Blog Archive

Sunday, March 25, 2018

மாசி மாதமும் கைத்தொழில்களும் 10

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஜயம்மாவும் கீதுவும் லஸ் வீட்டில் நுழையும் போது, பாட்டியும் அவரது மருமகளும் வரவேற்றார்கள்.
மழை வருமோ  என்று நினைத்தேன். கரண்ட் போயிடுத்துன்னால் கிச்சனில் கண்ணே தெரியாது
என்றபடி பாட்டி சமயலறையை நோக்கி நகர்ந்தார். எண்பது வயதில்
பாட்டிக்கு இருக்கும் உற்சாகத்தைப் பார்த்து வியந்தபடி தொடர்ந்தனர்.

மனோரப் பணியாரம் இன்னொரு நாள் வந்து செய்ய வேண்டும் நீங்கள்.
பேத்தியை நேற்றே மாவெல்லாம் சலிக்கச் சொல்லிவிட்டேன்.
 பம்பாயிலிருந்தும், பங்களூரிலிருந்தும்
பேரன் பேத்திகள் வருகிறார்கள்.
 அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு வேண்டாம்.

நொறுக்குத் தீனி போதும்.
இதோ முறுக்கு மாவு, அரைக்கிலோ வெண்ணெய்,
சீடை உருட்டிப்போட வேஷ்டி, தட்டைக்கு ஊற வைத்த கடலைப் பருப்பு,
பெருங்காயம் ஊற வைத்த ஜலம் எல்லாம் இருக்கு.
இரண்டு ஜனதா ஸ்டவ்விலும் கெரசின் ரொப்பி வைத்து விட்டேன்.
 வாசல்ல வரவன் ரொம்ப பிகு பண்ணிண்டான். தட்டுப்பாடு வரப் போகிறதாமே
 என்றபடி நகர்ந்தார் பாட்டி. சமையல் அறையை ஒட்டி இருந்த
பூஜை அறையை எட்டிப் பார்த்து,கைகூப்பி நமஸ்காரம் செய்துவிட்டு,
இருவரும் வேலையை ஆரம்பித்தார்கள்.
பாட்டியோட நறுவிசு நமக்கெல்லாம் வருமோ என்னவோ. என்று
கேட்டுக் கொண்டே , சமையல் செய்யும் திருமலை வந்தார்.

இவர்களை விட வயதில் பெரியவர்.
பாட்டி குணுக்கு செய்து தரச் சொன்னார். நான் ஒரு பக்கமாத் தொந்த்ரவில்லாமல்
செய்து கொள்கிறேன் என்றபடி  ,அடுத்தமூலையில்
இருந்த காஸ் அடுப்பு பக்கத்தில் வைத்திருந்த,
மைதா,அரிசிமாவைக் கலந்து,
தயிர் வெண்ணெய் சேர்த்து,
பச்சை மிளகாய் ,கொத்தமல்லியுடன் மணக்க மணக்க குணுக்கு செய்த்து பாட்டியிடம் வெள்ளிக் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தார்.
அதற்குள் பாட்டியின் மருமகள்,
இப்பதான் அடையாரிலிருந்த பால் வந்தது.
இதோ சூடாகச் சாப்பிடுங்கோ என்று ஆதரவாகக் கொடுத்துவிட்டுப் போனார்.
ஏ, திருமலை அவர்களுக்குக் குணுக்கு எடுத்து வை என்று குரல் கொடுத்தார்
பாட்டி.
இருவரும் பசிக்களைப்போடு இருக்கக் கூடாது என்று அவருக்குக் கவலை.
ஜயம்மா முறுக்குகளைச் சுற்ற, கீது எண்ணெயில் பொரித்து எடுத்தார்.

பாட்டியின் மருமகள் பங்கஜம்மா ,பாட்டிக்கு வாயில் கரையும்படி
மெத்தென்று இருக்கும் முறுக்குகளைத் தனியாக வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரம் சீடை, தட்டை என்று இருவரும் விறுவிறுப்பாக
இரண்டு அடுப்பிலும் செய்து முடிக்கவும் மணி இரண்டாகவும் சரியாக இருந்தது.

பொன்னிறத்தில் வந்திருக்கும் பட்சணங்களைப் பார்த்து இருவருக்கும்
பெருமையாக இருந்தது.
Add caption
Add caption

தயாராக இருந்த பெரிய பெரிய எவர்சில்வர் சம்புடங்களில்
ஆறின தட்டைகளையும், சீடையும் ,முறுக்குகளையும்
எடுத்து வைத்தார்கள்.
ஸ்டவ்வை அணைத்து ,வேலை நடந்ததே  தெரியாமல்
சமையலறையைப் பெருக்கித் துடைத்தனர்.
 மணி இரண்டரை ஆகி இருந்தது.
அப்பாடி எத்தனை சுறுசுறுப்பா வேலை செய்து விட்டீர்கள். என்றபடி இருவரையும்
சாப்பிட அழைத்தார்.
ஜயம்மா,கீதுவுக்கும் பசியே  தெரியவில்லை.
 அவர்கள் தயங்குவதைப் பார்த்ததும், புரிகிறது.
பட்சண எண்ணெயில், உஷ்ணம் ஏறி இருக்கும்.
கொஞ்சமா நான் பட்டிருக்கிறேன். என்று பெரு மூச்சு விட்டார்.
 சரி ,உங்களுக்கு  புளியோதரையும், உருளைக் கிழங்கு கறியும்
டப்பாவில் போட்டுக் கொடுக்கிறேன்.
பசிக்கும்போது சாப்பிடுங்கள்
என்று சொல்லி,தன் மருமகளை அழைத்துச் சொன்னார்.
அந்தப் பெண்ணும் இன்னும் இரண்டு டப்பாக்களில் வாழையிலையில் பொதிந்து வைத்துக்
கொடுத்தாள்.
இதோ இந்தப் பையில் போட்டுக் கொள்ளுங்கள்
என்றவளைப் பார்த்து இருவருக்கும் தாம்பூலம் கொடும்மா
என்று உள்ளே சென்றார்.
பாட்டி தயாராக வைத்திருந்த பணத்தை,  ஒரு கவரில் வைத்துக்
கொண்டு வந்து கொடுத்தார் .
 முனியம்மாவை அழைத்து சைக்கிள் ரிக்ஷாவை அழைத்து வரச் சொன்னார்.
இருவரும் பாட்டியையும்,பங்கஜம்மாவையும் வணங்கிவிட்டு,
 ஜாதிப்பூவை எடுத்துக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினர்.
இந்த ஒன் வே வந்ததிலிருந்து சுத்தி வேறப் போக வேண்டிரிக்கு என்று
அலுத்தபடி மிதிக்க ஆரம்பித்தான்  ரிக்ஷா முருகன்.

21 comments:

ஸ்ரீராம். said...

மனோகரம்தானே மனோரம்?

ஸ்ரீராம். said...

வேலைக்குத் தயாராய் பாட்டி எவ்வளவு வேலைகள் முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்திருக்கிறார்! ஆமாம்,, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது அப்போது. அப்போது வாசலில் கொண்டு வருபவர்கள் அலட்டுவது இருக்கிறதே.....!

ஸ்ரீராம். said...

முறுக்கோ சீடையோ சுற்றியபின் கொஞ்சம் காற்றில் உலர வேண்டாமோ? அந்த கைப்பக்குவம் உள்ளவர்கள் அந்நாளில் அதிகம், இந்நாளில் குறைவு! அதாவது குடும்பங்களில் இப்படிப்பழகுவது குறைந்து விட்டது!

Geetha Sambasivam said...

எல்லாவற்றையும் கிட்டே இருந்து பார்த்தாப்போல் இருக்கு! மிக அருமை!

வல்லிசிம்ஹன் said...

கிட்ட இருந்து பார்த்தவர் தான் எழுதுகிறார் கீதா. ஹிஹி.

KILLERGEE Devakottai said...

"குணுக்கு" கேள்விப்பட்டது போலிருக்கிறது ஞாபகம் வரவில்லை அம்மா.

ராமலக்ஷ்மி said...

மிக அழகிய எழுத்து நடை. அருமையான பகிர்வு.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா என்ன ஒரு அன்பு குடும்பம் இது!! இப்படி எல்லாம் இந்த நாளில் இல்லவே இல்லை இப்படிப் பழகுவதிலிருந்து ...எதுவும்....

முறுக்கு தட்டை என்றதும் நாவில் நீர் ஊற ஆரம்பித்துவிட்டது வல்லிம்மா..நான் பெர்ஃபெக்டாகச் சுற்றாட்டாலும் ஓரளவு சுற்றுவேன் முறுக்கு. என் பாட்டி சொல்லுவார்..."கீதா மலையையே புரட்டிடுவா ஆனா முறுக்கு மட்டும் சுத்த வரவே மாட்டேங்கறா..தனக்கு சுத்த வராது வராதுன்னே நாளைக் கடத்தறா. இட்லிக்கு அரைக்கர புழுங்கரிசி மாவுல கத்துக்கோடினு மாவு கொடுத்தா கூட என்னவோ ஒரே ஒரு சுத்து சுத்திட்டு..."போம்மா எனக்கு வரவே வரமாட்டேங்கறது வராது போ" நு போயிடறா...சுத்திசுத்திப் பாத்தாத்தானே வரும்...என்று சொல்லுவது இப்போதும் காதில் விழுந்தது...உங்கள் பதிவைப் பார்த்ததும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மனோகரம் என் பிறந்தவீட்டில் கடலைமாவில் கொஞ்சம் தடியா தேங்குழல் பிழிந்து வெல்லத்தில் செய்வாங்க...இங்க சென்னையில் அரிசி மாவில் மெலிதா தேங்குழல் செய்து வெல்லத்தில்...போட்டு...பிடிப்பது...இங்க மனங்கொம்பு நு மாமியார் சொல்லுவாங்க...ரெண்டுமே நல்லாருக்கும்
எனக்கு ரொம்பப் பிடிக்கும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி முன்பு பதிவு எழுதி இருந்தேன்,.
தயிரில் மைதாமாவு, வெண்ணெய்,அரிசிமாவு,உப்பு,பெருங்காயம்,
ப.மிளகாய், கருவெப்பிலை,கொத்தமல்லி கலந்து , உருட்டிப் போட வேண்டும்.
ஒருதடவை கல்லுப்பு போட்டு செய்ததால் சமையல் செய்பவர் முகத்தில் தெறித்து விட்டது.
அதனால் அதற்கு மூஞ்சில வெடிக்கிறது ந்னு நாமகரணம் செய்தார் பாட்டி..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நலமா அம்மா. பக்கத்துத் தெருவில்
இருந்தவர்களின் கதை.நீங்கள் ரசித்தது
எனக்குப் பிடித்திருக்கிறது.

கோமதி அரசு said...

அந்தக்கால உபசரிப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு பட்சணம் செய்து கொடுப்பது, எல்லாம் அருமையாக சொன்னீர்கள்.

அப்போது உள்ள கால நிலை
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு எல்லாம் சொன்னீர்கள் நினைவாய்.
நான் ஜனதா ஸ்ட்வில் டீசல் வாங்கி ஊற்றி அதில் உப்பு போட்டு அடுப்பு எரித்து சமையல் செய்து இருக்கிறேன். 1974ல்.(திருவெண்காட்டில் இருக்கும் போது)
அது நினைவுக்கு வருது.
எழுத்து அப்படியே கட்டி போடுகிறது அன்பில்.

வல்லிசிம்ஹன் said...


நல்ல பண்பட்ட குடும்பம் இப்படித்தான் இருக்கணும். என் மாமியாரும் ,பாட்டியும்
சுற்றத்தாரை பேணுவதில் சிறந்தவர்கள்..

மனோகரம்னு அம்மா வீட்டில் பெயர். தடியா இருக்கும்.
இங்கே பணியாரம் என்று சொல்வார்கள்.
ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும்.

அம்மாவின் அம்மா,அம்மா எல்லோரும் பிரமாதமாக முறுக்கு சுற்றுவார்கள். நான் ருசித்ததோடு சரி. அவர்களுக்குப் பிறகு க்ராண்ட் வந்துவிட்டது.
தட்டைதான் ரொம்ப ஃபேவரைட்.

எங்கள் வீட்டில் ஒரு பணியாள் இருந்தார் பலராம்னு. சைக்கிள் ஓட்டத் த்ரியாதுன்னு எங்கயும் போக மாட்டார்.
அவ்வளவு வேலைகளையும் செய்யணுமே.
மூறுக்கு கற்காததற்கு இதுவும் ஒரு காரணம்.
நன்றி கண்ணா.

ஜீவி said...

//கொஞ்சமா நான் பட்டிருக்கிறேன். என்று பெரு மூச்சு விட்டார்.//

இந்த ஒற்றை வரியில் ஒரு பெரிய சரித்திரமே உள்ளடங்கியிருப்பது தெரிந்தது. மிகவும் ரசித்தேன்.

டப்பாவில் போட்டுக் கொடுத்ததும் சரி. அந்த வீட்டுக் குழந்தைகளுக்காகும்.

அவரவருக்கு அவரவர் கவலை. ரிக்ஷா முருகனுக்கு அவன் கவலை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனோரப் பணியாரம்...இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

Thenammai Lakshmanan said...

பலகாரம் எல்லாம் ரொம்ப டேஸ்ட் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜீவி சார். ஆமாம். என் மாமியார்.
செய்யாத வேலையே இல்லை. பாட்டி ரொம்ப கெடுபிடி. சம்சாரமோ பெரிசு.
தோசை அடுப்பின் கீழ் உட்கார்ந்தால் 60,70 என்று எண்ணிக்கை கூடும்.
சப்பாத்தி செய்தாலும் இதே கூத்து.
இத்தனைக்கும் சமையலுக்கு ஆள் இருப்பார்.

இதெல்லாம் மேல்படி வேலை என்று அவர் ஒதுங்கி விடுவார்.
40 வருஷத்துக்கு முந்திய கதை.
நல்ல உணர்வு பூர்வமாகச் சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

இப்போது மாதிரி ப்ளாஸ்டிக் அப்ப கிடையாது.
எல்லா வீட்டுக்கும் எவெர்சில்வர் டப்பாக்கள் பறந்து கொண்டே இருக்கும்.
ஆசாரமானவர்களுக்கு பட்டுத்துணி சுற்றி,கூடையில் போகும்.

ரிக்ஷா முருகன் இன்னும் இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நன்றி ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

மனோகரம் என்பதே மனோரம் ஆகிவிட்டது, திரு
ஜம்புலிங்கம் ஐய்யா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் தேனம்மா. நன்றி டா.