
முன் குறிப்பு;
இங்கே இருக்கும் கரடியும்,குதிரையும் எங்கள் வீட்டு சிங்கம் செய்தது.
நல்லா இருக்குனு சொல்லிடுங்க:))
மற்ற இரண்டு படங்களூம் கொலு 2005 சென்னை.
இப்போப் பதிவுக்குப் போகலாம்.
வேற ஒண்ணும் இல்லை. இங்கே வந்ததுல இருந்து நிறைய பொதிகை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம்,
வழக்கம் வந்துவிட்டது.
இப்போதும் நிறைய வளப்பமும் ஆரோக்கியமும் கொண்ட பசு மாடுகளுக்கு நடுவில் நின்று கொண்டு
பன்றி, முயல் வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டுதான் எழுதுகிறேன்.
1551க்குப் போன் செய்தால் விவசாயம் பற்றின எல்லாத் தகவல்களும் கிடைக்கும்னு முடித்துவிடுவாங்க.
அப்புறம்தான் பகவத்கீதை சொற்பொழிவு.
கீதைத் தத்துவம் புரிந்துகொண்டு(அப்போதைக்கு)
ஞானம் பெற்று அப்புறம் காற்றில் விட்டுவிட்டு இட்லி சாப்பிடப் போவதும் தினப்படி வேலைகள்.
ஆனால் அதற்காகக் காலையிலும் மாலையிலும் காது குளிர நல்ல வார்த்தைகள் கேட்பதை விடுவதில்லை.என்றாவது ஒரு நாள் தெளிவு பிறக்காதா என்ற ஆவல்தான்.:)))
இதனால்தான் ஏதாவது ஒரு பதிவிடணும் என்று நினைக்கும்போது முன்னுரை,டிஸ்கி, விளக்கம் எல்லாமே ஒரு பதிவாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.:))
நேயர்களே,.... சக பதிவர்களே... இதற்கு மேல் எழுதப் போவது இன்னோரு கொசுவர்த்திப் பதிவு.
ஸோ, எச்சரிக்கையாக இருப்பவர்கள், மன உறுதி இல்லாதவர்கள் வேறு பதிவுக்குப் போய் விடுங்கள்:))
இதற்குப் படங்களாகப் போட்டு இருப்பது இப்போதைய கொலு என்றாலும்,
நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத்தான். பெற்றோரும், குழந்தைகளுமாய் உழைத்துக் கொலுப்படி நிர்மாணம் செய்யப்படும்.
அம்மாவின் கையழகில் அந்த 22ஆம் எண்,சன்னிதிதெரு வீடு புதுப் பொலிவு பெறும். ஒரே ஒரு பெரியதெருவைக் கொண்ட அந்தத் திருமங்கலம் ஊரில்,
ஒரு முனையில் பஸ் நிலையம், ஆனந்தா திரையரங்கு.
மறு முனையில் மீனாட்சி அம்மன் கோவில்.
நடுவில் இரு பக்கங்களிலும் முறையே ஒரு உடுப்பி ஹோட்டல்,ஒரு தபாலாபீஸ், ஒரு ஜவுளிக்கடை, ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் இவ்வளவும் அடங்கும்.
கிளைபிரியும் இடங்களில் வலது பக்கம் ஒரு குட்டித் தெருவும் இடதுபக்கம் ஒரு ச்சின்னக் கடைத்தெருவும்
உண்டு. அங்கு முதலாக ஒரு பிரசித்தி பெற்ற வேர்க்கடலைக் கடையும் இருக்கும்.
ஒரு ஐந்து பைசாவுக்கு இரண்டு எட்டு வயது வயிறுகள்
நிரம்பிவிடும். கடலைமணிகளும் பெரிதாக இருக்கும்.
வலது பக்கம் போகும் தெருவில் ஒரு ஐய்யனார் கோவில் இருந்ததாக நினைவு. அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்றும் இருக்கும்.
தினம் ஆதாரப் பள்ளிக்குப் போகும்போது அந்த இரண்டு இடங்களையும் ஓடியே தாண்டிவிடும் வழக்கம் எங்களுக்கு.
இப்போது நினைத்தால் கூடக் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. அங்கே(கோவிலுக்குள் இருக்கும் )கொடுக்காப்புளி மரத்தின் பழங்கள் அப்படியே இன்னும்
நாவின் நினைவில் இருக்கிறது
அந்தக் கிணற்றில் கோட்டி இருப்பதாகவும் சொல்லுவார்கள்.

எனக்கும் என் தோழிகளுக்கும் மிகப் பிடித்தமான கொலு இருக்கும் ரஜினியின் வீடு இந்த இரண்டு அட்வென்சர் ஸ்பாட்ஸ் தாண்டிதான் போகணும். அவங்க வீட்டில 11 படிகள் நிறைய மிகப் பெரிய அளவில் பொம்மைகள் வீற்றிருக்கும். அவர்கள் சொந்த ஊர், தென்னாற்காடு. பண்ருட்டியில் செய்த வளப்பமான,செழுமை கொஞ்சும் ராமர்பட்டாபிஷேகம், ஆலிலை கிருஷ்ணன்,செட்டியார் கடை, மலையப்பன், வெள்ளைக்கார துரைகள்,தேர்கள் இன்னும் நிறைய வகைகளில் பொம்மைகள் வண்ணமயமாக இருக்கும்..

அதைப் பார்த்துவிட்டு நம்ம வீட்டுக்கும் அது போல வாங்க வேண்டும் என்றால்,அப்பா மாட்டேன் என்று மறுப்புச் சொல்ல மாட்டார். நாமே அதைவிடப் பிரமாதமாகச் செய்யலாம்மா என்று, உறுதி அளித்து அதை நிறைவேற்றுவார்.
முதலில் வாங்குவது கலர்க் காகிதங்கள் அதில் இரண்டு நாட்களில் தோரணங்கள் உருவாகிவிடும்.
அடுத்தப் ப்ராஜெக்ட் தெப்பக்குளம். அப்பாவுக்குக் கிடைத்தது ஒரு பெரிய பிஸ்கட் டின். அதை ஒரு ஒரு உப்புத்தாளால் தேய்த்து பளபளவென்று ஆக்கிவிட்டார்.
அப்புறம் என்ன!! சுற்றிக் காவியும் சுண்ணாம்பும் அடித்தால் குளம் ரெடி:)) வாசலில் பொம்மைகள் விற்ற மதுரைக்காரரிடம் ஒரு ஸ்ரீரங்கநாதரும், தெப்பக் குளத்தில் ஓட ஒரு குட்டிப் படகு,படகோட்டியோடு கிடைத்தது.
அடுத்தாற்போல குளத்தைச் சுற்றிப் பார்க் வேணுமே. சுற்றுப்புறத்தில யாரும் வீடு கட்டவில்லை. எல்லாம் பழைய வீடுகள்தான்.
இருக்கவே இருக்குக் கிணத்தில தூறு வாருகிற தொறட்டிகரண்டி. புரட்டாசி மாதம் மழைக்குமுன்னால கொஞ்சம் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும். வாளியை இறக்கினாலே மண்ணும் தண்ணீருமாகத்தான் வரும்.
அதனால வண்டல் மண்ணும் கிடைத்து கடுகு,கேழ்வரகு போட்டாச்சு. குட்டிச் செடிகளும் முளைத்து நந்தவனமும் ஆச்சு. நடுவில ப்ளாஸ்டிக் நாற்காலிகள்,மேஜைகள், இதைதவிர தீப்பெட்டிகளால் உருவான பீரோக்கள், சாக்கலேட் சுற்றிவந்த ஜிகினாப் பேப்பரில் உருவான பெண்கள், பழைய கிராமபோன் இசைத்தட்டுகளில் வரையப்பட்ட பூக்கள் இன்னும் எத்தனையோ அம்மா அப்பா கைகளில் மல்ர்ந்த அழகு உருவங்கள் அந்த மூன்று
படிகளை அலங்கரிக்கும்.
செலவில்லாத கொலு.
காலையில் எழுந்திருக்கும் போதே இன்று புதிதாக என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு கொலு பக்கத்தில் உட்கார்ந்து அசை போட்டுவிட்டு, பொம்மைகளைத் தொடாமல் தள்ளி நின்று அழகு பார்த்து, மாலை வந்ததும், வீட்டுக்குக் கொலு பார்க்கவரும் சிறுவர் சிறுமியரின் அருட்புரிவாய் கருணைக்கடலே, எனையாளும் மேரி மாதா, பாடல்கள் எல்லாம் கேட்டுஊர்சுற்றல் முடிந்து
நம் வீட்டுச்சுண்டலையும் சாப்பிட்டு ஒவ்வொரு பொம்மைக்கும் குட்நைட் சொல்லாத குறையா பார்த்துவிட்டுப் படுக்கப் போகும் ஆனந்ததிற்கு ஈடேது??
சரஸ்வதி பூஜை அன்று படிக்கவேணும்கிற ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகும்:)அன்ரு இரவு சாஸ்திரத்திற்கு ஒரு பொம்மையை அம்மா படுக்க வைத்துவிடுவார்கள். படு சோகமாக இருக்கும்.
ஒரு நாள் தான். விஜயதசமி அன்று பள்ளிக்குப் போய் விட்டால் தீபாவளிப் பட்டாஸ் பேச்சில் வந்துவிடும்.
கொலுவுக்கு வந்ததற்கு நன்றி மக்களே.:))
