|
அப்பா,அம்மா,பையன்,வரப்போகும் பெண் |
|
Add caption |
|
Add caption |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
|
பாதை இங்கே பயணம் இங்கே. புது வீட்டுக்குச் சென்று பால் காய்ச்சி அக்கம் பக்கம் பழகி,அருமையான பெண் ஒன்றும் உதவிக்குக் கிடைத்தாள். சரஸ்வதி என்று பெயர். கொஞ்சம் ஊனம். மனசில் இல்லை., எப்பொழுதும் சிரித்தவண்ணம் முகம். 12 வயதில் பொறுப்பாகப் பாபுவைப் பார்த்துக் கொள்வாள். காலையில் வந்து பாத்திரங்கள் தேய்த்துக் கொடுத்து க் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே மணலில் உட்கார்ந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவாள்.
காய்கறி வாங்கிவருவது நல்ல தண்ணீர் பிடித்துத் தருவது.நான் வேண்டாம் என்றாலும் தன் ஆயா கடையிலிருந்து சுடசுட இட்லி வாங்கிவருவது என்று அதிசய ராதையாக இருந்தாள். இப்பொழுது வெளியே இட்லி வாங்க என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது இல்லையா.. மீண்டும் அதே கதைதான். 40 நாட்கள் ஆனபிறகே விழித்துக் கொண்டேன். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அழுகைதான் வந்தது.. பாபுவைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போத வில்லை. எல்லாவற்றுக்கும் பிடிவாதம். இவரோ மதியம் சாப்பாடு கூட வெளியில் சாப்பிட மாட்டார்.. முடிந்தால் இன்னும் யாராவது கூட வருவார்கள்.. வேலைக்கு நடுவிலே இப்படித் தூக்கம் வருகிறதே என்று கோபம்தான் வந்தது.. பக்கத்துவீட்டு மிஸஸ் நாயரிடம் கேட்டால், மோளே,,, சத்தில்லா த்ரேகம். அனந்தன் டாகடரைப் பார்க்காம் என்றார்.
சரிதான் என்று கிளம்பும்போதே வாசலில் தயிர்க்கார அம்மா வந்தார். மோரு குடிச்சுட்டுப் போ அம்மணின்னு மண்சட்டி மோரை நீட்டினார். அதைப் பார்த்து வந்ததே ஒரு கலக்கம். ஓடினேன் பின்புறம். காலையில் சாப்பிட்டதெல்லம் வெளியே வந்தது. நாயர்ம்மா வந்து தலையைப் பிடித்துக் கொண்டார்..ரேவதி ஒரு சம்சயமாணு என்றதும். நானும் தலையை ஆட்டினேன். பிறகு டாகடரும் அதை உறுதி செய்தார். கூடவே ரத்த சோகைக்கு ஒரு மருந்தும் மாதா மாத விசிட்டுக்கு ஒரு புத்திமதியும் சொல்லி அனுப்பினார். மிஸஸ் நாயரிடம் இன்னும்கொஞ்சம் நாட்கள் போயிருக்கலாமே. சிறு பையன். வேணுமானால் வேறு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டார். நல்லவர்தான். இருந்தும் எனக்கு மகாக் கோபம் வந்தது... அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நான் சமாளிப்பேன் என்று விட்டு20 ரூபாய் டாக்டர் ஃபீஸையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்... அக்கா, பாபுக்குத் தங்கச்சி வரப் போவுதா என்று சரஸ்வதி வேறு ஆட்டம். எனக்கோ எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்ற யோசனை.
சிங்கம் சீக்கிரம் வந்தால் தேவலை. கோபத்தைக் காட்ட ஆசாமி தேவை. மாமியாரிடம் சொல்லணும். அம்மாவிடம் சொல்லணும். இப்பதானே அனுப்பி வைத்தார்கள். அதற்குள் இன்னோண்ணாஆஆஆஆஆ. என்று யாரும் சொல்லப் போவதில்லை. எனக்கு நானே சட்டாம்பிள்ளை. பேஸ்தடித்துப் போய் உட்கார்ந்திருந்த என்னிடம் சச்சு,நான் வேணா சமைச்சுத் தரட்டுமாமான்னு கேட்கீறது. இல்லைடா ,அக்கா பார்த்துக்கறேன்னு ,எழுந்து உ கிழங்கு ரசம் செய்துவிட்டுப் படுத்தவள் தான். என்னைக் கட்டிக் கொண்டு குழந்தையும் தூங்கிவிட்டது. சிங்கம் வரும் வரை சச்சு காவல். குழந்தையின் பசி அழுகை எழுப்ப அதற்கு பருப்புமம்மம் துளி உப்பு போட்டு உ.கிழங்கும் மசித்துக் கொடுத்தேன்.
வந்தாரையா மன்னன். எதிர் நீச்சல் போணும் போணும்னு சொன்னியே. ஞாயிற்றுக் கிழமை போலாமா. முதல்ல சாப்பாடு. வாடா பாபு டாடிக்குக் கம்பெனி கொடு என்று தூக்கிவைத்துக் கொண்டார். பதில் பேசாமல் தட்டை வைத்து சாதம்,மற்ற பதார்த்தங்களை வைத்துவிட்டு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னய்யா ஒரே டல்லா இருக்கே. சாப்பிடு நீயும் என்று சொன்னார். ரசத்தின் பூண்டும் என்னைக் கலக்க உடனே எழுந்துவிட்டேன். அவர் சாப்பிட்டு முடித்ததும் சேதி சொல்லலாம் என்று. பேசாமல் இருந்தேன். இந்தா அம்மா லெட்டர். இப்ப செப்டம்பரா. நவம்பர்ல 11 ஆம் தேதி இவனுக்கு ஆண்டுநிறைவு,ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய்யணும். புது சட்டை,பட்டு வேஷ்டி எல்லாம் வாங்கணும் இரண்டு நாட்கள் முன்னாலயெ வந்து ஏற்பாடு செய்யச் சொல்லி அம்மா எழுதி இருக்கிறார் என்று கொடுத்தார்.. இன்னோரு கடிதம் என் அம்மாவிடமிருந்து. குழந்தை தேறினானா. நீ சரியாச் சாப்பிடுகிறாயா. லேகியம் மறக்காதே. குழந்தையைப் பார்த்து நாலு மாசம் ஆகிறது. ராமேஸ்வரத்துக்கு ஒரு நடை வரலாமே. என்று ராமேஸ்வரம் கோவில், பிரம்மாண்டமான ஆடி வெள்ளித்தேர்க் கொண்டாட்டங்கள், ரங்கனின் தமிழ் மீடியக் கஷ்டங்கள்,அப்பாவின் வேலைப் பளு, அந்ததீவின் அழகு என்று ஆயிரம் சமாச்சாரங்கள்.
நாம் முதலில் ராமேஸ்வரம் போகலாம். பிறகு சென்னைக்கு டிக்கெட் பதிவு செய்கிறேன் என்று விட்டு. டேக் கேர் மா. ஹேவ் அ குட் ஸ்லீப். மா. யூ டு நாட் லுக் ஓகே என்று ஓடிவிட்டார். அந்த க்ஷணம் உலகில் அத்தனை பேரையும் வெறுத்தேன்:))))
வழக்கம்போல வேலைகள் நடந்தன. இரண்டு நாட்கள் பொறுத்தே விஷயத்தைச் சொன்னேன். அசரவில்லையே. மோர் த மெர்ரியர். கங்க்ராட்ஸ் மா. ஒரு ஆறு குழந்தைகள் நமக்கு வேண்டும் என்றார்.. இப்ப யாரு கிட்டயும் சொல்லவேண்டாம். நவம்பருக்கு அப்புறம் சொல்லலாம். ஐ டு நாட் வாந்ட் எனிபடி டு டாக் அபவுட் திஸ் என்று விட்டார். பெரிய பாரம் இறங்கிவிட்டது. இவரே பொறுப்பு எடுத்துக் கொண்டால் எனக்கென்ன கவலை என்று ராமேஸ்வரம் ஏற்பாடுகளில் இறங்கினோம். நாங்கள் இராமேஸ்வரம் போய் வந்த கதை
http://naachiyaar.blogspot.com/2014/05/6-1967.html இந்த லின்கில் இருக்கிறது:)
அக்டோபர் வந்து பறந்தது. உயரமும் ஒல்லியான உடம்பும் என் ரகசியத்தைக் காண்பித்துக் கொடுக்கவில்லை.............சென்னைக்குக் கிளம்பும் நாளும் வந்தது. வழ்க்கம் போலப் பால்பவுடர், குழந்தையின் துணிகள்,வெந்நீர் என்று ஒரு பெட்டி. குழந்தையின் புதுத்துணிகள் எங்களுக்கான ஒருவார உடைகள். ஒரு நல்ல ஒபட்டுப்புடவை ,வேஷ்டி என்று ரயிலடிக்கு வந்தாச்சு. கடைசி நிமிடம் வரை வொர்க்ஷாப் வேலை. அவசமாக வண்டியில் ஏறும்போது எங்கள் பெட்டீ ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கிவிட்டது. ஆவர் ஒரு பக்கம் நானும் குழந்தையும் ஒருபக்க.ம். போர்ட்டர் வைப்பதில் நம்பிக்கை இல்லாத சாமி என் சாமி. விடை. குழந்தையுடைய தேவையான பொருட்கள் மட்டும் வண்டியில் ஏற அடுத்த நாள் உடுத்த வேண்டிய புடவை கூட இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தோம்:))))) |
18 comments:
அழகான அனுபவப் பகிர்வு.
அடடா. பெட்டி பிளாட்ஃபார்மில் தங்கி விட்டதா:)?
ஆமாம் ராமலக்ஷ்மி. பிறகு கிடைத்தும் விட்டது. நடுவில் அசட்டுப் பட்டம் கிடைக்க என் தலையெழுத்து:)))
உங்களின் சங்கடங்கள் எனக்குப் புரிகிறது. அனுபவங்களைத் தயங்காமல்
எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
நன்றி ராஜலக்ஷ்மி. இப்போது இது பழங்கதை.அதனால் சங்கடத்துக்கு இடம் இல்லை. ஒரு lighter vein story.Anyway any mom would have gone through this. நான் அதிகமாக எழுதுகிறேன் என்றால் சொல்லவும். சென்சார் போட்டுவிடுகிறேன்.:))
சுவாரஸ்யமான இனிய நினைவுகள் அம்மா...
//கோபத்தைக் காட்ட ஆசாமி தேவை//
:))))
பிந்தைய பதிவு முன்னாலேயும் முந்தைய பதிவும் பின்னாலும் வருகிறதா? ஓகே ஓகே!
எதிர்நீச்சல் படம் வந்தப்போ சேலத்திலே இருந்தீங்களா?
நான்அப்போச் சென்னை வந்திருந்தேன். மவுன்ட்ரோடில் ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியா பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு தியேட்டரில் எதிர்நீச்சல் படம் பார்த்தேன். நானும் என் சித்தியோட நாத்தனாருமாகப்பார்த்தோம். :))))
மறக்க முடியாத நினைவுகள் அந்த அந்த நேர எண்ண அலைகளை நினைவாய் சொல்வது அருமை.
பெட்டியை விட்டு விட்டு ஏறிய பின் கிடைத்து விட்டதா? மகிழ்ச்சி.
என் திருமணசமயத்தில் திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் ராமேஸ்வரம் போகிறேன் என்று கிளம்பி பஸ்ஸில் ஏறும் போது பெட்டியை மறந்து விட்டுஏறி விட்டார்கள். பின் நினைவு வந்து பாதியில் திரும்பி வந்தால் கிடைக்கவில்லை பெட்டி.
ராமேஸ்வர பயணம் ரத்து ஆகி விட்டது.
இன்றும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் பட்டு வேஷ்டி, ப்ட்டுபுடவை எல்லாம் காணாமல் போன கதையை.
நன்றி தனபாலன். தவறாமல் வந்து கருத்தும் சொல்வதற்கு மிகவும் நன்றி.
வரணும் ஸ்ரீராம். முன்னாடி பின்னாடி கதையில்லை. அது சிங்கம் தொடர். இது குடும்பத் தொடர்.:)) கோபம் வரத்தான் செய்யும். யாராவது யாரையாவது கோபித்துக் கொள்ளணும் இல்லையா.
ஓ.அப்போ இன்னும் கல்யாணம் ஆகலை கீதா எதிநீச்சல் நான் மாமியாரோடு பைலட் தியேட்டரில் 1984இல் பார்த்தேன். அவ்வளவு சுறுசுறுப்பு என் குடும்பம்.>}}}
வரணும் கோமதி. பெட்டி உடனே கிடைக்கவில்லை. சென்னை போய்த் திரும்பும் போது ஸ்டேஷன் மாஸ்டரிடமிருந்து கிடைத்தது.அதுவும் கூடவந்த ஆபீஸ் பையன் அருளால்.புதிய துணிகளை பிறகு அணிந்து கொண்டோம். பாவம் பட்டுவேஷ்டி எல்லாம் தொலைந்தால் என்ன செய்வதுப்பா. அதுவும் அப்ப எல்லாம் நல்லதாகக் கிடைக்கும்.
ஆஹா..... ஆஹா.....!!!
29ரூ டாக்டர் பீஸை நினைவில் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!
ராமேஸ்வரம் ஒரு தடவையாவது போகவேண்டும்..
இப்ப ஆஹா ஆஹா>*}}}} நன்றி துளசி.
வரணும் துரை. 20 ரூபாய்தான். 29 என்று எழுதிவிட்டேன். நினைவில் எதுவும் மறப்பதில்லை. அப்பொழுது குழந்தைபிறந்து அதே மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்ததற்கே 210 ரூபாய்கள் தான் ஆச்சு. கணக்கெழுதிய நாட்கள் அவை.ராமேஸ்வரம் போய் வாருங்கள் நிறைய மாறிவிட்டது.கடல் மாறவில்லை.
மறக்க முடியாத நினைவுகள்.....
பெட்டி அப்புறம் கிடைத்துவிட்டது என உங்கள் பின்னூட்டத்தில் தெரிந்து கொண்டேன்...
பூக்களின் படங்கள் மிக அருமை. அதிலும் அந்த மஞ்சை செம்பருத்தி.....
//20 ரூபாய்தான். 29 என்று எழுதிவிட்டேன்.
!!! சரிதான்!!
Post a Comment