Blog Archive

Friday, May 28, 2010

மீண்டோம் சென்னை...

 
மதிய தூக்கத்துக்குப் பேத்தி தயார் ஆனதும் ''பாப்பா ,அப்புறமா பார்க்கலாம்' என்று பயந்துகொண்டே சொன்னோம். ''நின்னி தாச்சி.ஈவனிங் வவ்வா'' என்று அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)

சத்தம் போடாமல் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்.
இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகுமே என்கிற மனக் கிலேசம், எல்லாம் கலந்து
எங்களை மௌனமாக்கியது.

வெளியில் வந்து கண்கூசும் ,சுட்டெரிக்கும் பாலைவெய்யிலைக் கண்டதும் ,ஆளைவிடு !
சென்னை இதற்கு எவ்வளவோ தேவலை என்று விமான நிலையம் வந்தடைந்தோம்.
அதி நவீன புதிய டெர்மினல்.வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லாத போர்டிங் ரொடீன்.

212ஆம் எண் கொண்ட எமிரெட்ஸ் வாயிலுக்கு வந்ததுதான் கையில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தது.
உடனெ வீட்டு எஜமானர் நான் வாங்கி வரேன்,நீ வேணுமானால் ட்யூட்டி ஃப்ரீல ஏதாவது வாங்கிக் கொள் என்றதும், பழைய அனுபவங்கள் காரணமாக நான் நாற்காலியை விட்டு நகரமாட்டேன், நீங்கள் போய் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அவரும் போனார். போனார்.போனார்.
என்ன வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் விட்டாரா என்று நான் பயப்பட ஆரம்பிக்கும்போதே லாஸ்ட் அண்ட் ஃபைனல் கால் ஃபார் போர்டிங் சென்னை ஃப்ளைட்'' ஒலிபெருக்கியில் வந்தது.
அங்கு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ''அம்மா, எங்க வூட்டுக்காரர் தண்ணி பிடிச்சாரப் போயிருக்காரு. நீ கொஞ்சம் பொறுமையா இரு தாயீ'' ன்னு சொல்லிட்டு நான் ஒரு காலில் தவம் இயற்ற ஆரம்பித்தேன். நிமிடம் நகர எனக்கு துடிப்பு அதிகமாகியது. இப்போது அந்த லௌஞ்சில் நான் மட்டுமே திக்கற்ற பார்வதியாக நின்று கொண்டிருந்தேன்.

இதென்னடா கஷ்டகாலம், ஓரோரு தடவையும் நாந்தானே தொலைவேன். இப்ப இவர் எங்க போனார்.எங்கபோய்த் தேடுகிறது. இந்தப் பொண்ணு வேற மகா க் கேலியாக என்னைப் பார்க்கிறாள். ''ஹி ஹேஸ் டு கம் நௌ''என்று மிரட்டல் அவள் கண்ணில்.
சடக்கென்று எதிர்வரிசையில் நடக்கும் உருவம் ரொம்பப் பழகினதாகத் தெரியவே
நம்ப முடியாத வேகத்தில் அந்தத்திசையில் பாய்ந்தேன்.
சத்தியவான் சாவித்திரி கூட அப்படி இரைச்சல் போட்டு இருக்க மாட்டாள்.
இவர் பெயரைச் சொல்லிக் கையைத் தட்டி..ம்ஹூம், மனுஷன் திரும்பணுமே!!

அவர் பாட்டு எண்களைப் பார்த்துக் கொண்டே எதிவரிசையில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!

ஒரே எட்டு. இருபது நொடிகள் தான் ஆகியிருந்தது. அவர்கையைப் பிடித்துவிட்டேன்.
ஏனோ சுஜாதா சாரின் பத்துசெகண்ட்.....கதை நினைவுக்கு வந்து தொலைத்தது:)
எப்பவுமே யாராவது மேலெ இடிப்பதோ கையைப் பிடிப்பதையோ விரும்பாத அவர், படு கோபமாக இன்னோரு கையை என்னைப் பார்த்துத் திருப்பினார்.
சாமி, நாந்தான்பா எங்க போறதா நினைப்பு, கேட் இந்தப் பக்கம்னு அவரைத் திருப்பினேன்.
ஓ,இங்கேயா இருக்கு. நான் கீழ் தளத்துக்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து தப்பான படிகளில் ஏறி விட்டேன் போலிருக்கிறது''என்றவரைப் பார்த்து
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு,சரிம்மா என்ன ஆச்சு இப்ப, ப்ளேனைக் கிளப்பிட்டானா? என்று சிரிக்கிறார்.
கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கையிலிருந்து
தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே எங்கள் போர்டிங் கேட்டு'க்கு வந்தேன்.
அவரும் பாஸ்போர்ட்,டிக்கட் எல்லாவற்றையும் காட்ட ஒருவழியாக ,
விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)

பற்றாததற்கு விமானம் பல தடவை. கீழே இறங்கி,குதித்து,ஆடி எங்கள் பயணத்தை இன்பமாக முடித்து வைத்தது.
வந்துட்டோம்பா.:)



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

33 comments:

எல் கே said...

//இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ///

நம்ம ராசி. :)

மீண்டும் சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம் ..
//எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்./

எல்லாக் குழந்தைகளும் இப்படிதான்

துளசி கோபால் said...

ஹாஹாஹா....

யூ மேட் மை டே!!!!!

//திக்கற்ற பார்வதி........//

சூப்பர்:-))))))))))))

ஆயில்யன் said...

அரபு மண்ணில்லிருந்து அன்னை தமிழ்நாட்டுக்கு திரும்பியாச்சா?

//ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!//

lol சோழமண்டலத்துக்காரங்களை ரொம்பவே கலாய்க்கிறீங்கோ :)

சந்தனமுல்லை said...

நல்வரவு வல்லியம்மா! எங்களையும் இல்லே தேட விட்டுட்டீங்க! :-)

ராமலக்ஷ்மி said...

முல்லை சொன்ன மாதிரி எங்களையும் தேட வைத்து விட்டீர்கள்:)! மீண்டும் சென்னை. வாழ்த்துக்கள்.

//அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)//

பாவம் குழந்தை. ஆனால் சரியாகி விடுவாள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க எல்.கே.ஆமாம். ஒரு பத்து ,இருபதுநிமிடங்களுக்கு என்னைப் பாப்பா பற்றி நினைப்பே இல்லாமச் செய்துவிட்டார்.:( அதற்கப்புறம் பாப்பாவிடம் போன் பேசினால் ''தாத்தி அப்பமா வவ்வா''ன்னு சொல்லிக் கொண்டிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

.ஆமாம்பா துளசி,சாதாரண நாட்களிலியே வழி தெரியாது. மைலாப்பூர்,எக்மோர்,செண்ட்ரல் இதெல்லாம் தான் பழகின இடம். இப்பக் கொஞ்ச நாளாத் தில்லகேணி.
அந்த ஊர்ல திக்குத் தெரியாத ரேவதி:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன்..கொஞ்ச நாட்கள் தான் இந்த ப் பயணம்.
வீட்டில மராமத்து வேலைகள் காத்திருக்கு.மழை வரத்துக்கு முன்னால செய்து முடிக்கணும்.
கும்பகோணம் ஒரு மாதிரியான....பிடிவாதக்காரர்களை உற்பத்தி செய்யும் இடம்.:)
அதை நான் எந்த மேடைல வேணும்னாலும் சொல்லுவேன்:)

வல்லிசிம்ஹன் said...

முல்லை,
இந்தத் துபாய் ஏர்போர்ட்டுக்கும் நமக்கும் ஒரு எட்டாம் பொருத்தம் பா.
வந்து இறங்கும் போது சந்தோஷமா நான் மாட்டுப் போயிடுவேன்,.
திரும்பும்போதுதான் ஏதாவது பிரச்சினை வரும். ஜின்க்ஸ்.:)

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி ,
அதுதானப்பா இயற்கை. பெற்றோர்கள் தான் அந்தப் பிஞ்சுக்கு ஆதாரம். நாங்கள் வந்து போகிறவர்கள் தானே.
ஆனால் இந்த இயற்கையையும் மீறி, என் பாட்டிவீட்டில் என்னை அழைத்துப் போகச் சொல்லி அழுது அட்டகாசம் செய்து, அதன் பலனாக
மாமா வந்து என்னை மீண்டும் சென்னைக்கே அழைத்துச் சென்றார்.:)

ஸ்ரீராம். said...

சென்னை வெய்யில் தேவலாம் என்று நினைக்க வைத்து விட்டதா அங்கு வெய்யில்? இப்படிச் சொல்லவும் ஆள் வேண்டுமே...உங்கள் தளத்தில் படங்கள் எல்லாமே ஸ்பெஷல் துல்லியம். அழகாய் கண்ணைக் கவர்கின்றன..

சாந்தி மாரியப்பன் said...

ரசித்து சிரித்து படித்தேன் வல்லிம்மா. ரொம்ப உற்சாகமா எழுதியிருக்கீங்க. பிடியுங்க விருதை :-)

//திக்கற்ற பார்வதி........//

:-))))))))

http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.html

Unknown said...

இன்றுதான் உங்கள் பதிவை படிக்கிறேன் நன்றாக உள்ளது.என் பெற்றோரும் வந்து செல்லும் போது என் மகள் இப்படித்தான் ஆவாள் கும்பகோணத்தில் நீங்க எங்கே நான் பாலக்கரை மார்க்கெட் அருகில்.

கோமதி அரசு said...

அனுபவங்கள் நீங்கள் சொல்லும் போது எங்களுக்கும் திக்,திக் தான்.

திக்கற்ற பார்வதி/

வல்லிசிம்ஹன் said...

வரணும்ஸ்ரீராம்.
நம்ம காமிரா சமத்துக் காமிரா.சரியா அடையாளம் காண்பித்தால் கப்ப்'னு பிடிச்சுக்கும்.பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிம்மா. அந்த ஊர்ல சௌகரியமும் நிறைய,வெய்யிலும் நிறைய.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,பத்துவருடங்களாக இதெ துபாய் வழியாக எல்லா ஊருக்கும் போய் வருகிறேன்,
இருந்தாலும்,பையன் எங்கள் கூட வர வரைக்கும் ஒரு மஹா தைரியம் இருக்கும்.இவரும் வேலைகளை முடிக்கும் வேகத்தில் முன்னால் போய் விடுவார்.அந்த வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், உங்கள் விருதைப் பகிர்ந்து எங்களுக்கும் அளித்ததற்கு மிகவும் நன்றீ. உற் சாகத்துகுக் குறைவில்லைம்மா.சிலசமயம் வார்த்தைகள் தானாக வந்து விழும்:) இனிமே நல்லாச் சந்தோஷமா எழுதினாப் போறது.!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி. இளைய தலைமுறை நீங்க எல்லாம். உங்கள் எழுத்துக்களைப் படித்தாலே நல்ல தெம்பு வருகிறது.முதல் வருகைக்கு நன்றி.
என் புக்ககம் தான் கும்பகோணம், பிக் ஸ்ட்ரீட்னு ஒரு தெரு இருக்கும். அங்க வக்கீல்கள் வீடுகள் இருக்கும்னு கேள்வி.எங்க சிங்கமே இன்னும்சரியாப் பார்த்ததில்லை. இன்னும் சில குடும்பத்தினர் அங்க இருக்கின்றன. சக்கரவர்த்தி குடும்பம்னு பெயர்.:)

எல் கே said...

@வல்லியம்மா
என் பொண்ணும் இப்படிதான். வீட்டிற்கு வரும் யாரும் செல்லக் கூடாது என்பாள்

Paleo God said...

ரொம்ப ரசிச்சி படிச்சேங்க. :-))

வல்லிசிம்ஹன் said...

நன்றி சங்கர். உங்க கதையையும் இப்பத்தான் படித்தேன். அதாவது கடைசிப்பாகம்.:)
சில்சமயம் நாம் சொல்ல வரதைப் புரிஞ்சுக்க ரொம்பப் பேருக்கு சக்தி கிடையாது..
..அல்லது அது வேறு விதமாக அவர்களுக்குப் புரிகிறது.
இதுவும் தினம் நடக்கும் யதார்த்தம். அட ராமா உங்களுக்குப் பின்னூட்டம் இடவேண்டியதை இங்கே எழுதிவிட்டேன்..
பாராட்டுகளுக்கு நன்றி. &விருதுக்கு வாழ்த்துகள்.
நாங்க உண்மையிலியே ஆட்டொமொபைல் வொர்க்ஷாப்பும் ,லேத் தும் வைத்திருந்தோம்:)))

Unknown said...

அப்ப அவரைதான் சொன்னீர்களா பிடிவாதம் என்று அது என்னவோ உண்மைதான் நானும் ஒத்துக்கிறேன். பெற்றோர்க்ள் தற்போது 10 வருடங்களுக்கு மேலாக நீலத்தநல்லூர் ரோடு, காமராஜ் நகரில் வசிக்கிறார்கள். நீங்கள் சொல்வது பெரியதெரு அது இப்பொது நகை கடை மற்றும் கடைத்தெருவாக மாறிவிட்டது.நான் இப்போது US வாசம் அதனால் எனக்கு உங்கள் வீடு தெரியவில்லை மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா சுமதி.அவரைத்தான் சொன்னேன். நான் ரொம்ப சாதுப்பா:)
எனக்கே அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியாது. அதனால பரவாயில்லை:)எங்க பெண்ணும் உங்க நாட்டில தான் இருக்கா.

ஸாதிகா said...

நல்வரவு.மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.ஏர்ப்போர்டில் நடந்த அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது.அமீரகநினைவலைகள் தொடர்ந்து எழுதுங்கள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸாதிகா.
http://naachiyaar.blogspot.com/2008/05/303.html
இந்தப் பதிவைப் படியுங்கள்.
இப்படியும் ஒரு பேக்கு இருக்கானு தோன்றும்.:)
மீள்பதிவா ஒரு புத்தகமே போடலாம்.
நன்றிப்பா.படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

பாரதி மணி said...

நானும் சிங்காரச்சென்னையும் உங்களை வரவேற்கிறோம். சென்னை வெயிலில் சேர்ந்து வறுபடுவோம்! உங்களுக்கு ‘அக்கரைக்கு இக்கரை பச்சை!’

நல்வரவு!

Unknown said...

எனது அண்ணனும் துபாயில்தான் குடும்பத்துடன் வசிக்கிறார்.நான் இங்கே எங்களை பெற்றவர்களோ நாங்கள் எப்பொது வருவோம் என்று எதிர்பார்த்துக்கொண்டு. துபாயில் இருந்தோ வருடத்திற்கு ஒருமுறை செல்ல முடிகிறது என் அண்ணனால் ஆனால் நான் முடியும்போது 2வருடத்திற்கு ஒருமுறை இப்படி ஒரு அயல் நாட்டு வாழ்க்கை. நீங்களும் என் பெற்றோர்கள் போல்தானோ.உங்கள் மகள் எங்கு வசிக்கிறார் நான் Maine USA.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் பாரதிமணி சார். துபாய் வாழ்க்கை ஒரு பழக்கம் ஆகிவிட்டால் ,நம் ஊர் பிடிக்காமல் போகச் சந்தர்ப்பம் இருக்கிறது. தெளிவாக யோசனை செய்தால் நம் ஊர் தான் சரி நமக்கு. என் வயதும் ஒரு காரணம்:)
நன்றி சார். வெய்யில் போய் மழை வருமென்று எதிபார்க்கலாம்

வல்லிசிம்ஹன் said...

என் பெண் சிகாகோவில் இருக்கிறாள். இரண்டு பசங்க. அவளாலும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறைதான் வர முடிகிறது.ஒவ்வொரு தடவை வந்து போகும் போதும் நாலைந்து நாட்களுக்கு மனம் சங்கடப்படும்.என்ன செய்யலாம்.மகன் ஒருவன் துபாயிலும் ,சின்னவன் ஸ்விஸ்ஸிலும் இருக்கிறார்கள்..

Unknown said...

வணக்கம் வல்லியம்மா, நான் உங்களிடம் நேரில் பேசும் ஆர்வத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டுவிட்டேன் மன்னிக்கவும். என்னை மதித்து பதில் அளித்தமைக்கு நன்றி. உங்கள் திருமணக்கதை படித்தேன் நன்றாக உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

Dear Sumathi you can mail me or come on chatline.
or better If you can send in yr phone #(in the mail)
I .can call you.
I have this Magicjack connection.
so it will not cost me much.:)
sariyaa. Donot worry. we are old people any right kind of attention,
we just gobble it:)

Unknown said...

நன்றி வல்லியம்மா உங்கள் Meil ID தெரியாதே எனக்கு.

Matangi Mawley said...

மிக அழகாக எழுதுகிறீர்கள்! உங்களுக்கு award கொடுத்து தக்குடு அவர்களின் பதிவை படித்துத் தான் இங்கு வந்து சேர்த்தேன்! நல்ல பதிவு.. keep writing!!