Blog Archive

Thursday, March 10, 2016

தண்ணீர் ராசி!

குடங்கள். கவிழ்த்து வைக்கக் கூடாது என்று பாட்டி சொல்வார்
கோயம்பத்தூரில் இந்த மாதிரிதான்  கிணறு தோண்டுவார்கள்


இணையத்தில் கிணற்றுத் தண்ணீர் பற்றிப் பேச்சு வந்தது. சென்னைக்கு வந்த  புதிதில்  பாட்டி வீட்டுக் குழாயை அதிசயமாகப் பார்த்துச்  சந்தோஷப்படுவேன்.  குடத்தைத் தூக்கிக் கொண்டு  கிணற்றுக்குப் போக வேண்டாம். அதுதான்  முதல் காரணம்.
நாங்கள் தெற்குச் சீமைகளில் இருந்த இடத்திலெல்லாம் அப்போது குழாய் வசதி கிடையாது. அப்பாவுக்கு மாற்றலாகும் இடங்களில் கிடைக்கும் வீட்டில் முதலில் நாங்கள் பார்க்க ஓடுவது
கிணற்றைத்தான்.

அதில் எட்டிப் பார்த்துத் தண்ணீர் அருகில் இருந்தால் ஒரே சந்தோஷம்.
திருமங்கலம் வீட்டில் கிணற்றில் தடுப்பு போட்டிருக்கும்.
ஒரு பக்கம் சமையலறைக்கும்
மறுபுறம்    குளிக்க,துவைக்க, பாத்திரம் தேய்க்க  என்று தனியாக வேறு கயிறும் வாளியும் இருக்கும்.
சமையலறைப் பக்கம் அன்னன்னிக்குத் தேய்த்து வைக்க ஒரு குடம்.

அதன் பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி.அதற்கு ஒரு மூடி..
அதிலிருந்து  சமையலுக்கு உள்ளே கொண்டு நிரப்ப ஒரு அண்டா..
அப்பா சாமீன்னு ஆகிவிடும்.
அம்மாவுக்கு   அல்சர் வந்து குணமாகி வந்த நேரம்.
அதனால் நான்  உதவி செய்வது வழக்கம்.  கைசிவந்து போய்விடும். புதுக்கயிறு அப்படித்தான் இருக்கும் என்று அப்பா கைக்கு தேங்காயெண்ணெய் தடவி விடுவார்.

திண்டுக்கல்லுக்கு மாற்றலாகியது. அங்கு செயிண்ட் ஜோசஃப் பள்ளியில்
அப்பா சேர்த்துவிட்டார்.
இங்கயும் கிணறு தானாப்பா    என்பதுதான் என் முதல் கேள்வி. ஆமாம்ம்மா ஆனால் நல்ல தண்ணீர்க் கிணறு என்று   ஒன்று இருக்கு. அங்கதான்   போய் எடுத்துக் கொண்டு வரணும் என்றார்.
முதல்நாள் அலுவலகத்திலிருந்த வந்த  பியூன்  கொண்டு போய்க் காட்டினார். நான் பெரிய குடம்.தம்பி சின்னக் குடம். தண்ணீர்  இல்லாத  கல் பூமி.காற்று என்னவோ பிரமாதமாக அடிக்கும்.காய்கறி எல்லாம் கொடைக்கானலில் இருந்து வரும். பள்ளிக்குப் பக்கத்தில்
இருக்கும் மேட்டுப்பட்டி என்ற  இடம். பள்ளியில் மணி அடித்தால் இங்கே கேட்கும்.

அவசரத்துக்கு அங்கே  போனோம். தாத்தா பாட்டி வந்த போது அவர்களுக்கு அங்கெ
பிடிக்கவில்லை.
நாராயணா   கிணத்துதண்ணிக்குக் குழந்தையை அனுப்பாம இருக்கிற வீடா பாரு. 12 வயசில
ஒரு பர்லாங் நடந்து தூக்கிக் கொண்டு வரதே. வேற வீடு பாருன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

பிறகு கிடைத்த வீடுதான் கிருஷ்ணாராவ்  ஸ்ட்ரீட் என்னும் தெருவில் ஒன்று போல் அமைந்த பத்துவீடுகள் கொண்ட      காலனி வீடு.. அழிக்கதவு போட்ட வராந்தா,ஒரு நடை ஒரு ஹால் ஒரு குட்டி  பெட்ரூம் நல்ல சமையலறை புகைபோக்கி என்று(விறகடுப்ப்தான் அப்ப எல்லாம். ஒருஸ்டவ் உண்டு. கரியடுப்பும் உண்டு.) எங்கள் மூவருக்கும் பிடித்துவிட்டது.
சின்னத்தம்பிக்கும் எனக்கும் ஏகப்பட்ட தோழர்கள் தோழிகள் கிடைத்தார்கள்.
தூரத்தில் சௌந்தரராஜா மில் தெரியும். அந்த நாளிலேயே  சொந்த விமானம் வைத்திருந்தார் என்று கேள்வி..
ஒரே  ஒரு குறை இங்கயும் கிணற்றுக்கு மூன்று வீடு தாண்டி போக வேண்டும்.
பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கிணறு. நாலைந்து ராட்டினம்.
நம் ராட்டினத்தையும் கயிற்றையும்   நாம்   தான் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.


அப்பா அம்மாவைத் தண்ணீர்  இறைக்க விடமாட்டார். அலுவலகம் கிளம்பும் வரை
முடிந்த பாத்திரம் பண்டங்களில்    எல்லாம் தண்ணீர் நிரப்பிவிட்டுத் தான் போவார்
தம்பிகளுக்கு பத்தும் எட்டும்   வயது
நான் தான் பெரிய மனுஷி.
எனக்கு  ஸ்ட்ரிக்ட் ஆர்டர்ஸ்   போட்டுவிட்டு அப்பா கிளம்புவார்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

33 comments:

ராமலக்ஷ்மி said...

மோட்டர் வசதிகள் வராத காலம். இப்போது ராசி நல்லாயிருக்கட்டும். தொடருங்கள் வல்லிம்மா.

பால கணேஷ் said...

ஆஹா... பழைய நினைவுகளில் மூழ்குவது உங்களுக்கு சுகம். அதைப் படிப்பதன் மூலம் என் மிக இளமைக் காலத்திற்கு நான் சென்று திரும்புவதில் என் மனதிற்கு இதம். தொடருங்கள்ம்மா.

ஹுஸைனம்மா said...

உங்களுக்கு கிணறு போல, எங்களுக்கு அப்போ ‘அடிபம்பு’!! அடிச்சு அடிச்சு கை, தோளெல்லாம் வலிக்கும். இது புழங்குவதற்கு. குடிப்பதற்கு அடுத்த தெருக்களில் நல்ல தண்ணீர்க் குழாய் இருக்கும் வீடுகளில் போய் குடம்குடமாக பிடித்து வரவேண்டும்!!

அது அப்போ கஷ்டமாத் தெரிஞ்சுது. இப்ப வீட்டுக்குவீடு போர் மோட்டார் வந்துடுச்சு. ஆனா தண்ணிதான் இல்லை.

ராஜி said...

எனக்கு தண்ணீர் இறைச்சு பழக்கமிருக்கும்மா. ஆனா, என் பசங்களுக்கு இல்ல. குடம் கூட இடுப்புல வைக்க தெரியலை. அவ்வ்வ்வ்வ்

Yaathoramani.blogspot.com said...

என்னையும் தண்ணீர் தொடர்பான
பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது
தங்கள் பதிவு
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

கிணறும் தண்ணீரும் போன வருஷம் வரை பழக்கமான ஒன்று. இங்கே வந்ததில் இருந்து தான் அதெல்லாம் இல்லை.:))))

திவாண்ணா said...

என்ன இருந்தாலும் அந்த கிணத்துல தண்ணீர் சேந்தி குளிக்கிறப்பா.... ஆ என்ன சுகம்!

வெங்கட் நாகராஜ் said...

இப்பவும் பெரியம்மா வீட்டில் [வீட்டிற்குள்ளேயே] கிணறு இருக்கிறது. வாளியில் தண்ணீர் இழுத்து குளித்தேன் இந்த முறை வந்திருந்தபோது....

இனிய நினைவுகள்... உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்...

வெங்கட் நாகராஜ் said...

இப்பவும் பெரியம்மா வீட்டில் [வீட்டிற்குள்ளேயே] கிணறு இருக்கிறது. வாளியில் தண்ணீர் இழுத்து குளித்தேன் இந்த முறை வந்திருந்தபோது....

இனிய நினைவுகள்... உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொன்ன இடம் எங்கே என்பதை அறிந்து கொண்டேன்... இனிய (?) நினைவுகள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி என் தண்ணீர்க்கதை1976 வரை தொடர்ந்தது. அதுக்குத் தான் ராசி என்று பெயர் வைத்தேன்.;)
உடம்பில் வலு இருந்தது. முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ் மூழ்குவது என்பது சரியான வார்த்தை:) எழுதி முடித்தபிறகும் ஒரே பிரமையாக இருந்தது:) நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள்.தண்ணி இல்லாத காட்டுக்கு நம்மை யாரும் போடாமலயே அங்க இருந்திருக்கோம்:) நானும் தெருக்குழாயில் அடி பம்ப்பில் தண்ணிர் எடுத்துக் கொண்டுவந்திருக்கேன்.அதுவும் திண்டுக்கல்லில் தான். இப்பொழுதும் தண்ணீர்க்கஷ்டம் அங்கெல்லாம் மாறியதோ தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜி. என் பெண்ணுக்குக் கூட இடுப்பில் குடம் நிற்காது.:)காலம் மாறியாச்சு இல்லையா!!நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமணி சார்.இந்தக் கதை மகா நீளம் சுருக்க முடிக்கப் பார்க்கிறேன்.அப்பா அம்மாவுக்குத் தண்ணீர் பிரச்சினை முடிந்தும் அது என்னை மட்டும் தொடர்ந்தது:)

சாந்தி மாரியப்பன் said...

பத்து நாளைக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்த ஒரு காலத்தில் பக்கத்துத் தெருவுல இருந்த கிணத்திலிருந்து தினமும் தண்ணீர் இறைத்துக் கொண்டு வந்த சிறு வயது நினைவுகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது உங்கள் நினைவுகள்.

Unknown said...

தண்ணீர் ராசி பகிர்ந்த ராசி மழையை கொண்டு வந்துள்ளது. தொடருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. உங்களுக்குக் கிணறு இல்லாதது கொஞ்சம் சிரமமா இருக்குமோ.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.இவரோட தாத்தா திருநாட்டுக்கு ஏளின நாளில் கூட கார்த்தால நாலுமணிக்கு கிணற்றுத்தண்ணீரில் குளித்தார். மார்கழில கூட கிணத்துத்தண்ணீர் வெதுவெடுப்பா இருக்கும்னு சொல்வார்.

வல்லிசிம்ஹன் said...

கிணற்றில் தண்ணீர் இறைப்பது நல்ல பயிற்சி, வெங்கட். இன்னும் இந்த அனுபவங்கள் கிடைப்பது அருமை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். ஆகக் கூடி கிணற்றையோ, பம்ப்பையோ நாடிப்போகாதவர்கள் குறைவுதான் என்று தெரிகிறது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.இப்பவாவது திண்டுக்கல் மாறி இருக்கும் என்று நம்புகிறேன்பா. அடையாளம் கண்டதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எல்லாமே மாறியிருப்பதாக போய்வந்தவர் சொன்னார்.

பாச மலர் / Paasa Malar said...

தண்ணீர் படுத்தும் பாடு.....நல்ல ராசி என்றைக்கும் வாய்க்கட்டும்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் இந்திரா. நல்ல மழை. அவ்வளவு தூக்கத்திலும் நான் வரேன் நான் வரேன்னு முழங்கிக் கொண்டே வந்தானே என்று நினைக்கத் தோன்றியது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா பாசமலர்.அமீரகம் ,உங்கள் ஊர் இங்க எல்லாம் அந்தத் தொந்தரவு இல்லை நல்லவேளையாய்!

மாதேவி said...

அந்த நாள் நினைவுகளை மீட்டுள்ளீர்கள்.
நம்ம வீட்டில் வீட்டுக்குள்ளே கிணறு இருந்தது.அப்புறம் பைப் போட்டுவிட்டார்கள்.

அம்மா தனது சிறுவயதில் தெருக்கிணத்தில் குளித்தது பற்றி கூறியிருக்கின்றார்.

இந்தியா வந்திருந்தபோது தண்ணீருக்காக மக்கள் படும் சிரமத்தைப் பார்த்து மனம் வருந்தியிருக்கின்றேன்.

ADHI VENKAT said...

சிறுவயதில் அத்தை வீட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் தோய்த்து குளிக்க வேண்டும். இப்போது கணவரின் பெரியம்மா வீட்டில்....

கோவையில் இரண்டாம் மாடியிலிருந்த எஙகள் வீட்டிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடத்தில் தான் சிறுவாணி தண்ணீர் இறைத்து செல்வேன். 40 குடம் கூட தூக்குவேன். பழக்கம். இப்போதும் திருச்சியிலும் கொள்ளிடம் தண்ணீரை.

ஆனா அம்மா சொல்வாங்க எல்லோரும் இடதுபக்கம் தான் குடத்தை வைத்துக் கொள்வார்களாம். ஆனா எனக்கு வலதுபக்கம் தான் பழக்கம். குழந்தையை தூக்குவதும் கூட...

Ranjani Narayanan said...

அன்புள்ள வல்லி,
தண்ணீர் ராசி பதிவு எல்லோரையும் பழைய காலத்திற்குக் கூட்டிப் போய்விட்டது!
ஸ்ரீரங்கத்தில் பாட்டி அகத்தில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் இறைப்பது எனக்குப் பிடித்த விஷயம்.
இப்போது கிணற்றை மூடி மோட்டார் போட்டு விட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது, முதல் முறை மூடிய கிணற்றைப் பார்த்தபோது!

மனோ சாமிநாதன் said...

அடிப்பம்பை அடித்து தண்ணீர் பிடித்தது, கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்தியது என்று சிறு வயது நினைவுகள் எல்லாம் தொடர்ந்து வந்தன நினைவில்! அழகிய பதிவு!!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி மனோ. நாமாவது பம்ப் பற்றி,கிணற்றைப் பற்றிப் பேசுகிறோம் . வெளினாடுகளில்

பசங்களுக்கு ஒன்றும் தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி ,நாற்பது குடமா. என் ரெகார்டை முறியடித்துவிட்டீர்கள்.>}}

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நலமா அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி. இந்த மழைக்கு கிணற்றில்
தண்ணீர் விளிம்பு வரை வந்ததாம்.