Blog Archive

Saturday, May 16, 2009

சந்தேகம் எனும் ஒரு கிரகம்---1



அமைதியாகப் பெட்டிகளை ஏற்றி , ரிதிகாவையும் வாடகை வண்டியில் அமர்த்திய மனைவியைக் கவனித்தான் தினேஷ். அடுத்த வீட்டுக்குப் போகக் கூடத் தன்னிடம் காலையில்
சொல்லிவிடும் கனகா, இப்போது போகிறேன் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றும் விட்டாள்.
திடீரென்று ஏற்பட்ட நிகழ்வில்லை இது. நான்கு வருடங்களாகப் புகைந்து இன்று வெடித்திருக்கிறது.
வண்டியை எழும்பூருக்கு ஓட்ட வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு வாயே திறக்காமல் வரும் மகளைக் கவனித்தாள்.
எப்போதும் ஏன் என்ன என்று நச்சரிக்கும் குழந்தை ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெறித்த வண்ணம் இருப்பது கண்டு கொஞ்சம் கலக்கம் ஏற்பட்டது.
''பேபிக்கு என்ன வேனும்,பிஸ்கட்??''
''அப்பா வேணாம்மா.. தாத்தா போலாம்'' என்று தீர்மானம் தோய்ந்த குரலைக் கேட்டதும் கனகாவின் கண்கள் கலங்கின. சரிம்மா.அப்படியே செய்யலாம்.'' என்றபடி வரும் நாட்களை யோசித்தாள்.


அழகாக ஆரம்பித்த வாழ்க்கையில் எது நம்மை இங்கே நிறுத்தி இருக்கிறது என்ற எண்ண ஆரம்பித்தாள். அலுப்பில் தூக்கம் தான் வந்தது.
ரயில் நிலையத்தில் இறங்கிக் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு ''தூத்துக்குடி முத்து நகர வேக'' வண்டியில் ஏறினாள்.
குழந்தைக்கு உட்கார வசதி செய்து விட்டுத் தானும் உட்கார்ந்து,மரத்துக் கிடந்த மனத்தைத் தட்டினாலும் கண்ணில் நீர் வரவில்லை. அன்று என்னவோ அந்த வண்டியில் கூட்டத்தைக் காணோம்.
வயதான தம்பதியர் இருவர் இருந்தனர்.
ஏதோ சிகிச்சைக்கு வந்துவிட்டுப் போவது தெரிந்தது.
கணவரைக் சௌகரியமாகப் படுத்துக் கொள்ளவைத்து விட்டு அந்த அம்மாள் அவரது தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
வழக்கமான விசாரிப்புகளில் விவரங்கள் தெரிந்து கொண்டு அந்தப் பாட்டியும் தூங்க ஆயத்தம் செய்துகொண்டார்.




சத்தம்,ரயிலோடும் சத்தம்,ஏதோ நிலையத்தில் நிற்கும் சத்தம் கனகாவை அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பியது.
இரவு மணி இரண்டைக் காட்டியது. எதிர்த்த இருக்கையில் பாட்டி, தாத்தாவுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்..
நீயும் குழந்தையும் ஒண்ணும் சாப்பிடலையேம்மா.கொஞ்சம் ஹார்லிக்ஸ் எடுத்துக்கறியா என்று கேட்கும் அந்த அம்மாவைப் பார்த்து,வேண்டாம் என்று தலையாட்டினாள் ..
கிளம்பும் முன்தான் சாப்பிட்டோம்மா. .விடிந்ததும் பால் கொடுத்தா போதும் என்று அயர்ந்து உறங்கும் மகளைத் தட்டினாள்.
இறங்கியதும் ,அப்பா முகத்தில் தோய்ந்திருக்கும் இரக்கத்தை எதிர்கொள்ளவேண்டும். அம்மாவின் கலக்கத்தை அமைதிப் படுத்த வேண்டும்.
நான் மீண்டு வந்துவிட்டேன்,சந்தோஷப்படுங்கள் என்று சிரித்துக் காட்டவேண்டும். ரிதிகாவுக்கு நல்ல மன நல மருத்துவரைத் தேடவேண்டும்.எனக்கும் வேண்டுமோ கவுன்சிலிங்க்.
ஏன் இவ்வளவு நடந்த பிறகு அமைதியாக இருக்கிறேன்?



மீண்டும் கண்முன் அந்தக் காட்சி வந்து உட்கார்ந்தது.
தினெஷின் வண்டி சந்திரன் வீட்டு வாசலில் அந்த மதிய வேளையில் நின்றதும்,தான் படபடப்போடு உள்ளே போனதும், சந்திரன் மனைவி நிலா சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததும் ,...
ஏன் தன்னால் நிதானமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
எப்போதும் இறுகின முகத்தோடு இருக்கும் தன் கணவன் இன்னோரு பெண்ணிடம் சிரித்துப் பேசினதாலா,
இல்லை நிலாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றா.தெரியவில்லை. புயல் போல் உள்ளே போனவள் மீண்டும் அதே வேகத்தில் திரும்பியதும், அவமான உணர்ச்சி மனதில் வெள்ளம் போல் ஓட, உள்ளம் கொதித்தது.
அலுவலக பியூன்,காய்கறிகள் கொண்டு வந்து வைக்கும் போது ''அம்மா சந்திரன் ஐயா வீட்டுக்கும் மீன் வாங்கிக் கொடுத்துட்டு வரேன்மா'' என்றதும் கனகாவுக்குப் புரியவில்லை. ஏன் நீ வாங்கற? அவங்க ஐயா இல்லையா என்று கேட்டதற்கு
அவன் அவரு டூர் போயிருக்காராம்மா என்றான்.
இது ஒரு நிகழ்வு.
அடுத்து மஹாபலிபுரம் போனது. தினம் தினம் குழந்தையை எங்கயாவது அழைத்துப் போகணும் , இது கனகாவின் வேண்டுகோள். தினேஷ் வீட்டுக்கு வரவே இரவு எட்டாகிவிடும். ரித்து தூங்கும் நேரம் வரும். கனகாவுக்குக் சீக்கிரம் சாப்பிடும் பழக்கம்.
சிலசமயம் அவன் வரும்போதே சந்திரன் குடும்பமும் வந்துவிடும். சும்மா இல்லை. சைட் டிஷ் என்று ஏதாவது அசைவம் வீட்டுக்குள் வரும். சுத்த சைவமான கனகாவுக்குக் கதியே கலங்கிவிடும்.
அதற்குக் காரணம் வண்டியிலிருந்து இறங்கும் பானங்கள் தான்.
தோழமையும் தோழர்களும் வேண்டியதுதான். அதற்காக இப்படியா.
இப்படிக் சேர்ந்து கொண்டு குடித்தால்தான் நட்பா.
சாதாரணமாக உலகத்தில் சினேகிதர்கள் இல்லயா.
வள்ளலாரை வணங்கும் வழக்கம் கொண்ட குடும்பம் கனகாவின் பிறந்த இடம்.
தினேஷ் வீட்டிலும் அந்த வழக்கம் தான். வெளியூரும் ,கூடா நட்பும் இப்படி அவனை மாற்றி இருந்தது.
தொடரும் ...,கதை ....ஒரு வாரத்துக்குள்ளயோ, இல்லை இன்றைக்கோ:)
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.




Posted by Picasa

6 comments:

ராமலக்ஷ்மி said...

கனகாவின் கலக்கத்தை வெகுஅழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். கூடாநட்பின் விளைவுதான் என்ன? நீங்கள் கூறும்வரைக் காத்திருக்கிறோம்.

துளசி கோபால் said...

நல்லா வந்துருக்கு வல்லி இந்தக் 'கதை'

பாராட்டுகள்.

நல்லா டெவலப் பண்ணி எழுதுங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ராமலக்ஷ்மி. கூடா நட்பு என்று தெரியாமல் நல்ல விதமாக ஆரம்பித்த நட்பு,குடியினால் கெடுகிறது.
முடிக்கப் பாற்க்கிறேன். ஆனால் அந்தப் பெண் பட்ட சிரமம்
என்னைக் கொஞ்சம் யோசித்து எழுத வைக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவா துளசி.!! அப்ப நிதானமா வார்த்தைகளைப் பூட்டி எழுதுகிறேன்

கோபிநாத் said...

ம்ம்ம்...உணர்வுகளை நன்றாக எழுத்துநடையில் சொல்லியிருக்கிங்க.. ;)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபினாத். பிடிச்சிருந்தால் சரிதான்:)