Blog Archive

Monday, November 19, 2012

பச்சை மண் 2 பிவிஆர்

Add caption

நேற்று ஒரு திருமணத்தில்   வேறெந்த நிகழ்ச்சியிலும்   கண் போகவில்லை. இந்த சுட்டிக் குழந்தைகள் செய்யும் அட்டகாசம் ,பார்க்கப் பார்க்க பரவசம்.

பச்சைமண் என்று எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்  திரு. பி வி ஆர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு  பற்றித்தான்.
நடுவில் பேரன் பேத்திகள்   இழுத்துவிட்டார்கள்:)

பச்சை மண் '' புத்தகத்தை நான் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரு பிவிஆரின்  பெண் கதாபாத்திரங்கள் எப்பவுமே  தைரிய சாலிகளும், கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பவர்களூமாய்  அதே சமய சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கதையின் நாயகனிடம் வாதிடவும்செய்வார்கள். இழைந்து போய் அவனைத் தன்வசம் இழுக்கவும்  செய்வார்கள்.
தேடிதேடிப் படிக்கப் பிடிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
இந்தப் பச்சை மண் புத்தகத்தில்  மொத்தம்  12   சிறுகதைகள்   இருக்கின்றன.
முதல் கதைதான் என்னை மிகவும் கட்டிப் போட்டது.


ஆனந்தா  நாதன் என்று  தம்பதியர்  குழந்தைக்காகக் காத்திருக்கிறார்கள்.ஆநந்தமாக  ஆரம்பித்த   திருமண வாழ்க்கை  ஒரு ஆண் குழந்தை பிறக்காத்ததால் கசக்க ஆரம்பிக்கிறது. நாதனின் பரம்பரையில்

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசு என்பது தீர்மானிக்கப் பட்ட விஷயம்.
நாதனின் அம்மாவுக்கு நாத ன்
ஒரே மகன். அவனுடைய தாத்தாவுக்கும் அவன் அப்பா ஒரே பையன்.
பெண் வாரிசுகளே கிடையாது.

நாதன் அம்மா  கசந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
ஆனந்தாவைப் பரிசோதிக்கலாம்...ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே என்று ஆரம்பிக்கிறாள்.
நாதனும் ஒத்துக் கொள்கிறான்.
சென்னையில் இல்லை. பங்களூர் பெண்வைத்தியரிடம்தான் சோதனைகள்
செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறான்.
மனைவி எவ்வளவோ எடுத்துச்  சொல்கிறாள்.
தன்குடும்பத்தில்  தாமதமாகத்தான் குழந்தைகள் பிறக்கும்.காத்திருக்கலாம் என்று எவ்வளவோ கெஞ்சியும் வலுவில் அவளை அழைத்துச் சென்று பெங்களூருவில் சோதித்து ,ஆனந்தாவிற்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்று முடிவுகள் சொல்வதாகவும்    தெரிய வருகிறது.

அவன் தன்னைச் சோதித்துக் கொண்டிருக்கலாமே என்று சவாலாக ஆனந்தா கேட்கிறாள்.

பதில் ஏதும் சொல்லாமல், அவன் தன் அலுவலகத்தில் பிஹெச் டி செய்யும் ஒரு பெண் பெயரைக் குறிப்பிட்டு அவளைத் தான் திருமணம் செய்யப் போவதாகவும்  சொல்கிறான்.

''வக்கீலைப் பார்ப்போம்
எதற்கு?
நம் பிரச்சினையைத் தீர்க்கத்தான்
எனக்குப் பிரச்சினை  இல்லை
நீ ஒபுதல் தந்தால் தான் நான் மேற்கொண்டு....
பரம்பரையை வளர்க்க முடியும்  இல்லையா? நம்ம கல்யாணம்
அக்னி சாட்சியா நடந்தது.அந்த அக்னியையே   சாட்சியா  வைச்சுண்டு  சாஸ்திரிகள்    மந்திரம் சொல்ல  நாம் விவாகரத்தை நடத்துவோம்.
உன் வேதனை எனக்குப் புரிகிறது
இது என்ன பிரிவு உபசாரப் பேச்சா.
உங்க பெரிய மூக்கு சயண்டிஸ்ட்  வலது காலை உள்ளே வைக்கும் போது  நான் இடது காலை வெளியே வைத்துப் போகணும  ஏன்?

அதனால் பிரச்சினை வளரும்.
ஆனந்தா நான் இரண்டு நாட்கள் பம்பாய் போகிறேன்.
ரெண்டு நாள் டயம் இருக்கு.
அதுக்குள்ள நான் தயாராகி 4  மனி ரயிலைப் பிடிக்கிறேன் ஊருக்கு.
ரொம்ப ஸாரி ஆனந்தா.

அவன் கிளம்பினதிலிருந்து தலைவலிக்க ஆரம்பிக்கிறது அவளுக்குகண்கள் சொருகுகின்றன.இரவு சாப்பிடப் ப்பிடிக்கவில்லை.  ஃப்ரிஜ்ஜிலிருந்து சில்லென்ற மோரைக் குடிக்கும்போதே அந்த சயடிஸ்ட் நினைவுக்கு வந்து அவளுக்கு நெஞ்செரிகிறது.
மோரிக் குடித்துப் படுத்தவளின் வயிறு குமட்டுகிறது. ஏதோ நினைவில் காலண்டரைப் பார்க்கிறாள்.
போன மாத 7 ஆம் தேதியும் இந்த மாத 22 ஆம் தேதியும் அவளுக்கு உண்மையை உணர்த்துகின்றன.
மறுநாளே  அவள் மனதின் புல்லரிப்பை  உண்மையாகினாள் லேடி டாக்டர்.


வீட்டுக்கு வந்து அனைத்துத் தெய்வங்களையும் வணங்கியவளின் மனதில் வெறி பிறக்கிறது..
தீர்மானம் செய்தவளாய்க் கணவனின் காலடி சப்தம் கேட்டு நிமிர்கிறாள்.
உடனே உள்ளே போய்த் தன் பெட்டி படுக்கையைக் கொண்டு வருகிறாள்.

அட. நான் ட்ராப் செய்யட்டுமா.
நானே போய்க் கொள்வேன்.  வரட்டுமா

ஐ யாம் ரியலி சாரி ஆனந்தா.

ஆமாம் யு வில் பி ஸாரி என்று வெறுப்பை உமிழ்கிறாள் ஆனந்தா.
என்ன சொன்னே!!

நீங்க இத்தனை நாட்களா கேட்டுக் கொண்டிருந்த பிரசாதம் கிடைத்துவிட்டது

புரியலே
உங்க பெங்களூரு டாக்டர் தப்பைச் செய்திருக்கா
அந்தப் பெரிய மூக்கு சயண்டிஸ்டிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களொ அதை அம்பாள் எனக்கு இப்பவே கொடுத்துட்டா.
சிலையாகிப் போன நாதன் அவளை நெருங்க'


எட்ட நில்லுங்க.இனி நீங்க என்னைத் தொடவேண்டிய அவசியமே இல்லை.


ஆனந்தா...
ஆமாம் ஆனந்தா நாலரை மணி வண்டில சேலம் போறா.
சரியா  ஒம்பதாவது மாதம் உங்கள் பரம்பரையின் சங்கிலித் தொடரின் வளையம் ஜனிக்கும்.
அதை ஏழு வயது வரை வளர்த்து
பிரம்மோபதேசம் செய்து உங்கள் கையில் ஒப்படைப்பேன்.
அது உங்கள் வீட்டு சாளக்ராமப் பூஜைகளைதொடரும் உங்களொடு சேர்ந்து கொண்டு.
அவன் பெரியவன்  ஆனதும் பிள்ளைக்காக இன்னோரு பெண்டாட்டியைத் தேட மாட்டான். அதற்கான உத்தரவாதத்துடன் தான் அவன் இங்கே வருவான்' என்றபடி வெளியே நடக்கிறாள் ஆனந்தா.

இந்தக் கதை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கணவனிடம் மையலாக இருந்தவள் மனம் கசந்தால் என்ன நடக்கும் என்று கருத்து தோன்றியது.
இருந்தாலும்
ஆனந்தா தன் பிள்ளையை ஏன் தியாகம் செய்யணும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது:(


புத்தகம் கங்கை புத்தக நிலையம்,
தீனதயாளு தெரு,
டி.நகரில் வாங்கினேன்.
இப்பவும் கிடைக்கலாம்விலை 35 ரூபாய்கள் மட்டுமே.

மீண்டும் இன்னோரு கதையோடு பார்க்கலாம்.
சில குறிப்புகளை மட்டுமே  கொடுத்திருக்கிறேன்.
நீங்கள் படிக்கவும் கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் இல்லையா:)






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு கதையின் முடிவே, இப்படி ஆகி விட்டதே என்று தோன்றுகிறது... நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி அம்மா...

ADHI VENKAT said...

கதை விமர்சனம் நல்லா இருக்கும்மா. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதோர் பகிர்வு வல்லிம்மா.

உங்கள் கேள்விகள்தான் இப்ப என் மனதிலும். ஆனா, அப்பா பாசமும் குழந்தைக்கு வேணும்ன்னு ஆனந்தா நினைச்சிருக்கலாம்ன்னு தேத்திக்கிட்டேன் :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.இந்தக் கதை எப்பொழுதுஎழுதினாரோ.எப்படி இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு எண்ணம்.அந்த அந்தக் காலகட்டம் அவளை எப்படி நடத்திச் செல்லுகிறதோ அப்படி நடக்கிறாள். மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நேரம் கிடைக்க்கும் போது படியுங்கள்.இல்லாவிட்டால் ஸ்ரீரங்கM வரும்போது நானே தருகிறேன் ஆதி:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

2000 ஆண்டில் முதல் பதிப்பு என்று போட்டு இருக்கிறது. அப்போதைய கதை ஓட்டங்கள் இப்படி இருந்ததா என்று நினைவில்லை. நீங்கள் சொல்வது போல அப்பா பாசம் கிடைக்கவேண்டும் . இன்னாரோட பையன் என்று தெரியவேண்டும். இதெல்லாம் ஒரு கம்பல்ஷன்.:(

ஸ்ரீராம். said...

ஆம், அவள் ஏன் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றியது. பி வி ஆர் கதைகள் எப்பவுமே ரொம்ப சுவாரஸ்யம்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கென்னவோ கங்கை பீஷ்மரை வளர்த்து சந்தனு ராஜாவிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது ஸ்ரீராம். கதையின் காலம் 80ஸ் என்று தோன்றுகிறது.
இப்ப இப்படி எல்லாம் நடக்குமா ன்னு தெரியவில்லை.பொருளாதாரம், குடும்ப அழுத்தங்கள் இதையெல்லாம் மீறி அவள் இந்த முடிவை எடுக்கிறாள். ஹ்ம்ம்ம். அப்புறம் அவள் தனக்காக என்ன செய்வாள்:(

மகேந்திரன் said...

அருமையானதொரு புத்தகப் பகிர்வு அம்மா..
அதில் உள்ள ஒரு கதையையும் பகிர்ந்து
அதனுள் எங்களை ஈர்த்துவிட்டீர்கள்....

வல்லிசிம்ஹன் said...

நன்றி மகேந்திரன்.
புத்தக விமரிசனம் செய்யும் திறமை எல்லாம் எனக்குக் கிடையாது. இந்தக் கதை என்னைச் சற்றே பாதித்ததால் எழுதினேன்.
ரொம்ப நன்றிமா.

Anonymous said...

கதை நல்லா இருக்கு. வீட்டை விட்டு அவள் வெளியேறியதும் சரியே. ஆனால் குழந்தையை தியாகம் செய்ய துணிவது ரொம்பவே அபத்தமாக இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லை என்றால் தத்தெடுத்து வளர்க்க ஏன் நிறையபேருக்கு மனதே வருவதில்லை என்று தெரியவில்லை. வாழ்கையில் என் நிறைவேறாமல் போன ஆசையில் ஒன்று ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்காதது.

கங்கை வேதவிரதனை வளர்த்து சாந்தனுவிடம் கொடுத்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. தன் மகன் நாடாளும் அரசனாவது ஒரு தாய்க்கு எவ்வளவு பெருமிதம். மேலும் மன்னர் சாந்தனு இந்த கதையில் வரும் அந்த கதாபாத்திரத்தை போல ஈன குணம் கொண்டவர் இல்லையே.

ஒரு தாய் தன் பிள்ளைகளை வளர்ப்பது பிற்காலத்தில் அவர்கள் தன்னை காப்பாற்றுவார்கள் என்பதற்காக இல்லை. தான் பெற்ற குழந்தையை தானே வளர்பதிலும், தன் கண்முன்னே படிப்படியாய் அவர்கள் வளரும் அழகை ரசிப்பதிலும் உள்ள சுகத்தை அணுஅணுவாய் உணரத்தான் என்பது என் கருத்து.
அதனால்தான் இந்த கதையின் முடிவை அபத்தம் என்றேன்.

அடுத்த கதைக்கு வெய்டிங். :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,
கங்கை கொண்டு வந்துவிட்டது ஒர் நிகழ்ச்சி. அதே போல டச் இதில் உபயோகப் படுத்தி இருக்கிறார் என்று தோன்றியது.
அபத்தம்தான்.
முழுக்கதையைப் படித்தால்தான் உங்களுக்குப் புரியும். அவளும் தன் பிள்ளை கணவன் வீட்டு ஆசாரத்தில் ஈடுபட்டதால் வந்த விளைவு.இந்தக் கட்டுப்பாடுகள் பெண் தனக்குத்தானே விதித்துக் கொள்ளும் சங்கிலிகள்.
அவன் தன்னை ஒதுக்குகிறான். தான் அவனை ஒதுக்கிவிடலாம் ...புரிகிறது. அவந்தான் வேற கல்யாணம் செய்யப் போகிறானே.
என்னவோ புரியாத வாழ்க்கை. புரியாத மனித மனம்.
தாங்கள் தத்தெடுக்க நினைத்தீர்களா. என்ன ஒரு அருமையான தீர்மானம்.நிறைவேறாதது வருத்தமாக இருக்கிறது.

Ranjani Narayanan said...

அந்தக் குடும்பத்திற்கு வேண்டியது அவள் மூலம் ஒரு குழந்தை. அது அவள் மூலம் கிடைக்காத போது அவளை கை விடவும் தயங்கவில்லை கணவனும், அந்தக் குடும்பமும்.
அவர்களுக்கு வேண்டிய குழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு, தன்மானத்தை காத்துக் கொள்ள இப்படி ஒரு முடிவு எடுத்தாள் என்று கொள்ளலாமா?

எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவுதான்!

பிவிஆர் மிகவும் பிடித்த எழுத்தாளர்.

வாங்கிப் படிக்க வேண்டும், வல்லி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,எழுதுபவரின் தீர்மானம் கதாநாயகியின் தீர்மானம்.
அவளுக்கு வந்த ஆவேச முடிவு.
அதற்குப் பின் வருந்தி இருப்பாளோ என்னவோ.
ஒரு க்ஷணத்தில் பிள்ளையை விட்டுக் கொடுக்கிறாள். ரோஷம் உள்ள பெண் எடுத்த முடிவுதான். மனம் ஒப்பவில்லை:)

மாதேவி said...

எல்லோரும் கூறுவதுபோல கதை முடிவு ஏற்க மனம் மறுக்கின்றது.



வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மாதேவி.எந்தக் காலமாக இருந்தாலும் தன்னை ஒதுக்கத் துணிந்த கணவனுக்கு இவள் ஏன் வாரிசு கொடுக்க வேண்டும்.
வருகைக்கும் மிகவும் நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு வல்லிம்மா. உங்கள் கேள்வியே எனக்கும்.

Geetha Sambasivam said...

இந்தக் கதை நான் படிச்சிருக்கேன். கதாநாயகியின் முடிவு எனக்கு ரொம்பப் பிடிச்சது. குழந்தையை வளர்த்துக் கொடுப்பேன்னு சொன்னதும் சரியானதே என்று என் வரையில் தோன்றியது. ஏனெனில் அவள் தன் வளர்ப்பு மேல் மிகவும் நம்பிக்கை கொண்டே சொல்கிறாள். தன் கணவன் தன்னை ஏமாற்றியது போல் தன் பிள்ளை, தான் வளர்த்த பிள்ளை இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம்.

Geetha Sambasivam said...

இதன் மூலம் தியாகமோ, அசட்டுத்தனமோ செய்ததாகவும் சொல்ல முடியாது. சுய நம்பிக்கை கொண்ட ஒரு பெண் என்ன சொல்வாளோ, என்ன செய்வாளோ அதைத் தான் சொல்கிறாள்; செய்கிறாள். கங்கையும் அதைத் தானே செய்தாள். ஆகவே இவளும் ஒரு கங்கையே! :))))

Geetha Sambasivam said...

முடிவை அபத்தம்னு சொல்ல முடியலை. ஏனெனில் கணவனுக்கு அவள் கொடுக்கும் தண்டனை இதுவே. இவளுக்குக் குழந்தை பிறக்காது என இன்னொருத்தியை மணக்கத் துணிந்த கணவனுக்கு அவன் பிள்ளை மூலமே தண்டனை கொடுக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கீதா.மாற்றுச் சிந்தனையாளரே வரணும்.
அவள் நன்றாகத்தான் வளர்ப்பாள்.
அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. அவள் ஏன் கொடுக்கவேண்டும் என்பதுதான் எனக்குத் தோன்றியது. அத்தனை நல்ல பிள்ளையைக் கணவனுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்.வாழ்வில் அவளுக்கு அவன் ஒரு பிடிப்பு கொடுப்பன் இல்லையா.

இவளும் ஒரு கங்கையே .ஜெயகாந்தன் சார் தலைப்பு வச்ச மாதிரி இருக்கு:)

Geetha Sambasivam said...

அவளோட பிடிப்பைப் பற்றி மட்டும் நினைக்கலை. குடும்பத்தையும் நினைச்சிருக்காள். கிட்டத்தட்ட மங்கம்மா சபதம் மாதிரினு வச்சுக்கோங்களேன். பின்னால் அம்மா, பிள்ளை பார்க்காமலோ, பேசாமலோ இருந்திருக்க மாட்டாங்க இல்லையா? தன்னுடைய வளர்ப்பை,தான் மலடி இல்லை என்பதை மட்டுமில்லாமல், கட்டுப்பாடான வளர்ப்பையும் கணவன் உணர வேண்டும், ஒவ்வொரு கணமும். அப்போத் தான் தான் பிரிந்த மனைவியையும் அவன் நினைப்பான். அவளுக்குச் செய்யத் துணிந்த துரோகமும் நினைவில் வரும். இனியொரு பெண்ணுக்கு துரோகமும் நினைக்க மாட்டான்.

வல்லிசிம்ஹன் said...

அதுவும் சரிதான்.அம்மா பிள்ளை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.
அப்புறம் என்ன நடக்கும் என்று யார் யோசிப்பது.
பெசாமல் பிவிஆர் சார் இதற்குப் பார்ட் 2 எழுதி இருக்கலாம். ஆனால் கதை சப்புனு போய் விடும்!நன்றி கீதா. அம்மாடி என்ன ஸ்பீடுப்பா:)