About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Wednesday, September 27, 2006

வேறு யாரும் துணை இல்லாத போது..

டிசம்பர் மாதம் மிகவும் பிடித்தமாதம் எனக்கு.
படிக்கும் காலத்தில் பரீட்சை முடியும் . 15 நாட்கள் லீவு கிடைக்கும்.
படித்தபோது பெற்றோர் இருந்த
திண்டுக்கல் நல்ல சீதொஷ்ணத்தோடு இருக்கும் சில மாதங்களில் டிசம்பரும் ஒன்று.

படிப்பு, திருமணம் குழந்தைகள் பிறந்து அவைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் லீவு நாட்களும்
இனிமையாகக் கழியும்.

அதனால் ஒரு டிசம்பர் சோதனையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.
அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.

சிறு குழந்தைகள். ஒரு நாள் சாயந்திரம்
இவர் வீட்டுக்கு வரும் போதே கடும் காய்ச்சலுடன் வந்தார்.
எப்போதும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஆசாமி
சுருண்டு படுப்பதைப் பார்த்து
பயமாகி விட்டது.
சரி ஜுரத்துக்கு மருந்து கொடுப்போம் என்று ரசம் சாதமும்
பிறகு பாராசிடமால் ஒன்றும் கொடுத்து
தூங்கலாம் என்று பார்த்தால் இரவு 10.30 மணி வாக்கில் உடல் நெருப்பாகக் கொதிக்க சப்தமாக முனக ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகள் அரண்டு விட்டன.
அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஏதொ அலுவலாக வெளீயூர் போயிருந்தார்கள். நாங்கள் இருந்த மன்னார்புரம்
அப்போது அவ்வளவாக ஜனநடமாட்டம்
இல்லாத இடம்.

வெளியே டெர்ரஸில் வந்து மலைக்கோட்டைப் பிள்ளையாரை (விளக்குகள் தெரியும்) வேண்டிக்கொண்டு,

கீழே போய், ரோடு தாண்டினால் இருக்கும் ஒரு காலேஜ்
ஹாஸ்டலில் மாணவர்களிடம் டாக்டர் கிடைப்பாரா என்று தெரிந்து கொண்டு
அவரை அங்கிருந்த போனிலேயே
எங்க வீட்டுக்கு வரச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
அப்போதுதான் அங்கிருந்த காலண்டரில்
நம்ம சமயபுரம் அம்மா இருந்தது தெரிய வந்தது.

சாமி ஞாபகம் வருவது நமக்கு எமர்ஜென்சி டையத்தில் தானே. உடனே அவளைக் கைகூப்பிக் காப்பாத்து
என்று சொல்லி விட்டு,
வீட்டுக்குத் திரும்பினேன்.
டாக்டர் எங்கேயோ இருப்பவர். பெயர் கூடத் தெரியாது.
முப்பத்து இரண்டு வருடங்கள் முன்னால்
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது. :)))
ஆனால் டாக்டர் சொன்னதென்னவோ பெரிய வார்த்தை.
இவர் மேல் அம்மா வந்து இருக்கிறாள் என்று.
சிக்கன்பாக்ஸ்.

அறியாமை ,பயம் நிறைய என்னை ஆட்கொள்ள
அடுத்த வேண்டுதல் சமயபுரத்து மாரியிடம்தான்.

நீ காப்பாத்து என்பதைத் தவிர அந்த இரவு வேறு எந்த வார்த்தைகளும் என்னிடமிருந்து.

டெலிபோன் எல்லாம் வீட்டில் அப்போது கிடையாது.
காலை நெருங்கும்போது கொஞ்சம் தெளிவு வந்தது.

எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா பேரு மேரி.
அவங்க வந்ததும் அவரிடம் நானும் குழந்தைகளும்
அடைக்கலம்.

அவர்தான் எங்களைத் தேற்றினார்.
அய்யா வயசில (34) பெரியவரு இல்லை. வந்தா எல் லாம் கொஞ்சம் பயமாக இருக்கும்.
20 நாளில் எல்லாம் சரியாகி விடும்
என்று எனக்கு இந்த சமயம் செய்ய வேண்டிய பத்திய சாப்பாடு, வேப்பிலை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
மறக்காமல் கடைக்குப் போய் (அப்போது) இரண்டு ரூபாய் விலையில் சமயபுரம் அம்மாவின் படமும் வாங்கி வந்தார்கள்.

என் பெற்றொருக்கும் இவர் பெற்றொருக்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்யச் சொன்னேன்.
பதில் 2 நாள் கழித்து வந்தது.
இருவராலும் வரமுடியாத நிலை.

அப்போது எனக்கு இன்னும் தைரியம் வந்தது.
கூடவே இந்த மூன்று குழந்தைகளுக்கும்
பரவி விட்டது.
அப்புறம் கேப்பானேன்.

எல்லோருக்கும் தயிர் சாதம், இளநிர்,
பச்சை வெங்காயம், பூண்டு போட கீரை,
தக்காளி சூப்.
இதெதான் காலையும் மாலையும்.

இரு வாரம் சென்றதும் மேரியம்மா
பருத்திக்கொட்டை கொண்டு வந்தார்.
எதற்கு என்றபோது அவைகளை ஊற வைத்து
பால் எடுத்து இவர்கள் குடிக்க வேண்டும் என்று

எடுத்து வைத்தார்.
இதுவரை பருத்தியும் பசுவும் தெரியும்
மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.
வேப்பிலை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது,
எப்போதும் துணையாகப் படுப்பது
என்று
சமயசஞ்சீவியாக வந்தது, காப்பாற்றியது அந்த அம்மாதான் என்று உணர்கிறேன்.

இது எங்கள் எல்லோருக்கும் சேர்ந்து
அனுபவமானதால் இன்னும் குடும்பத்தில் நெருக்கம்
சேர்ந்தது.
ஏனெனில் அப்பா என்பவரைப் பார்ப்பதே
குழந்தைகளுக்கு அபூர்வம்.
மூன்று வாரங்கள் அப்பா வீட்டில் ிருந்து
அவர்களோடு கதை பேசினது,
எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
நாங்களும் சமயபுரம் 3 வாரங்கள் போய் வந்தோம்.
மேரியம்மாவுக்கு நான் என்ன கொடுத்து
கடன் தீர்க்க முடியும்?
அவருடைய இஷ்ட தெய்வமான வேளாங்கண்ணி அம்மாவுக்கு மெழுகு வர்த்தி ஏத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.
கால்த்தில் செய்த உதவி.
அவர்கள் பேரன் பேத்தி கல்யாணங்கள்
முடிந்தததாக் அறிந்தேன்.
நான் தினமும் செய்யும் வழிபாட்டில் மேரிக்கு எப்போதும் இடம் உண்டு.
திக்கற்றவற்குத் தெய்வமே துணை.
தெய்வம் மனித ரூபத்தில்
வந்து விட்டது.