Blog Archive

Monday, July 02, 2018

1398 ,,அன்பும், நட்பும் ஒருமித்த பயணம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   விஜயவாடா  ஸ்டேஷன் வந்திருந்தது.
ஓ இன்னும் மஹராஷ்ட்ரா தாண்டி, மத்தியப் பிரதேசம் கடந்து
உத்திரப் பிரதேசம் போக நாளை மத்தியானம் 1 மணிக்குதான்
ரயிலை விட்டு இறங்க முடியும்.

நல்ல வேளை புத்தகங்கள் இருக்கு. சாப்பாடு இருக்கு.
வேண்டும்னால் டைனிங்க் கார்க்குப் போய்
ஏதாவது வாங்கிக்கலாம். நம் ஐயர் வந்திருக்கணும்.

அதான் வஞ்சுமா. நம்ம ஊர்ல இருந்து மெட்ராஸ் வந்து ரயில்வேல சேர்ந்தாரே
வெங்கட் ராம் ஐய்யர். உனக்குன்னு சொன்னால் எண்ணெய் இல்லாமல்
 தோசை வார்த்துக் கொடுப்பார். மத்யான டிஃபனுக்கு ஆச்சு.

லக்ஷ்மிமா தான் கொண்டு வந்திருந்த இட்லிப் பொட்டலத்தைத் திறந்தார்.
இவருக்குக் காரம் ஆகாது.
பருப்பு எள்ளு மிளகாய்ப் பொடி தனியா கொண்டுவந்திருக்கேன்.
இப்ப  இதைச் சாப்பிடலாமே என்றார்.

நான் ரெடி என்றார் வஞ்சுமா. மதிய சாப்பாடுக்கு என்
சப்பாத்தி இருக்கிறது. காண்டீனிலிருந்து உருளக் கிழங்கு மசாலா வாங்கிக்கலாம்.

என்றவள் கண்ணில் ஏதோ யோசனை . பசங்க என்ன செய்கிறார்களோ.
ஸ்ருதிக்குத் தான் வரலியேன்னு வருத்தம்.
அவ உடம்பைப் பார்த்தால் எனக்கு ,சந்தேகமா இருக்கு என்றதும்
வாசு ,புருவத்தைச் சுருக்கினார்.
ஏன் என்ன. பழையபடி அனீமியாவா என்றார்.
இல்லைமா. நவீனுக்குத் தங்கையோ தம்பியோ வரப் போறது
என்று புன்முறுவலித்தார்.
அதெப்படி அவள் சொல்லாமல் உனக்குத் தெரியும்
என்று கேட்டவரை, லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டு
அதெல்லாம் அம்மாக்கள் விஷயம் என்று குதூகலமாகச் சிரித்தனர்.
ஓஹோ. அப்படியா விஷயம். அக்ஷ்ய வடம்னு நினைத்ததுமே
அக்ஷயமா செய்தி வரதே என்று சிரித்தார் வாசு.
நாணா, எல்லாம் இவர்களுக்குத் தெரிஞ்ச பிறகுதான் நம் வரையில் வரும் என்று
ஒத்துப் பாடினார்.

உங்களுக்கெல்லாம் 60 ஆனால் தான் பொண்டாட்டிங்கற ஜீவனைப் பத்தி அக்கறையே வரது.
அதுவரை, ஃபாக்டரி, ஆஃபிஸ்  என்று டென்ஷன்.
இங்க ஃபோன் இல்லை. இல்லாவிட்டால் எத்தனை ஃபோன் வரும்.
என்று அலுத்துக் கொண்டார் லக்ஷ்மி.
 மனைவி அமைவதெல்லாம் என்று பாட்டு திடிரெனக் கேட்க
எங்கே என்று பார்த்த நாணா, வாசு கையில் இருந்த டேப் ரெகார்டரைப் பார்த்தார்.

சார் இனிக் கவலை இல்லை. சீட்டு விளையாடுவீர்களா என்று கேட்டார்.
 ஓ அது இல்லாமலியா. நானும் இவளும் விளையாடி நாளாச்சு.
இந்த நாளும் இனிய நாள் தான். இதோ  இட்லிப் பூவை
உள்ளே தள்ளலாம் வாங்கோ என்று சம்பிரமமாக உட்கார்ந்த கணவரைப்
பெருமையுடன் பார்த்தார் வஞ்சுமா. எப்படி எளிதாக எல்லோரிடமும் ஒன்றி விடுகிறார்
என்ற் எண்ணம் ஓட,
தன் அப்பாவும் இவரும் கடைசிவரை அத்தியந்த தோழர்களாக இருந்தது நினைவுக்கு வந்தது.
மீண்டும் நாளை சந்திக்கலாம் இவர்களை.

10 comments:

ஸ்ரீராம். said...

அடடே... குழந்தை வரப்போகுதுன்னு கண்டுபிடிச்சுட்டாரே... அதான் அம்மா!

தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நட்புத் தொடரக் காத்திருக்கேன். காசிப் பயணம் இனிமையாகச் செல்கிறது.

கோமதி அரசு said...

//உங்களுக்கெல்லாம் 60 ஆனால் தான் பொண்டாட்டிங்கற ஜீவனைப் பத்தி அக்கறையே வரது.//

உண்மை. வேலை வேலை என்று ஓடி கொண்டு இருப்பார்கள் முன்பு என்ன செய்வது?

அன்பும், நட்பும் பயணத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.
சாப்பாடு முடிந்தால் சீட்டுக்கச்சேரி.

நானும் என் கணவரும் , சீட்டு, கேரம் போர்டு எல்லாம் விளையாடுவோம் முன்பு எவ்வளவு நேரம் முன்பு இருந்தது! இப்போது நிறைய பொழுதுகள் களவாடப்படுகிறது பலவகையில்.

கோமதி அரசு said...

தாய் அறியாத சூலா! என்ற பழமொழி நினைவுக்கு வருது.
தாய் மகளை பற்றி சொன்னதை படிக்கும் போது.

வெங்கட் நாகராஜ் said...

இனியதோர் நட்பு. இப்பொழுது இப்படியான நட்புறவு ரொம்பவே குறைவு.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், அம்மாக்கள் எப்பவும் கண்டு பிடித்து விடுவார்கள். அதுவும் எங்க அம்மாக்குத் தெரியாம என் வாழ்க்கையில் ஏதும் நடக்காது. தாய்மையின் மகிமை.

வல்லிசிம்ஹன் said...

பொறுமையாகப் படிப்பதற்கு மிக நன்றி கீதா. நாளை
காசிக்கு வந்துவிடுவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி எவ்வளவு உண்மையான வார்த்தைகள். கணினியும்,
தொலைக்காட்சியும், முகனூல் வாட்ஸாப் எல்லாமே
கையிலிருந்து கழன்றால் தான்
இனிப் பொழுதுகள் இனிக்கும்.
காலம் வெகுவாக மாறிவிட்டது. சமைப்பது சுலபமாகிவிட்டது.
நம் தலைமுறையோடு பழைய விளையாட்டுகள் குறைந்து விட்டன.
குழந்தைகளுக்கோ நேரம் என்பதே கைக்கு எட்டவில்லை.
அந்த வகுப்பு இந்த வகுப்பு.
நாமும் மாறுகிறோம். எப்படி இருந்தாலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக
இருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். தாய் அறியாமல் எதுவுமே நடக்காது. அவர்களும் சுலபமாக நம்மிடமிருந்து
விஷயங்களை அறிந்து விடுவார்கள்.
நமக்கும் வேறு யார் இருந்தார்கள் சொல்லிக் கொள்ள.
நன்றி கோமதி.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் அறியாத பயணங்களா வெங்கட்..
வாழ்க்கையைப் போலவே வழித்துணை பயணங்களில் அமைவதும் ஒரு
நல்ல கொடுப்பினை.