இரவு 6 மணி வாக்கில் அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள். மதுரைக்குப் போனால் பாட்டி அனுப்பும் சுண்டைக்காய்,முறுக்கு,மலைவாழைப்பழம் எல்லாம் கல்யாண பட்சணங்களோடு கலந்து வந்தன.
எங்கள் நலனை விசாரித்துவிட்டு அம்மா என்னிடம் பலகாரங்களைக் கொடுத்துப் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்.
நானும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனேன்.
மங்களம் மாமி அசதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். மூர்த்தி மாமா நோட் புக்கில் ஏதோ எழுதுக் கொண்டிருந்தார்.
பசங்களுக்குப் பசி நேரம்.
என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார்கள்.
அக்கா பையில என்னவோ கொண்டு வந்திருக்கா என்றபடி என்னிடமிருந்து பையை வாங்கினதும் மாமி எழுந்து உட்கார்ந்தார்.
வாடி செல்லம். அம்மா பட்சணம் கொடுத்தாரா என்றபடி உட்காரச் சொன்னார். நான் மாமி முகத்தைப் பார்த்தேன்.
ரொம்ப அழகாக இருந்த மாதிரி இருந்தது. நாளைக்கு வரேன் மாமி. ஹோம்வொர்க் முடிக்கலை என்று ஓடி வந்துவிட்டேன்..வந்தவுடன் அம்மாவிடம் புதுப் பாப்பா விஷயமும் சொல்லியாச்சு.!!
சரி சரி பெரியவா விஷயத்தில் நீ பேசக் கூடாது என்று அமர்த்திய அம்மா வேலைகளை முடிக்கப் போய்விட்டார்.
காலையும் வந்தது. நாங்களும் டிபன் டப்பாக்களையும் தோள் பைகளையும்
எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விட்டோம்.
மாலை வரும்போது வீட்டு வாசலில் பச்சை ஃபியட் கார் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
தஞ்சாவூர்ப் பெரியம்மா என்று சத்தம் போடாமல் எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டோம்.
கைகால்கள் அலம்ப முற்றத்துக்குப் போகும்போது பேச்சுக் குரல்கள் பக்கத்துவீட்டிலிருந்து கேட்டாலும் அம்மா காதைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்.
அடுத்த நாளும் ஒன்றும் தெரியவில்லை.பெரியம்மாவும் போகவில்லை.அன்று இரவு அப்பா நாங்கள் மூவரும் காற்றாட வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்தோம்.
பக்கத்துவீட்டிலும் மூர்த்திமாமாவும் பெரியப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
எங்களைப் பார்த்ததும் பெரியப்பா அப்பாவை அழைத்தார். சௌக்கியமா
என்றவாறே அப்பாவும் அங்கே போனார்.
நான் காதைத் தீட்டு முன்னரே அம்மா ஜன்னல் வழியாக மெல்லிய குரலில் உள்ளே அழைத்தாள். தூங்கணும்.உள்ளே வந்து பாய் தலகாணி எல்லாம் தட்டிப் போடுங்கொ மூணு பேரும்..
ஏமாற்றத்தோடு உள்ளே வந்தேன்.
அப்பா எப்போது வந்தாரோ தெரியாது. அடுத்த நாள் அந்த வண்டியைக் காணோம்.
ராஜாராமனும் ஜில்லுவும் மட்டும் எங்களோடு பள்ளிக்கூடம் வந்தார்கள்.
சீதா எங்கடா என்றால் ,அவன் பெரிம்மா பெரிப்பா கூடத் தஞ்சாவூர் போய்ட்டான். ஜாலி. அவனுக்கு மட்டும்.
ஸ்கூல்ல டீச்சர் கேட்டா என்னடா பண்றது.
ஊருக்குப் போயிருக்கான்னுதான் சொல்லணும்.
எனக்கு அந்தக் குட்டிப் பயலின் கையைப் பிடிக்காமல் நடப்பது என்னவோ மாதிரி இருந்தது.
சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அம்மா முகம் கூடச் சரியாக இல்லை. கேள்வியும் கேட்க முடியாது.
அம்மா பக்கத்துவீட்டுக்குப் போய்ப் பசங்களைக் கூப்பிடட்டுமா
''ட்ரேட் ''விளையாடணும் என்றான் தம்பி.
வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால் விளையாட முடியவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து ஜில்லு வந்தது. கையில் எவெர்சில்வர் டபரா,இலை போட்டு மூடி யிருந்தது.
ஆண்டா அக்கா இந்தா மருதாணி வச்சுக்கோ. பெரிம்மா நிறையக் கொண்டு வந்திருந்தா. அம்மா இப்பதான் அரைத்தாள். உன்னையும் அம்மாவையும் வைத்துக் கொள்ளச் சொன்னாள், என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது. ஓ ,கார்த்திகை மருதாணி. நன்றாகப் பத்தும் என்று அம்மா உள்ளே வைத்தாள்.
என்னம்மா ஆச்சு.பக்கத்தாத்து சீதா ஏன் ஊருக்குப் போய்ட்டான்.
என்று அம்மாவிடம் கேட்டேன்.
மங்களத்துக்குப் புதுப் பாப்பா வரப் போகிறது. இவன் ரொம்ப விஷமம்
செய்கிறான்னு பெரியம்மா கூட்டிப் போய்விட்டாள்.
அங்கயே ஸ்கூலுக்குப் போவான் .
ஜில்லி, ராஜா பாவம்மா. அவர்களுக்குக் கஷ்டமில்லையா.
நீ பேசாமல் மருதாணி இட்டுக்கப் போறியா இல்லையா.
கை கால் அசைக்காமல், வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்.
அப்பாவுக்கு அம்மா சாப்பாடு பரிமாறும்போது பேசுவது கேட்டது.
தூக்கம் வராமல் வெறித்துக் கொண்டிருந்த நானும் பெரிய தம்பியும்
கேட்டோம்.
மங்களத்தைச் சமாதானப் படுத்துவதற்குள் போறும் போறும்னு ஆகிட்டது.
குழந்தையைக் கொடுத்துட்டேனே.அவன் என்ன செய்யறானோ. ராத்திரி புடவைத் தலைப்பில் சுருண்டுண்டு தான் தூங்குவான்.
அங்கே என்ன செய்கிறானோ என்று ஒரே அழுகை புலம்பல்.
அம்மாவே அழுதுடுவாள் போல அவள் குரல் இருந்தது.
சும்மா இரும்மா. அவனாவது அங்கே நன்றாக வளரட்டும்.
நான் நாளைக்குத் தஞ்சாவூருக்குப் போன் செய்து ராமமூர்த்தியிடம் பேசறேன். சீதாராமன் என்ன செய்யறான்னு தெரியும்.
நீ நாளைக்கு மங்களத்துக் கிட்டப் பேசு.
ஆமாம் வயிற்றில குழந்தை சந்தோஷமா இருக்கணும் இவள் சரியா சாப்பிடணும்..
கிருஷ்ண மூர்த்தி சம்பாத்யத்தில் நாலு குழந்தைகளை எப்படி வளர்க்கிறது.
ஆச்சு இன்னும் மூணு மாசத்தில பாப்பா பொறந்துடும்.
ஆஸ்பத்திரிப் பிரசவம். ஒரு 100 ரூபாயாவது ஆகும்.
இவளுக்கே மருந்து ,டானிக்னு நிறைய ஆகும்.
பொறக்கப் போற குழந்தையைக் கொடுக்கலாம்னு இருந்தாளாம். அவள் ஓர்ப்படிக்குச் சின்னக் குழந்தை என்றால் பார்த்துக் கொள்ள தயக்கமாம்..
இந்தச் சீதா துறுதுறுன்னு கண்ணன் மாதிரி இருக்குனு வரும்போதேல்லாம்
சொலவாள்.
இப்படி நடக்கணும்னு தெய்வம் ஏற்பாடு செய்திருக்கே.
நம்மளோட நடவடிக்கைக்குப் பகவானைச் சொல்லாதே.
ராஜாராமன் ஆறாம் வகுப்புப் பெரிய ஸ்கூலுக்குப் போகணும். அடுத்தாப்பில
அந்த ஜில்லுக் குட்டியும் நம்ம ஆண்டாள் பள்ளிக்கூடத்தில் சேரணும்.
மாசம் 7ரூபாய் ஒரு குழந்தைக்குப் பள்ளிக்கூடத்துக்கே ஆகும்.
கொஞ்சநாள் கழித்துக் குழந்தை பிறந்ததும் மங்களம் சரியாகிவிடுவாள். கஷ்டம்தான். என்ன செய்வது. இதுதான் ஜீவனத்தின் தத்துவம்.
நீ தைரியமாக அவளுக்கு எடுத்துச் சொல்.
உன்னைவிட இரண்டு மூணு வயசு குறைந்த பெண்.
மங்களத்தோட அம்மா வரவரைக்கும் நீதான் பொறுப்பு என்று அப்பா எழுந்துவிட்டார்.
அப்பாவின் அறையில் விளக்கெரிவதைப் பார்த்து நான் மருதாணி கலையாமல் மெள்ள எழுந்து அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
அம்மா மோர்சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும் முடித்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்து
உனக்கு என்ன தெரியணும் இப்ப.
ஏன் சீதா தஞ்சாவூருக்குப் போய்விட்டான்.
ஏன் இங்க இல்லை.
பெரியம்மா வீட்டில் பாப்பாவே இல்லம்மா. பாவம் இல்லையா. அதான் கொஞ்ச நாள் தங்களாத்தில் சீதாவை வச்சுக்கப் போகிறாள்.
லீவுக்கெல்லாம் இங்க வருவான் பாரு.
அதான் புதுப் பாப்பா வரதே அதை எடுத்துண்டு போட்டுமேம்மா.
இல்லடா. புதுப்பாப்பாவுக்கு அம்மாதான் கூட இருக்கணும்.
இல்லாட்டா அதால சௌகியமா இருக்க முடியாது. சீதாராமன் வளந்துட்டானே சமத்து. அவன் சந்தோஷமா பெரியம்மாவோட இருப்பான் பாரு.
நம்ம அத்தையாத்துக் கோவிந்தா கல்யாணம் வருதே நாம் போய்த் தஞ்சாவூரில் கல்யாணத்தையும் பார்த்துவிட்டு சீதாராமனையும் பார்க்கலாமா
என்று முடித்தாள்.
நன் வந்து மீண்டும் படுத்துக் கொள்ள முயன்றபோது மூசுமூசு
என்று சத்தம் கேட்டது.
என்னவென்று பார்த்தால் எங்க சின்னவன் தான் அழுதுகொண்டிருந்தான்.
என்னடா என்று கேட்டால் , அப்போ நம்மாத்துக்கு இன்னோரு பாப்பாவந்தா என்னையும் அனுப்பிடுவாளா என்று அழ ஆரம்பித்தது.
சத்தம் கேட்டு அம்மா வந்தாள். அட அசடே நம்மாத்துல் எப்படி
இன்னோரு குழந்தை வரும் ராஜா. உனக்கே வயசாகிட்டதே.
அப்படி வந்தாலும் நீதான் நம்மாத்துச் செல்லம்,இல்லையா ஆண்டா நீ சொல்லு.
என்று என்னையும் சேர்த்துக் கொண்டாள்.
பெரியதம்பியும் சேர நாங்கள் அவனைச் சமாதானப் படுத்தினோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
15 comments:
வாழ்வின் சில ஆசீர்வாதங்கள் இவை.
ஆமாம் துரை.
பிந்நாட்களில் அம்மா அப்பாவுக்கு இந்தப் பிள்ளை நிறைய உதவிகள் செய்தான். அந்த வகையில் இரண்டு பக்கங்களுக்கும் ஆசிகள் தான்.
நெகிழ வைத்தது அம்மா...
மிக மிக நன்றி தனபாலன்.குழந்தைகள் பழகிவிடுவார்கள். பெரியவர்களுக்கு நாள் பிடிக்கும்.
மூச்சுப்பிடித்து, விட்டுப்போயிருந்த அத்தனைப் பதிவுகளையும் படித்துவிட்டேன்.
குழந்தைப் பேறுக்காக மருத்துவம் என்ற பெயரில் பல சித்திரவதைகளுக்கு ஆளாவதைவிட, இப்படிச் செய்வது நல்லதே. அந்தக் காலத்தில் இது மிக சர்வசாதாரணமாக இருந்தது.
//அப்போ நம்மாத்துக்கு இன்னோரு பாப்பாவந்தா என்னையும் அனுப்பிடுவாளா என்று அழ ஆரம்பித்தது.//
நெகிழ வைத்தது.அந்த தாய்க்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியிருக்கும்.
நல்ல வழி.
ஹுசைனம்மா.பெறுகிறவர்களுக்கு நிறைய சந்தோஷம்.
கொடுக்கும் அன்னைக்கு ஒரு சிலர் தவிரக் கொஞ்சம் சிரமம் என்றுதான் நினைக்கிறேன்.நன்றி மா. நேரம் எடுத்து எல்லாவற்றையும் படித்தீர்களா!!
ஆமாம் ஆதி, கடைசிக் குழந்தையை வேறுயாராவது அழைத்துக் கொண்டுவிடுவார்கள் என்று அவனாக யூகித்துக் கொண்டுவிட்டான்.
கிலி பிடித்துவிட்டது.பாவம்.
நெகிழ்வான பகிர்வு.
இப்போது சொந்தத்தில் எடுப்பது குறைந்து, ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க முன்வருவது அதிகரித்திருப்பதும் ஆரோக்கியமானதே.
அதுதான் சிறந்தது. இப்பொழுது அதிகம் குழந்தைகள் பெறுவதும் இல்லை.
அரசு வகையில் நல்ல சட்டங்களும் வந்திருக்கின்றன.
ஆதரவு தேவையான பிஞ்சுகளை தத்தெடுப்பது உத்தமமான வழக்கம்
படிக்கும்போது மனது நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
ராமலக்ஷ்மி கூறியது போலத்தான் பலரும் செய்கிறார்கள். நல்லசெயல்.
ஆமாம் மாதேவி.
குழந்தைகள் பொக்கிஷங்கள்.
சரியான இடத்தில் சேரவேண்டும்.நல்ல பெற்றோர்களுக்குக் கிடைக்க வேண்டிய
ஆசீர்வாதங்கள்.
ஆஹா, என்ன சொல்றது! கடைசியிலே படிச்சுட்டு மனம் நெகிழ்ந்து போச்சு.
நன்றி கீதா.திண்டுக்கல்லை விட்டு
47 வருஷங்கள் ஆச்சு. இன்னும் மறக்கவில்லை. எப்படி மறக்கும்?
நன்றி கீதா.திண்டுக்கல்லை விட்டு
47 வருஷங்கள் ஆச்சு. இன்னும் மறக்கவில்லை. எப்படி மறக்கும்?
Post a Comment