
எல்லோரும்
  
இனிதாக வாழ வேண்டும்
வலைப்பூவில் எழுத்துக்களை பதிவதால்
மனா பாரம் குறைக்கிறதென்று நினைத்தேன். பல நல்ல இதயங்களை நோகடிக்கிறேன் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்கிறேன்.
துன்பம் என்பது யாருக்கு இல்லை.
மரணத்தை விடக் கொடிய   வியாதிகளில் துன்புறுபவர்களை , எத்தனையோ நபர்களை சென்னையில் தங்கி இருக்கும் போது பார்த்தேன்.
முக்கியமாக முதியவர்கள்.
முன்னெல்லாம் இல்லாத அளவுக்கு ,வயது கூடிக் கொண்டே போகிறது.
எண்பதுகளில் 90 களில்  இருந்த அளவு கட்டுக்கோப்பான குடும்பங்கள் இல்லை.
எங்கள் தெருவிலேயே  என்னைவிட வயதான பெண்மணிகள்  ஓரளவு சமாளித்துக் கொள்ளுகிறார்கள்.
ஆண்கள் அந்த அளவிற்கு மனவலிமை கொண்டது   போலத்  தோன்றவில்லை.
என் கணவரின் சிறுவயதுத் தோழர், பிரமாதமாகக் கிரிக்கெட் விளையாடுபவர்,  அறுபது வருடங்கள்  தாம்பத்தியத்திற்குப் பிறகு மனைவியை இழந்த அதிர்ச்சியில்    மனம் பிறழ்ந்திருக்கிறார்.
வழக்கமாக  நடக்கும் விஷயம் இல்லை இது. எல்லாக் குடும்பத்தைப் போல இவரது மகன் மக்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில்.
தந்தைக்கு வேண்டும் அளவு வசதி செய்து விட்டு
தம் தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.  மனைவி யைப் பிரிந்த வருத்தத்திலு ம்  அக்கம் பக்க  விஷயங்களில் மிக அக்கறை காட்டி, அன்றாட வேலைகளைக் கவனித்து வந்தவர்க்குத் திடீர்  என்று மன அழுத்த நோய் வந்து விட்டது.
நான் முன்பெல்லாம் அவரும் மனைவியும் அழகாக  அனுமன் கோவிலுக்குப் போவதையும், மாலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடை  பயிற்சி  மேற்கொள்ளுவதையும் இவரிடம் சொல்லி காட்டுவேன்.
அட எவன் மா நடப்பான் அங்க. எல்லாம் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்று சிரிப்பார் சிங்கம்.
இந்த தடவை அவரைக் காணாததால் பால் கொண்டு வருபவரிடம் விசாரித்தேன்  அய்யா எல்லாத்தையும் மறந்து போயிடறாருமா. மகன் வந்து வைத்தியம் செய்தார். இப்ப தூக்க மாத்திரை கொடுக்கிறாங்க.
காலையில் எழுந்து  முகம் கழுவி பலகாரம் அருந்திவிட்டு, மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கப் போய்விடுகிறார்.
         இன்னும்  கொஞ்ச  நாட்களில்  நகருக்கு வெளியே இருக்கிற   முதியோர் இல்லத்துக்கு  அழைத்துப் போகிறார்கள். என்று வருத்தத்துடன் சொன்னார்.
          வயதானாலும் மிகச் சுறு சுறுப்பாக இயங்குபவர்களையும் பார்த்தேன்.  நடந்து சென்று வேலை முடித்தவர்கள் இப்பொழுது வண்டியில் சென்று அதே உத்ஸாகத்துடன்   வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
                                யாருக்கு  என்ன என்று யாரோ எழுதி வைத்த விதிப்படி நடக்கிறது.  மனமகிழ்ச்சி இருந்தால்  வாழ்வும் மகிழ்ச்சிதான்.  எல்லா வசதியும் இருந்தும்  துணை இழந்தவர்கள் முடங்குகிறார்கள்.  துணை மறைந்தாலும் ஆட்டோவிலாவது எரிக் கபாலி தரிசனம் செய்யும் வாசுமதி அம்மாவும் இருக்கிறார்கள் 😊