அழைத்தாலே வருபவனாம் கண்ணன். கூவி அழைத்தால் கட்டாயம் வருவான்.
கதறியே அழைத்தாலும் வராத கண்ணன் தெரியுமா உங்களுக்கு.
ஒரு கஜேந்திரனுக்கு உயிர் பிழைக்கக் கருடன் மேலேறி
பறந்து வரும்போது
கருடனின் வேகமும் அவருக்குப் போதவில்லையாம்.
பக்தனின் வேதனை போக்க,
பறந்து கொண்டிருந்த கருடனின் மேலேயிருந்து குதித்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினான் அந்த ஆதி மூலம்..
ஒரு பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்ற தேர்ச்சக்கரத்தையே சுழற்றிக் கொண்டு
அவரை நோக்கிப் பாய்கிறான்
பாண்டவர்களின் வனவாசத்தில் துர்வாச கோபத்திலிருந்து
அவர்களைத் தப்பிவிக்கத் தன் பசி போக்குவது போல ஒரு பருக்கை அக்ஷய பாத்திரத்தில்
இருந்து எடுத்து, உண்ண,
புயலாக வந்த முனிவர், தென்றலாக அவர்களை வாழ்த்தி செல்லுகிறார்.
இவ்வளவு காத்து இருக்கும் கண்ணன்,
த்ரௌபதி அழைக்கும் போது நேரில் வந்து அவளைக் காப்பாற்றாமல்
ஆடையை மட்டும் அனுப்பி அவள் மானம் காத்தது ஏன்
என்ற விசாரம் எழுந்ததாம் பாகவதர்களுக்குள்.
எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் (இதுவும் இருபது வருடங்களுக்கு முன்னால் தான்)வந்து பல புராண இதிகாசக் கதைகளின் அர்த்தங்களும், அந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும் விளக்கி உதவுவார்.
அவர் எடுக்கப் போகும் வகுப்புகளுக்காகவே காத்து இருப்போம் நானும் எங்க கமலம்மாவும். (மாமியார்)
குழந்தைகளும். அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது.
பகவானைப் பற்றீய பல விஷயங்களில் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வோம்.
அப்போது கேட்ட கேள்விதான் '' கண்ணன் ஆடைகளை அனுப்பித் தான் வராதிருந்த'' காரணத்தைப் பற்றியது.
அதுவும் த்ரௌபதி 'கிருஷ்ணை' என்றே அழைக்கப் படுபவள், அவ்வளவு அதீதப் பாசமும் மதிப்பும் கண்ணனிடம் அவளுக்கு.
இன்னது என்று விளக்கமுடியாத பந்தம்.
அவள் அந்த பாஞ்சாலி, துரியோதனனின் சபையில்
கௌரவகுலப் பெரியோர் மத்தியில் அவள் ஆடை அபகரிக்கப் படும்போது,
அவளின் ஐந்து கணவர்களும் அவளைக் கைவிட்ட நிலையில்,
கண்ணா சரணம் என்று ஓலமிடுகிறாள்.
அதுவும் எப்படி!!ஹே கிருஷ்ணா த்வாரகா வாசி!!
நான் உன்னிடமிருந்து மிகத் தொலைவில் இருக்கிறேன்.
என்னைக் காப்பாற்று. உன்தாள் பரிபூரண சரணம்''
என்று மனம் கொதித்து அழுகிறாள்.
கண்ணனின் காதில் அபயக் குரல் விழுந்ததுமே எழுந்துவிடுகிறான் விரைந்து உதவ.
அடுத்த வார்த்தை காதில் விழுகிறது. ''நீ துவாரகையில் இருக்கிறாய். நான் உன்னிடமிருந்து வெகுதொலைவில்
இருக்கிறேன்''
இதுதான் பஞ்சாலியின் கதறல்.
இப்போது அவனுக்கு அவள் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.அடியவர்களின் வாக்கு மீறாதவன் அவன் இல்லையா.
பீஷ்மர் சபதம் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பது.
பிரஹ்லாதனின் வவர்த்தை ஹரி எங்கும் உளன் என்பது.
அதுபோல இப்போது துரௌபதியின் வாக்கு. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,கண்ணன் துவாரகையிலிருந்தே தன் கருணை பிரவாகத்தை அனுப்புகிறான்.
இன்னும் ஒரு காரணம் உண்டு. அவன் நேரில் வந்திருந்தால் பாண்டவர்கள் வதைக்கு அவனே காரணம் ஆகி இருப்பான்..
சிஷ்ட பரிபாலனம் என்றால் துஷ்ட நிக்கிரகம் அல்லவா.
த்ரௌபதியின் இந்த நிலைக்குக் காரணம் அவளைப் பாதுகாக்க வேண்டிய அவள் கணவர்களே அவளுடைய இந்தத் தீனமான கட்டத்தில் அவளை நிறுத்தி
விட்டார்கள்.இப்போது அவளைக் காக்க நேரில் வந்தால்,
கணவர்களான பாண்டவர்களையும் தண்டிக்க வேண்டிய இக்கட்டான முடிவைக் கண்ணன் எடுக்க நேரிடும்.
அந்த ஒரு காரணத்திற்காகவும் இருந்த இடத்திலிருந்த நகரவில்லை கண்ணன்.
இதெல்லாம் இப்போது எழுத,
கீழே உள்ள செய்தி காரணம்.
தினமலரில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் படித்தது
ஐ ஐ எம் முதலான மேலாண்மை முதுகலைப் பட்டம் அளிக்கும் கல்லூரிகளில் மஹா பாரதமும்,
இராமாயணமும் மனித வள மேம்பாட்டு வகுப்புகளில்
பயன்படுத்தப் படுகின்றன.
முக்கியமாகக் கண்ணன் முக்கிய மேனேஜ்மெண்ட் குரு,பிரதிநிதியாக எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொல்லப் படுகின்றனவாம்.:)))