Blog Archive

Tuesday, July 17, 2018

1412,,,காசி நகர் வீதியிலெ

துர்க்கா மாதா கோவில்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வல்லிசிம்ஹன்
+++++++++++++++++++
 அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானித்தார்கள்.

வெய்யில் தெரியாத வண்ணம் மேற்கூரை அமைக்கப்பட்டு
வரிசையாக  கடைகள் வண்ண வண்ணப் புடைவைகளுடன்
காட்சி கொடுத்தன.

நடேசன் நல்ல கடையாகத் தெரிந்தெடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே பாய்கள் ,மெத்தைகள் விரிக்கப்பட்டு ,வெளி வெய்யில் தெரியா வண்ணம்
மின் விசிறிகள் சுழன்று கொண்டிருந்தன.

அங்கே பார்த்துப் பிரமிக்கும்படி பலவித மானிலங்களின் புடவைகள்
வரிசையாக  அடுக்கப் பட்டிருந்தன.
அவர்கள் செய்த உபசாரமோ  மனம் மயக்கும் விதமாக இருந்தது.
லக்ஷ்மிமா தன் மகன் வயிற்றுப் பேத்திக்கும், மகள் வயிற்றுப் பேத்திக்கும்
பாவாடைத் துண்டுகள் பார்த்தார்.
தனக்கும் மகள்,மருமகள்கள்  எல்லோருக்கும் பனாரஸ் புடவைகள்
வாங்கும் யோசனையுடன், வஞ்சுமாவிடம் கலந்து யோசித்தார்.
வஞ்சுமாவுக்கும் அந்தக் கடைப் புடவைகளின் தரம் மிகப் பிடித்து
இருந்தது. பெங்கால் சில்க்கும் கண்ணைப் பறித்தது.

விலைகள்  அதிகப் படியாக இல்லை. தரத்துக்கேற்றபடி 2000 ரூபாய்கள் அளவில் இருந்தன.

கொஞ்ச நேரத்தில் வாசுவுக்கும் நாராயணனுக்கும் அலுப்புத் தட்டியது.
காலார நடந்துவிட்டு வருகிறோம் என்றபடிக் கிளம்பி விட்டார்கள்.
அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு இருவரும் புடவைகளில் ஆழ்ந்தனர்.

நல்ல தங்கை ஜரிகையிட்ட , பூ வேலைப்பாடுகள் செய்யப் பட்ட
 நீல வண்ணப் புடவையும், இளம் சிவப்பு வண்ணப் புடவையும்
இருவரையும் கவர்ந்தன.
தனியே வைத்துக் கொண்டு  மணப்பெண் வண்ணம் என்று சிவப்பில்
கடைக்காரர் காண்பித்ததை இருவரும் துர்கா மாதா கோவிலில் கொடுக்க எடுத்துவைத்துக் கொண்டனர்.

இன்னும் நான்கு  புடைவகளை வேறு வேறு வண்ணங்களில்
எடுத்துக் கொண்டு, பேத்திக்குப் பாவாடை வாங்க முனைந்தனர்.
சமீபத்தில் வயதிற்கு வந்திருந்ததால், லக்ஷ்மிமா
அழகான பச்சைப் பட்டை எடுத்துக் கொண்டார்.
ஊருக்குப் போய் தாவணி வகையறா வாங்கணும் என்று சொல்லிக் கொண்டார்.
தன் பெண்ணுக்குச் சின்ன வயதிலியே திருமணம் நடந்து
அவள் பெண்ணுக்குப் பனிரண்டு வயதும் முடிந்ததைச் சொல்லியபடியே

பேச்சுத் தொடர்ந்தது. எங்கே வெளியே போனவர்களைக் காணொம் என்றபடிக்
கடை வாசலைப் பார்த்தார்கள்.
ஒரு பத்து நிமிடங்களில் கைகள் நிறையப் பைகளுடன் அவர்கள் வருவதைக்
கண்டு ஆச்சர்யப் பட்டார்கள்.
என்ன இருக்கு இந்தக் காசியில் வாங்க உங்களுக்கு என்றவர்களைப்
பார்த்துக் கண் சிமிட்டினார் வாசு.
அதெல்லாம் ரகசியம். இங்கே என்ன டாமேஜ்னு சொல்லுங்கோ.
சாயந்திர ஆரத்திக்கு இன்னோரு இடம் போய்ப் பார்க்கணும்
என்றார் நாராயணன்.
லக்ஷ்மிமாவுக்குக் கூடுதல் செலவு. அதைவிடக் குறைவாக
வஞ்சுமாவுக்கு கணக்குக் காட்டினார் கடைக்காரர்.
 ஏன் வாசு, உங்க வீட்டுக் கதையும் இப்படியா. எந்த இடத்துக்குப் போகிறோமோ
அந்த இடத்தில் ஏதாவது வாங்க வேண்டும் என்ற நியதி அவ்விடத்திலும் உண்டோ\என்றார்.

அடடா அதை ஏன் கேட்கிறீர்கள். சேலம் போனா அம்மாபேட்டை நூல் புடவை,
ராசிபுரம் பொனா அங்க வெண்ணெய், கோயம்பத்தூர் போனால்
கீர்த்திலால் நகைன்னு பட்டியலே இருக்கு.
ஏன் டெல்லி வெல்லம், பங்களூர் புளி,கலகத்தா பீங்கான்
எல்லாம் விட்டுவிட்டீர்களே  என்று எடுத்துக் கொடுத்தார்
லக்ஷ்மிமா.
கடையில் அலை அலையாகச் சிரிப்பு பரவியது.
அழகாகத் தனித் தனிப் பெட்டிகளில் புடவைகள்
அடைக்கலமாகின.
கடைச் சிப்பந்தி அவைகளை எடுத்து வரக் கடை முதலாளி
இரு பெண்மணிகளுக்கும் பரிசாகக் காசிப் போர்வை ஒன்றைக் கொடுத்தார்.
சந்தோஷமாகச் சுமந்தபடி நடந்து வண்டியை அடைந்தனர்.

வீதிகளில் கோலாஹலமாக மாலை விளக்குகள்
பொருத்தப் பட்டு, பஜன்பாடல்கள் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
நாளைக்குப் போய் தரிசனம் செய்ய லக்ஷ்மி நாராயணரும் ,துர்க்கா மாதாவும்

இருக்கிறார்கள். இங்கேயே காலம் முழுவதும்
இருக்கலாம் என்று ஆசையாக இருக்கிறது என்றார்
நாராயணன்.
குடும்ப பாரம் இறங்கட்டும். நாம் வந்து விடலாம் என்றார்
வாசு.
அப்படியும் நடக்குமா என்று ஒரு வித ஏக்கத்துடன் கேட்டார் லக்ஷ்மி.
ஏன் முடியாது, மனத்திடம் இருந்தால்
ரிஷிகேசத்தில்  தனி இடம் வாங்கி நாம் இருக்கலாம்.
திட்டம் தான் தேவை. என்ற வாசு, என்ன சொல்ற வஞ்சு
என்று கேட்டார். நம் கடமைகள் முடிந்துவிட்டால்
நாம் கிளம்புவதில் தடை ஏதும் இல்லைமா என்று
யோசனையுடன் சொன்னார் வஞ்சுமா.

விடுதியும் வந்தது.எல்லாப் பார்சல்களையும் எடுத்துக் கொண்டு
அறைக்குச் சென்று அவரவர் வாங்கிய பொருட்களைப் பார்வை இட்டனர்.

ராமர் பாதுகை என்றும், ராமர் ஜாதகம் என்றும் வகையாக
இருந்தன கண்ணைப் பறித்தபடி.
பகவானுக்கும் நமக்கும் சேர்த்து வாங்கினோம் என்றபடி
கான்பூரிலிருந்து வரவழைக்கப் பட்ட  செருப்புகளைக்
காண்பித்தனர்.
பாட்டா காலணிகளையே போட்டு சலித்தவர்கள் கண்களுக்கு
இவ்வளவு வேலைப்பாடு செய்யப் பட்ட எடை இல்லாத காலணிகள்
மிக மகிழ்ச்சியைக் கொடுத்தன. அணிந்து பார்த்து, கச்சிதமாக
இருப்பதைக் கண்டு,நடந்து பார்த்தனர். எல்லோருக்கும் வாங்கினீர்களா
என்று கேட்ட பெண்மணிகளைக் கண்டு பெருமூச்செறிந்தனர் வேடிக்கையாக.

நீங்கள் எங்களைச்   சும்மா விடுவீர்களா என்றபடி
மற்ற பார்சல்களையும் பிரித்தனர்.
மகள்கள்,மருமகள்களுக்கும்,
Add caption
மாப்பிள்ளைகளுக்கும்  வாங்கி வந்திருந்தனர்.
பஞ்சகங்கா துறை 

6 comments:

ஸ்ரீராம். said...

அந்த தளத்தைத் தொடரப்போகிறீர்களா அம்மா? அங்கு படித்து விட்டேன். மறுபடியும் படித்தேன்.

Avargal Unmaigal said...

படங்கள் அனைத்தும் அருமை...பேனர் படம் சூப்பர்

vallisimhan said...

அன்பு ஸ்ரீராம்,
இரு குதிரை சவாரி நமக்கு வராது. இருந்தும் அடி மனத்தில் பயம் இருக்கிறது. நான் எழுதுவதை விட யாராவது அதைப் படிக்கிறார்களா என்பது முக்கியம்.
பின்னூட்டம் முக்கியம்.பார்க்கலாம்.

vallisimhan said...

அன்பு துரை ,இது போன்ற அருமையான கருத்துகளுக்கு நான் பதில் எழுதுகிறேன். அதை
வெளியிடத் தாமதமாகிறது.
நன்றி மா.

KILLERGEE Devakottai said...

மீண்டும் இங்கு படித்தேன் அம்மா.

vallisimhan said...

மிக நன்றி கோடரிவேந்தன் தேவகோட்டையாரே.