About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, May 28, 2010

மீண்டோம் சென்னை...

 
மதிய தூக்கத்துக்குப் பேத்தி தயார் ஆனதும் ''பாப்பா ,அப்புறமா பார்க்கலாம்' என்று பயந்துகொண்டே சொன்னோம். ''நின்னி தாச்சி.ஈவனிங் வவ்வா'' என்று அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)

சத்தம் போடாமல் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்.
இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகுமே என்கிற மனக் கிலேசம், எல்லாம் கலந்து
எங்களை மௌனமாக்கியது.

வெளியில் வந்து கண்கூசும் ,சுட்டெரிக்கும் பாலைவெய்யிலைக் கண்டதும் ,ஆளைவிடு !
சென்னை இதற்கு எவ்வளவோ தேவலை என்று விமான நிலையம் வந்தடைந்தோம்.
அதி நவீன புதிய டெர்மினல்.வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லாத போர்டிங் ரொடீன்.

212ஆம் எண் கொண்ட எமிரெட்ஸ் வாயிலுக்கு வந்ததுதான் கையில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தது.
உடனெ வீட்டு எஜமானர் நான் வாங்கி வரேன்,நீ வேணுமானால் ட்யூட்டி ஃப்ரீல ஏதாவது வாங்கிக் கொள் என்றதும், பழைய அனுபவங்கள் காரணமாக நான் நாற்காலியை விட்டு நகரமாட்டேன், நீங்கள் போய் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அவரும் போனார். போனார்.போனார்.
என்ன வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் விட்டாரா என்று நான் பயப்பட ஆரம்பிக்கும்போதே லாஸ்ட் அண்ட் ஃபைனல் கால் ஃபார் போர்டிங் சென்னை ஃப்ளைட்'' ஒலிபெருக்கியில் வந்தது.
அங்கு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ''அம்மா, எங்க வூட்டுக்காரர் தண்ணி பிடிச்சாரப் போயிருக்காரு. நீ கொஞ்சம் பொறுமையா இரு தாயீ'' ன்னு சொல்லிட்டு நான் ஒரு காலில் தவம் இயற்ற ஆரம்பித்தேன். நிமிடம் நகர எனக்கு துடிப்பு அதிகமாகியது. இப்போது அந்த லௌஞ்சில் நான் மட்டுமே திக்கற்ற பார்வதியாக நின்று கொண்டிருந்தேன்.

இதென்னடா கஷ்டகாலம், ஓரோரு தடவையும் நாந்தானே தொலைவேன். இப்ப இவர் எங்க போனார்.எங்கபோய்த் தேடுகிறது. இந்தப் பொண்ணு வேற மகா க் கேலியாக என்னைப் பார்க்கிறாள். ''ஹி ஹேஸ் டு கம் நௌ''என்று மிரட்டல் அவள் கண்ணில்.
சடக்கென்று எதிர்வரிசையில் நடக்கும் உருவம் ரொம்பப் பழகினதாகத் தெரியவே
நம்ப முடியாத வேகத்தில் அந்தத்திசையில் பாய்ந்தேன்.
சத்தியவான் சாவித்திரி கூட அப்படி இரைச்சல் போட்டு இருக்க மாட்டாள்.
இவர் பெயரைச் சொல்லிக் கையைத் தட்டி..ம்ஹூம், மனுஷன் திரும்பணுமே!!

அவர் பாட்டு எண்களைப் பார்த்துக் கொண்டே எதிவரிசையில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!

ஒரே எட்டு. இருபது நொடிகள் தான் ஆகியிருந்தது. அவர்கையைப் பிடித்துவிட்டேன்.
ஏனோ சுஜாதா சாரின் பத்துசெகண்ட்.....கதை நினைவுக்கு வந்து தொலைத்தது:)
எப்பவுமே யாராவது மேலெ இடிப்பதோ கையைப் பிடிப்பதையோ விரும்பாத அவர், படு கோபமாக இன்னோரு கையை என்னைப் பார்த்துத் திருப்பினார்.
சாமி, நாந்தான்பா எங்க போறதா நினைப்பு, கேட் இந்தப் பக்கம்னு அவரைத் திருப்பினேன்.
ஓ,இங்கேயா இருக்கு. நான் கீழ் தளத்துக்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து தப்பான படிகளில் ஏறி விட்டேன் போலிருக்கிறது''என்றவரைப் பார்த்து
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு,சரிம்மா என்ன ஆச்சு இப்ப, ப்ளேனைக் கிளப்பிட்டானா? என்று சிரிக்கிறார்.
கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கையிலிருந்து
தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே எங்கள் போர்டிங் கேட்டு'க்கு வந்தேன்.
அவரும் பாஸ்போர்ட்,டிக்கட் எல்லாவற்றையும் காட்ட ஒருவழியாக ,
விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)

பற்றாததற்கு விமானம் பல தடவை. கீழே இறங்கி,குதித்து,ஆடி எங்கள் பயணத்தை இன்பமாக முடித்து வைத்தது.
வந்துட்டோம்பா.:)எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa