Blog Archive

Monday, November 22, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும்..3

அந்தக் கதை பரத்தின் அம்மாவைப் பொறுத்த வரை கண்டிப்பாக ஒரு திருப்புமுனை.
தினசரி சண்டைகள்,பட்டினிகள்,வேலை இழப்பு, 

 உறவினர்கள் வந்தால்
அவமானம் எல்லாவற்றையும் தாண்டுவதற்கான   பொறுமையை அவள் பயிற்சி செய்து வந்தாள்.  குழந்தை பரத்தின் நிலைமைதான்  அவளை மிகவும் வருத்தியது.
எப்பவும் சந்தோஷமாக விளையாடும் அப்பாவை  கிட்டத்தட்ட   மறந்தே விட்டான்.
அப்பா ஒரு பயம் தரக் கூடிய  உருவமாகத் தான் தெரிந்தார்.
மாமாவீட்டில் போய் இருக்கவும் அவன் கவுரவம் இடம்
கொடுக்கவில்லை.
.
அம்மா சொல்லித்தந்த கந்தசஷ்டிக் கவசம்
சொல்லும்போது கூட   மது வாசனை வந்தால் அவனால் தியானம் செய்ய முடியாமல் போகும்.
சிநேகிதர்களை  வீட்டுக்கு அழைத்து வரவும் தயக்கம்.
அப்பா எந்த நிலைமையில் இருப்பாரோ என்று. முடிந்த வரை அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாடப்  போய்விடுவான்.
இப்படியே பதினைந்து வரை கடந்துவிட்டான்.
அந்தக் சமயத்தில்தான் பரத்தின் அம்மா  சென்னையில்
நடக்கும்  மறுவாழ்வு மையத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு
அங்கு செல்ல  ஆசைப் பட்டாள். கணவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே.!
இன்னும் அவன் தான் ஒரு ஆல்கஹாலிக் என்பதையே ஒத்துக் கொள்ளவில்லை.
நான் என்ன  பாதையில் விழுந்து கிடக்கிறேனா.
வீட்டிலேயே என்  ஏஜென்சி நடத்துகிறேன்.
நஷ்டமாக இருந்தாலும்,,,,, நாமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதானே
இருக்கிறோம்.
இதெல்லாம் அவனது வாதம்.

அந்தச்  சாப்பாடு எப்படியெல்லாம் வருகிறது என்று பரத் அம்மா மட்டுமே
அறிந்த உண்மை.
 தன் அப்பாவுக்கு எழுதிப்போட்டுக் சில நாட்கள்
பணம் வரும். சில நாட்கள் தம்பியின் தயவில்.
சிலநாட்கள் ,
திரு கிறிஸ்டோபரின்    வண்டியில் வந்து இறங்கும்.
எத்தனை நாட்களுக்கு இது சரிப்படும் என்று நினைத்த
பரத்தின் அம்மா ,அவனது பத்தாம் வகுப்பு முடிந்ததும்,
தன் கணவனை அணுகி , எனக்காக ஒரு தடவை சென்னை வாருங்கள் .
என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
துணைக்கு என் தம்பி வருவான்.
என் மாமாவின் வீட்டுக்குப் போய் இறங்கலாம்.
இரண்டு மூன்று நாளைக்காவது நீங்க  கொஞ்சம்   கண்ட்ரோலில்   இருக்கணும்.

இது நடக்கவில்லையானால் உங்களை சைக்கிட்டியாரிஸ்ட் கிட்ட தான் அழைத்துப் போக வேண்டும்.
அவரிடம் பேசிவிட்டேன்.
மூளைக்குப் போகும் நரம்பு மண்டலத்தில் சின்ன ஆப்பரேஷன் செய்தால்
சரியாகிவிடும். சைட்  எபெக்ட்ஸ் எல்லாம் இருக்குச் சந்தர்ப்பம் உண்டு என்று
சொன்னார். மனசைத் திடமாக்கி இந்த விவரங்களை   அவள் சொல்லும்போது 
சில்லென்ற பயம் புகுந்தது பரத்தின் அப்பாவுக்கு.
இல்லை இந்த கவுன்சிலிங் சென்டருக்கு  வருகிறேன்.
இரண்டு நாள் ! நாம் திரும்பி விடவேண்டும்.!

குலதெய்வம் முருகனை  வேண்டி அவர்களது சென்னைப் பயணம் ஆரம்பித்தது.
சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடியாத
கணவனை, அவனது உளறலையும், பரத்தின் கண்ணீரையும் சகித்துக் கொண்டு சென்னை வந்து இறங்கினாள் பரத்தின் அம்மா.
மாமா வீடு வருவதற்கு முன்பே வழியில் தனக்கு வேண்டிய மதுவை வாங்கினவனைக் கண்டு மனம் தளராமல்,
மாமா வீட்டுக்கு வந்தார்கள்.
அதிசயமாக  மாமா கண்டு கொள்ளவில்லை. அவர் மிலிட்டரியில் இருந்தவர்.
இது போல என்ன என்ன பார்த்திருப்பாரோ.!
அவருடன் ஒரு சிநேகிதரும் இருந்தார்.
பரத்தை உள்ளே போகச் சொல்லிவிட்டு இவர்களை நிறுத்தினார்.
அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கணவன் நின்றதுதான் பரத் அம்மாவுக்கு அதிசயமாக இருந்தது.
எதோ பாரம் இறங்கியது போல உணர்ந்தாள்.
கட்டுக்கு அடங்காமல் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மாமியைப் பார்க்க
உள்ளே சென்றாள்.  மாமி அவளை ஆசவாசப் படுத்திக் கவலைப் படாதம்மா
மாமாவோட சிநேகிதரும் 
குடிப் பழக்கத்திலிருந்து  மீண்டவர் தான். அவருக்கு எப்படிப் பேசுவது,அழைத்துப் போவது எல்லாம் தெரியும்.
குளித்துவிட்டு வண்டி ஏறுங்கள் . மியூசிக் அகாடமி பக்கத்தில் சாந்திரங்கனாதன் என்ற பெண்   இந்த மாதிரி சென்டரை ஆரம்பித்திருக்கிறாள்.
அவள் சொல்கிறபடி செய்யுங்கள் என்று நால்வரையும் வீடு வண்டியிலயே அனுப்பி வைத்தாள்.
இது ஆரம்பம்தான்.
முதலில் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தனியார் மருத்துமனையில்
உடலில் இருந்த  டாக்சின்ஸ்   எல்லாம் வெளியேற்ற ஏற்பாடு நடந்தது.
அது முடிந்து டாக்டர் ஒருவரின் தெரபி
ஆரம்பித்தது. அங்க இருந்த 6 நாட்களும்  குழந்தை பரத்
பெற்றோர் இருவருக்கும் ஒரு தூக்க முடியாத
டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு வருவான். அதுவும் இரண்டு
பஸ்கள் ஏறி இறங்க வேண்டும்.
பரத் அம்மாவின் வேதனை சொல்லி முடியாது. பெற்றது ஒரு பிள்ளை. அதற்கு இப்படி ஒரு நிலைமை வந்ததே.
பதினைந்து வயது  என்றாலும்  போஷாக்குப் போதாதால் 
நறுங்கலாக இருப்பான். கைகள்  சிவக்க வெய்யிலில் அவன் வரும்
கோலம்  அம்மாவை இன்னும் வருத்தும்.
அம்மா அப்பாவுக்குக் சரியாகிடுமாம்மா
என்று கேட்பான்.
இதற்கப்புறம்   நான்கைந்து  தடவை சிகித்சை எடுத்துக் கொண்டபிறகுதான் ஒரு தெளிவிற்கு வந்தார் அப்பா.  வயது  நாற்பத்தைந்து.
முருகன்  கண் திறந்தான்..
அரபு நாடுகள்   ஒன்றில்  பைனான்ஸ்  கம்பனியில் வேலை கிடைத்தது.
அதிசயத்திலும் அதிசயம் அதற்குப் பிறகு பரத்திற்கு ஒரு தங்கையும் பிறந்தாள்.!

பரத்தும் வெளிநாடு  போய்ப  படித்துவந்து சென்னை தனியார் 
அலுவலகத்தில்  வேலைக்கு அமர்ந்தான். 
முப்பது வயது இருக்கும்போது   தன்னுடன் வேலை பார்த்த பெண்ணையே  
திருமணம் செய்ய ஆசைப்பட்டான்.
பரத்தின் மாமா  எல்லாம் விசாரித்து தலை அசைத்தார்.
மருமகளும் நல்லவளாக அமைந்தாள்.

பரத் தன் மாமா  மாமியைத் தன்னோட வரவழைத்துக் கொண்டான்.
இவ்வளவு பெரிய  கதையை , இந்தப் பரத் என்னும் குழந்தை தன் அப்பாவின் அன்பை எப்படி  தொலைத்தது. மீண்டும் கிடைக்கப் பெற்றாலும்  ஒட்டாமல் போனது   எல்லாம் உங்களுக்கும் எனக்கும் புரியும்.பரத்தின் மனைவிக்குச் சொல்வது அவ்வளவு எளிதில்லையே .தனக்குக் கிடைக்காத சலுகையும் செல்லமும் பரிவும்,தன் மகனிடம் காண்பிக்கிறான். அவ்வளவுதான். இன்னொரு குழந்தையும் பிறந்தால் ,  இதுவும் மாறலாம்:)
 தொடரும்  




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, November 20, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும் பயிரும்..2


நிலவும் வானும் நிலமும் பயிரும்


++++++++++++++++++++++++++++++++++++++++

10:42 AM 11/20/2010

இந்தக் கதை-சம்பவத்துக்கு அடிநாதம் ஒரு குடிப் பழக்கம் கொண்டிருந்த தந்தை.



அவர் பெயரெல்லாம் அவசியமில்லை. பாதிக்கப் பட்டவன் பரத். அவனுக்கு இப்போது தந்தையும்


அன்னையுமாக இருப்பவர்கள் அவனது மாமாவும் மாமியும் தான்.

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.



தூத்துக்குடியில் குடும்பம் நடத்திவந்த பரத்தின்

பெற்றோர்கள்,நல்லதொரு கம்பெனியின் ஆதரவில் ஆநந்த

வாழ்க்கை நடத்திவரும் போது நடுவில் வந்த வழக்கம்

இந்த மது அருந்துவது.

தூத்துக்குடியில் ஒரு செல்வந்தர் பரத்தின்

அப்பா அலுவலகத்தின் வாடிக்கையாளர்.



எப்பவும் எந்த விசேஷமாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலிருந்து வண்டி வந்து

இவர்களை அழைத்துப் போகும்.

வேற்று மதத்தினராக இருந்தாலும் வித்தியாசமெல்லாம் கிடையாது.

அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தன.



இன்னும் இரண்டு மூன்று தோழர்கள் சேர்ந்து கொண்டால் நேரம் போவது தெரியாது.

சீட்டுக்கட்டும்,மதுவும், மற்ற சகலகொறிக்கும் பண்ட்ங்களும் சேர்ந்து கொண்டு

முதலில் சந்தோஷமாகத் தான் கழிந்தது.



பரத்தின் அம்மா சைவம் என்பதால் அவளுக்குத் தோசையும்,ஊறுகாயும்

தயிர்சாதமும் அழகாக அலங்கரிக்கப் பட்ட தட்டில் வந்துவிடும்.

அந்த வாடிக்கையாளர்...க்ரிஸ்டோஃபர், வந்து பரத்தின் அம்மா சரியாகச் சாப்பிடுகிறாளா


என்று பார்த்துவிட்டுத் தான் போவார்,.

நல்ல மனம்.அவரது மனைவி குணவதி அம்மாளும் அப்படியே. அவளும் வயதில் பெரியவள் தான்.

ஆனால் அசராமல் கணவரின் விருந்தினர்களை முகம் சுளிக்காமல்

கவனிப்பாள்.

ஒரு இரு வருடம் இதுபோல் ஓடியது.

பரத்தின் தந்தைக்குத் திருநெல்வேலிக்கு மாற்றல்.



இதற்குள் க்ரிஸ்டோபருடனான நட்பு மிகவும் வலுத்துவிட்டது. உண்மையிலியே

மிக்க அன்பு பூண்ட நண்பர்கள் ஆனார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்.

பரத்தின் தந்தைக்கு மது இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியவில்லை.



சம்பளப் பணத்தில் அழகாக ஓடிக் கொண்டிருந்த

குடும்பம் கடன் தொல்லைக்குள் மாட்டியது.

திடீரென முன்பின் சொல்லாமல் வந்த க்ரிஸ்டோஃபர் நண்பனின்

நிலை பார்த்து அதிர்ந்து போனார்.

என்னம்மா மகளே, எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா.

நான் அந்நியமாகிவிட்டேனா.'என்று வருத்தப் பட்டவர்

பரத்தின் அப்பாவைக் கையோடு

தன் ஊருக்கு அழைத்துப் போனார்.

அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்க வைத்து,

அவரைத் தெளிய வைத்து

மீண்டும் திநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார்.



அங்கிருந்தே பரத்தின்(அப்பாவின் பெற்றொர்) தாத்தா பாட்டிக்குத்

திருச்சிக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி

உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தார்.

அவர்களோ இது போன்ற விஷயங்களில் தெளிவில்லாதவர்கள்.

தானாகச் சரியாகிவிடும். தங்கள் மகன்

அப்படிப்பட்டவன் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்கள்.



அந்த நிலைமையில் தான் பரத்தின் அப்பாவுக்கு

அளவுக்கு மீறின போதையில் கார் ஓட்டும்போது,

ஒரு மரத்தில் மோதின விபத்து நிகழ்ந்தது.



குழந்தை பரத்திற்குப் பன்னிரண்டு வயது.

நல்லவேளையாக அடியேதும் இல்லாமல் அவன் தந்தை தப்பித்தாலும்

அவரைச் சரிசெய்து வீட்டுக்கு அழைத்து வர

இப்போது இருக்கும் மாமா ரகுநாதன் தான் உதவினார்.

போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டு



அதற்கு மேற்பட்ட உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு

பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூருக்குத் திரும்பினார்.

அவர் வேலை,சொந்த வீடு,மனைவி மகள்,மகன்

எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.



திருப்புகழ்,முருகன்,கோவில் இதுதான் அவருக்கு எல்லாம்.

தங்கை கஷ்டப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை.

எங்களோடு வந்துடுமா,நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.



பரத்தோட அம்மாவுக்குத் தன் கணவனின் மேலிருந்த அன்போ

கரிசனமோ குறைந்ததே இல்லை.



அந்த நிலைமையில் தான் சிவசங்கரி அம்மா எழுதின

ஒரு மனிதனின் கதை'' படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.






  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, November 18, 2010

நிலவும்வானும் நிலமும் கதிரும்......1


'எப்ப பார்த்தாலும் அப்பா அப்பா!!''


நான் மனுஷியாத்தெரியலையா உனக்கு?

பேரனைக் கடிந்துகொண்ட மருமகள் சுதாவைக்

கவலையோடு பார்த்தாள் மாலதி.

'விட்டுடும்மா அவனை. மாதத்துக்கு 20 நாள் பரத்

ஊர்ல இருக்கிறதில்ல. குழந்தைக்கு அப்பா மேல

ஏக்கம் வரத்தானே செய்யும்..'

இல்ல அத்தை இதுக்கு அவரும் ஒரு காரணம்.

எப்பவும் இவனோட விளையாடறது, வெளில

அழைத்துப் போவதுன்னு இங்க இருக்கிற

நாட்களைச் செலவழிக்கிறார்.என்னிடம் கூட  நிறைய நேரம்  எடுத்துப் பேசறதில்ல

அதுதான் அவர் ஊருக்குக் கிளம்பும்போது, இவனைச்

சமாதானத்துக்குக் கொண்டு வரது படு சிரமமா இருக்கு.

அலுப்புமா... நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்,

இவர் கொஞ்சம் அதீதமாப் பிள்ளையைக் கொண்டாடிக்கிறார்.



பாட்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த

ரஞ்சன் ஓடித் தன் அறைக்குப் போனான்.

நான் ஸ்கூலுக்குப் போமாட்டேன்.

அப்பா வந்ததான் போவேன்.

அழுகைக் குரலைக் கேட்டதும்,மாலதியின் மனம் இளகியது.



ஐந்து வயதுக் குழந்தையை இப்படிக் கணவனும் மனைவியும்

பங்கு போட வேண்டாமே என்ற வருத்தம் மேலிட்டது.

தன் மகனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதை மருமகளை உணர வைக்கப் பழைய கதையை எல்லாம்

அலச வேணுமே என்ற மன அழுத்தம் தோன்றியது.



மெரினாவுக்கு நடக்கப் போயிருக்கும் கணவர் வரும்

வரைப் பேரனோடு செஸ் விளையாடி அவன் மனத்தை மாற்றினாள்.

அவருடன் பேசி இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்

குழந்தை கஷ்டப் படக் கூடாது இப்படி ஓடியது அவள்

சிந்தனை.



சொல்லிவைத்தாற்போல் கதவு திறக்கும் சத்தம்

கேட்டதும் ரஞ்சன் தாத்தாவைக் கட்டிக் கொள்ள

ஓடிவிட்டான்.

என்ன ராஜா, என்ன செய்யறே முகமெல்லாம் சிவந்திருக்கு

என்றபடி அவனை அணைத்துக் கொண்டார் ரகுநாதன்.



அவருக்குப் பருக பழரசத்தைக் கொண்டு வந்த மாலதி

'நீங்கள் வெளியே போகும் போது குழந்தையை அழைத்துப் போகணும்.

சின்னதுதானே,போரடிக்கிறது அவனுக்கு.

எங்க அவன் கொண்டு வர வீட்டுப்பாடம் முடிஞ்சத்தானே


அவன் அம்மா வெளியிலியே விடுவாள்,நம்ம காலம் மாதிரியா

என்று சிரித்தவண்ணம் சாயந்திரவேளை விளக்கு

வழிபாடு செய்யச் சித்தமானார் ரகு. நிரஞ்சனா!

நீயும் தாத்தாவோட ஸ்வாமி நமஸ்காரம்

செய்யறியா என்ற வண்ணம் அவனை

அழைத்துப்போனார்.

கொஞ்சம் அமைதி கண்டவனாக ,ரஞ்சனும்

சென்றான். மாமியாரும் மருமகளும் கொஞ்சம்

ஓய்வாக அமர்ந்து இரவு சமையலை முடித்து

தாத்தாவும் பேரனும் வந்ததும் சாப்பிடத் தயார் ஆனார்கள்.

மீண்டும் ஆரம்பிக்கப் போன மருமகளைக்

கண் காட்டி நிறுத்தினாள் மாலதி. வயிறு ரொம்பக்

குழந்தை சாப்பிடட்டும்,நானும் அப்பாவும் உன் கிட்டப்

பேசணும் என்று சைகையில் சொன்னாள்.

பள்ளியில் நடந்ததை எல்லாம் தாத்தாவிடம்

சொல்லிவிட்டுச் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தது குழந்தை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள்
வாழ்த்துகள். இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும்,பயம்களையும் ,  
நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும்   ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, November 15, 2010

நவம்பர் பிட் போட்டிக்காக


புர்ஜ் கலீஃபாவில் இருந்து எடுத்த சூரிய அஸ்தமனப் படம்

அமெரிக்காவில் ஒரு வீதி

நம்ம மெரினாவேதான்

துபாயில் ஒரு மால்



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, November 12, 2010

கந்தா,முருகா கதிர்வேலவனே

இந்தப் பதிவுக்கு முந்திய சூரசம்ஹாரப் பதிவில்


வழமையாக இடம் பெறும் வாசகம் விட்டுப் போனது.

தமிழ்மணத்தில் பதிப்பதும் சிரமமாக இருந்தது.

எல்லாம் முருகன் மனம்.

இப்போது சரியாகிவிட்டது வலைப்பூ.



அன்பு ஸ்ரீராம் குறிப்பிட்டது போல ''எத்தனை குறைகள்

எத்தனை பிழைகள் எத்தனை செயினும்

பெற்றவன் நீ குரு



பொறுப்பது உன் கடன்.

முருகா சரணம்.

குறையை நிவர்த்தி செய்வதும் உன் பொறுப்பு.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, November 11, 2010

துள்ளி வருகிறது வேல்!

எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி

ஏதாவது உண்டு என்றால் அது தெய்வ சக்தி

அசுரனை வெல்வதுதான்.

அதிலும் இன்றைய சூரசம்ஹாரக் காட்சிகள் அருமையாக

விவரிக்கப் பட்டு மனசுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது.



ஒரு பக்கம் முருகனைத் தொழும் ஆனந்த நீலக் கடல்

மறுபுறம் முருகனின் ஒளி வீசும் அழகைக் காண வந்த பக்திக் கடல்.



முதலில்சூரனின் இரு தம்பியர்களையும் வதைக்கும் அழகே அழகு.

கஜமுகசுரனன்ம் ,தாருகாசுரனும் மேலும் கீழும் நடை போட,

முருக வேள், கையில் அன்னைதந்த வேலும் முகத்தில் முறுவலும்

கொப்பளிக்கக் காத்திருந்த எழில்.

மக்களின் ஆரவாரம்.



இறுதியில்சூரபத்மனும் வந்தான்.

சரவெடி கொளுத்தப்பட்டது. முருகனின் கைவேல்

அவனுடலைத் தொட அவன் தலை சாய்ந்தது.



மயிலாகவும் சேவலுமாக மாறிக் களிப்படைந்தான் சூரபத்மன்.

எதையும் அழிக்காத அஹிம்சாவாதி முருக வள்ளல்.

தீமையை அழித்து நல்ல ஆத்மாக்களாக மாற்றிய

கதையைச் சொன்ன முனைவர்களுக்கும், ஒவ்வொரு வருடமும் தவறாமல்



ஷஷ்டி விரதத்தின் ஆறாவது நாளை,சூரசம்ஹாரத்தைப் பக்தி

சிரத்தையோடு ஒளிபரப்பும் பொதிகைக்கு நம் நன்றி.



திருச்செந்தூர் வேலா,

தேவயானை வள்ளி மணாளா

எம்மைக் காப்பாய்.
என் உரையில் தவறு இருக்க வாய்ப்புண்டு.
பொறுத்தருளணும்.

Tuesday, November 09, 2010

மழலைகளின் சாம்ராஜ்யம்


நம் தீபாவளி வார நாளில் வந்தது.


எங்கள் குழந்தைகள் இருக்கும் இடங்களில் சனிக்கிழமைதான்



எல்லா வைபவங்களும்.

பெரிய பேரனுக்காக பக்கத்துவீட்டு வெடிச் சத்தங்களை

தொலைபேசியில் கேட்க வைத்தேன்.



தாத்தா கையிலியே வெடி வைத்துக் கொண்டு

வெடிப்பாரா பாட்டி என்று கேட்டான்.

''அப்போ எல்லாம் வெடி வெடிப்பது ஜாக்கிரதையாகத் தான்

செய்வோம்பா. தாத்தா ஓரிரண்டு சின்ன வெடிகளை

அப்படி வேடிக்கைக்காகத் தூக்கிப் போடுவார்.

இப்ப அதெல்லாம் செய்யக் கூடாதும்மா''என்று

எச்சரித்து வைத்தேன்.:)



அவர்கள் ஒரு பத்துப் பதினைந்து அந்தக் காலனியில்

ஒன்று சேர்ந்து கொண்டாட நினைத்த பட்டாசு

வெடிக்கும் கும்மாளத்தை மழையும் பனியும் வந்து கெடுத்துவிட்டன.

அதில் ஒரு தம்பதியாரால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவில்

இருக்கும் ஒரு வயதானஅத்தை இறைவனடி அடைந்ததால் அவர்களால்

வர இயலவில்லை.

சின்னவனுக்கு அந்த ஆந்டியை ரொம்பப் பிடிக்கும்.

அம்மாவை நச்சரித்திருக்கிறான், ''ஏம்மா வரல லக்ஷ்மி ஆந்ட்டி''என்று.

ஏதோ முடியவில்லைமா என்று அவன் கவனத்தைத் திருப்பி இருக்கிறாள்.
அவன் சும்மா இருப்பானா.மற்ற தோழர்கள் தோழிகள்
உடன் கலந்து விளையாடி விஷயத்தை வாங்கிக் கொண்டான்.

அடுத்த நாள் பெண்ணும் மாப்பிள்ளையும் லக்ஷ்மி

ஆந்ட்டி வீட்டுக்குப் போய் விசாரித்து

விட்டு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது,

பெரியவன் 'ஏம்மா தே ஆர் ஓகெ நோ?'

என்று கேட்டபோது, பெண் 'நேத்திக்கே அவர்கள் விருந்துக்கு

வரவில்லையேமா நீ பார்க்கவில்லையா.''

என்று கேட்டதும்,

சின்னவன் உள்ளே புகுந்து''அண்ணா ஒண்ணுமே பார்க்கலைமா''

தீபக்கோட வளவளான்னு பேசினான்''என்று ஓடிக்கொண்டே சொல்ல

இவர்கள் சிரிப்புக்கு நடுவில் அவர்கள்

பெரியவனுக்கு அவர்கள் வீட்டு, நடந்த துக்க சமாசாரத்தை விளக்க

முற்பட்டதும்,பெரியவன் அந்த உறவு முறை புரியாமல் விழித்திருக்கிறான்.

சின்னத் துடுக்கு உடனே' '' Anna!, V.K.uncle's very old athai gone forever''

so they could not come'' என்று அண்ணாவுக்கு

விளக்கம் சொன்னானாம்.:)

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தூக்கிவாரிப் போட்டு இருக்கிறது.
உனக்கு யாரு சொன்னா? என்று கேட்டால், மனு(அந்த வீட்டுப் பெண்)
தான் சொன்னா.

ஓல்ட் பிப்பில் கோ டு காட் மா''

என்று மீண்டும் விளையாடப் போய்விட்டானாம்.!!


















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, November 07, 2010

பொசல் வருது:)




''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.

செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,கொத்துக்கடலை அரைக்கிலொ,

பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்

எல்லாம் நிறைய

வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.



அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!



ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,

நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொனிருக்கும்போதே

மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.

வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ

வரும் சாரலை அனுபவத்தபடி, தன் ஈசிச்சேரில் சாய்ந்தபடிக் கையில் இருக்கும்

கருங்குயில் குன்ற கொலையை நான்காவது தடவையாக ரசித்துப்

படித்துக் கொண்டிருப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,நறுக்கி,

உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துப் பிரட்டித் தடவிய

பச்சை ஆப்பிள் துண்டுகளும் இருக்கும்.



பக்கத்திலியே எங்கள் பசங்களும்,அவர்கள் தோழிகள் தோழர்கள்செஸ்,காரம்போர்ட்

விளையாடிக் கொண்டும் மாடிக்கும் கீழுக்குமாக

ஓடி விளையாடிக் கொண்டும் இருப்பார்கள்.

இரண்டு நாட்கள் முழுவதும் ஒருதடவை மின்சாரம் இல்லை. 1977 என்று நினைக்கிறேன்.



மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர்

இறைத்தது நினைவில் வருகிறது.!



இந்தத் தடவை ஜல்'' சூறாவளி ஏழைகளை வாட்டாமல், யாரையும் நோகடிக்காமல்

உலகம் நலம் பெறப் பெய்துவிட்டுப் போக வேண்டும்.
Posted by Picasa