Blog Archive

Saturday, March 17, 2018

மாசி மாத வற்றல் கோலாஹலம். 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்கு முன்னால்
கீதூவும், ஜெயம்மாவும் மாடிக்குச் சென்று விட்டார்கள் .
பின்னாலேயே   சீனுவும்  மாதுவும் ஒவ்வொரு அண்டாவாக எடுத்து வந்தார்கள்.
மாசிக்காற்று  இதமாக வீசிக்கொண்டிருந்தது.
 காதில் காற்றுப் போய்விடப் போகிறது , பிறகு சளித்தொல்லை  வந்துவிடும் என்றவாறு
சீனு கீழே   சென்று  மப்ளர் எடுத்து வந்து கொடுத்தார்.
ஜெயம்மாவும் தலை கழுத்தைச் சுற்றிப்  போட்டுக் கொண்டார்.
இந்த தம்பதிகளின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்தாள்  கீது.

கூழ் நன்றாக வந்திருக்கு மன்னி, நேற்றே சாப்பிட்டுப் பார்த்தேன்
என்ற நாத்தனாரை வாஞ்சையுடன் பார்த்தாள். ஜயம்மா. நன்றாக இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள் அம்மா.
 இந்தக் கூழையும் சாப்பிட்டுச் சொல் என்று கேட்டுக் கொண்டார்.
சூரியன் மேலே வரும் நேரம் ஜவ்வரிசிக் கூழ்  முடிந்து விட்டது.
நாலைந்து கிலோ வத்தல் தேறுமா என்றுக் கணக்குப் போட்டார்
சீனு. கட்டாயம் ஆறு கிலோ வரும் கணக்கு அதுதானே என்ற ஜயம்மா

அடுத்த பாயை விரித்து ஓமப்பொடி வடாம் பிழிய ஆரம்பித்தார்.
இன்னோரு அச்சை எடுத்துக் கொண்டு
நாடா வத்தல் பிழிய ரெடியானாள் கீது.
மாமி வரலாமா என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்த ஜயம்மா முன்னால் சூடான
காப்பி ,ஒரு சொம்பு கொண்டு வைத்தார்கள் செங்கமலமும் வேதாவும்.

என்ன அருமையான குழந்தைகள் என்று வியந்தபடி எப்போ வந்தேள்
குழந்தைகளா என்று வரவேற்றாள்.
 மாமா கீழே  வந்த போதே, நாங்கள் வந்துவிட்டோம்.
அப்பா கொண்டு வந்து விட்டார்.  அம்மா தேங்காய்த் தொகயல்
அரைத்துக் கொடுத்தா. அதையும் கொண்டு வந்தோம்.
கூட்டும், குழம்பும் பண்ணியாச்சு.
 சாதம் எவ்வளவு வைக்கணும்னு நினைத்த போது பால் வந்தது.

உங்களைக் கேட்காமல் காப்பி போட்டுவிட்டோம் என்ற பெரிய பெண்ணைப் பார்த்து அகமகிழ்ந்து போனாள் ஜயம்மா.
நீங்க காப்பி எடுத்துக் கொண்டீர்களா என்றாதும்,
 நாங்கள் கீழே போய்ச் சாப்பிடுகிறோம். நீங்கள் அளவு
மட்டும் சொல்லுங்கள் என்றது சின்னப் பெண்.
 நீங்களும் மாமாவும் மாது வும் தான். மூணு டம்ப்ளர் அரிசி எடுத்துக் கொண்டு குக்கர் வைத்துவிடுங்கள். இன்னும்  ஒரு மணி நேர வேலை இங்கே இருக்கு.
அதற்குப் பின் நீங்கள் மேலே காவலுக்கு வரலாம்.
என்றபடி களைப்புதீரக் காபி குடித்தார்கள் அனைவரும்.
 ரேடியோல மழை பற்றிச் சொன்னார்களா என்று சீனுவை விசாரித்தார்.

இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யலாம் என்றார் அவர்.
 அப்போ கட்டாயம் மழை வராது. நிம்மதி என்றபடி வேலையைத் தொடர்ந்தார்கள்.
9 மணி ஆகும் நேரம்  நான்கு பாய்களும் இரண்டு வேட்டீகளும்   வடாம்,வத்தல்களால் நிரம்பின.
 முதுகை நிமிர்த்தி சுவற்றின் மீது சாய்ந்து கொண்ட ஜயம்மாவைக் கவலையோடு பார்த்தார் சீனு.
ஏம்மா அங்க வேற போகணுமே, என்றவரைப் பார்த்து ஜயம்மா இன்னும் ஒரு மணி நேரம்
 இருக்கு. ஒரு டிபன் பண்ணி சாப்பிட்டுவிட்டுப் போகிறொம்.
கொஞ்சம் படுத்துக் கொண்டால் களைப்புத் தெரியாது என்று எழுந்துவிட்டார்.

மாது மாடியில் இருக்க ,மூவரும் கீழே வந்தனர்.
 பொண்களா உட்கார்ந்து கொள்ளுங்கள்.
நாங்கள் உப்புமா செய்து கொள்கிறோம்.
நீங்களும் சாப்பிட்டுவிட்டு மாடிக்குப் போகலாம் என்றார்.
தொடரலாம் நாமும்.

13 comments:

Geetha Sambasivam said...

ஒரு கிலோ அரிசியில் வடாம் பிழியவே இப்போல்லாம் நாக்குத் தள்ளுகிறது. இத்தனை வடாம் எப்படித் தான் போட்டார்களோ! அந்தக் கால மனிதர்களுக்கு ஈடு இல்லை!

ஸ்ரீராம். said...

// இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யலாம் என்றார் அவர்.
அப்போ கட்டாயம் மழை வராது. நிம்மதி என்றபடி வேலையைத் தொடர்ந்தார்கள்.//

ஹா.... ஹா... ஹா....

என்ன ஒரு கூட்டு முயற்சி! மெகா வடாம் பிழியும் வைபவம்!

Nagendra Bharathi said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், கீதா மா. ரொம்பவே மதிக்கிறேன் அவர்களை.
அந்த சீனு மாமாவும் நல்ல வலுவான மனிதர்.மாதுவும் இளைஞன்.
பொறுமை விடா முயற்சி.
எங்கள் வீட்டில் மொட்டை மாடிக்கு மூன்று மாடி ஏறணும் .
மாமியார்களின் உழைப்பைப் பார்த்து மலைத்திருக்கிறேன். ஆஜிப் பாட்டியும் அவ்வப்போது பார்வையிட வருவார். அது 1967 இல். அந்த ருசியை இன்னும் மறக்க முடியவில்லை. இதிலே ஆசாரம் வேற.
அந்த வீட்டில் பெண்களுக்கு உழைப்பு ஜாஸ்தி. ஆடவர்கள் அவ்வளவு சிரமப் பட்டதாகத் தெரியவில்லை. இவ்வளவும் முடித்துவிட்டு, சாயந்திரம் வீனஸ் காலனி ,உபன்யாசத்துக்கும் போய் வருவார்கள். ஆள் கட்டு இருந்தது. நல்ல ஊட்டமான சாப்பாடு.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். நான் மாமியார் எல்லோரும்
வானொலி கேட்போம். மா நில செய்திகள் ,கேட்டு,
தெங்கச்சி சுவாமினாதன் உரை கேட்டுவிட்டுத்தான் மாமியார் குளிக்கப் போவார்.

அப்போது ரமணன் கிடையாதே. இது ஒரு நித்திய ஜோக். அனால் புயல் வரும் நேரம்
திகில் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வணக்கம் நாகெந்திர பாரதி. கருத்துக்கு மிக நன்றி மா.

நெல்லைத் தமிழன் said...

இப்போல்லாம் அந்த உழைப்பு, வாஞ்சை போன்றவை நிச்சயம் மிஸ்ஸிங். 50 ரூ கொடு, ஒரு அப்பளாக்கட்டை வாங்கு, 50 ரூ ஒரு வடாம் பாக்கெட் என்று, உணர்வுபூர்வமாவும் கூட்டாகவும் செய்தவை, இப்போ வெறும் பொருள் என்ற நிலைக்கு வந்துடுத்து.அதாவது, ருசியை மீறி, அந்த வடாம் மீதான மதிப்பு குறைகிறது. உங்கள் அனுபவங்களைப் படிக்கும்போது அதுதான் மனதில் தோன்றுகிறது.

எங்க பெரியம்மா, அப்பளாம் ஆசாரமா இடுவா. நான் சின்ன வயசுல ரொம்ப வம்பு. அதனால, விழுப்பு உடை போட்டுண்டிருக்கும்போதே, அப்பளாத்துல கை வைப்பேன். குழவில அடி விழும், தொட்ட அப்பளாம் தள்ளி வச்சுடுவா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத் தமிழன்.
அன்று எதிலுமே சுத்தம் பேணப்பட்டது. இப்போது மணத்தக்காளி, சுண்டைக்கயில் கல் அகப்படுகிறது.
பெரியவர்களுக்குக் குடும்பமே பிரதானம்.
அக்கறை சேர்த்துச் செய்த அப்பளமோ, வடகமோ
அந்த ருசியோடயே நம்மை வந்து சேரும்.
நாம் கொடுத்துவைத்தவர்கள் இந்தக் குழந்தைகளுக்குச் செய்து கொடுக்க முடியவில்லையே என்று வருத்தமாகத் தான் இருக்கிறது.
நானும் பாட்டியைச் சுற்றிக் கொன்டே இருப்பேன்.
எங்களுக்கு என்று அப்பளம் இடும்போது உருண்டைகள் கொடுத்து
விடுவார்.

KILLERGEE Devakottai said...

இன்று எல்லாமே கடையில் வாங்கும் பழக்கமாகி விட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

உழைப்பு உழைப்பு!!!! என் பிறந்த வீட்டு நினைப்பும், நான் கல்யாணமான புதிதில் மாமியாருடன் சேர்ந்து போட்ட வத்தல் வடாம் நினைப்பும் வந்தது. ஒரு வாரத்திற்கும் மேல் போடுவோம் இங்கு சென்னையில். நான் தனியாக திருவனந்தபுரத்தில் அப்போது இருந்ததால் அங்கு போட்டுவிடுவேன்...ரொம்ப ஸ்வாரஸ்யமாக எழுதறீங்க வல்லிம்மா...

// இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யலாம் என்றார் அவர்.
அப்போ கட்டாயம் மழை வராது. நிம்மதி என்றபடி வேலையைத் தொடர்ந்தார்கள்.//

ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்...இப்போதும் சொல்லுவதுண்டு....ரொம்ப ஸ்வாரஸ்யம்....அனுபவம்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தேவகோட்டையாரே,
அம்மா, அப்பா தவிர எல்லாம் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, சலிக்காமல் தொடருகிறீர்கள். கோவிலுக்குப் போய் வந்து தொடருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
ஒரு வாரம் போடுவீர்களா. அப்பாடி .பெரிய முயற்சி மா அது.
நான் இரண்டு நாட்கள் தான் போடுவேன்.

ஒருத்தியாக மேலே கொண்டு போய்,
எல்லாம் செய்ய வேன்டூம்.
நடுவில் இந்தப் பசங்களும், கணவரும் ,
பாதிக்கு மேலே காலி செய்துவிடுவார்கள்.ஹாஹா.