Monday, December 31, 2007

மலரும் பூக்கள் சொல்லும் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய ,புதிய ஆண்டுக்கான வாழ்த்துக்கள்.
வரும் வருடம் நாம் எல்லோரும் நோய் நொடி இல்லாமல், மன வளம் பெற்று,
உற்றாரோடும் சுற்றாரோடும் மகிழ்ந்து
இணைய நட்புகளுடன் நல்வாழ்வு பெறுவோம்.

2008 ஆம் ஆண்டு இதோ வந்துவிட்டது மகிழ்ச்சியோடு.Posted by Picasa

Saturday, December 01, 2007

டிசம்பர் பூக்கள் ...போட்டிக்கு..

காக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள்.

Posted by Picasa அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ.
நேரில் பார்க்க
இன்னும் அழகாக இருக்கும்.
நவம்பர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அழகான தலைப்புகள் கொடுத்து உற்சாகப்படுத்தும் சிவீஆருக்கு ஸ்பெஷல் நன்றி.

Wednesday, November 21, 2007

அம்மா,குழந்தை+அன்பு


அன்பு எத்தன அழகு மிக்கது எனறு அறிய அருமையான
அனுபவம் ஒன்று கிடைத்தது.
என்
சில காலைகள் தவிர அநேகமாக எல்லாக் காலைகளுமே சன்ஸ்கார்
தொலைக் காட்சியின் சஹஸ்ரநாம துதியுடன் ஆரம்பிக்கும்.
அத்துடன் த்யானம், உடல் பயிற்சி
என்று தொடரும்
இன்றும் நேற்றும் அந்த பயிற்சி முகாமில் ஒரு அன்னையும் அவரது மூன்று வயது மகனும்
பங்கு கொண்டார்கள்.
அந்த மகனையும் கையில் வைத்துக் கொண்டு வெகு தீவிரமாக சின்சியராக
அவங்க செய்ததும்,
செய்ய முடியாத பகுதிகளில் மகனுக்குப் பயிற்சி கொடுத்ததும்,
அந்தக் குட்டியும் ஜிவ் ஜிவ் என்று குதித்துவிட்டு அம்மா முகத்தை''சரியா அம்மா என்று ஆமோதிப்பை எதிர்பார்க்கும் அழகும்,
அவள் அதை வாரி அணைத்துக் கொண்டுமீண்டும் பயிற்சிகளைத் தொடருவதும்
வெகு அழகாக இருந்தது.
தேகப் பயிற்சிக்கு நடுவே ஓய்வு எடுக்கும் நேரங்களில் அவன் அம்மாவை அணைத்தபடி கண்களை மூடிக் கொள்ளுவதும்(ச்சும்மா):))
அதி அற்புதமாக இருந்தது.


அந்த அம்மா,குழந்தையை வீட்டில் விட்டு வந்து இருக்கலாம்.
ஒருவேளை அவனைக் கவனிக்கச்  சரியான ஆள் இல்லையோ.
வேலைக்குப் போகும் அம்மாவோ
அதனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாளோ...
ஒன்றும் தெரியாது.
நாளைக்கும் அவர்கள் வந்தால் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பேன்.:)))
இதில் லாஃபிங் தெரபியும் இருந்தது.
காமிரா வைத்திருப்பவர் அந்தக் குழந்தையைத் தேடிக்
கண்டுபிடித்து அவனோடேயே லயித்த அழகையும் சொல்ல வேண்டும்.

Monday, November 19, 2007

251, வீட்டில விருந்தாளிங்க:))
தமிழில் எழுத ஆரம்பித்துத் தமிழ்மணத்திற்கு வந்து, புது உலகைக் கண்டுபிடித்தோம் என்று மகிழ்ச்சி. புதிததகத் தமிழ்வலைப் பூ ஆரம்பிக்கலாமே என்று சொன்னது நம்ம டீசசரம்மா.(வேற யாரு ஸ்ரீமதி துளசிகோபால்ங்க)
பின்னூட்டம் போட்டு வளப்படுத்தியது அவங்களும்,கீதா சாம்பசிவமும், அம்பியும் தான்.

அப்புறமா வந்தது வடுவூர் குமார்.:))இ.கொ இப்படி வரிசையா நம்ம வலை உறவுகள் கூடிக்கொண்டே போச்சு.அப்ப,
நாச்சியார் ஆரம்ப வரிகளாக '' வந்தவர்களுக்கும் வருபவர்களுக்கும்'' என்ற வார்த்தைகளை உபயோகித்தது
நினைவு வருகிறது.
அப்படி ஒரு நினைவு ஏன் வந்தது இப்போது ஆராய்ச்சி செய்யவில்லை:))
இந்த நாள் வீட்டுக்கு வந்திருக்கின்ற விருந்தாளிகள் மிகவும் இளையவர்கள்.
நமது கவனம் அவர்கள் பக்கம் இருந்தே ஆக வேண்டும்.
அபூர்வமாகத்தானே வருகிறார்கள்.
இதைத்தவிர வேறு சில குட்டிஸும் வரப்போவதாகக் கேள்விப்படுகிறோம்.
அதனால் வலைப்பூ ஆரம்பித்த நல்வேளை
வந்தவர்கள் வருபவர்கள் எல்லாம்
நலமோடு வாழ நம் பிரார்த்தனைகள்.
உறவுகள் நலம் பார்க்கவேண்டுமானால் கொஞ்சம் கணினி அருகில் வராமல் இருக்கவேண்டும்.
நமக்கே தெரியும் அதென்னவோ ஆணி களையறதுனு சொல்றாங்களே.
நமக்கும் இப்ப இந்தச் சுகமான வேலைகள்(ஆணினு சொல்லக் கஷ்டமாக இருக்கிறது) வருவதால்
சிறிய இடைவெளி விட வேண்டியதுதான்.:))
ஏனென்றால் ஒரு நிமிடம் இணையத்துக்கு வந்தால்
அது பலமணிநேரமாக நீள்வது தெரிந்த விஷயம்தானே!!!!!
மீண்டும் சந்திக்கும் வரை.......
கவலையற்று ஆரோக்கியமாக வாழ
வாழ்த்துக்களுடன்.


Thursday, November 15, 2007

250,சின்னக் குழந்தை சேவடி போற்றி..


பாடல்:
சொல்லாத நாளில்லை
குரல்:
டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
ராகம்:
தாளம்:
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச்(சொல்லாத)

கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ

கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச்(சொல்லாத)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட

அன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட

அரஹரசிவ குக மால் மருகா எனஅனுதினம் ஒருதரமாகினும் உன்னைச்(சொல்லாத)
நேற்று டி டி பொதிகையில் சூரசம்ஹாரக் காட்சியை மாலை வேளைச் சூரியனும் கடலும் மஞ்சளும் நீலமுமாக மினுமினுக்க,

முருகன் ,கந்தன்,குமரன்,வேலன்,தண்டாயுதபாணி,அழகன்,
அகங்காரம்,ஆணவம் உருக்கொண்ட
சூரபதுமனை சம்ஹாரம் செய்த காட்சி!!!
கடல் ஆரவாரம்,
அடியார்களின் வெற்றிவேல் கோஷம்,
உண்மையாகவேத் திருச்செந்தூர்க் கடலோரம்
செந்தில்நாதன் அரசாங்கம் ஆகக் காட்சி கொடுத்தது.
இந்த அழகை வர்ணிக்க என் வார்த்தைகள் போதாது.
நன்றி இந்த நேர் ஒளிபரப்புக்கு.
நேரில் போய்ப் பார்க்கமுடியாதவர்களுக்கு
தூர்தர்ஷன் செய்த உபகாரம் மறக்க முடியாது.Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, November 10, 2007

கிருஷ்ணை என்னும் த்ரௌபதி


அழைத்தாலே வருபவனாம் கண்ணன். கூவி அழைத்தால் கட்டாயம் வருவான்.
கதறியே அழைத்தாலும் வராத கண்ணன் தெரியுமா உங்களுக்கு.

ஒரு கஜேந்திரனுக்கு உயிர் பிழைக்கக் கருடன் மேலேறி
பறந்து வரும்போது
கருடனின் வேகமும் அவருக்குப் போதவில்லையாம்.
பக்தனின் வேதனை போக்க,
பறந்து கொண்டிருந்த கருடனின் மேலேயிருந்து குதித்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினான் அந்த ஆதி மூலம்..
ஒரு பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்ற தேர்ச்சக்கரத்தையே சுழற்றிக் கொண்டு
அவரை நோக்கிப் பாய்கிறான்
பாண்டவர்களின் வனவாசத்தில் துர்வாச கோபத்திலிருந்து
அவர்களைத் தப்பிவிக்கத் தன் பசி போக்குவது போல ஒரு பருக்கை அக்ஷய பாத்திரத்தில்
இருந்து எடுத்து, உண்ண,
புயலாக வந்த முனிவர், தென்றலாக அவர்களை வாழ்த்தி செல்லுகிறார்.

இவ்வளவு காத்து இருக்கும் கண்ணன்,
த்ரௌபதி அழைக்கும் போது நேரில் வந்து அவளைக் காப்பாற்றாமல்
ஆடையை மட்டும் அனுப்பி அவள் மானம் காத்தது ஏன்
என்ற விசாரம் எழுந்ததாம் பாகவதர்களுக்குள்.

எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் (இதுவும் இருபது வருடங்களுக்கு முன்னால் தான்)வந்து பல புராண இதிகாசக் கதைகளின் அர்த்தங்களும், அந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும் விளக்கி உதவுவார்.
அவர் எடுக்கப் போகும் வகுப்புகளுக்காகவே காத்து இருப்போம் நானும் எங்க கமலம்மாவும். (மாமியார்)

குழந்தைகளும். அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது.பகவானைப் பற்றீய பல விஷயங்களில் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வோம்.

அப்போது கேட்ட கேள்விதான் '' கண்ணன் ஆடைகளை அனுப்பித் தான் வராதிருந்த'' காரணத்தைப் பற்றியது.

அதுவும் த்ரௌபதி 'கிருஷ்ணை' என்றே அழைக்கப் படுபவள், அவ்வளவு அதீதப் பாசமும் மதிப்பும் கண்ணனிடம் அவளுக்கு.

இன்னது என்று விளக்கமுடியாத பந்தம்.

அவள் அந்த பாஞ்சாலி, துரியோதனனின் சபையில்கௌரவகுலப் பெரியோர் மத்தியில் அவள் ஆடை அபகரிக்கப் படும்போது,

அவளின் ஐந்து கணவர்களும் அவளைக் கைவிட்ட நிலையில்,

கண்ணா சரணம் என்று ஓலமிடுகிறாள்.

அதுவும் எப்படி!!ஹே கிருஷ்ணா த்வாரகா வாசி!!

நான் உன்னிடமிருந்து மிகத் தொலைவில் இருக்கிறேன்.

என்னைக் காப்பாற்று. உன்தாள் பரிபூரண சரணம்''

என்று மனம் கொதித்து அழுகிறாள்.

கண்ணனின் காதில் அபயக் குரல் விழுந்ததுமே எழுந்துவிடுகிறான் விரைந்து உதவ.

அடுத்த வார்த்தை காதில் விழுகிறது. ''நீ துவாரகையில் இருக்கிறாய். நான் உன்னிடமிருந்து வெகுதொலைவில்

இருக்கிறேன்''

இதுதான் பஞ்சாலியின் கதறல்.

இப்போது அவனுக்கு அவள் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.அடியவர்களின் வாக்கு மீறாதவன் அவன் இல்லையா.

பீஷ்மர் சபதம் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பது.

பிரஹ்லாதனின் வவர்த்தை ஹரி எங்கும் உளன் என்பது.

அதுபோல இப்போது துரௌபதியின் வாக்கு. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,கண்ணன் துவாரகையிலிருந்தே தன் கருணை பிரவாகத்தை அனுப்புகிறான்.

இன்னும் ஒரு காரணம் உண்டு. அவன் நேரில் வந்திருந்தால் பாண்டவர்கள் வதைக்கு அவனே காரணம் ஆகி இருப்பான்..

சிஷ்ட பரிபாலனம் என்றால் துஷ்ட நிக்கிரகம் அல்லவா.

த்ரௌபதியின் இந்த நிலைக்குக் காரணம் அவளைப் பாதுகாக்க வேண்டிய அவள் கணவர்களே அவளுடைய இந்தத் தீனமான கட்டத்தில் அவளை நிறுத்தி

விட்டார்கள்.இப்போது அவளைக் காக்க நேரில் வந்தால்,

கணவர்களான பாண்டவர்களையும் தண்டிக்க வேண்டிய இக்கட்டான முடிவைக் கண்ணன் எடுக்க நேரிடும்.

அந்த ஒரு காரணத்திற்காகவும் இருந்த இடத்திலிருந்த நகரவில்லை கண்ணன்.

இதெல்லாம் இப்போது எழுத,

கீழே உள்ள செய்தி காரணம்.

தினமலரில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் படித்தது

ஐ ஐ எம் முதலான மேலாண்மை முதுகலைப் பட்டம் அளிக்கும் கல்லூரிகளில் மஹா பாரதமும்,

இராமாயணமும் மனித வள மேம்பாட்டு வகுப்புகளில்

பயன்படுத்தப் படுகின்றன.

முக்கியமாகக் கண்ணன் முக்கிய மேனேஜ்மெண்ட் குரு,பிரதிநிதியாக எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொல்லப் படுகின்றனவாம்.:)))Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Tuesday, November 06, 2007

248,ஒரு தூண் பாட்டியானது

நம் எல்லோருக்கும் தீபாவளி நல்ல ஆனந்த்தத்தையும், நிம்மதி,ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.நம்பிக்கை வைத்தால் அதுவும் சிறிதும் தளர்வில்லா நம்பிக்கை இறைவனிடம் வைத்த சிறுவன் பிரகலாதன்.,போல் வைக்கவேண்டும்.

ஞானமும் பக்தியும் ஒன்று சேர மாலிடம் சரணம் அடைந்தவன்.எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத அவதார மகிமை.

ஹிரண்யன் எப்போது என்ன கேட்பன், பிரகலாதன் அவனுக்கு என்ன பதில் சொல்வான்

என்று தெரிந்து கொள்ள நம் அழகிய சிங்கப் பெருமான் அத்தனை இடத்தில் அணுக் கூட இடைவெளி இல்லாது நிறைந்து இருந்தான்.

அந்தச் சின்னக் குழந்தைக்குப் பங்கம் வராமல் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிய நரஹரியே !!உனக்கு வணக்கம்.ஹிரண்யன் மகனைப் பார்த்துப் பார்த்து வெதும்புகிறான்

அசுரகுலக் கொழுந்து,

இப்படி நாரணன் நாமம் சொல்லி

தன் எண்ணப்படி உய்யாமல், வேறு வழிப்படுகிறானே என்ற வருத்தம் மேலிட, இன்னும் ஒரு முறை முயற்சிக்கிறான்.நீ சொல்லும் ஹரி எங்கே இருக்கிறான் என்று மகனை விளிக்க,

எங்கும் உளன் என் ஹரி என்று உறுதியுடனும் திண்ணமாகப் பதிலளிக்கிறான் சிறுவன்.வெகுண்டெழும் அகங்காரத்துடன் பக்கத்திலிருந்த ஒரு தூணை உதைக்க,

தூண் பிளந்து நரசிம்மம் வெளி வருகிறது.அதென்ன காட்சி!!!

அந்தத் தூணும் மற்ற எல்லா ஸ்தம்பங்களும் ஹிரண்யன் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.

அதனால் கட்டிடம் கட்டிய போதே ஹரி அங்கே ஆவிர்ப்பவித்து விட்டான் என்று சொல்ல முடியாது!!பன்னெடுங்காலம் காத்திருந்து , தான் அழிக்கப் போகும் அரக்கன்

எங்கே தட்டினலும் வெளிவரத் தயாராக எல்லாத் தூண்களிலும் விஷ்ணு இருந்தானாம்.உலகைப் படைத்த பிரமன், அவனைத் தன் திரு வயிற்று உந்தியில் தாங்கும் பெருமாள்,

அவனையே ஈன்று புறம் தந்ததால் அந்த தூண் பாட்டியாகி விட்டது,.

நரசிம்ஹ அவதார வைபவத்தால்.
பொன்னிற பிடரி சிலிர்த்து எழ,

செந்நிறத் தாமரைக் கண்கள் சீற்றத்துடன் ஹிரண்யனை நோக்க,
சங்கும் சக்கரமும்
மேலிரு கைகளில் இருக்க
மற்ற இருகைகளில் நகங்களால் அரக்கனை இழுத்து
வீட்டு வாயில் படியில் பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதில்
அமர்கிறான் நரசிம்மன்.
சிங்கத்தின் கர்ஜனை கேட்கிறது.
அடுத்த நிமிடம் அரக்கனின் வயிறு கிழிக்கப்படுகிறது.

அவன் வயிற்றிலும் நெஞ்சிலும் ஹரி துழாவிப் பார்க்கிறானாம். ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.

அந்தக் கருணையும் கண்மூடி நாரண ஜபத்தில் இருக்கும் பிள்ளை பிரகலாதனுக்காக!!

ஹிரண்யன் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் பெருமாள் அதே கரத்தைப் பிரகலாதன் தலையில் வைக்கிறான்.

ஒரு க்ஷணத்துக்கு முன்னால் தீ உமிழ்ந்த கண்கள்
பிரகலாதனை வாஞ்சையோடு பார்க்கின்றன.

இனி உன் சந்ததிக்கு தீங்கு செய்யேன்.
உன் வழி பிறந்த வம்சத்திற்கு என்னால்
அரக்க வதை இனி கிடையாது என்று
வரம் கொடுக்கிறான்.
அந்தப் பிரதிக்ஞையால் தான் மஹா பலிச் சக்கரவர்த்தி,
தாத்தா பிரகலாதன் செய்த புண்ணியத்தால்,
வாமன அவதாரத்தில்,
திருமால் காலடியைத் தலையில் தாங்கி, உயிர் பிழைக்கிறான்.

காருண்யா,லக்ஷ்மிந்ருசிம்ஹா
எங்கும் என்றும் சுபிக்ஷம் நிலவ நீதான் அருள வேண்டும்.

அனைத்து வலை நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, November 03, 2007

பிரிந்தோம் சந்தித்தோம்...2

முந்தைய பதிவில் கணினி உடல் நலம் இல்லாமல் போனதை எழுதினேன்.
இவ்வளவு சங்கடப் பட வேண்டிய அவசியம் என்ன.
நிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய மருத்துவத்தைச் செய்தால் போச்சு.
இத்தனை பதட்டம் இருந்தால் மூளை செயல் பாடு குறையும்னு தான் தெரியுமே.
அதான் டாக்டர் ஷ்ஆலினி தினம் சின்ன மூளை, பெரிய மூளை, எப்படி எமோஷன்ஸ் கட்டுப்படுத்தறது எல்லாம் சொல்றாங்களெ
இதைத்தவிர வேளுக்குடி திரு .கிருஷ்ணனின் பகவத் கீதா சாரம் வேற கேட்டாகிறது.
அப்போது கூட ஒரு டிடாச்மெண்ட் வரலை என்றால் வயசாகி என்ன பயன்.

த்சோ த்சொ(இந்த வார்த்தைகள் கூட மத்தவங்க எழுத்திலிருந்து எடுத்ததுதான்:))) )
என்று தலையைத் தட்டி யோசித்தேன்
இந்த உணர்ச்சி பூர்வமான பந்தம்,வருவதற்குக் காரணம் உண்டு.
''எம்ப்டி நெஸ்ட் சிண்ட்றோம்'' கேள்விப் பட்டு இருப்பிர்கள்.
அந்த மாதிரி ஒரு நாள் ,,
நம்மோடு அதுவரை இருந்த குழந்தைகள் அவரவர் பொறுப்புகளைக் கவனிக்க வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.
எனக்கென்று தனிப்பட்ட வேலை ஒன்றும் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் உடல் நலம்
காரணமாக
விட்டாச்சு:))
நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன??
யோசிக்கையில் சின்ன மகனுக்குத் தோன்றியதுதான் இந்தக் கணினி வாங்கும் யோசனை,.
இப்போது புரிந்திருக்கும் எனக்கும் இந்த அழகான அற்புதமான கணிப்பொறிக்கும் உண்டான நட்பு.
இது எனக்கும் வெளி உலகத்துக்கும் என் உறவுகளுக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தது.
இதுவரை கேள்விப் பட்டிராத இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
கடந்த மூன்று வருடங்களாகத் தமிழையும் கொடுத்திருக்கிறது.
சொந்தக் கதை முடிந்து இப்போது வெள்ளிக்கிழமை விவகாரத்துக்கு வருவோம்.
காப்பி குடித்த கையோடு மேஜையருகில் வந்து மீண்டும் ஒரு தடவை ஆரம்பித்தேன்.
திடீரென கணினி பின்புறம் இருக்கும் ஒயர்களை ஒழுங்கு படுத்தலாமே,
ஒரு வேளை ரிப்பேர் செய்பவர் வந்தாலும் இடம் சுத்தமாக இருக்கணுமே:((
மேஜையைத் திருப்பி யுபிஎஸ் ப்ளக்கை எடுத்து விட்டு , தூசியெல்லாம் தட்டி மீண்டும் ப்ளக்கைப் பொருத்திக்
கணினி முன்புறம் வந்தால்...ஆஆஹா!!!
மானிட்டர் ஆன் ஆகிவிட்டது.
All it needed was a complete restart !
கதை முடிஞ்சுதுப்பா.
அதுக்கப்புறம் உடனே போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டேன் படங்களை.
கொஞ்ச நேரம் பிடித்தது.
ஆனால் மறுபடி கீபோர்ட்,நான் ,மானிட்டர்,தமிழ்.
போதும்.
செலவேதும் வைக்காமல் ஒரு குட்டிப் பிரச்சினை, பெரிதாகாமல் தீர்ந்தது.
நன்றி என் கணினிக்கு.
என் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)
நான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??
ஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.
என்ன செய்வது.
கணினி என் சாஃப்ட் கார்னர்:))))

பன்னிரண்டு மணி நேரம் பிரிவு

மன அலைபாயாம இருக்க எத்தனையோ விதமான ஸ்ட்ரெஸ்மேனேஜ்மெண்ட் வழிகள் வந்துவிட்ட நிலையில்,
வயசான காலத்தில் கிருஷ்ணா,ராமானு இருக்காமல்,
இமெயிலில் ஆரம்பித்து, பேரனோட முகம் பார்ப்பதற்காகக் கணினி வாங்கி, பீச்சோரமா இருக்கிற அப்போதைய விஎஸென் எல் லில் கணக்கு ஆரம்பித்து, மாசம் மாசம் பணம் கட்டி ஈமெயில் அனுப்பறத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருந்து(ஏனெனில் மோடம் வேகம் எடுக்க அத்தனை நேரம் ஆகும்):)),

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மோடத்தை நிறுத்தி விட்டு, மத்தவர்கள் யாராவது வீட்டுக்குப்போன் செய்தால் போன் எடுக்கணும் இல்லையா, அதற்காக
இமெயில் +கணினியை நிறுத்தி வேற வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுத் திருப்பி ஒரு மணி நேரம் லாகின் செய்து, பாஸ்வேர்ட் மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டு,(ஒரு எழுத்து மாறினால் கூட படு சிரமம்)
இந்தப் பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றம்.

சின்னக் கணினி,கறுப்பு வெள்ளை திரை மாறி பெரிய ஸ்க்ரீன்,கலர் கலராக வந்த போது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம்.
பிறகு வந்தது விண்டோஸ் எx பி& ஏடிஎஸெல்.
தமிழ்மணம்,தேன்கூடு,இ-கலப்பை,இணையம் தமிழில்.
நண்பர்கள்.
இந்தச் சரித்திரத்தில் சில சமயங்கள் தடங்கல்கள் வந்திருக்கின்றன.
நிபுணர்கள்(!!!) வந்து 6,7 மணிநேரம் உட்கார்ந்து சரிசெய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.அது அந்தக் காலம். விண்டோஸ் 95 போய் 98 வந்தது. இன்னோரு தடவை
சங்கடம் வந்த போது இப்போதைய எக்ஸ் பி நிறுவியாகி
விட்டது.

சரிப்பா முன்னுரை முடிந்துவிட்டது. இப்ப, தலைப்புக்கு வரலாம்:))
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த கணினி வண்டி, திடீர் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
பத்துமாதம் வெளியூர் சுற்றிவிட்டு வந்து , on செய்ததும் உடனே இயங்க ஆரம்பித்த என் உயிர்த் தோழி,
...என்ன பேரு வைக்கலாம்:))
இப்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு(நான்) மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தால் கணினி மானிட்டர் திரை(?) திறக்கவில்லை. அதல பாதாளத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு..

பதிவு போடாட்டாலும் போகிறது. பின்னூட்டமாவது போடலாமே. யார் என்ன எழுதினார்கள் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)

மாலை ஏழு மணியிலிருந்து ஸ்விட்ச் ஆன் செய்யறதும் ,காத்திருந்து ஸ்க்ரீன் வராமல் ஆஃப் செய்யறதும்,
லஸ் பிள்ளையார்,அதுதான் கம்யூட்டர் மானிட்டர் மேலே படத்தில இருக்காரே
அவர்கிட்ட சொல்றதும், பசங்க பேசும்போது சுரத்தில்லாமல் இருக்கிறதும்,
அம்மாக்கு உடம்பு முடியலையானு அவங்க மீண்டும் கேக்கறதும்,
உடனே சிங்கம்,
''கம்ப்யுட்டர்ல ஏதோ கோளாறுப்பா, அம்மா கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கிறா''
அப்படினு மெசஜ் கொடுக்க,
''ப்பூ இவ்வளவுதானா. காலைல யூ கான் கால் சம்படி அண்ட் ரிபேர் இட்'' ணு
அவங்க போனை வச்சாச்சு.
பத்து மணி வரைக்கும் இருபது தடவை இதே ரொடீன்.
படுக்கப் போகும்போதும் எப்படியாவது காலையுஇல் சரியாகிவிடும். ஒரு வேளை மின்சக்தி பிரச்சினையா இருக்கலாம். யு பி எஸ் தகறாரோ என்னமோ.
எப்படியிருந்தாலும் கணினி ரிப்பேர் சர்வீஸைக் கூப்பிட்டுச் சரி செய்துடலாம்.
என்ன பரவாயில்லை. ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.
கோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,
மெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.
ஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.
இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு சமாதானம் சொல்வது போல மனசுக்குள் சொல்லியபடியே தூங்கியாச்சு.
சரியா காலை நாலரைக்கு முழிப்பு வந்ததும்முதல் நினைவு ஐயோ கம்ப்யூட்டர் வராதே என்பதுதான்:)))
தேவையா இந்த நிலைமை.???


பின்குறிப்பு...
அடுத்த ''ஃபாலோ அப் '' பதிவைப் பத்தே வரிகளில் முடித்துவிடுகிறேன்.:))

Friday, November 02, 2007

போட்டா ஃபோட்டோ போட்டி

இவையெல்லாம் பாதைகள். யாரையோ தேடிச் செல்லுகின்றன. எதையோ அடைகின்றன.
பார்ப்பவர்களை யோசிக்க வைக்கின்ற,
பூரிக்க வைக்கின்ற பாதைகள்.
இந்தப் போட்டோக்களை போட்டோ போட்டிக்கு அனுப்புகிறேன்.:))Posted by Picasa

Wednesday, October 31, 2007

வான் வலைப் பூக்கள்...வார்த்தைகள்

நல்ல வார்த்தைகள் சொல்லப் படும்போது வீட்டிலிருக்கும் அஸ்து தேவதைகள் ஆசீர்வதிக்குமாம்.

நல்லது அல்லாத சொற்கள் வேண்டாம் என்பது மூதுரை.
முந்திய பதிவில், உணவு பழக்க வழக்கம்,மற்றும் வலிநிவாரண மாத்திரைகளின் விளைவுகளைப் பற்றி
ஒரு புராணம் எழுதி இருந்தேன்.
எல்லாரையும் பயமுறுத்திவிட்டுப் பிறகு ஒரு டிஸ்க்ளெய்மரும் போட்டேன்.''Allthat begins well ends well''ரொம்பப் பிடித்த வரிகளில் இது ஒன்று. இன்க்யுரபிள் ரொமாண்டிக் என்ற பட்டப் பெயர் வைத்தாலும் சரிதான்.
சுபம்(சுபமாக கல்யாணத்தில் முடிந்து) போட்டாத்தான் படம் பார்க்கவும் பிடிக்கும்.

சரோஜாதேவி தனியாளாக எழும்பூர் ப்ளாட்ஃபாரத்தில் காதலிலே தோல்வியுற்றாள் பாட்டுக்கு நிழலோவியம் போல் நடப்பதைப் பார்த்துப் பாதிப்படத்திலேயே வெளியே வந்த ஞாபகமும் இருக்கிறது.:)))


இந்த எல்லாப் பில்ட் அப் புக்கும் காரணமாக இருப்பது, இன்று நான் வாங்கின ஆல் க்ளியர் ரிபோர்ட்.
டாக்டரம்மா'' எல்லாம் நல்லா இருக்கு. எண்ணை மத்திரம் சாப்பிடாதே.
பசித்தால் வெள்ளரி,தக்காளி சாப்பிடு.
சாக்கலேட்,
குக்கீஸ்,மிளகாய் பஜ்ஜி எல்லாம் கண்ணால பார்த்துக்கோ.
வேக வைத்த கடுகு போடாத காய்கறி ,தண்ணீர் விட்ட மோர்.... இப்படி போகிறது இந்த லிஸ்ட்.
புதிதாக ஒண்ணும் இல்லை.


ஆதலால் இனி கவலை இல்லை. அடுத்த ஆண்டு பரிசோதனையின் போது அறுவைப் பதிவு போடாமல் உங்களையெல்லாமல் காப்பாற்றுவதாக வேண்டுதலும் செய்து கொண்டேன்.


Posted by Picasa

Thursday, October 25, 2007

இதயம் இருக்கின்றதே --இரண்டாவது

வீட்டிலிருந்து வரும்போது இருந்த தைரியம் போய் விட்டது.
வலிக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று மட்டும் சொல்லத் தெரிந்தது.
அங்கே அப்போது தலைமை டாக்டர் திரு.டி.ஜே.செரியன்.
கொஞ்சநாட்கள் முன்னால் தான் என் தம்பிக்கு வைத்தியம் பார்த்தவர்.
அவனைச் சரியான நேரத்தில் காப்பாற்றியவர்.
அவரும் அப்போதுதான் ஐசியூவுக்கு வழக்கமான ரவுண்ட்ஸுக்கு வருகிறார்.
என்னைப் பார்த்ததும் புதுசா, என்று கேட்டவாறு நாடியைப் பிடித்துப் பார்த்து
''she is having spasms. give her immediate attention ''
என்றவாறு
என்னை வெளீச்சத்தில் பார்த்தவருக்கு அடையாளம் தெரிந்து, முகத்தைச் சுருக்கி நினைவு படுத்திக் கொண்டார்.
யூ வில் பி ஓகே என்று தட்டிக் கொடுத்து அடுத்த கட்டிலுக்குப் போய் விட்டார்.
ஸ்பாசமா!! அப்டின்னா சீரியஸா என்று மண்டை குடைய சுற்றி நின்றவர்களைப் பார்த்தால், அவர்கள் என்னோட டயலாக் அடிக்க நேரமில்லாதவர்களாய் சலைன் பாட்டில் ,இஞ்சக்க்ஷன்
, ரிலாக்ஸ்' வார்த்தைகள் சகிதம் வாயிலேயும் ஒரு மாத்திரயைப் போட்டார்கள்.
தூக்கம் வருகிற வேளையில் பெண்ணும் தங்க சிங்கமும் கண்ணாடி வழியாகப் பார்ப்பது தெரிந்தது.
இரண்டு மணி நேரம்தான், தூக்கம் கலைந்து விழித்தபோது நான் வேறு ஒரு தனி அறைக்கு வந்தாகி விட்டது.
பக்கத்தில் அம்மா, அப்பா, பெண்,சிங்கம் எல்லோரும்.
என்ன ஆச்சும்மா, இதற்கு மேல் அப்பாவுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.
எனக்கும் உண்மை நிலை புரியாத்தால் ஒண்ணும் இல்லைப்பா. முதுகு வலின்னு சொன்னதும் மாத்திரை கொடுத்து சரி செய்தாச்சு என்றேன்.
பிறகு வரிசையாக் எல்லா பரிசோதனைகள் தொடர்ந்தன.
முதுகுக்கு எக்ஸ்ரே, வயிற்றுக்கு ஸ்கான், ஈசிஜி இன்ன பிற ஊர்வலங்களாகத் தொடங்கி முடித்ததும்,
டாக்டரும் வந்தார்.
do you know what is wrong with you?
என்றதும் நான் இல்லை என்று தலை அசைத்தேன்.
உனக்கு இன்னும் இரண்டு வாரத்துக்கு வெறும் மோர்க் கஞ்சியும் சாதமும் தான் சாப்பாடு.
காரம், உப்பு ஒன்றும் கிடையாது, கூடாது.
ஒரு நாளுக்கு நாலு வேளை இது தான்.
''
Along with medicines for hypertension, you are going to take treatment for peptic ulcer"
ulcer???
அப்பாவுக்கு அல்சர் வந்ததும் படாத பாடுபட்டு மருந்து சிங்கப்பூரிலிருந்து வாங்கியதும் நினைவுக்கு வர மேலே பேச வாய் வராமல் சும்மா இருந்தேன்.
வயிற்றுப் புண்ணுக்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?
அதைத்தான் பிறகு விளக்கினார். டாக்டர்.
நான் பல்வலி தலைவலி இரண்டுக்கும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்
குறிப்பிட்ட மாத்திரைகள்கள் ,
மாதம் இரண்டு தடவையாவது கடுமையான தலவலி,
முதுகுவலி என்று அந்த அந்த வேளைக்கு ரிலீஃபுக்காக
எடுத்துக் கொண்ட மருந்துகள் வயிற்றைக் கெடுத்து இருக்கின்றன.
வயிற்றில் வலியினால் வந்த வலி அலைகள், முதுகைப் பதம் பார்க்க
முதுகும், மார்பு பக்கமும் சூழும் வலி வந்து இருக்கிறது.
ஒரு தோற்றத்திற்கு அப்படியே நெஞ்சு வலிக்கான(heart attack) அடையாளங்கள் காட்டி இருக்கிறது.
ஒழுங்காகக் கவனித்துக் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் மூன்று நாட்களில் வீடு திரும்பினேன்.
மாத்திரைகளின் உதவியால்
அப்போதிலிருந்து கட்டுப்பாடான சாப்பாடும் மிதமான நடைப் பயிற்சியுமாரம்பித்தேன்.
மனம் அந்தப் பயத்திலிருந்து விடு பட ஆறு மாதங்கள் ஆகியது.

எல்லாவற்றுக்கும்
முதல் காரணம் காலை உணவு சாப்பிடும் வழக்கமே இல்லாமல் 12 மணி வரை பட்டினி கிடப்பது,
2, தெரிந்த தெரியாத வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டாவது வீட்டு வேலைகள் நின்று விடாமல்(!!) நான்
ஓடியது
இன்னும் சில பல சொல்ல விரும்பாத குட்டிக் காரணங்கள்.(அதில் ஆவக்காய் பிசிந்த சாதமும் உண்டு):))
இப்போது இந்த க்ஷணத்தில் இதை நினைவு கூர்ந்ததற்குக் காரணம்,
பெண்கள் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளும் மாதமாக
இந்த அக்டோபர் இருப்பதால் தான்.
வேறு புதிதாக நமக்குப் பிரச்சினை என்று வருவதற்கு முன்னால் நாமே முன்னெச்சரிக்கையாக
வருடம் ஒரு முறை நம்மைப் பரிசோதித்துக் கொண்டு விட்டால்
பாதி துன்பங்கள் வராது என்று நினைக்கிறேன்.
நலம் பெற்று வாழ விரும்புகிறேன்.
அது போல நம் சமூகமும் விழிப்புணர்வோடு ஆரோக்கியமாக
வளம் பெற்று இருக்கப் பிரர்த்திக்கிறேன்.

இதயம் இருக்கின்றதே...

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.(டிஸ்கி வரி)

இதயம்,மனசு இதைப் பற்றி ஒரேயடியாகக் கவலைப்பட்ட வயது ஒரு பதினாறு
அந்த பதின்ம வயதுகளில் தான்:)
வேறு விதமான கவலை. மணியன் நாவல்களீல் வரும் கதாநாயகிகள் போல சிம்பிளாக,ஆனால் அழகாக ,ஏழையாக இருக்கலாம். ஆனால் காதல் தான் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் மதிய இடைவேளைகளில் தோழிகளுடன் பேசிக் கொண்டது உண்டு. அதுவும்
எப்போதும் மனம் தளரக் கூடாது. துணிந்து நின்று கல்லானலும், புல்லானாலும் பேசிய காலங்கள்
அவை.
திருமணம், குழந்தைகள், அவர்கள் வளர்ப்பு, பள்ளிக்கூடம், வேலை மாற்றங்கள், ஊர் மாற்றங்கள்
எல்லாம் பார்த்து திரும்பிய போது நாற்பது வயதாகி விட்டது.
நோய் என்று பெரிதாக எதுவும் அண்டியது என்று கிடையாது. தலைவலிகள்
இருக்கும்,அதைத்தவிர கவலைப் படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அம்மா
கவனமாக நன்றாகப் பேணி வளர்த்த வயிறு.
அதை எவ்வளவு கவனிப்பில்லாமல் விட்டு இருக்கிறேன் என்பது ஒரு சாயந்திர வேளையில் தெரிந்தது.
பெரியவனின் பள்ளி விழா. பெற்றோர்களுக்கும் அழைப்பு உண்டு. இங்கே இதோ நாரத கான சபாவில்
நடக்கிறது.
இருக்கையில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கவனிக்கு மகிழ்ந்து கொண்டிருந்தபோது அந்த முணு முணு வலி ஆரம்பித்தது.
நடு முதுகில் வலி.
அலட்சியம் செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்ததும் உட்கார முடியாமல்
எழுந்து வீட்டுக்கு நடந்து வந்துவிட்டேன். ஏதோ ஒரு இனம் புரியாத பயம்.
வியர்வை,படபடப்பு இவை சேர்ந்து கொண்டதும் அரைகுறை ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் அறிவு
என்னைக் கிலி கொள்ள வைத்து உடனே தேவகிக்கு(ஹாஸ்பிடல்) விரைந்து விட்டேன்.
ஏதாவது இதயம் சம்பந்தப் பட்டதாக இருந்தால்??
ஒருவரும் வீட்டில் இல்லை.பள்ளிகளிலிருந்து வரவில்லை.
தங்க சிங்கத்தையும் எதிர்பார்க்க முடியாது, அவர் ஏதோ கூடுவாஞ்சேரியிலோ,
ஊரப்பாக்கத்திலோ ஏதாவது லாரியைப் பிரித்துப் போட்டு மேய்ந்து கொண்டிருப்பார்.
மொபைல் போனெல்லாம் கிடையாது.
அப்பா அம்மாவைப் பயமுறுத்த மனதில்லை.
அங்கே மருத்துவமனியில் என் வலி பற்றி சொன்னதும் உடனே
ஸ்ட்றெட்சரில் படுக்க வைத்து
ரத்த அழுத்தம் பார்த்து அது எங்கேயோ உயர்மட்டத்தில் உலாவிக் கொண்டிருப்பதாக அங்கே இருந்த டியூட்டி டாக்டர் சொன்னதும்
இன்னும் பயந்து, ஏகத்துக்கு முழித்து சினிமாவில் வரும் வேண்டாத சீன்கள் எல்லாம் நினைவுக்கு வர,
அட ராமா சங்கிலி, வளையல் எல்லாம் பத்திரப்படுத்திப் பெண் கல்யாணத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதி வைக்காமல் வந்தோமே
என்றேல்லாம் நினைவு ஓடுகிறது.
மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்கும் வைத்ததும் கற்பனை அதீததிற்கு ஓடி விட்டது.பிறகு நடந்ததெல்லாம்
கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொண்டு மசாலாவும் சேர்க்க வேண்டி இருப்பதால்,
அடுத்த பதிவில் பார்க்கலாம்.:))

Sunday, October 21, 2007

எங்கும் எப்போதும் வெற்றி

கொலு இருந்த இந்தப் பத்து நாட்களும் பரபரப்பாக, வரவும் செலவுமாக,
சந்தோஷச் சந்திப்புகளாக,பாடல்களும் பக்தியும்

நட்பும் உறவும் பாரபட்சமில்லாமல்
பாசம் கொண்டாடிவிட்டோம்.
ஆண்டாள் மார்கழியில் ''கூடி இருந்து குளிர்ந்தேலோ ''
என்றாள்.
இந்தக் கொலுவின் போது ,அது என்னவோ தனி உற்சாகம் தான். எங்கள் வீட்டுக்கு பத்திரிகைகள் போடும் பையன்
கல்லூரியில் பி.பி.ஏ படிக்கிறான்.
கொலுவிற்கு அவன் கொண்டுவந்து கொடுத்தது அழகான தோரணங்கள்.அவன் வீட்டிலும் நவராத்திரி !!அங்கே அலங்காரத்துக்காகச் செய்தானாம்.
இன்னும் பூக்காரப் பெண். ஸ்பெஷல் பூக்கள் சப்ளை.
இன்னும் நேரம் காலம் இல்லாமல் பந்து தேடும் சாக்கில்
கிளுகிளு சிரிப்போடு வந்து போகும் சின்ன அனிருத்,அஜய்,சாக்க்ஷி எல்லோரும் சந்தோஷத்தையே
கொடுத்தார்கள்.

சுண்டலுக்கு நாங்கள் பாடிய காலம் இல்லை இது.
''நாட் இண்டரஸ்டட்''
என்ன புதிதாக வந்து இருக்கு? இதுதான் கேள்வி:)
எங்க வீட்டில் சாமி பொம்மைகளே அதிகம் என்பதால்
'தாத்தா புதிசா ஒண்ணும் மரபொம்மை செய்யலியா'னு இன்னோரு கேள்வி.

ஆகக்கூடி இப்படியாகத்தானே நிறைவடைந்த நவராத்திரி
நம் அனைவருக்கும் எப்போதும் வாக்கு வன்மையும்,
மனதில் உறுதியும் விஜயலக்ஷ்மி கொடுப்பாள், கொடுக்க வேண்டும்.நம் இணையத் தாரகைகள் மேலும் மேலும் ஒளிசேர்த்து மேன்மையோடு திகழ வேண்டும்.
வாழ்த்துக்களுடன்..
Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Thursday, October 18, 2007

கொலு இந்த வருடம் , போட்டோக்கள்

கொலுன்னு சொல்லியாச்சு.
வந்தவங்க யாருன்னு சொல்லணும்.
மேலே படத்தில இருப்பவங்க எல்லாம் வந்து கௌரவிச்சாங்க.
நம்ம வீட்டுக்கு இல்லை, இன்னொருத்தர் வீட்டுல.
அப்புறம் சுண்டல் இல்லாத கொலுவானு சில பேரு மூக்கு மேல கையை வச்சதால, அதையும் சுட்டுப் போட்டுட்டோங்க.
ரொம்ப நன்றிங்க.Posted by Picasa

0