Blog Archive

Friday, March 16, 2012

நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நோம்பு

மார்ச் 14      1974 இல்  நடந்த  நோம்பு

சிறுவயதில்   நோம்பு   கொண்டாடிய  பெண்ணுக்கு
 இந்தக் காலகட்டத்தில்  மூன்று குழந்தைகள்.
அப்பா அம்மா ஊட்டிவைத்த  தெய்வ நம்பிக்கை,  கலாசாரப் பழக்கங்கள்
ஒன்றும் அவளை  விடவில்லை.

திருச்சி மன்னார்புரத்தில்   பால்  காவிரியுடன் கலந்துதான் வரும்.ஒரு லிட்டர்   மூன்று ரூபாய் வீதம் தினப்படிக்கு  மூன்று லிட்டர் பால் வாங்கினாலும் போதாது.

அதை உரை குத்தி வெண்ணெய் எடுக்கவும் கற்றுக் கொண்டாலும்  ஒரு வார  பாலேடு   சேகரித்து  ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டுக் குலுக்கி எடுத்தால்  சின்னக் கிண்ணியினடிமட்டத்தில் எட்டிப் பார்க்கும் வெண்ணெய்.:)

அந்த வருட நோம்பு    சாயந்திர நேரத்தில் வந்ததால்
குளித்து,வீட்டைச் சுத்தம் செய்து  தெய்வங்களின் படங்களுக்கு மலர்கள் சார்த்திவிட்டு,
காரடை செய்ய  ஆரம்பித்தாள்   ஆண்டாள்.
முதல்நாளே ஊறவைத்து இடித்த அரிசி  கொஞ்சம் கரகர என்றுதான் இருந்தது.

குழந்தைகள் பள்ளியிலிருந்து வருவதற்கு முன்னால்
செய்து முடித்தால்  நோம்பு அமைதியாகச் செய்து முடிக்கலாம் என்று
அவசரமாகச்  செயல் படும்போது  ,காஸ் தீர்ந்துவிட்டது.
அப்போதெல்லாம் ஒரே ஒரு காஸ் சிலிண்டர்தான்.
  ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்க வேண்டும். வீட்டில்   தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது.

இதை எதிபார்த்து தயாராக வைத்திருந்த     ஜனதா ஸ்டவ்வை ஏற்றி
  இலுப்பச்சட்டியில்  ஏற்கனவே ஊறவைத்திருந்த  காராமணியை

வேகவைத்து எடுக்க அரைமணி.   ஆச்சு. அதற்குள் மாடிப்படிகளில்
குழந்தைகளின்   ஷுக்கள்   சத்தமும், அம்மா  என்ன பண்றே, ஏன் வாசலில் கோலம் போட்டு இருக்கு?
இனி வேலை ஆன மாதிரிதான் என்றபடி

கொண்டுவந்துவிட்ட ஆயாவை நோக்கினாள்.
மூணு மணிக்கே  மணி அடிச்சுட்டாங்கம்மா.
சின்னவரு  ஓடப் பார்த்தாரு. நான் தான்  பிடிச்சாந்தேன்  என்று   அலுத்துக் கொண்டாள்  இமாமி   (நம்புங்கள் அதுதான் அந்த அம்மா பேரு)
பெரியவன் மெதுவாக வந்து ,ஷூக்களை அவிழ்த்துவிட்டு
கைகால்களை அலம்பிக் கொண்டு
மௌனமாக வந்து நின்றான்.
பசி:)
பெண்குதித்துக் கொண்டு வந்தது. அம்மா பாவாடை போட்டுக்கறேன்.
உனக்கு எல்ப்  எதாவது வேணுமா. ஹால் எல்லாம் பெருக்கட்டுமா.
மாவிலை வேணுமாமாம்மா''என்று ஓடிய வண்ணம் இருந்தாள்..


ஒண்ணும் வேண்டாம் கண்ணா, மாமரத்துல பூச்சி இருக்கு
நான் முன்னாலியே  சுந்தரத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லிவிட்டேன்.

சாப்பிட என்னமா இருக்கு.

டோஸ்டும் பாலும் போதுமா  என்றவாறு  தட்டுகளில்  ரொட்டித்துண்டுகளையும்  ஆளுக்கொரு    ப்ரிட்டானியா பிஸ்கட்
பொட்டலங்களையும் பாலையும் வைத்துவிட்டு,
சாப்பாட்டு மேஜையைவிட்டு நகர்ந்தாள்.
எப்பவோ அவசரத்துக்கு வாங்கிய பஜாஜ் ஹாட்ப்ளேட்டில்

தட்டையான    வாணலியை வைத்து மாவுகளைக் கிளறி வைக்க
அரைமணி பிடித்தது.
இட்லி குக்கரில்  விசில் வரவும்  கீழே  கணவரின்   ஃபியட் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும்  சரியாக  இருந்தது.

டாடி டாடி என்று  குழந்தைகள் கீழே ஓடிவிட்டன. என்னடா  இன்னிக்கு. அம்மா கோலமெல்லாம் போட்டிருக்கா.
மஞ்சள் கயிறு ஃபங்ஷன் பா  பெரியவன் விளக்கினான்.

ஓ. !!உங்க அம்மா  பயங்கர மூட்ல இருப்பாளே'
நான் வேணா  இங்க ஒளிஞ்சுக்கட்டுமா

அய்ய  இல்லைப்பா. காஸ் இல்லாமைலியே அம்மா எல்லாம் செய்தாச்சு.
ஆனா எல்லாருக்கும் இரண்டு இரண்டு ஸ்வீட் தான் கிடைக்கும்.த்சு! என்று பெண் உதட்டைப் பிதுக்க.
ஆஹா அப்படியா சேதி.. சரி நானும்  அண்ணா ,சின்னவன் குட்டி  ரெண்டுபேரும் ஒரு ரவுண்டு போய்விட்டு வரோம்.
அதற்குள்
நீங்கள் சரடெல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாக இருங்கோ.
நாமெல்லாம் கல்லுக்குழி ஆஞ்சனேயரைப் பார்த்துட்டு வரலாம்  என்றது கார் கிளம்பிவிட்டது.
மாடி டெர்ரஸ் வழியாக அவர்களுக்குக் கையாட்டிவிட்டு
மிச்ச  புனஸ்காரங்களையும் முடித்தாள் ஆண்டாள். பெண்ணும்சமத்தாகத் தன் புது  கவுனைப் போட்டுக் கொண்டு வந்தது.

கேள்வியே கேட்காமல் அம்மா சொன்னது எல்லாம் செய்தது.

நம்ஸ்காரம் செய்து எழுந்திருந்து வெளியில் போனவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
வீட்டு எஜமானருக்கு  நமஸ்காரம் செய்ய வேணுமே.
ஒன்பது கஜத்தை இழுத்துவிட்டுக் கொள்வதிலியே
பாதிநேரம் போனது ஆண்ட்டாளுக்கு.
பத்துகஜம் என்றால்  சும்மாவா.:)

வந்தாச்சு வந்தாச்சு என்ற பெண்ணின் குரலைக் கேட்டு எழுந்து aவர்களுக்கும் காரடைகளையும் வெண்ணெயையும்
எடுத்து வைத்தாள்.

என்ன ஆண்டாள் மாமி ஒரே ஆசாரமா  ;) என்ற கிண்டலுடன் நுழைந்த கணவரை முறைத்தாள்.
காஸ் கிடையாதுப்பா. நாளைக்கு டிபன்  பவானி  லாட்ஜ்லதான்.

''இப்ப எல்லாம் இருக்கு இல்லையாம்மா. சமாளிச்சுக்கலாம்.
நாளைக்கு எட்டு மணிக்கு  சிலிண்டர்  சுந்தரம் கொண்டுவந்துவிடுவான்.''
சரி இப்ப கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.;)
ஆளுக்குப் பத்துரூபாய் கிடைத்தது.
பெண் இருபது ரூபாயையும் எடுத்துக் கொண்டு தன் உண்டியலில் போட்டுக் கொண்டது.

இப்படியாகத்தானே இன்னோரு யாகமும் முடிந்தது.
மங்களம் எங்கும் தங்குக.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

15 comments:

பால கணேஷ் said...

எழுதி வைத்த பதிவு காணாவிட்டால் என்ன... நிலவே கவிதை சொல்லி விட்டதே... அருமைம்மா!

சாந்தி மாரியப்பன் said...

ஒரு வேளை எழுதி வெச்ச பதிவும் நிலா பாக்க வெளீயே உலா போயிருக்குமோ :-))

ஆச்சி ஸ்ரீதர் said...

rendu padangalum alaku.

வெங்கட் நாகராஜ் said...

நிலவுக் கிட்ட கேளுங்களேன்... :)

ஒரு உலா போயிருக்குமோ...

வல்லிசிம்ஹன் said...

படம் போட்டால் பதிவும் வரணும்.அதனால் இன்னிக்குப் புதிதாக எழுதிவிட்டேன் கணேஷ்.:)

மாதேவி said...

நோன்பை விவரித்த விதம் அழகு.

உங்கள் நோன்பில் நேரடியாக கலந்துகொண்ட உணர்வு ஏற்பட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை பகிர்வு அம்மா !

வல்லிசிம்ஹன் said...

நிலவு கதையும் சொல்லிவிட்டது.
நன்றி கணேஷ்.

வல்லிசிம்ஹன் said...

இருக்கும் இருக்கும் சாரல்:0)
மீண்டும் உள்ளவந்து கதைபடின்னு இழுத்துக் கொண்டு வைத்துவிட்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்திருமதி. பாப்பா நலமா
இன்னிக்கு வேற படங்கள் போட்டு இருக்கேன் பா.

வல்லிசிம்ஹன் said...

அதைத்தேடச் சொல்லி என் கணினி கிட்டச் சொல்லியும் பயனில்லை. சரியான ரன்னர்.:)

பவர்கட் இருக்கு. காத்துவாங்கக் கூடப் போயிருக்கலாம்:)
அதுக்குப் பதிலா ரெண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்பா. நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

பக்கத்தில இருந்தா உங்களையும் அழைத்தே நோம்பு செய்திருக்கலாம் மாதேவி. மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தனபாலன்.நோம்பில் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

Vetirmagal said...

நோம்பு அடை சாப்பிடணும்னு ஆசையா இருக்கப்பா! டாக்டர் கோச்சுப்பாரா?

அருமை!

வல்லிசிம்ஹன் said...

டயபெடிஸ் இருக்கிற நானே ரெண்டு எடுத்துக் கொண்டேன். வெல்லம் தானே
சாப்பிடலாம்பா.
சென்னையிலா இருக்கீங்க. செய்து வேணா கொடுக்கறேன்.:)