இந்தப் படங்கள் எடுக்கப்பட்ட ஊரில் தான் என் தோழி இருந்தாள்.அவள் வாழ்க்கைப்பட்ட இடம். இப்போது இடம் மாறிவிட்டாலும் எங்கள் இருவர் மனசிலும் அழகான நட்பு உருவாகக் காரணமான இந்த யேற்காடு எனக்கு மறக்காது.
திருமணமாகிக் கையும் குழந்தையுமாக எங்கள் வாழ்க்கை துவங்கினது சேலத்தில். அப்போது அறிமுகமானவர்கள் இந்தத் தோழியும் அவளது கணவரும்.
இருவருமே எங்களை விடப் பத்து வயது மூத்தவர்கள்.
மதப்பற்று மிகுந்தவர்கள். ஞாயிறு அன்று காலை உணவு முடிந்ததும் சர்ச்சுக்குப் போய் விடுவார்கள்.
தோழியின் கணவர் .நல்ல உயரம் அதற்கேற்ற திடமான உடற்பாங்கு. இரண்டு பேரையும் சேர்த்து நிற்க வைத்துப் பார்த்தால்
அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
அவர்களுக்குச் சென்னையிலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு இருந்தது.
எங்க மாமியாருக்கு அவரிடம் நிறைந்த மரியாதை. சிங்கத்திடம் நம்ம வீட்டில செய்த பலகாரம் எல்லாம் கொடுத்து அனுப்புவார். அந்த யானைக்குக் கொடுடா.ரசிச்சுச் சாப்பிடட்டும் என்று வேறு சொல்லி அனுப்புவார்.
தோழியும் கணவரும் சாப்பிட்டுவிட்டுப் பலகாரம் அனுப்பிய கூடை நிறைய அவங்க எஸ்டேட்ல விளைந்த ஆரஞ்ச்,மலை வாழைப்பழம் எல்லாம் போட்டு அனுப்புவார்.
மாமியாரும் அவரும் (திரு.தாவித்) பேசிக்கொள்ளும் பாங்கு ரசிக்கும்படி இருக்கும்.
எங்களையெல்லாம் வீட்டுக்குள்ளெயே அனுமதிக்க மாட்டடங்க உங்க ஜனங்க, நீங்க என்னடான்னா உங்க வீட்டுப் பாத்திரத்தயே எங்களுக்கு அனுப்பறீங்கனு அவர் கேலி காட்டுவார். அதற்கு மாமியார் ,நீ தான் பழமாக் கொடுக்கிறியே, அதற்காகத்தான் உனக்கு இதெல்லாம் அனுப்புறேன்னு பதில் சொல்லுவார். மதங்கள் ,கட்டுப்பாடுகள் இதையெல்லாம் மீறி எங்கள் இரண்டு குடும்பங்களும் பழகி வந்தன.
அவர்கள் சென்னையில் இருக்கும் நாட்கள் மிக சந்தோஷமாகப் போகும்.
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்னு ரெண்டு பேரும் படித்துப் பேசி வைத்தது போல ஒரு சேர உறவினர் நண்பர்கள் என்ற ஒரு ராஜ்ஜியத்தையே அன்பால் ஆண்டு வந்தார்கள்.
அவர்கள் வீட்டை த் தாண்டித்தான் நான் பஸ் நிலையத்துக்கே போக வேண்டும். அவர் வீட்டிலிருந்து பார்த்துவிட்டால் போதும்,
உடனே மனைவியை அழைத்து உன் சினேகிதி போறாங்க, ஆளை அனுப்பி என்ன விஷயம்னு கேளு, வெய்யில்ல நடக்க வேண்டாம்,கரண்டு பில்லோ எந்த பில்லோ போன் பில்லோ நம்ம டாமினிக்கை அனுப்பு, அவன் கட்டிட்டு வருவான் என்று சொல்லுவார்.
மனைவியும் (திருமதி கருணா தாவீத்) உடனே வெளியெ வந்து,
இந்தா எங்கப் போற இந்த வெய்யில்ல, உள்ள வந்து காப்பி குடி,
அப்புறம் வீட்டைப் பார்க்கப் போய்க்கலாம்னு அழைத்துச் சென்றுவிடுவார்.கருணாவும் பத்து வகுப்பு வரை படித்துக் கல்யாண பந்தத்தில் புகுந்தவள்.
சித்திரம் போன்ற அழகு. அடக்கம்,அதிராத பேச்சு.
ஏற்காடு மலையில் வீட்டு நிர்வாகம் ஓயாத வேலை. மிகப் பெரிய மலைத் தோட்டம்.
அத்தனையையும் இரண்டு ஆட்களை வைத்துச் செய்து முடிப்பாள்.
காலையில் எழுந்து ,முதல் வேலை பைபிளை ப் பிரித்துப் படிப்பதுதான். பிறகு சேலத்துக்கு செல்லும் கணவருக்கு வாய்க்கு ருசியாக மணக்க மணக்க அவங்க வகைக் கறியும் குழம்பும் சுடச் சுட செய்து அனுப்புவாள்.
கைவேலை,உப்புக் கண்டம் தயாரிப்பது,வடகம் செய்வது என்று நாள் முழுவதும் வேலை.சித்திரம் வரைவதும் ஒரு பொழுதுபோக்கு. தபால் வழியாக வரும் அனைத்து ஆங்கிலப் புத்தகங்களையும்,பத்திரிகைகளையும் படித்து அதில் வரும் சமையல் குறிப்புகளை எழுதிவைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குச் சமைத்துக் கொடுப்பதில் ஒரு சந்தோஷம்.
கைவேலை,உப்புக் கண்டம் தயாரிப்பது,வடகம் செய்வது என்று நாள் முழுவதும் வேலை.சித்திரம் வரைவதும் ஒரு பொழுதுபோக்கு. தபால் வழியாக வரும் அனைத்து ஆங்கிலப் புத்தகங்களையும்,பத்திரிகைகளையும் படித்து அதில் வரும் சமையல் குறிப்புகளை எழுதிவைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குச் சமைத்துக் கொடுப்பதில் ஒரு சந்தோஷம்.
எங்களுக்கும் ஒரு ஓசி மலைவாசஸ்தலம் கிடைத்தது. அதுதான் இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் கருணாவை நினனத்துக் கொள்வேன். கடிதங்களில் எல்லா விவரமும் கேட்டுக் கொண்டு இங்கிருக்கும் தேவாலயங்களைப் படம் எடுத்து அனுப்பினால் அதில் பரம ஆனந்தம்.
ஏதோ ஒரு நோய் 25 வருடங்களுக்கு முன் வந்து திரு.தாவீதை (அவளுடைய நாற்பைதைந்து வயதில்) அழைத்துக் கொண்டபோதுகூட இறைவனை நோகவில்லை. எப்போதும் போல் நிதானம்,பிரேயர் என்று தான் இருக்கிறாள்.
உன்னதமான ஒரு மங்கை.அவளைப் பதிவில் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியதால் பதிந்து விட்டேன்.
7 comments:
அருமையான நினைவூட்டல், என் கணவருக்கும் இப்படி ஒரு Godfather இருக்கிறார். தற்சமயம் நாக்பூரில் இருக்கின்றனர், இருவருமே,Church of North Indiavil ரொம்ப பிசி, நாக்பூர் போனால் பார்க்காமல் வரதில்லை!
அடடா......... 45 வயசு ஒரு வயசா?
கருணாவுக்கு எங்கள் அனபையும் சேர்த்துச் சொல்லுங்க.
கீதா வாரணும்.அருமையான வார்த்தைல எங்க நட்பைச் சொல்லிவிட்டீர்கள். என் கணவரிடம் அவருக்குஅளவுகு மீறிய அன்பு. எங்க ஜன்னலிலிருந்து பார்த்தால் அவங்க போர்டிகோ வெளிச்சம் தெரியும்.
ஊரிலிருந்து வந்துவிட்டார்கள் என்று,,உடனே இவர் அங்கெ போய்விடுவார். யாரும் துளி சிரமப்பட்டாக்கூட அவரால சகித்துக்கொள்ள முடியாது. இரண்டு பேரும் நல்ல ஜோடி அந்த விஷயத்தில்.
ஆமாம் துளசி,அவளுடைய 15 வயசில கல்யாணம் செய்து கொண்டு இந்த ஏற்காடுக்கு வந்துவிட்டாள்,. வேலைக்கு அஞ்சாத மனுஷி.
அவரும் அவருடைய தொழில் சம்பந்தமா நிறைய அலைவார். அந்த மலையின் குளிர்லயும்,மழைலேயும் தனியாகவே அத்தனை பெரிய வீட்டில்
இரண்டு குழந்தைகளையும் வளர்த்து சந்தோஷமாகவே இருந்தாள்.கூடவே பதினோரு நாய்கள்:))பெரிய குடும்பம்.
அருமையான நினைவூட்டல்.
உங்கள் நட்பின் ஆழத்தை அழகாக பதிவாக வரைந்து வீட்டீர்கள்.
அம்பி,
ஒரு நல்ல மனைவி,பொறுமையான தாய்.
இந்தத் தோழி வழியாக நான் தெரிந்துகொண்ட விஷயங்கள் அநேகம்.
அருமையான நட்பின் பரிமாணத்தை அளித்ததற்கு நன்றி.எனக்கும் ஒரு நண்பன் பிரோஸ்கான் என்று பெயர். என்னுடன் காலேஜில் படித்து என்னுடன் சி. ஏ படித்து 19.5 வயதில் முடித்து சி ஏ பாஸ்.இதயத்துள் துளை இருந்து மறைந்து விட்டான். எங்கள் வீட்டு சமையல் அறை வ்ரை வந்து பழுகுவான்.அனன் மறைந்தபோது நான் 2 நாட்கள் அழுதேன்
Post a Comment