Blog Archive

Saturday, February 28, 2015

.வாழும் எழுத்துகள்....



இன்று பிபரவரி   27. எதையோ மறந்துவிட்டோமே என்று யோசித்தேன்.
அநேகமாகக் கலயாண நாட்கள்,ஆண்டுநிறைவுகள் வரும்மாதம்.
 
சட்டென்று சுஜாதா சார் ஞாபகம் வந்தது.

தன்னுடைய 70ஆவது வயதுக்கு வந்த வாழ்த்துக்களை விட, பூங்கொத்துகளை விட,
திடீரென்று மூப்பு தனக்கு வந்துவிட்டதை நினைத்ததாகச் சொன்னதும் நினைவு வந்தது.
வாரவாரம் சனிக்கிழமை காலை பதினோறு மணிக்குக் காத்திருந்து ,எந்த ஊரிலிருந்தாலும் இந்திய நேரத்துக்கு ,
கணினி முன் உட்கார்ந்த ,
அம்பலம் அரட்டைக்கு வந்த நாட்கள்.
முகம் தெரியாத பல நபர்களின் அறிமுகம்.
எல்லோருடைய கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் லாகவம்.
அவர் வருமுன்னே களைகட்டி விடும்.
கணேஷ் என்று ஒருவர், மதுரை சுரேஷ் என்று ஒருவர்,அதியமான், நம் தேசிகன்,உஷா,
டார்-எஸ்-சலாமிலிருந்து ஒரு பெண்.
இப்படி எத்தனையோ .
ஒவ்வொரு தடவையும் ஸ்விஸ் ஆக இருந்தால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி விசாரிப்பார்.
கூடவே தான் டாவோஸ் ஏரிக்கரையில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதையும் சொல்லுவார்.
''ஒரு சர்ச், ரெண்டு மரம்,ஒரு பார்க்,நாலு மனிதர்கள் இவர்களை வரைந்தால் ஒரு ஸ்விஸ் ஊர்த்தெரு வந்துவிடும் என்பார்.
}பிறந்த நாளைக்கு ஒன்றும் ஸ்பெஷல் கிடையாதா சார் என்றால் நான் பாயாசம் சாப்பிடுவது கிடையாது. மற்ற ஸ்வீட் ,கேக் உடலுக்கு ஆகாது.
இதுதான் பிறந்தநாள் என்று ''' matter of fact'' நினைவுக்கு வருகிறது.}
அம்பலமும் இல்லை, அரட்டையும் இல்லை,அவரும் இல்லை.
அவர் எழுத்துகள் இருக்கின்றன.


யாருக்காவது இந்த அரட்டை நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனிய நினைவுகளுக்கு நன்றி  சார்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, February 26, 2015

குரு வார எண்ணங்கள்

இறைவனுக்கான மலர்கள் 
Add caption
கண்கண்ட   தெய்வம் 
வடிவேலும் மயிலும் துணை 
உன்னுள் நான் 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திருப்பரங்குன்றம்   மண க்காட்சி. தெய்வத் திருமணம்

Monday, February 23, 2015

பதிவு ஒன்று வேண்டும் !!

ஐக்கியா கடைக்குள்   போஸ்டர்ஸ் 
நேற்றைய மழை 
இதை நாங்கள்  வாங்கவில்லை.                                                                                                                                                                                                                                                                            
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 அம்மாவோட பால் தீர்ந்து  போச்சு.   இதோ எதிர்த்தாப் பில   இருக்கிற  கோஆபரடிவ்க்குப் போனால் வேலை முடிந்தது.

கைவலி கால்வலி மருந்து,கண்ணுக்கு சொட்டு மருந்து. இருக்கவே இருக்கு பூட்ஸ் பார்மஸி . இவ்வளவு சௌகர்யங்கள்  இருக்கும்  இடத்தைவிட்டு புது வீடு போகப் போகிறோம்.
அது பள்ளிக்கூடங்கள் இருக்கும்   பிரிவு. கூடவே  சீனியர் சிடிசன்ஸுக்கு  வசதியாக ஒதுக்கப் பட்ட அமைதியான இடம்.

வீட்டுக்கு   Townhouse  என்ற விதத்தில்   அமைக்கப் பட்ட    வகை. அதாவது வீடு அடுக்கு மாடிகளாக இருக்கும். அகல வாட்டில் இல்லாமல் நெடுக்கு வாட்டில் அமைக்கப் பட்டிருக்கும்.  இரண்டு மாடிகளில்  நான்கு  படுக்கை அறைகள். மூன்று குளியலறைகள்   என்றபடி இருக்கும். கீழ் தளத்தில் சமையல்,வரவேற்பறை. மாடியேறினால்  இரண்டு  படுக்கும் அறை. ஐரோப்பாவில் எல்லோருக்கும்   பெரிய இடமாகக் கட்டுவதில்   நினைப்பே இருக்காது போல. எல்லாம் குட்டி குட்டியாக   ஆனால் வசதிகளோடு கட்டிவிடுகிறார்கள்.  மூன்றாவது   மாடியில் குழந்தைகள்   படுக்கும் இரண்டு அறைகள். பேபி பேபியாகவே இருக்குமோ வளராதோ என்று கேட்டேன். வேற வீட்டுக்குப் போய்விடுவார்கள் அம்மா.  என்றான் பையன்.
வீடு என்பது  சமைக்கப், படுக்க.மிச்ச    நேரமெல்லாம்     குழந்தைகள் வளர்ப்பகத்தில்,பள்ளியில்  செலவழிந்துவிடும்.
மகனிடம் கேட்டால் ,அம்மா உன்னை ஜப்பானில் விடவேண்டும் என்று சிரிக்கிறான்.  வாடகையைக் கேட்டுவிட்டு  வாயை மூடிக் கொண்டுவிட்டேன்.  மஹாராணி   ஆளும் தேசம்.    எல்லாமே  பெரிய விலைதான்.

சமைப்பது கூட சொல்ப நேரம் தான். போகும் வழியில் எல்லாம் கிடைக்கிறது. சாப்பிடவும் வைத்து,பள்ளிக்கும் பார்சல்.    இல்லையா.பள்ளியிலேயே  மதிய உணவுக்குப் பணம் கட்டிவிடலாம்.  தினம் உருளைக்கிழங்கு வேகவைத்தோ   அவன் இல் காயவைத்தோ கொடுத்துவிடுகிறார்கள். மரக்கறி சாப்பிடும் குழந்தைகளுக்குக் கொஞ்சம் சிரமம் தான்.   மருமகள் சொல்லிச் சொல்லி பேத்தி இப்போது சாலட் வகையறா   சூப்,  எல்லாம் எடுத்துக் கொள்ளக் கற்றிருக்கிறாள்.   இதெல்லாம் இருக்கட்டும்.
மாதிரி  டவுன் ஹௌஸ் 
புதுவீட்டுக்கு மெத்தைகள்,தலையணைகள் ,விரிப்பிகள் எல்லாம் வாங்க ஐகியா என்ற பெரிய  மர க்கடைக்குப் போயிருந்தோம்.  ஸ்வீடனில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்பொழுது உலகெங்கும் கிளைகள் பரப்பிப் பிரம்மாண்டமாக   நிற்கிறது. எப்பொழுதும் கூட்டம் தான்.   விற்கும் பொருட்களின் தரம் அப்படி.   ஒரு வீட்டுக்குத் தேவையான அத்தனை  சமாசாரங்களும் அங்கே கிடைக்கும்.   இதோ சில படங்கள்.  மற்றவை அடுத்த பதிவில்.
ஐக்கியா    பரந்த     வாயில்.
வெளியே வரும்போது   மழை யோ  மழை.

Sunday, February 22, 2015

பச்சைக் கிளிக்கு நூறாயிரம் வாழ்த்துகள்

Add caption
அன்பு
Add caption



அன்பு
துளசி,
இந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும்,

அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.


இரண்டாவது, நல்ல வார்த்தைகள் நிறைந்த பின்னூட்டங்கள் அளித்து ஆயிரம் பதிவர்களுக்கு நூறு பதிவுகளாவது எழுத உற்சாகம் அளித்தது.(நானும் அதில் ஒன்று)


மூன்றாவது வரலாறொ, கோவில்களோ, பயணங்களாகவோ இருக்கட்டும். முன் ஏற்பாடாகவே எல்லா இடங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்து , ஒரு சின்ன தவறு கூட இல்லாமல், ஒரு பதிவைப் போட எடுத்துக் கொள்ளும் கண்ணியம்.


தனக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்குப் பதில் அளிக்கும்போது காட்டும் மரியாதை,வரவேற்பு... இதெல்லாம் படித்து அதையே பின்பற்ற என்னைப் போன்றவர்களை , வழிநடத்திய பாங்கு. , எழுத்துப் பிழை,சொல்பிழை எது இருந்தாலும் எடுத்துக்காட்டும் அன்போடு எடுத்துக் காட்டித் திருத்தும் ஆசிரியை..



இதெல்லாம் தான் நான் அறிந்த துளசி கோபால். நியூசிலண்டின் வரலாற்றுப் பக்கங்களிலும் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண். அங்கே 13 வருடங்கள் சமூக சேவையில் ஒரு தன்னார்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஒரு நல்ல குடும்பத்தலைவி. கனிவு உள்ளம் காரணமாகவே அநாதையாக்கப் பட்ட பூனைகளையும் நாய்களையும் அடைக்கலம் கொடுத்துப் பேணிய நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர். .



இன்னும் எழுதலாம். எல்லாம் உண்மையாகவே இருக்கும் .
ஆனால் மிகையாகப் புகழ்ந்த மாதிரி துளசி எடுத்துக் கொண்டுவிட்டால், நன்றாக இருக்காது.


அதனால் அன்புத் துளசி, உங்கள் உழைப்புக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். அதற்குத் துணையிருக்கும் திரு.கோபாலுக்கும் ,அவரது பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.



இவ்வளவு உயரத்துக்குத் துளசி வரவும்,இன்னும் சிகரங்களைத் தொடவும் அவர் ஒரு ஊக்கியாகச் செயல் படுவார். தம்பதிகளுக்கு வாழ்த்து. தளத்துக்கு வாழ்த்து. ஒரு நல்ல பெண்மணிக்கு வாழ்த்து. இப்படிக்கு,
தமிழ்மணத்தின் பதிவர்கள் ....



எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa


Saturday, February 21, 2015

எங்க வீட்டு ஆவக்காய்...மீள் பதிவு








ஆவக்காய் போட்டாச்சு.
எண்ணெய் அபிஷெகம் தான் பாக்கி.
புதிதா இன்னோரு பீங்கான் ஜாடியும் வாங்க வேண்டும்.
ஒரு பையனுக்கு கடுகெண்ணெய் கலந்த ஊறுகாய் மேல் மோகம்.அப்பா மாதிரி.
இன்னொருவருக்கு
எண்ணெய் வேண்டாம், உப்பு,காரம் எல்லாம் மிதம். அதுக்கப்புறமும் அந்தத் துண்டை அலம்பிவிட்டுச் சாப்பிடுவார்:)
பொண்ணுக்குக் கொண்டைக்கடலை கட்டாயம் போட்டிருக்கணும்.

அதனால் தங்கத்தைச் செயினாவும்,நெக்லஸாவும் ,அட்டிகையாவும் போட்டுக்கிற மாதிரி
மாங்காயை விதவிதமாச் செய்தாச்சு.
போட்டபிறகு எப்படி செய்தேன்னு சொல்லணும் இல்லையா.....
மாங்காய்களைத் துண்டு போட்டு வெள்ளைதுணியில் உலற வைக்கணும்,.
எங்கவீட்டு வெள்ளைத்துண்டு காணாமப் போய்விட்டது.
அதனால் கட்டம் போட்டத் துண்டுல உலத்தியாச்சு.
அப்புறம் அந்தத் துண்டுகளை(மாங்காயைச் சொல்றேன்பா)
அரைப்படில அளந்துக்கணும்.(சின்னப்படி)
ஒரு அரைப்படி துண்டுகளுக்கு
வேண்டியது 300 கிராம் கல்லுப்பு
வறுத்து அரைத்த சிவப்பு மிளகாய்ப் பொடி 300கிராம்
பச்சையாய் அரைத்த கடுகுப் பொடி 300 கிராம்.
மெந்தியம் வறுத்து அரைத்தது 3 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி 200கிராம்
கொண்டைக்கடலை 100கிராம்.
ஒரு பெரிய தாம்பாளம் ஒன்று எடுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி மாங்காய் ஒரு பிடி இந்தப் பொடிகலவை என்று எல்லா மாங்காய்த்துண்டுகளையும் கலக்கவேண்டும்.
கைபடாமல்  பெரிய  மரக்கரண்டியால்    ஒரு பெரிய ஜாடியில்  சேர்க்கவேண்டும்.
அதுக்கு முன்னாலே அந்த ஜாடி சுத்தமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.
இல்லாட்டா கடைசி நேரத்தில,
திடிர்ர்னு எட்டுக்கால் பூச்சி எட்டிப் பார்க்கும்:)
அப்புறமா ஒரு கிழிஞ்ச வேஷ்டித் துண்டை(வேஷ்டியை யார் கிழிய விடுவார்கள்.)
பழசுதானேன்னு சொல்லி பீரோவிலிருந்து உருவிக் கொள்ள வேண்டியதுதான்:)
அதை ஜாடியோட கழுத்தில்   அரபு நாட்டு ஷேக்கோட தலைஅலங்காரம் (சிவாஜி சிவந்த மண்ணில்  பட்டத்து ராணி பாட்டுக்கு  வருவாரே)போல சுத்திவிட்டு மூட வேண்டியதுதான்.
மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் கொஞ்சம் தளர்ந்து விட்டிருக்கும்.
அப்போது நல்ல எண்ணெயை அப்படியே கலந்து விடலாம். அவரவர் இஷ்டம்.
சில பேர் தேவைக்கேத்தது போல அவ்வப்போது எண்ணெய் கலந்து கொள்வார்கள்.

மிச்சமிருக்கும் மாங்காய்த் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி , மெந்திய மாங்காயும் போடலாம். அடர் மாங்காய் என்று இதற்குப் பெயர்.

உப்பு,மெந்தியம்(ஒரு தேக்கரண்டி),கடுகு,மிளகாய்,பெருங்காயம்  எல்லாவற்றையும்
வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு
பொடித்துக் கொள்ளவேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய்  தாராளமாகவிட்டு
அது நன்றாக  கொதித்ததும்,
உலர்த்தின  மாங்காய்த்துண்டுகளைப்  போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
மாங்காய் கொஞ்சம் வெந்ததும்  வறுத்த பொடியைத் தூவி  அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
கொஞ்ச நேரத்தில் எண்ணெய் மேலே   வந்துவிடும்.
ஆறின ஊறுகாயை நல்ல ஜாடியில் போட்டு வேடு கட்டி வைத்துவிடலாம்.






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, February 14, 2015

வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் மணப் பட்டை

சிவனார் கையால் முருகனுக்குப் பாலபிஷேகம்.
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முகநூல்   ஒளித்த பதிவுகள் பல.     பலப் பல மாற்றங்களைச் சந்திக்கும் போது சிந்தைக்கு எளிதாக இருந்தது முகநூலி ல் பதிவது.       அதைத் தவிர  கூகிள் ப்ளஸ்.  .அனைவருடனும் இருப்பது போன்ற ஒரு பிரமை.  இந்தகே காலங்களில் காணாமல் போயிருந்தது என் பதிவின் தமிழ் மணப் பட்டை. பதிவுகள் எழுதினாலும்   தமிழ்மணத்தில் பதியாதது ஒரு வெறுமை உணர்வைக் கொடுத்தது. அதனால் மீண்டும் முயற்சி  அதனால்   வெற்றியும் கிடைத்தது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம் இந்தப் பதிவு வரும் போது   தமிழ்மணம் பதிவில் வீசுகிறதா என்று.
அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள் 

Sunday, February 08, 2015

கல்லூரிக்குப் போலாமா....(மீள் பதிவு)


அம்மா   பிப்ரவரி 9  1929 பிறந்த நாள்
வந்து சேர்ந்த இடம்!!
திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கல்லூரி என்பது கதைகளில் ,திரைப்படங்களில் பார்த்து அறிந்ததுதான்.
அப்பொழுது விகடனில் சேவற்கொடியோன் எழுதிக்கொண்டிருந்தார். மணியன் எழுதிய இதய வீணையும் வந்து கொண்டிருந்தது.
பள்ளி மதிய உணவுக்கு அப்புறம் அந்தத் தொடர்களில் வரும் கதாநாயகிகள் போல எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை,
(நுனி நாக்கு என்று பிறகு அறியப்பட்டது)
மாற்றிப்பேசப் பழகிக் கொள்ளுவோம்.:0)
எல்லாம் கல்லூரிக்குப் போக வேண்டிய அந்த நாளை நினைத்துத் தான்.!
திண்டுக்கல்லில் அப்போது கல்லூரிகள் இல்லை .
சென்னையோ,மதுரையோ ,திருச்சியோ போய்த்தான் படிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை கல்லூரி என்பது கனவில் மட்டும் வரும் இடம் என்று தீர்மானமாகத் தெரியும். ஆனால் அதைச் சொல்லிக் கௌரவத்தை இழக்க முடியுமா. அநேகமாக ராணிமேரியில் படிக்கப் போவேன் என்று தோழிகளிடம் அலட்டிக் கொள்ளுவேன். ஏனெனில் கதைகளில் அந்தக் கல்லூரி அதிகமாக இடம் பெறும்.
தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களும் பெற்றாகிவிட்டது. எனக்குப் பிறகு தம்பிகள் இருவர். அவர்கள் கட்டாயம் கல்லூரிக்குப் போகவேண்டும். எனக்கும் பெரிய லட்சியம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு....

அப்போது வந்தது அந்தக் கடிதம் .சென்னையில் இருக்கும் பாட்டி எழுதி இருந்தார். ''நம் வீட்டில் அவளாவது கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கவேண்டும்.
இங்கே இருந்து படிக்கட்டும். பியூசி முடித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் பட்டப் படிப்பும் படிக்கட்டும்''
என்று தொடர்ந்தது அந்தக் கடிதம்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே இருப்பதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
பெற்றோர்களுக்குத் தர்மசங்கடம். பாட்டிவீடு என்பது விடுமுறைக்கு மட்டுமே போகும் இடம்.
அப்பாவுக்கு யாரையும் தொந்தரவு செய்வதோ, தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதோ பிடிக்காது.
என்ன தோன்றியதோ கொஞ்ச நேரம் கடந்ததும் அப்பாவும் அம்மாவும் பேசி முடிவெடுத்துவிட்டனர் என்னை அனுப்புவது என்று.
அப்பாவுக்குக் கவலை.அம்மாவுக்குப் பெண் வீட்டைவிட்டுப் போவதை நினைத்து வருத்தம். சின்னத்தம்பி என் கூடவே இருந்தான். நிஜமாவே போகப் போறியா. கஷ்டமா இருக்காது உனக்கு என்றெல்லாம் கேள்வி.பெரிய தம்பிக்கு அவ்வளவாக மனம் திறந்து பேச முடியாது.
பதினாலு வயதில் என்ன தோன்றும்!

இப்போது போல பயணச்சீட்டு வாங்குவது அவ்வளவு சிரமமில்லை. அப்பாவின் அலுவலகமான(+வீடு)) தபால் ஆபீஸுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் குதிரை வண்டி போகும் தூரம்தான்.:)
அம்மாவுக்கு ஒரு பை. எனக்கு ஒரு சின்ன தோல்பெட்டி. அந்த வருடம்தான் அந்தப் பெட்டிகூட வீட்டுக்கு வந்திருந்தது.
ஒரு ஆறு பாவாடைகள். அதற்கு மாட்சிங்  ஜார்ஜெட் தாவணிகள், ஒரு கலப்படமான எல்லா வர்ணங்களும் பொருந்தும் படியான
ஆறு ஜாக்கெட்கள்.
போதுமா போதாதா கதையெல்லாம் செல்லாது. இவ்வளவுதான்:)

சரியாக மே (ஜூனா?) மாதம் 21 ஆம் தேதிச் சென்னை எழும்பூரில் இறங்கிப் புரசவாக்கம் வந்தாச்சு.
இனம் தெரியாத பயம்.சென்னை எதிராஜ் காலேஜ்!!!

. பாட்டி கரைத்துக் கொடுத்த ரசம்+ சாதம் சப்பிட்டு விட்டு நானும் அம்மாவும் கையில் , அப்ளிகேஷன் ஃபார்ம்,மார்க் ஷீட் சகிதம், மாமா கொண்டுவந்த பேபி டாக்ஸியில் ஏறி எதிராஜுக்கு வந்தோம்.
அங்கே பெரிய கியூ வரிசை எல்லாம் இல்லை.
பிரின்சிபல் மிஸ்.மாத்யூ.

ஒரு ஒன்பது கஜப்புடவை கட்டி ,பின்னின தலையை, ஒரு பின்னல் கொண்டையாகப் போட்டுக் கொண்டு,கையில் என் கையை இறுகப் பிடித்துக் கொண்ட என் அம்மாவும் ,அவ்வளவு பெரிய இடத்தை முதல் முறை பார்க்கும் நானும்,
ஒரு விசித்திரக் காட்சி கொடுத்து இருப்போம்.

அந்த நாள் வரை என் அம்மா எந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கும் வந்ததில்லை.
அவள் தன்னுள் பயந்தாளா தெரியாது. அறைக்குள் நாங்கள் வரிசைப் பிரகாரம் நுழைந்தபோது ஏற இறங்கப் பார்த்தார். ,ப்ரின்சிபால்.

இது என் பெண்.நல்ல பள்ளியில், மூன்றாவது ரான்க். வாங்கிப் பாஸ் செய்திருக்கிறாள்.
நாங்கள் திண்டுக்கல்லிருந்து வருகிறோம்.
இந்தக் கல்லூரியில் இவளைச் சேர்த்துக்கணும்.
இதைச் சொன்னது என் அம்மாவா என்று இப்பவும் யோசிக்கிறேன்.
எப்பவும் இரண்டு மூன்று வார்த்தைகளில் விஷயங்களைச் சொல்லிவிடும் அம்மா
மிஸ்.மாத்தியூ என் மதிப்பெண்களைப் பார்த்தார்.
அப்பா சொல்லியபடி நான் முதல் பாட்ச் எனப்படும் விஞ்ஞானத்தைக் கேட்டேன். கல்லூரியின் கடைசி அப்ப்ளிகேஷன் உன் கையில் இருக்கும்மா. உனக்கு
எஃப் குரூப் எனப்படும் ஆங்கிலம்,லாஜிக், இயற்கைவிஞ்ஞானம்தான் கொடுக்க முடியும்.
அதுவும் உன் ஆங்கில மதிப்பெண்களை வைத்துக் கொடுக்கிறேன், என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அம்மாவுக்கு எனக்கு முதல் பிரிவு கிடைக்கவில்லை என்று புரிந்தாலும் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்ளவில்லை. கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி வெளியே வந்தோம்.

அங்கிருந்து இப்போதைய அண்ணா சாலையில் பதினாறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி புரசவாக்கம் லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார். என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!!
அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்த  வருடத்தில் தான் மாமியாராகப் போகிறோம்    என்றும் நினைத்திருக்க மாட்டார். அதற்கடுத்த வருடம் பாட்டி ஆவோம் என்றும் எதிர்பார்த்திருக்க  மாட்டார். எல்லா நிலைமைகளையும் சமாளிக்கும் பக்குவம்,தைரியம் எல்லாம் நிறைந்த என் அம்மா. எத்தனையோ இன்னல்களைத் தாண்டி வந்து எங்களைக் காத்துப் பின் இறைவனடி ஏகினார்.

Saturday, February 07, 2015

சமாதானக் கடல்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காலை நேர   அலைகள்    அவற்றின் மேன்மை  வந்து விழும்  வேகத்தைப் பொறுத்து அமைவது போல   வாழ்வின் நாட்களும் மெதுவாக மென்மை யாகக் கடப்பதும் அருமையே,.  மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக   இருந்தால்  வாயில் வரும் வார்த்தைகளும்   அமிர்தமாக இருக்கும்.   ஒரு குடும்பத்தின் அத்தனை  உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.
 எனக்கும் கணவருக்குமான வாழ்வில் விட்டுக் கொடுப்பது  நிறைய   நிகழ்வுகளில்  காணமுடியும்.  பல சந்தர்ப்பங்களில் சென்னையை விட்டுப் புறப்படுவது அவருக்குப் பிடிக்காது.   பையன்களையும் பெண்ணையும் கண்டு நேரம் செலவிடுவது   பிடிக்கும் அதுவும் நாட்கள் கணக்காக் இருந்தால் மகிழ்ச்சி. மாதங்களாக நீண்டாலும் பொறுமை இழக்க மாட்டார். தனக்கெ ன்று  ஒரு திட்டம் போட்டுக் கொண்டு மரவேலையில் ஈடுபட்டுவிடுவார்.      அந்தப் பொறுமைக்கெல்லாம் இப்பொழுது நன்றி சொல்கிறேன்.

Monday, February 02, 2015

அப்பா என்னும் அருமருந்து

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அப்பா  என்ற அற்புத மனிதருக்கான  திதி கொடுத்து முடித்தாகிவிட்டது. அவர் தன்  தந்தை தாய்க்கு எப்படி ஈடுபாடு காட்டி சிரத்தையாக   சிராத்தம் செய்தாரோ அதைப் போலவே தம்பியும்  செய்கிறான். வாழ்க அவன் குடும்பம். நாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில் சேதி வந்து தாத்தாவின் அந்திம கிரியைகளைப் பழங்கானத்தத்தில் முடித்துவிட்டு மீண்டுவந்தோம். குல வழக்கப்படி 12மாதங்களுக்கு  திதி கொடுக்கவேண்டும். மாசிகம் என்று பெயர்.   அப்பா அந்த நாட்களில் மதுரையிலிருந்து வைதிகரை வரச் சொல்லிக் காத்திருப்பார். உள்ளூரில் நாகல் நகரில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியரை சாப்பாட்டுக்கு வரச  சொல்லி முதல் நாள் போய் அழைத்துவிட்டு வருவார். அம்மா விறகடுப்பில் முழு சிராத்த சமையலையும் முடித்துவிடுவார்.   எங்களுக்கு பள்ளிக்குப் போகும் முன் உடுப்பி ஓட்டலில் இருந்து இட்லி சட்டினி வந்துவிடும்.  கையில் பழையது தயிர் கலந்த அமிர்தம். டிபன் டப்பியை அம்மா கொடுக்கும் பொதே  சாயந்திரம் வந்து பட்சணங்கள்  சாப்பிடலாம் சரியா என்று சொல்வதே அருமையாக இருக்கும்.  அந்த நாட்களில் அவர்கள் காட்டிய சிரத்தை தான் எங்களைக் கரையேற்றியது என்பதில் எள்ளளவும்  சந்தேகம் கிடையாது.  அந்தப் பெற்றோர்களுக்குத் திதி கொடுக்கும் பேறு பெற்றவனாகிறான் தம்பி. அப்பா நீ ஊட்டிய  பருப்பு சாதத்துக்கும், உழைத்து எங்களுக்குச்   சேர்த்து வைத்த  செல்வம்,புண்ணியம் இவைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இரண்டு சொட்டுக் கண்ணீர் முடியும். எங்கே இருந்தாலும் எங்களைக் காக்கும் வலிமை உனக்கு உண்டு அப்பா.