தாலும், எதைப்பார்த்தாலும் நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் பின்னோடு.

நெஞ்சு இருக்கும் வரை நினைவு இருக்கும்.

கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்து விட்டது அக்கா.

Bhanumathy Venkateswaran said...

நினைவுகள் சுகமானவை, சில சமயம் சோகமானவை.

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி தந்த நினைவுகள். ஒரே ஒரு முறை நானும் பால கணேஷும் உங்கள் இல்லத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தது இன்றைக்கும் இனிய நினைவாக....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நங்க நல்லூர் வரச்சொல்லுகிறாரோ ஹனுமான் ஜி.
உங்கள் பாஸை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.

உண்மைதான் இன்று காலை எழுந்திருக்கும் போது அவர் குரல் கேட்டது.
பிரமைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்.
ஆமாம் எல்லோர் வாழ்க்கையின் அங்கம் தான் இந்த ஒரு நாள்.
அதிர்ஷ்ட வசமாக எங்கள் சின்ன மகன் தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அவருக்காகாவே இன்னும் எழுத வேண்டும்.
படித்து விட்டு கருத்தும் சொல்கிறார்.
Chronicles of Narnia மாதிரி,நானும் ஏதோ எழுதுகிறேன்.
நீங்கள் வந்து படித்ததே எனக்கு மகிழ்ச்சி.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு வணக்கம். தங்கள் தந்தையாரை பற்றி முனைவர் ஐயா
வழியாக அறிந்து கொண்டேன்.
உங்கள் கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா.,
சில நாட்கள் மனது ரொம்ப அலை பாயும் ஏதாவது எழுதிவிட்டால்
பாரம் குறையும்.அதுதான் எழுதுகிறேன்.

இவர் சிகரெட்டை நிறுத்த ஜிம் போக ஆரம்பித்தார்.
20 லிருந்து நாலைந்துக்கு வந்தது.
இருந்தும் தீர்ந்து போன மூச்சை யார் மீட்டுக் கொணர்வது.
இறைவன் உங்கள் எல்லோரையும் நன்றாகவே வைத்திருப்பார்மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தனபாலன்.
மனம் இயங்க உடலும் உயிர் பெறும்.
நினைவுகளும் இசையுமே என்னைக் காக்கின்றன. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

அச்சோ ,உங்களையும் ,கீதாவையும் வருத்தி விட்டேன்.

விதவிதமான சம்பவங்கள் , மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றன.
நிறைய மாறி விட்டேன் இப்போது.
என்னுடன் கூடப் பயணிக்கும் அனைவரும் நீண்ட நாட்கள் நல் வாழ்வு வாழ வேண்டும்.
அதுவே என் ஆசை. வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா. உங்கள் கருத்து உண்மையே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

ஆமாம். ஒரு ஏழெட்டு வருஷம் இருக்குமா.
இவர் நீங்கள் சென்ற பிறகு நல்ல உயரம்மா அந்தப் பிள்ளை என்று சொன்னதும்
நினைவில் இருக்கிறது.
கணேஷுக்கும் உங்களுக்கும் நன்றி மா.

மாதேவி said...

இனிய நினைவுகளே மனதுக்கு ஆறுதலாக...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு மாதேவி நன்றி மா.