Blog Archive

Saturday, April 07, 2007

மலைப் பங்களா--2 ..house on the rock/WISCONSIN




இதோ தெரியும் வராந்தா ஒரே ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா/


















































பத்தாயிரம் விளக்குகள் ,நூற்றுக்கணக்கான வடிவங்கள் கொண்ட ஒரு குடை ராட்டினம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
ஏறி உட்கார்ந்து ஒரு ரைட் போகலாம் என்றுதானே.?
அது முடியாது இந்த இடத்தில்.
பின்னணி இசை போய்க்கொண்டே இருக்கும்.
கரௌசல் சுத்தி வரும். பொம்மைக் குழந்தைகள் உட்கார்ந்திருக்க, மயில்களும் ,அன்னமும்,குதிரைகளும் யானைகளும் சுற்றி வரும்.
உலகிலேயே மிகப் பெரிய ராட்டினத்தை இந்த மலைப் பங்களா என்று நான் பேர் சூட்டின த ஹௌஸ் ஆன் த ராக், பார்த்தோம்,.
நாங்கள் இந்த ஏழு நாட்கள் விடுமுறையில், எங்கே போவது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு,
இணையத்தில் தேடி,
ஹோட்டல் வசதி பார்த்து கிளம்பும்போது வெள்ளியாகிவிட்டது.
மழை அதோடு கூட உபரியாக வரும் அக்கா தங்கச்சிகள் எல்லாம் எதிர்கொள்ளவேண்டி வரும்
என்று பெண்ணும் மாப்பிள்ளையும் எச்சரித்தார்கள்.
நான் செய்த பூஜாபலம் னு பாடிக்கொண்டே
வண்டி ஏறினேன்.
பீட்சாவிலும், அரையடி ரொட்டியிலும் எனக்கு
நிம்மதி கிடைக்காது என்று, கடுகு கொட்டி(வார்த்தை சிங்கம் சொன்னது) தயிர்சாதம்.
'அதென்ன, உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு என் மாமியார் கத்துக் கொடுக்கவே இல்லை'
என்று ஒரு நாள் விடாமல் அலுத்துக் கொள்ளுவார்.
தேவைதான்'
என்று நினைத்தாலும் நானும் விட்டுக் கொடுப்பதில்லை.
கடைக்காரனுக்கு நஷ்டம் வந்து விடாதா/ நான் கடுகு வாங்காமல் யார் வாங்குவார்கள்?
இத்யாதிகளோடு நாங்கள் ஸ்ப்ரிங் க்ரீன் போய் சேர்ந்தபோது இரவு பத்து.
காலையில்லெழுந்து '' டெல்ஸ் மைனிங்''+ இந்த மலை மேல் பங்களாவைப் பார்ப்பதாக ஏற்பாடு.
பேரனுக்குப் பாட்டியோட முட்டி கவலை.
அப்பா, பாட்டிக்கு வேணா வீல் சேர் சொல்லலாமா'
ஏற்கனவே ஸ்ட்ரொல்லர் எப்படி எடுத்துப் போவது
என்ற யோசனையில் இருந்த மாப்பிள்ளை, இதென்னடா புது பிரச்சினை என்று அந்த மலையையும் என்னையும்
மாறி மாறிப் பார்த்தார்.
அம்மா ,உங்களால் முடியும்னு தான் நினைக்கிறேன் என்றார்.
ஆமாம், ஆமாம் இப்போதான் உடம்பு இளைத்துவிட்டதே.
இதெல்லாம் சும்மா ஊதித் தள்ளிடலாம் என்பது மாதிரி ஒரு பாவனை காட்டிக் கொண்டேன்.
மற்றவர்கள் வண்டியைப் பார்க் செய்து வரட்டும் நாம் முதலில் போகலாம் என்று இறங்கினேன்.
ஒரு ஊஉ என்று காற்று.
ஒரு பளார் மின்னல்.
காலுக்கு கீழே பாறையே நடுக்கம் கண்ட மாதிரி ஒரு இடி.
டிஸ்கவரில இந்த மானெல்லாம், சிறுத்தைக்கு முன்னால் ஓடுமே அந்த வேகத்தில் நான் அந்த முகப்பிற்குள் ஓடி விட்டேன்.
உள்ளே நுழைந்தபின்னால் தான் இந்த ஊரில் கடைப் பிடிக்க வேண்டிய அமைதி,வரிசை எல்லாம்
நினைவுக்கு வந்தது.
காலில் ஷூ,
நெத்தியில் வட்டப் பொட்டு.,
பச்சை சிகப்பு சுடிதார்,
ஒரு பெரிய பழுப்பு ஜாக்கெட்.
அடடா இந்திய அம்மாக்கள் கொடுக்கும் இமேஜ் தான்
என்ன என்ன.
அங்கே வரவேற்பறையில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தங்கள் வேலைக்குத் திரும்பினார்காள்.
எனக்கு முன்னாடியே அங்கே இன்னும் இரண்டு அம்மாக்கள் அப்பாக்கள் !
ஒரு பெண் ஒரு மகன்.
அப்பா, அந்த அம்மா முகத்தில் வந்த சிரிப்பைப் பார்க்கணுமே.
அவங்க சேலமாம்.
ஒண்ணு கவனித்துப் பார்த்தால் தெரியும்.
வரும் அப்பாக்கள் ஷூ போட்டுக் கொள்ளுகிறார்கள்/
அம்மாக்கள் செருப்புதான்.
ஏன் அவங்களுக்குக் குளிராதா?:-)
கொஞ்சம் அவங்களுடன் கதைத்துவிட்டு
வெளியில் எட்டிப் பார்த்தால் உறுமல் நின்றிருந்தது.
எல்லோருக்கும் சீட்டு வாங்கினோம்.
ஆளுக்கு 20$ பழுத்தது.
ஒரு ஆச்சரியமான உலகத்துக்குள் போனோம்.
அலெக்ஸ் ஜோர்டன் என்பவர் கட்டிய வீடாம்.
அவர் ஆரம்பித்து வைத்ததை அவரது மகன் முடித்து வைத்து இருக்கிறார்.
ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதில் ஆரம்பித்து இருக்கீறார்கள்.
அப்போதெல்லாம் இது வெறும் பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து இருக்கிறது.
இந்த அலெக்ஸுக்கு மட்டும் இங்கே வீடு கட்ட வேனும்னு ஒரு வித வெறியே வந்துவிட்டது.
அதீத ஆசையைத் தான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேனோ:-0)
பதிமூன்று அறைகள் அந்த பாறைகள் மேல் கட்ட
பதிமூன்று வருஷம் ஆச்சாம்.
முதலில் தானே கற்கள் ,மரம் எல்லாம் முதுகில் சுமந்து போய் சேர்ப்பாராம்.
பணக்காரக் குடும்பம்தான்.
இங்கேதான் எல்லாம் டி ஐ.ஒய் ஆச்சே.
அப்படி ஆரம்பித்து இருப்பார் போல.
இதைப் பார்க்க வரேனு சொல்லரவங்க கிட்ட
50 செண்ட்ஸ் கட்டனம் வாங்குவாராம்.
அவர் ஏற்கனவே 'வில்லா மரியா' என்று பெண்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ,விடுதி
ஒன்று கட்டி இருக்கிறார்.
இரண்டு லெவலில் பார்க்கப் பட வேண்டிய அமைப்பு.
ஒருலெவல் பழைய காலத்துவீடு.
இன்னோண்ணு மியூசியம் மாதிரி உலகத்தில இருக்கிற அதிசயங்களீல் பாதியை செய்து வைத்து இருக்கிறார்.
அறைக்கு அறை ஒரு இசை உலகம். காசுபோட்டால்
ஜாஸ் இசை வெள்ளம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த ஃபையர் ப்ளேஸ்.
அடுப்படியில் பெரிய பெரிய அண்டாக்கள்.
எல்லாம் ஒரே பளபளா.
குழந்தைகளுக்குத் தனி உலகம்.50 வருடங்களுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட செல்லுலாய்டு
பொம்மைகள் பெரிய கண்களோடு சர்வ அலங்காரத்தோடு நம்மைப் பார்க்கின்றன.இன்னும் சைன பொம்மைகள், ஜப்பானிலிருந்து தயாரித்த ஓவியங்கள்,
அதுதான் கருப்பு வெள்ளை மட்டும்
வண்ணம்னு சொல்கிற ஒரு விதமான
சோக ஹைகூ மாதிரி இருக்கும்.
அதுவும் அந்த மழை பெய்யும்போது வண்டி இழுக்கும் விவசாயியின் படம் தத்ரூபம்.
மழைபெய்ய,
கால் வழுக்க, பாரம் இழுக்கக்
கஷ்டப்பட்டு வேலையை முடிக்கணும்.
சாமி ! இதுதான் வாழ்க்கையானு
தோன்றிவிடும்.
மிச்சம் டூர் அப்புறம் பார்க்கலாமா?

28 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! நல்ல இடத்துக்குத்தான் போய் இருக்கீங்க.

தாளித்துக் கொட்டிய தயிர்சாதம் டேஸ்டே தனி. இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை அம்மா, நீங்க கவலைப்படாமல் வெடியுங்க. (அட கடுகை வெடிக்க விடுங்கன்னு சொன்னேன்)

அப்புறம் பேரர் (bearer இல்லைங்க, பேரனுக்கு மரியாதை!) கவலைப்பட்ட மாதிரி இல்லாம ஈசியா ஏறிட்டீங்கதானே!

அப்புறம் இங்க வந்து இளைச்சாச்சு அப்படின்னு என்ன உள்குத்து?! :))

//ஒரு ஊஉ என்று காற்று.ஒரு பளார் மின்னல்.காலுக்கு கீழே பாறையே நடுக்கம் கண்ட மாதிரி ஒரு இடி.டிஸ்கவரில இந்த மானெல்லாம், சிறுத்தைக்கு முன்னால் ஓடுமே அந்த வேகத்தில் நான் அந்த முகப்பிற்குள் ஓடி விட்டேன்.//

கற்பனை பண்ணிப் பார்த்தேன். தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறேன். :)))

Subbiah Veerappan said...

மலை பங்களா நம்ம ஊரில் இருந்தால் வேறு மாதிரி ஆகியிக்கும்
சொத்துச் சண்டையில்!

இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக மாறியிருக்கும்!

வல்லிசிம்ஹன் said...

ஆ, சிரிக்க மாட்டிங்க??
எதுக்கோ தெரியுமா எதோட கஷ்டம்னு சொல்லுவாங்க.

கொத்ஸ், அது என்ன ராசியோ!
இந்த ஊரில் வசந்தம் வந்தாலும் குளிருது.
வெய்யில் அடிச்சாலும் குளிருது.

சிங்கம் சொல்லிட்டேதான் இருப்பார்.
நாம போயிட்டேதான் இருக்கணும்.
16 பவுண்டு குறைச்சாச்சு.
அதெல்லாம் உள்குத்து இல்லை. நான் சந்தோஷமா இருந்தா இளைச்சுடுவேன்:-)

இந்த ஊரு 'லூயி லாமோர்'
கதையோட நிறுத்திக்கணும்.
அட்வென்ச்சரா நினைச்சோம்...... காலிதான்.

அதுக்குள்ள எழுந்து வலைக்கும் வந்தாச்சா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் வாத்தியார் ஐயா.
இங்க ஒரே பையன் தான். அதனால சொத்து சண்டை இல்லை.
அவரும் அம்மா அப்பாகிட்ட பணம் வாங்கி இதைக் கட்டி முடித்து இருக்கிறார்.
ரொம்பத் திகட்டிப் போகிற பிரம்மாண்டம்.

துளசி கோபால் said...

ஹை மலைபங்களா டூர் பிரமாதமா இருக்கே!

மக்கள்ஸ் எல்லாரும் இளைக்கணுமுன்ற ஒரு எண்ணம் இருக்கா பாரேன்?
சந்தோஷத்தில் ஊதறவங்களுக்கு ஒண்ணும் இல்லையா? (-:

உடனே இளைக்க ரெஸிபி போடணும். ஆமா!

நம்ம வீட்டுக்கிட்டே 'வில்லா மரியா'ன்னு ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் இருக்கு.
இதையும் 'அவர்' கட்டலைன்னு என்ன நிச்சயம்? :-)

வல்லிசிம்ஹன் said...

இளைக்கத்தானே வேணும்.?

ஒண்ணும் இல்லை துளசி.
சென்னைக்கு வாங்க.
அங்கேருந்து நம்ம ஜிந்தால் (பெங்களூரு) போயிடலாம்.
அங்க தான் இளநீர் தவிர ஒண்ணும் தரமாட்டாங்களாம்.
களிமண்ணையும் மேலே பூசிக் கொண்டா நான் எப்படி இருப்பேன்னு யோசிச்சேன்.
கொஞ்சம் பயமாத்தானிருக்கும்:-0)

Geetha Sambasivam said...

mmmmm can read a little. how you download your e-kalappai? here this window is not allowing e-kalappai. and I install firefox and again learning to type through thamil visaipalakai. some problems. letme see when it will be ok. always problem in blogging. just fed up with them.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வல்லியம்மா...

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் மலைப்பங்களா போலவே உள்ளதே, அந்த நாலாம் படம்!
மலைப் பங்களா என்று தலைப்பைப் பார்த்தவுடன் சரி வல்லியம்மா ஏதோ வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாங்கன்னு நினைச்ச்சேன்! :-))

மெளலி (மதுரையம்பதி) said...

படங்கள் நன்றாக வந்திருக்கிறது...ஆமா ஒரு வயசுக்கு மேல ஏன் எல்லோரும் இளைப்பதிலேயே குறியா இருக்கீங்க...?

ambi said...

//உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு//

ஹா!ஹா! உங்க வீட்டு சிங்கத்துக்கு நல்ல நகைச்சுவை வருது. (பின்ன உங்க கூட சேர்ந்தா அப்படி தானே!)

படங்கள், விவரனை எல்லாம் அருமை. 150 தாண்டியாச்சு இல்ல, எழுத்துக்கள் மெருகேறி இருக்கு.

உங்க 'ஆருயிர் தோழி' கீதா பாட்டியும்(!) அங்க கும்மி அடிக்க வந்தாச்சு போலிருக்கே!

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ் , நல்லாவே அலுக்காம மூன்று மணி நேரம் நடந்து சுத்திப் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி, வில்லா மரியா நியூசிலாண்ட் நாம இல்ல கட்டினோம்?
மறந்து போச்சா?:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா ,
இங்கே கீழே இருக்கிற சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி.

அதனாலே சீக்கிரம் தமிழா.காம் போட்டவுடன் இ-கலப்பை வந்துவிடுகிறது.

வீட்டில இருக்கிறவங்களுக்குத் தொந்தரவா இல்லாம நேரம் பார்த்து எழுதிவிடலாம்:-)
உங்களுக்கும் சீக்கிரம் அமையணும்.

வல்லிசிம்ஹன் said...

ரவி, நானும் இந்தப் படத்தைப் பார்த்து அப்படித்தன் நினைத்தேன்.
இது ரோடிலிருந்து ஒரு வியூ.

பார்வேட்டை கிளம்பியாச்சானு பாட்டி கேப்பாங்க,.
காலில் செருப்பு ஏறின அடுத்த கணம்!!
அதுமாதிரி இது இன்னோரு வேட்டைதான். விஷய வேட்டை. பதிவுக்காகன்னு கூட சொல்லலாம்:-)

வல்லிசிம்ஹன் said...

எங்க சிங்கத்துக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமப் போனா எப்படி? அம்பி.
என் பதினெட்டு வயசிலிருந்து,
இதோ இன்னிக்கு ஐம்பத்தொம்பது ஆச்சு.
இதுவரை முகம் சுளிக்காம,(என்ன, அப்ப அப்போ உறுமுவார்)
குடும்பம் நடத்தறாரே:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
இளைத்தால் உடம்புக்கு நல்லது. அவ்வளவுதான்.
வேற என்ன.
மிஸ். பாட்டி யூனிவ்ர்ஸ்
பட்டத்துக்காகவும் இருக்கலாம்:-)
இன்னும் நிறைய போட்டோக்கள் வலையேத்த நேரம் இல்லை.

செய்ததும் பதிவில போடலாம். ரொம்ப உழைப்பு தேவைப் பட்டிருக்கிறது.
எனகென்னவோ இவ்வளவு ஆடம்பரத்தைப் பார்த்தால் நம்ம ஊர்க் குழந்தைகளுக்கும், இந்த மாதிரி ஒரு இடம் கட்டின செலவில் கொஞ்சம் கொடுத்து இருக்கலாமோனு தோன்றியது.

துளசி கோபால் said...

மலைப்பங்களா- மைக்கேல் மதன காமராஜன்

நானும் அப்படித்தான் நினைச்சேன். எழுத விட்டுப்போச்சு.

நேத்தும் நம்ம வீட்டுலே 4 x கமல்தான் பார்த்தோம்.

புது டிவிடி வாங்கி வந்தார். பழைய டேப் அறுந்து போகும் நிலைக்கு வந்துருச்சு.

பேசாம இதுக்கே ஒரு கலந்துரையாடல் வச்சுக்கலாமா? :-))))

உங்களுக்குச் சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்தான்( ஸ்வெட்டரின் ஒரு பக்கம்
முறுக்கிண்டே சொல்றேனாக்கும்!)

வல்லிசிம்ஹன் said...

துளசி,
எதுக்குக் கலந்துரையாடல்?
மைக்கேலுக்கா?
இளைக்கிறதுக்கா.
ஸ்வெட்டரை முறுக்கறீங்களா?
அது ஆபத்துக்கு அறிகுறி!!:-0)

துளசி கோபால் said...

என்ன 'ஆ' பத்து வல்லி?

புடவை கட்டிண்டிருந்தா புடவைத்தலைப்பு கிடைச்சிருக்கும் முறுக்கறதுக்கு:-)))

கலந்துரையாடல் எல்லாம் வசனத்துக்கும் நடிப்புக்கும்தானாக்கும்:-)

இவ ஒருத்தி எல்லாத்துக்கும் 'ஆக்கும் ஆக்கும்'னு சொல்லிண்டு!

ambi said...

//புடவை கட்டிண்டிருந்தா புடவைத்தலைப்பு கிடைச்சிருக்கும் முறுக்கறதுக்கு//

@thulasi madam, புடவை தலைப்ப தான் வல்லி மேடத்தின் சிங்கம் இல்ல பிடிச்சுண்டு இருப்பார்? :p
இப்ப வல்லி மேடம் என் காதை முறுக்காம இருந்தா சரி.

வல்லிசிம்ஹன் said...

துளசி, புடவைத் தலைப்பை முறுக்கின நாள் எல்லாம் போச்சு.

வரிஞ்சு கட்டற நாட்களும் பத்து வருடங்களுக்கு முன்னால்
''காரியக் கப்பலாக' இருந்த போது.

இப்போது 'துப்பட்டா மேரா'
இல்லாட்டா ஸ்கார்ஃப்:-)

வல்லிசிம்ஹன் said...

அம்பியோட அங்கவஸ்திரம்
கல்யாணத்தன்னிக்கு முடிவார்கள் இல்லையா.

அன்னிக்கு அவங்க கிருகலட்சுமி கையில போயிடும்.

அப்புறம் சகலமும் அவங்க பார்த்து செய்தாதான்.:-)

ambi said...

//அம்பியோட அங்கவஸ்திரம்
கல்யாணத்தன்னிக்கு முடிவார்கள் இல்லையா.
//

ஆஹா! வாய குடுத்து மாட்டின்டேனோ? :p

வல்லிசிம்ஹன் said...

அதே அதே அம்பி.
புகப்போகும் வீட்டில இன்னும் விளகெண்ணைப் போட்டுண்டு பார்ப்பாங்க.கேப்பாங்க.
ஸோ பர்மனெண்ட் அலெர்ட் தான் இனிமே:-)

நானானி said...

ஆஹா! விஸ்கான்சின் போய் house on the rock-பார்த்தீர்களா? அற்புதமான இடம்! அதன் அத்தனை அழகையும் ஒன்று விடாமல் என் camcorder + digiral camera- விலும் அள்ளி வந்திருக்கிறேன். பதிவில் படத்தோடு போட கற்றுக்கொண்டு பதிகிறேன்.பக்கதில் centre of gravity-குறைவான ஒரு இடம் போய்
சாய்ந்து நின்றிருக்கிறீர்களா?

வல்லிசிம்ஹன் said...

நானானி,
அங்கேயும் போகணும் 'டெல்'
மைனிங்கும் விட்டுப்போச்சு.

ஒரே மழை.
காரில் திரும்ப வேண்டிய அவசியம்.

இருட்டுக்கு முன்னாலே கிளம்பிட்டோம்.

குமரன் (Kumaran) said...

அடடா. இவ்வளவு வருடமா மினசோட்டாவில தான் இருக்கேன். இதுவரைக்கும் இங்க போனதில்லையே. மே மாதம் போகமுடியுதான்னு பாக்கணும். ஆசையைக் கிளப்பிவிட்டுட்டீங்க.

எங்க வீட்டுல தயிர்சாதத்தோட புளியோதரையும் செஞ்சிக்கிட்டு எடுத்துக்கிட்டுப் போவோம்.

வல்லிசிம்ஹன் said...

புளியோதரைக்குத்தான் முதலிடம்.
கூடவே அப்பளம்,.
தயிர்சாதம்..கூட வறுத்த மோர்மிளகாய்.

எல்லாம் செய்துகிட்டு சிக்கிரமே போயிட்டு வாங்க,.
வெளில பெஞ்சில உட்கார்ந்து சாப்பிடலாம்:-)