Blog Archive

Friday, November 30, 2012

புதுமை நிலா கார்த்திகை மாதம்.

ஆஹா   வட்டநிலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Add caption
Add caption
பாதிநிலா
நீதான் அந்த நிலவோ.நம்பமுடியவில்லையே
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 28, 2012

திருக் கார்த்திகைக் காட்சிகள்

முருகா சரணம்

 இன்று என் காமிரா பாதிக்கண்ணைதான்  திறப்பேன் என்று விட்டது.
நமக்கோ அதை எப்படி சரி செய்வது என்று தெரியாது.

ஃப்ளாஷ்  சரியாக   வேலை செய்தது. ஆனால்  தீபங்கள் எல்லாம்
பறக்கும் தட்டுகள்   மாதிரி தெரிகின்றன:)
கடவுள் கிருபையில் கார்த்திகைத் திருநாளை நன்றாகவே நடத்திவைத்தார் இறைவன். இந்த நேரங்களில் என்பேத்திகள் இருந்தால் வீடு முழுவதும் தீபங்கள் சுடர் விட்டிருக்கும்.

அந்த நாளும் வருமாயிருக்கும்.
அனைவரின் வாழ்விலும் ஒளி பரவட்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, November 27, 2012

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்

 



அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபத்திருநாள்
வாழ்த்துகள்.
பரணி தீபம், கார்த்திகை தீபம் கண்டு உள்ளம் மகிழ்ந்து
அண்ணாமலையாரையும் கந்தனையும், ,அவன் அண்ணன் கணேசனையும்,இலக்குமி தேவியையும் மனமார வணங்கி
நம் வாழ்வு இன்ப ஒளி பொங்க துன்பங்கள் நீங்க பிரார்த்திக்கலாம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

பெறாத தாய்.பச்சை மண்


 இரவு  6  மணி வாக்கில் அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள். மதுரைக்குப் போனால் பாட்டி  அனுப்பும் சுண்டைக்காய்,முறுக்கு,மலைவாழைப்பழம்  எல்லாம் கல்யாண பட்சணங்களோடு கலந்து வந்தன.

எங்கள் நலனை விசாரித்துவிட்டு அம்மா  என்னிடம் பலகாரங்களைக் கொடுத்துப் பக்கத்துவீட்டில்  கொடுத்துவிட்டு வரச் சொன்னார்.
நானும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனேன்.
மங்களம் மாமி அசதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். மூர்த்தி மாமா   நோட்  புக்கில் ஏதோ எழுதுக் கொண்டிருந்தார்.
பசங்களுக்குப் பசி நேரம்.
என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார்கள்.
அக்கா பையில என்னவோ கொண்டு வந்திருக்கா என்றபடி என்னிடமிருந்து பையை வாங்கினதும் மாமி எழுந்து உட்கார்ந்தார்.

வாடி  செல்லம். அம்மா பட்சணம் கொடுத்தாரா என்றபடி உட்காரச் சொன்னார். நான் மாமி முகத்தைப் பார்த்தேன்.
ரொம்ப அழகாக இருந்த மாதிரி இருந்தது. நாளைக்கு வரேன் மாமி. ஹோம்வொர்க் முடிக்கலை    என்று ஓடி வந்துவிட்டேன்..வந்தவுடன் அம்மாவிடம் புதுப் பாப்பா விஷயமும் சொல்லியாச்சு.!!

சரி சரி பெரியவா விஷயத்தில் நீ பேசக் கூடாது என்று அமர்த்திய  அம்மா  வேலைகளை  முடிக்கப் போய்விட்டார்.
காலையும் வந்தது. நாங்களும் டிபன் டப்பாக்களையும் தோள் பைகளையும்
எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விட்டோம்.

மாலை வரும்போது  வீட்டு வாசலில் பச்சை ஃபியட் கார் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
தஞ்சாவூர்ப் பெரியம்மா  என்று சத்தம்  போடாமல் எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டோம்.

கைகால்கள்    அலம்ப  முற்றத்துக்குப் போகும்போது  பேச்சுக் குரல்கள் பக்கத்துவீட்டிலிருந்து கேட்டாலும்   அம்மா காதைப் பிடித்து உள்ளே  அழைத்துச் சென்றுவிட்டார்.

அடுத்த நாளும்  ஒன்றும் தெரியவில்லை.பெரியம்மாவும் போகவில்லை.அன்று இரவு  அப்பா நாங்கள் மூவரும் காற்றாட வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்தோம்.
பக்கத்துவீட்டிலும் மூர்த்திமாமாவும் பெரியப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள்.

எங்களைப் பார்த்ததும் பெரியப்பா  அப்பாவை அழைத்தார். சௌக்கியமா
என்றவாறே அப்பாவும் அங்கே  போனார்.
நான் காதைத் தீட்டு முன்னரே அம்மா ஜன்னல் வழியாக மெல்லிய குரலில் உள்ளே அழைத்தாள். தூங்கணும்.உள்ளே வந்து பாய் தலகாணி எல்லாம் தட்டிப் போடுங்கொ மூணு பேரும்..
ஏமாற்றத்தோடு உள்ளே வந்தேன்.
அப்பா எப்போது வந்தாரோ தெரியாது. அடுத்த நாள் அந்த வண்டியைக் காணோம்.
ராஜாராமனும் ஜில்லுவும் மட்டும் எங்களோடு  பள்ளிக்கூடம் வந்தார்கள்.
சீதா எங்கடா என்றால் ,அவன் பெரிம்மா  பெரிப்பா கூடத் தஞ்சாவூர் போய்ட்டான். ஜாலி. அவனுக்கு மட்டும்.

ஸ்கூல்ல  டீச்சர் கேட்டா  என்னடா பண்றது.
ஊருக்குப் போயிருக்கான்னுதான் சொல்லணும்.
எனக்கு அந்தக் குட்டிப் பயலின் கையைப் பிடிக்காமல் நடப்பது என்னவோ மாதிரி இருந்தது.

சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அம்மா முகம் கூடச் சரியாக இல்லை. கேள்வியும் கேட்க முடியாது.
அம்மா  பக்கத்துவீட்டுக்குப் போய்ப் பசங்களைக் கூப்பிடட்டுமா
''ட்ரேட்  ''விளையாடணும் என்றான் தம்பி.
வெளியே மழை பெய்து கொண்டிருந்ததால்  விளையாட முடியவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து ஜில்லு வந்தது. கையில் எவெர்சில்வர் டபரா,இலை போட்டு மூடி யிருந்தது.

ஆண்டா அக்கா இந்தா மருதாணி வச்சுக்கோ. பெரிம்மா நிறையக் கொண்டு வந்திருந்தா.  அம்மா இப்பதான் அரைத்தாள். உன்னையும் அம்மாவையும் வைத்துக் கொள்ளச் சொன்னாள்,  என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது. ஓ ,கார்த்திகை மருதாணி. நன்றாகப்  பத்தும் என்று அம்மா உள்ளே வைத்தாள்.

என்னம்மா ஆச்சு.பக்கத்தாத்து  சீதா ஏன் ஊருக்குப் போய்ட்டான்.
என்று அம்மாவிடம் கேட்டேன்.
மங்களத்துக்குப் புதுப் பாப்பா வரப் போகிறது. இவன் ரொம்ப விஷமம்
செய்கிறான்னு பெரியம்மா கூட்டிப் போய்விட்டாள்.
அங்கயே ஸ்கூலுக்குப் போவான்   .

ஜில்லி, ராஜா பாவம்மா. அவர்களுக்குக் கஷ்டமில்லையா.
நீ பேசாமல் மருதாணி இட்டுக்கப் போறியா  இல்லையா.
கை கால் அசைக்காமல்,  வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப்  படுத்துக் கொள்.

அப்பாவுக்கு அம்மா   சாப்பாடு பரிமாறும்போது பேசுவது கேட்டது.
தூக்கம் வராமல்  வெறித்துக் கொண்டிருந்த நானும் பெரிய தம்பியும்
கேட்டோம்.
மங்களத்தைச் சமாதானப் படுத்துவதற்குள் போறும் போறும்னு ஆகிட்டது.
குழந்தையைக் கொடுத்துட்டேனே.அவன் என்ன செய்யறானோ. ராத்திரி புடவைத் தலைப்பில்  சுருண்டுண்டு தான் தூங்குவான்.
அங்கே என்ன செய்கிறானோ  என்று  ஒரே  அழுகை புலம்பல்.
அம்மாவே அழுதுடுவாள் போல அவள்  குரல் இருந்தது.

சும்மா இரும்மா. அவனாவது அங்கே    நன்றாக வளரட்டும்.
நான் நாளைக்குத் தஞ்சாவூருக்குப் போன் செய்து   ராமமூர்த்தியிடம் பேசறேன். சீதாராமன் என்ன செய்யறான்னு தெரியும்.
நீ நாளைக்கு மங்களத்துக் கிட்டப் பேசு.
ஆமாம் வயிற்றில குழந்தை சந்தோஷமா  இருக்கணும் இவள் சரியா சாப்பிடணும்..
கிருஷ்ண மூர்த்தி சம்பாத்யத்தில் நாலு குழந்தைகளை எப்படி வளர்க்கிறது.
ஆச்சு இன்னும் மூணு மாசத்தில பாப்பா பொறந்துடும்.

ஆஸ்பத்திரிப் பிரசவம். ஒரு 100 ரூபாயாவது ஆகும்.
இவளுக்கே மருந்து ,டானிக்னு நிறைய ஆகும்.

பொறக்கப் போற குழந்தையைக் கொடுக்கலாம்னு இருந்தாளாம். அவள் ஓர்ப்படிக்குச் சின்னக் குழந்தை என்றால்  பார்த்துக் கொள்ள  தயக்கமாம்..
இந்தச் சீதா துறுதுறுன்னு கண்ணன் மாதிரி இருக்குனு வரும்போதேல்லாம்
சொலவாள்.
இப்படி நடக்கணும்னு தெய்வம் ஏற்பாடு செய்திருக்கே.

நம்மளோட நடவடிக்கைக்குப் பகவானைச் சொல்லாதே.

ராஜாராமன் ஆறாம்  வகுப்புப் பெரிய ஸ்கூலுக்குப் போகணும். அடுத்தாப்பில
அந்த ஜில்லுக் குட்டியும் நம்ம ஆண்டாள் பள்ளிக்கூடத்தில் சேரணும்.
மாசம் 7ரூபாய் ஒரு குழந்தைக்குப் பள்ளிக்கூடத்துக்கே ஆகும்.

கொஞ்சநாள் கழித்துக் குழந்தை பிறந்ததும்  மங்களம்  சரியாகிவிடுவாள். கஷ்டம்தான். என்ன செய்வது.  இதுதான் ஜீவனத்தின் தத்துவம்.
நீ  தைரியமாக அவளுக்கு எடுத்துச் சொல்.
உன்னைவிட இரண்டு மூணு வயசு குறைந்த பெண்.

மங்களத்தோட அம்மா வரவரைக்கும் நீதான் பொறுப்பு என்று அப்பா  எழுந்துவிட்டார்.

அப்பாவின் அறையில் விளக்கெரிவதைப் பார்த்து நான் மருதாணி கலையாமல்  மெள்ள எழுந்து அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
அம்மா மோர்சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும்  முடித்துக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்து
உனக்கு என்ன தெரியணும் இப்ப.
ஏன்  சீதா தஞ்சாவூருக்குப் போய்விட்டான்.
ஏன் இங்க இல்லை.
 பெரியம்மா வீட்டில்  பாப்பாவே  இல்லம்மா. பாவம் இல்லையா. அதான் கொஞ்ச நாள் தங்களாத்தில் சீதாவை வச்சுக்கப் போகிறாள்.
லீவுக்கெல்லாம் இங்க வருவான் பாரு.

அதான் புதுப் பாப்பா வரதே அதை எடுத்துண்டு போட்டுமேம்மா.
இல்லடா. புதுப்பாப்பாவுக்கு அம்மாதான் கூட இருக்கணும்.
இல்லாட்டா அதால சௌகியமா இருக்க முடியாது. சீதாராமன் வளந்துட்டானே சமத்து. அவன் சந்தோஷமா  பெரியம்மாவோட இருப்பான் பாரு.
நம்ம அத்தையாத்துக் கோவிந்தா கல்யாணம் வருதே நாம் போய்த் தஞ்சாவூரில் கல்யாணத்தையும் பார்த்துவிட்டு சீதாராமனையும் பார்க்கலாமா
என்று முடித்தாள்.

நன் வந்து மீண்டும் படுத்துக் கொள்ள  முயன்றபோது மூசுமூசு
என்று சத்தம் கேட்டது.
என்னவென்று  பார்த்தால் எங்க சின்னவன்   தான்   அழுதுகொண்டிருந்தான்.
என்னடா  என்று கேட்டால் , அப்போ நம்மாத்துக்கு இன்னோரு பாப்பாவந்தா என்னையும் அனுப்பிடுவாளா என்று அழ ஆரம்பித்தது.
சத்தம் கேட்டு அம்மா வந்தாள். அட அசடே  நம்மாத்துல் எப்படி
இன்னோரு குழந்தை வரும் ராஜா. உனக்கே வயசாகிட்டதே.
அப்படி வந்தாலும் நீதான் நம்மாத்துச் செல்லம்,இல்லையா ஆண்டா  நீ சொல்லு.
என்று என்னையும் சேர்த்துக் கொண்டாள்.

பெரியதம்பியும் சேர  நாங்கள்   அவனைச் சமாதானப்  படுத்தினோம்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, November 26, 2012

பச்சை மண்......பெறாத தாய்


 இந்த இளங்குருத்தை ஏந்தியிருக்கும் தாய்  அதைத் தத்தெடுத்தவள் என்று சொல்ல முடியுமா.
சில நாட்கள்  முன்னால் டிஸ்கவரியில் தத்தெடுக்கும் பெற்றோரின்
எதிர்பார்ப்புகள் அவர்களும் பெறும் சந்தோஷங்கள். குழந்தையின் வளர்ப்பு என்று நீண்ட   ஸீரீஸ் வந்தது.

நம் ஊரில்   ஸ்வீகாரம் போவது என்பது சர்வ சகஜம்.
இல்லாதவர்களுக்கு நிறைய  குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குழந்தை  பெற முடியாதவர்கள்

இவர்களிடமிருந்து முன் கூட்டியே சொல்லிவைத்துக்
 அன்று பிறந்த குழந்தையை  முறைப்படி சாஸ்திர சம்ப்ரதாயங்கள் செய்து
தத்து எடுத்துக் கொள்வார்கள்.

செட்டிநாட்டுப் பக்கம் இது வெகுவாக நடக்கும். எனக்குத் தெரிந்து
என் அம்மாவினொன்றுவிட்ட சகோதரன் தன் பெரியப்பா வீட்டுக்கு  தத்துப் புத்திரனாகப் போனார்.
ஆனால் ஐந்து வயதில் தன்சொந்தத்தாயைப் பிரிவது அவருக்கு மிகக் கஷ்டமாக இருந்திருக்கவேண்டும்.

இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது.

சமீப காலத்தில்(   !!!!  ) நடந்த  ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
நாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில்   பக்கத்து  வீட்டில்  மங்களம்  ,கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு தம்பதியர்.
இப்போது நினைத்தாலும் அந்த மாமியின் அழகு என்னைக் கட்டிப் போடுகிறது. அவர் ஏதோ   ஒரு கம்பெனியில் குமஸ்தாவாக 100 ரூபாய் சம்பாத்தியம் செய்துவந்தார்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

முத்து முத்தாக  ராஜாராமன்,சீதாராமன்,ஜில்லு என்கிற சாரதா.
எங்கள் வீட்டு முற்றமும் அவர்கள் வீட்டு முற்றமும் ஒன்றாக இருக்கும்.

முற்றத்தின் முடிவில்  மூங்கில் கதவில் நான் சாய்ந்து கொண்டு படித்த புத்தகங்கள்  நிறைய.
ஸ்வாரஸ்யமாக  பக்கத்துவீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை ரசித்துக் கொண்டே படிப்பேன்.

ஒரு நாள் மதியம்  அம்மா அப்பா இருவரும் மதுரைக்கு ஏதோ  திருமணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம்.
மங்களம் மாமியிடம்   போய் எங்கள் மூவரையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும்  எங்களுக்குச் சாப்பாடு எடுத்துவைத்துவிட்டுக் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஆதலால்    மூன்று நண்டு சிண்டுகளும் இங்கேயே டேரா போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவ்வப் பொழுது மாமியின் குரல்  ஏ பசங்களா சமத்தா இருங்கோ இல்லாட்டா  விசிறிக்காம்புதான் பேசும்'' என்று அதட்டுவாள்.

விசிறிக்காம்பு பேசும் 'என்று அழகு காட்டியது  ஜில்லு.(7 வயது)

எங்கள் மதிய சாப்பாடைச் சாப்பிடும் வேளை.
எப்போதும் போல் சாதம் நிறையவும் குழம்பு ரசம்,புடலங்காய்க் கறி என்று வைத்துவிட்டுப் போயிருந்தார் அம்மா.

அந்தக் குழந்தைகள் சமையலறைக்குள் வந்து எட்டிப் பார்த்தன.
பசிக்கிறதா  ராஜா. எங்களோட சாப்பிடறியா என்று தம்பி கேட்டான்.
எனக்குச் சுட்ட அப்பளம்தான் பிடிக்கும். கறியெல்லாம் உவ்வே
என்றான் பெரிய மனுஷன்.
அதற்குள் மாமியின் குரல்.

ராஜா,சீதா ,ஜில்லு எல்லோரும் இங்க வாங்கோ. அப்பா பக்கோடா வாங்கிண்டு வந்திருக்கார் என்றதும் பறந்தன குழந்தைகள்.
மாமி எங்களையும் அழைத்தார். புளி உப்புமா இருக்கு வந்து எடுத்துண்டு போறியா ஆண்டாள் என்று  கூப்பிட்டதும்,மனசு ஆசையில் அடித்துக் கொண்டாலும் அம்மா டிபனும் செய்திருக்கிறார். வேண்டாம் மாமி . தான்க்ஸ்.  னு  சொல்லிவிட்டேன்.:)


மீண்டும் குழந்தைகள் வந்தன.
சுரத்தே இல்லை அதுகள் முகத்தில்.
சரியாச் சாப்பிடலையோ என்று   டெல்லி அத்தை கொடுத்திருந்த    பிஸ்கட்டுகளிருந்து ஆளுக்கு இரண்டு கொடுத்தேன்.

அம்மா  அயறா'' இது  சின்னப் பையன்   சீதா.
ஸ்ஸ்ஸூ சும்மா இருடா.இது பெரிய மனுஷி ஜில்லு. ராஜராமன் வாயே திறக்கவில்லை.
என்னம்மா சமாசாரம் என்று ஜில்லுவிடம் நான் கேட்டதும், எங்காத்துக்கு இன்னோரு பாப்பா வரப் போறதாம்.
அம்மா  அதுக்காக அழறா  என்றாள்.

விஷயம் புரியாமல் நான் பாப்பா வந்தால் ஜாலிதானே .வாசனையாக் குளிக்கும் பௌடர் போட்டுக்கும். நான் கூடவந்து தூளி
ஆட்டிக் கொடுப்பேன்.'' ஏன் அழணும்?

தெரில நாளைக்கு  பெரியப்பா பெரியம்மா எல்லாரும் தஞ்சாவூரிலிருந்து வரா.
அங்க போனா  ஜாலி தெரியுமா. யாருமே கிடையாது.
ஊஞ்சல் எல்லாம் இருக்கும்.பெரியம்மா நிறைய பக்ஷணம் எல்லாம் செய்து கொடுப்பா.
ஆனா அம்மா ஏன் அழறான்னு தான் தெரியலை  என்று உதட்டைப் பிதுக்கியது
ஜில்லு.  
நாளை மீண்டும்  கடவுள் புண்ணியத்தில் பார்க்கலாமா.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, November 24, 2012

பச்சை மண்...ஒரு தாயின் கதை

தாயும் சேயும்

 இரண்டு பதிவுகளுக்கு  முன் எழுதிய  கதை பி.வி.ஆரின் பச்சைமண்.

அதைப் பற்றி  என் தோழிகள் இருவர்   ஓய்வு பெற்ற பேராசியைகள்.
அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது
அவர்கள் கல்லூரியிலேயே நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டார்கள்.

நீ என்னமோ கனவுலகத்துல இருக்க.மத்தியதர் மக்களிடம் இன்னும் இதுபோல நிகழ்வுகள்
உண்டு.
விவாகரத்துக்குப் பிறகு மணமுடித்த பெண்களுக்குக் குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.

 என்று விவரமாகச் சொல்லி முடித்தார்கள்.
என் பாயிண்ட் அது இல்லையே. அவள் ஏன் குழந்தையைக்
கணவனிடம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் என்னைவிட மெத்தப் படித்தவர்கள். யோசித்துச் சொல்லுங்கள்
என்று சொல்லிவிட்டுப் பிரிந்துவிட்டேன்.
இரண்டு மூன்று  நாட்கள் கழித்துச் சந்திரா தொலை பேசினாள்.
சுஜாவும் வந்திருக்கா.
அவளுடன் அவள் அத்தையும் வந்திருக்கிறார்  என்றாள்.
அத்தையா?
ஆமாம் தியாகம் பண்ண அத்தை என்ற பட்டத்தை வேற கொடுத்தாள்.
'truth is stranger than fiction''
இதுதான் நினைவுக்கு வந்தது   எனக்கு.
கதைக்காக என்னால் அம்பத்தூர் வரமுடியாது. கார்த்திகைக்குப் புடவை எடுக்கணும்.
எனக்கு இல்லை. உறவுகளுக்கு .பாந்தியன் ரோடுக்கு வருகிறீர்களா
என்று  கேட்டு வைத்தேன். அது ஒரு  சனிக்கிழமை.
வேலைத்தொந்தவுகளைக் கணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மூவரும்

எழும்பூர் பாந்தியன் சாலைக்கு வந்தார்கள். துணி எடுக்கும் வேலை முடிந்து
அஜ்னபி''  கடைக்கு வந்தோம்.நல்ல தேநீர் அருந்திக் கொண்டே
அந்த அத்தையைப் பார்த்தேன். வயதான் அதை இல்லை. எங்கள் வயதுதான் இருப்பாள்.
மீனாக்ஷி  அத்தை. அப்பாவின் கடைசித் தங்கை.அறிமுகப் படுத்தினாள் சுஜா.

மீனாக்ஷி என்றே விளித்து அவளிடம் கதை பற்றிய விவரம் சொல்ல ஆரம்பிக்கும்
முன்னால் அவளே சொல்ல ஆரம்பித்தாள்.
எனக்கும் கல்லூரி முடித்ததும் திருமணம் நடந்து வடக்கே பிலாஸ்பூர் போய்விட்டேன்.

புரியாத மொழி. இருந்தாலும் வீட்டு வேலைகள் அக்கம்பக்க மாதாஜீக்கள்
துணையில் என் பொழுது தையல்,வையர் பாஸ்கெட் என்று கழிந்தது,.
ஒன்றில்லை இரண்டில்லை 11  வருடங்கள்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
தெற்கே வருவோம். எல்லோரும் சொல்லும் வைத்தியங்களைச் செய்வோம்.
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவோம்.

அப்படி ஒரு முறை வந்தபோதுதான் அவரையும் விந்துப் பரிசோதனைக்கு
 உட்படுத்தலாமேன்னு என் தந்தை சொன்னார்,.
எனக்கோ தயக்கம்.அவர்கள் தலைமுறையில்  குழந்தைகளுக்குப் பஞ்சமே   இல்ல அப்பா.
அவரை வருத்தப் பட வைக்க வேண்டாம் என்றேன்.

ஏம்மா நீ ஒவ்வொரு தடவையும் ஊசிபோட்டுக்கறதும் ,ரத்தமும் கொடுக்கும்
போதும் எனக்குச் சந்தோஷமாவா இருக்கு?
கேட்டுப்பார் அம்மா  என்றார்.சரிப்பா நாம் திருமுல்லைவாயில் வைஷ்ணவி தேவி
கோவிலுக்குப் போய் வந்து பிறகு அவரைக் கேட்கிறேன் என்றேன்.

கணவரின் அத்தையும் அவர் பெண்ணும் வந்திருந்தார்கள். என்னைத் திருமணம் முடிக்கும் முன்பே
அந்தப் பெண்ணை அவருக்கு மணம் முடிக்க அந்த அத்தைக்கு ஆசை.
படிப்பு குறைவாக இருந்ததால்  கணவரின் அம்மா வேண்டாம் என்று விட்டார்.
இப்பொழுதும் அந்தப் பெண் பார்க்க அழகாகவும்  27  வயதுக்குறிய வளப்பத்துடன்
 அத்தான் அத்தான் என்று சகஜமாக வளைய வந்தாள்.
கணவரின் முகத்தில் முதன் முறையாக மாற்றத்தைப் பார்த்தேன்.
கலக்கம் வந்தது. கோவில் போய்விட்டு அந்தத் தாயிடம்
முறையிட்டுவிட்டு வந்தோம்.
கணவரிடம் பரிசோதனை பற்றிச் சொன்னபோது அவர் அதை ஏற்கவில்லை.
மூர்க்கத்தனமாக  மறுத்தார். நாம் அடுத்த தடவை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்
என்று நாங்களும் வண்டி ஏறிவிட்டோம் பிலாஸ்பூருக்கு.
வழிமுழுவதும் தான் தவற விட்ட அத்தை பெண் பற்றிய பேச்சே.
அவள் இன்னும் தனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.
அவள் நினைவிலியே என்னுடன் இருந்ததாக எனக்குத் தோன்றியது.
அதன் விளைவோ என்னவோ  நானும் கருவுற்றேன்.
ஒரு விருப்போ வெறுப்போ இல்லாத நிலையில்

ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.அவரது அம்மாவும் அத்தை அவள் பெண்
எல்லோரும் வந்திருந்தார்கள் பிரசவத்துக்கு.
என் அம்மாவால் வரமுடியாத நிலை.அப்பாவுடன் இருக்கவேண்டியபடி ஆயிற்று.

குழந்தை பிறந்த  பத்துநாட்களில் அத்தை பெண்ணையும் இவரையும்
வேண்டாத நிலையில் பார்த்துவிட்டேன்.
வெறுப்பின் உச்ச கட்டம். அழும் குழந்தை. அதைச் சதாத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் மாமியார்.
சமையலறையை ஆக்கிரமித்த அத்தை.
கண்ணைகட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தேன்

இரவே  அவர்கள் அனைவைரிடமும் என் முடிவைச் சொன்னேன்.
எழுதின  விடுதலைப் பத்திரத்தைக் கொடுத்தேன்.

நான் தியாகம் ஒன்றும் செய்யவில்லை. எனக்குச் சேர வேண்டிய ஜீவனாம்சம்
வந்து சேரவேண்டும்  என்ற தீர்மானத்தைச் சொல்லிவிட்டு  நடந்தேவந்து (மனத்தில் இருந்த ஆத்திரம் தீர வேண்டுமே)பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து,இரண்டு வண்டி பிடித்துச்
சென்னை வந்து சேர்ந்தேன்.
இப்பொழுது   அந்தப் பணம் வருகிறது.
விட்ட படிப்பைத் தொடர்ந்து நான் நிம்மதியாகத் தா
ன் இருக்கிறேன்.
அப்பா தவறி விட்டார். அம்மா தன் முதிய வயதில் என்னை பற்றிய
கவலை கூட என்னவெல்லாமோ முயற்சித்தாள்.
எனக்குத் திருமண ஆசையும் வரவில்லை.
வேலை செய்வதே ஒரு டீச்சராக.
வருடா வருடம் புதுக் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
என் அன்பு முழுவதும் அவர்களை முன்னேற்றுவதில் செலவு செய்வதால்
குறை ஒன்றும் இல்லை என்று முடித்தாள் மீனாக்ஷி.

ஆழ்ந்த மௌனம் எங்களிடம்.
ஏய் சிரிங்கப்பா.. பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு  வாருங்கள்.
அப்பொழுது தெரியும் என் மகிழ்ச்சி  என அவள் சிரித்தாள். உண்மையிலியே
அவள் முகத்தில் வருத்தம் ஏதும் இல்லை.!

 அனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துகள்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 21, 2012

கோதா வரி

கோதாவரி  நதி
 






இதோ  கர்த்திகை மாதம் வந்துவிட்டது. வீடுகளில்
சாயந்திர தீபங்கள்   ஏற்றப்படுகின்றன.
இன்னும் இரண்டு நாட்களில்  கைசிகப் பண் பாடி  திருக்குறுங்குடி அழகிய நம்பியை வழிபட்டுக் கோவிலுக்கு வெளியே  நின்றபடி

சேவித்தநாட்கள்.
தன்னைப் பிடித்து உண்ணும் நோக்கோடு வந்த   பிரம்மராக்ஷசினிடம் மனமுவந்து தன்னை ஒப்புவித்த  ஒரு உயர்ந்த மனிதரின் கதை நடந்த கார்த்திகை துவாதசி.கைசிக துவாதசி.

சந்தர்ப்ப வசத்தால் பாவம் செய்த அந்த உயிருக்கும் விஷ்ணுபாதத்தைக் காண்பித்துக் கொடுத்த நாள்.

அடுத்த கொஞ்சநாட்களில்  மார்கழி வந்துவிடும். மாதம் முழுவதும் கண்ணன் புகழ்மணம் காற்றில் கலந்துவரும். காலையில் பொங்கலாய்,பாவை இசையாய்,மாலையில்   காதை நிறைக்கும்   சபைகள் நிறைக்கும் பல்வேறு கலைஞர்களின்    இசைவிழா.


இந்த வேளையில் தான் மின்சாரம் இல்லாத நேரத்தில்
ஒரு   இசைத்தட்டு  கதை கேட்க  முடிந்தது.
அதில்  வந்த வாக்கியங்கள்  தான் கோதா தேவியின்  துதிப் பாடல்கள்.

இது எங்களுக்குப் பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்த  மாஸ்டர் குரு தாத்தாச்சாரியரின் விளக்கம். கோதையையும் கோதாவரியையும் இணைத்து வரும் கதை.

பூமியில்  வில்லிபுத்தூரில்  பெரியாழ்வாரின் கண்டெடுத்தமகளாக வந்தவள் கோதை என்று பெயர் சூட்டப்பட்டாள்.

அந்தக் குழந்தை ஸ்ரீரங்கனை மணாளனாக  வரித்துக் கொண்டே பிறந்தது.
அதன் இருதயம் முழுவதும் உலகம் உய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம்.


அவளைப் பாடவந்த   ஸ்ரீவேதாந்த தேசிகரின்  கோதா  ஸ்துதியில் வந்த
வரிகளை எங்கள் குரு விளக்கியபோது அதிசயமாக இருந்தது.

இவளுக்குக் கோதை கோதா என்று பெயர் வைத்ததால் கோதாவர் நதி புண்ணியம் பெற்றதாம்.
ஏன் மாஸ்டர்  என்று கேட்டோம்.

அப்போது அவர் சொன்னதுதான் இந்தக் கதை. ராமாயணத்தில்  ராவணன்
சீதையை அபஹரித்துச் செல்கிறான். அவளோ மரங்கள் செடிகள் கொடிகள் நைகள் எல்லாவற்றிடமும் முறையிடுகிறாள்.
ராமன் என்னைத் தேடி வரும்போது ஏ கோதாவரி மாதா, நீ சொல். இந்தக் கபட சந்யாசி என்னைத் தூக்கிச் செல்கிறான் என்று    கதறுகிறாள்.

அதே போல ஸ்ரீராமர் வந்து,வழி நெடுகப் புலம்பிக் கொண்டே வருகிறார்.மரமே கண்டாயா,மலையே கண்டாயா,இலையே கண்டாயா,செடியே கண்டாயா என் சீதையை என்று அரற்றுகிறான்.

கோதாவரி க்  கரையை அடைந்த போது,அந்த நதியையும்   ராமன் வினவ ,அது இராவணனின் கொடூரத்திற்குப் பயந்து மௌனம் சாதித்ததாம்.

இது பாவம் இல்லையா.
இந்தப் பாவம்    கோதை,பூமாதேவியின் அவதாரம்,சீதையின்  துயரம் அறிந்தவள் பிறந்து  போதே  கோதா என்று பெயர் சூட்டப் பட்டதுமே
கோதவரியின் பாபம்   தீர்ந்ததாம்.


இன்று அத்தனை கோவில்களின் கடவுள்களின்  பாதங்களையும் 
வருடிச் செல்லும் மகிமை  அவளுக்குக் கிடைத்துவிட்டது.


இதோ அதே  ராமன்,சீதை,லக்குவன்  அவள் கரையில்கோவில் கொண்டுள்ளார்கள்.
கோதையும்,கோதாவரியும் நம்மைக் காக்கட்டும்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, November 19, 2012

பச்சை மண் 2 பிவிஆர்

Add caption

நேற்று ஒரு திருமணத்தில்   வேறெந்த நிகழ்ச்சியிலும்   கண் போகவில்லை. இந்த சுட்டிக் குழந்தைகள் செய்யும் அட்டகாசம் ,பார்க்கப் பார்க்க பரவசம்.

பச்சைமண் என்று எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்  திரு. பி வி ஆர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு  பற்றித்தான்.
நடுவில் பேரன் பேத்திகள்   இழுத்துவிட்டார்கள்:)

பச்சை மண் '' புத்தகத்தை நான் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
திரு பிவிஆரின்  பெண் கதாபாத்திரங்கள் எப்பவுமே  தைரிய சாலிகளும், கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பவர்களூமாய்  அதே சமய சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கதையின் நாயகனிடம் வாதிடவும்செய்வார்கள். இழைந்து போய் அவனைத் தன்வசம் இழுக்கவும்  செய்வார்கள்.
தேடிதேடிப் படிக்கப் பிடிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
இந்தப் பச்சை மண் புத்தகத்தில்  மொத்தம்  12   சிறுகதைகள்   இருக்கின்றன.
முதல் கதைதான் என்னை மிகவும் கட்டிப் போட்டது.


ஆனந்தா  நாதன் என்று  தம்பதியர்  குழந்தைக்காகக் காத்திருக்கிறார்கள்.ஆநந்தமாக  ஆரம்பித்த   திருமண வாழ்க்கை  ஒரு ஆண் குழந்தை பிறக்காத்ததால் கசக்க ஆரம்பிக்கிறது. நாதனின் பரம்பரையில்

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசு என்பது தீர்மானிக்கப் பட்ட விஷயம்.
நாதனின் அம்மாவுக்கு நாத ன்
ஒரே மகன். அவனுடைய தாத்தாவுக்கும் அவன் அப்பா ஒரே பையன்.
பெண் வாரிசுகளே கிடையாது.

நாதன் அம்மா  கசந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
ஆனந்தாவைப் பரிசோதிக்கலாம்...ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே என்று ஆரம்பிக்கிறாள்.
நாதனும் ஒத்துக் கொள்கிறான்.
சென்னையில் இல்லை. பங்களூர் பெண்வைத்தியரிடம்தான் சோதனைகள்
செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறான்.
மனைவி எவ்வளவோ எடுத்துச்  சொல்கிறாள்.
தன்குடும்பத்தில்  தாமதமாகத்தான் குழந்தைகள் பிறக்கும்.காத்திருக்கலாம் என்று எவ்வளவோ கெஞ்சியும் வலுவில் அவளை அழைத்துச் சென்று பெங்களூருவில் சோதித்து ,ஆனந்தாவிற்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்று முடிவுகள் சொல்வதாகவும்    தெரிய வருகிறது.

அவன் தன்னைச் சோதித்துக் கொண்டிருக்கலாமே என்று சவாலாக ஆனந்தா கேட்கிறாள்.

பதில் ஏதும் சொல்லாமல், அவன் தன் அலுவலகத்தில் பிஹெச் டி செய்யும் ஒரு பெண் பெயரைக் குறிப்பிட்டு அவளைத் தான் திருமணம் செய்யப் போவதாகவும்  சொல்கிறான்.

''வக்கீலைப் பார்ப்போம்
எதற்கு?
நம் பிரச்சினையைத் தீர்க்கத்தான்
எனக்குப் பிரச்சினை  இல்லை
நீ ஒபுதல் தந்தால் தான் நான் மேற்கொண்டு....
பரம்பரையை வளர்க்க முடியும்  இல்லையா? நம்ம கல்யாணம்
அக்னி சாட்சியா நடந்தது.அந்த அக்னியையே   சாட்சியா  வைச்சுண்டு  சாஸ்திரிகள்    மந்திரம் சொல்ல  நாம் விவாகரத்தை நடத்துவோம்.
உன் வேதனை எனக்குப் புரிகிறது
இது என்ன பிரிவு உபசாரப் பேச்சா.
உங்க பெரிய மூக்கு சயண்டிஸ்ட்  வலது காலை உள்ளே வைக்கும் போது  நான் இடது காலை வெளியே வைத்துப் போகணும  ஏன்?

அதனால் பிரச்சினை வளரும்.
ஆனந்தா நான் இரண்டு நாட்கள் பம்பாய் போகிறேன்.
ரெண்டு நாள் டயம் இருக்கு.
அதுக்குள்ள நான் தயாராகி 4  மனி ரயிலைப் பிடிக்கிறேன் ஊருக்கு.
ரொம்ப ஸாரி ஆனந்தா.

அவன் கிளம்பினதிலிருந்து தலைவலிக்க ஆரம்பிக்கிறது அவளுக்குகண்கள் சொருகுகின்றன.இரவு சாப்பிடப் ப்பிடிக்கவில்லை.  ஃப்ரிஜ்ஜிலிருந்து சில்லென்ற மோரைக் குடிக்கும்போதே அந்த சயடிஸ்ட் நினைவுக்கு வந்து அவளுக்கு நெஞ்செரிகிறது.
மோரிக் குடித்துப் படுத்தவளின் வயிறு குமட்டுகிறது. ஏதோ நினைவில் காலண்டரைப் பார்க்கிறாள்.
போன மாத 7 ஆம் தேதியும் இந்த மாத 22 ஆம் தேதியும் அவளுக்கு உண்மையை உணர்த்துகின்றன.
மறுநாளே  அவள் மனதின் புல்லரிப்பை  உண்மையாகினாள் லேடி டாக்டர்.


வீட்டுக்கு வந்து அனைத்துத் தெய்வங்களையும் வணங்கியவளின் மனதில் வெறி பிறக்கிறது..
தீர்மானம் செய்தவளாய்க் கணவனின் காலடி சப்தம் கேட்டு நிமிர்கிறாள்.
உடனே உள்ளே போய்த் தன் பெட்டி படுக்கையைக் கொண்டு வருகிறாள்.

அட. நான் ட்ராப் செய்யட்டுமா.
நானே போய்க் கொள்வேன்.  வரட்டுமா

ஐ யாம் ரியலி சாரி ஆனந்தா.

ஆமாம் யு வில் பி ஸாரி என்று வெறுப்பை உமிழ்கிறாள் ஆனந்தா.
என்ன சொன்னே!!

நீங்க இத்தனை நாட்களா கேட்டுக் கொண்டிருந்த பிரசாதம் கிடைத்துவிட்டது

புரியலே
உங்க பெங்களூரு டாக்டர் தப்பைச் செய்திருக்கா
அந்தப் பெரிய மூக்கு சயண்டிஸ்டிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களொ அதை அம்பாள் எனக்கு இப்பவே கொடுத்துட்டா.
சிலையாகிப் போன நாதன் அவளை நெருங்க'


எட்ட நில்லுங்க.இனி நீங்க என்னைத் தொடவேண்டிய அவசியமே இல்லை.


ஆனந்தா...
ஆமாம் ஆனந்தா நாலரை மணி வண்டில சேலம் போறா.
சரியா  ஒம்பதாவது மாதம் உங்கள் பரம்பரையின் சங்கிலித் தொடரின் வளையம் ஜனிக்கும்.
அதை ஏழு வயது வரை வளர்த்து
பிரம்மோபதேசம் செய்து உங்கள் கையில் ஒப்படைப்பேன்.
அது உங்கள் வீட்டு சாளக்ராமப் பூஜைகளைதொடரும் உங்களொடு சேர்ந்து கொண்டு.
அவன் பெரியவன்  ஆனதும் பிள்ளைக்காக இன்னோரு பெண்டாட்டியைத் தேட மாட்டான். அதற்கான உத்தரவாதத்துடன் தான் அவன் இங்கே வருவான்' என்றபடி வெளியே நடக்கிறாள் ஆனந்தா.

இந்தக் கதை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கணவனிடம் மையலாக இருந்தவள் மனம் கசந்தால் என்ன நடக்கும் என்று கருத்து தோன்றியது.
இருந்தாலும்
ஆனந்தா தன் பிள்ளையை ஏன் தியாகம் செய்யணும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது:(


புத்தகம் கங்கை புத்தக நிலையம்,
தீனதயாளு தெரு,
டி.நகரில் வாங்கினேன்.
இப்பவும் கிடைக்கலாம்விலை 35 ரூபாய்கள் மட்டுமே.

மீண்டும் இன்னோரு கதையோடு பார்க்கலாம்.
சில குறிப்புகளை மட்டுமே  கொடுத்திருக்கிறேன்.
நீங்கள் படிக்கவும் கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் இல்லையா:)






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 14, 2012

மரங்கள் பிட் போட்டிக்கு -நவம்பர் மாதம்

பெண்வீட்டு மரம்(நான் எடுத்த படம்  இல்லை)
நந்தவனத்துக்குள் ஒரு பாதைமரம்
வயலோடு மரம்
Add caption
பிம்பங்களோடு மரங்கள்
அரபு நாட்டு மரங்கள்
ஸ்விஸ் நாட்டின்  பசுமை மரங்கள்
சஃபோட்டா  மரம் பொன்சாய் வழி
மரத்துக்குச் சுவர் பலமா
மஞ்சள் வெய்யில்  மாலையிட்ட மரம்
எங்கெங்கு காணினும் மரங்கள்
கடற்கரை  மரங்கள்
பொன்சாய்  மரம்..கூகிளார் கொடுத்தது
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்