Wednesday, May 09, 2018

மதுரையில் ஒரு சித்திரை தங்கல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    அன்று மதியம் தாத்தா காப்பி குடித்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பிஸ்கட்
,பேரீச்சம்பழம் கொடுத்துவிட்டு,
 நிமிரவும்,
வண்டி ஓட்டி மாயாண்டி, ஐயா கார் கொண்டு வந்துவிட்டேன் என்று பணிவாகச்
சொல்லவும் சரியாக இருந்தது.

இதோ வரேன் என்று ,சட்டை போட்டுக் கொண்டு, உத்தரீயத்தையும்
அழகாகப் போட்டுக் கொண்டார்.
பாட்டி தயங்கித் தயங்கி அருகே போனார்.
அக்காவிடம் நான் யாருக்கும் சிபாரிசு செய்யப் போவதில்லை.
என்று பட்டென்று சொன்னார் தாத்தா.
இல்லை, ரங்கத்தின் கடைசிப் பையன் படித்து முடித்து
விட்டான். அவனுக்கும் மதுரையில் வேலை கொடுத்துவிட்டால்
அவன் வழியைப் பார்த்துக் கொள்வான்.
என்று பாட்டி முடித்தார்.

யாராவது மானேஜர் கண்ணில் பட்டால் சொல்கிறேன் . அவர்களுக்கு வாக்குக் கொடுத்துடாதே
என்று கறாராகச் சொல்லிவிட்டு
முரளியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

ஊரார் வீட்டுப் பிள்ளையை வளர்த்தால் நம் குழந்தைகள் நன்றாக இருக்கும்னு சொல்வார்கள்
என்று முணுமுணுத்தபடி என்னை பின் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.
உரலை முதலிலேயே அலம்பி வைத்திருந்தேன்.
பாட்டி வந்து குழவியை அல்ம்பி முதலில் ,உளுந்தைக் களைந்து போட்டார்.
அரிசி போடலையான்னு நான் கேட்டதுக்கு,
இதுதான் நன்னா அரை படணும் ஆண்டா. இட்லி மெத்துனு இருக்கணும் இல்லையா
என்று திருக்குறுங்குடி கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

எப்படித் தன் தந்தை வயலில் பாடுபடுவார். பாட்டியும் தன் தங்கைகளும், தங்கள்  அம்மாவுக்கு ,
அந்தப் பாட்டிக்கு  தலைசுத்தல் வருமாம்
உடனே இஞ்சியை அம்மியில் படபடவென்று  தட்டி த் தலையில்  தடவிக் கொள்வார் என்று  செய்து காண்பித்தார்

சமையல் உதவி அப்பளம் இடுவது எல்லாம் சொன்னார்.
மகேந்திர மலையிலிருந்து  எப்படி  அனுமார்  ஸ்ரீலங்காவுக்குத் தாவிச் சென்று சீதையைப் பார்த்தார்,
எப்படி தென் கோடியில் இருக்கும் திருக்குறுங்குடியில் பேசினால் சித்ர குப்தனுக்குக்
கேட்கும்.
   அதனால் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும் என்றும்
அறிவுரை சொல்லி முடிக்கவும், உளுந்து அரைபட்டுப்
பந்து போல உருண்டு வரவும் சரியாக இருந்தது.
அந்த உருண்டு வந்த மாவில்  பபிள் வரதான்னு பாருன்னு அன்று சொன்னதை நான் இன்னும்
மறக்கவில்லை.

தாத்தாவும் முரளியும் வரும்போது  சாயந்திரம் ஆகி இருந்தது.
முரளி கையில் பெரிய பிஸ்கட் டப்பா.
அவன் கண்களில் அதீதப் பிரகாசம் தான் பார்த்து வந்த
அதிசயங்களை என்னிடம் விவரித்தான்.
அது பெரிய பங்களாவாம். எல்லா இடமும் வெள்ளை வேளேர்னு இருந்ததாம்.
வீட்டுக்கு முன்னால் ஒரு குட்டிக் குளமாம்.
அதில் தங்க வர்ண மீன் களாம்.

தாத்தாவோட அக்கா  செக்கச் செவேல்னு எப்பவும் சிரித்தபடி இருந்தாராம்.

தாத்தாவுக்குத் தன் பேரனின் சமர்த்துப் பேச்சைக் கேட்டு
ஒரே மகிழ்ச்சி. ஜயாவும், நாராயணனும் நன்றாக வளர்க்கிறார்கள்.
சொன்ன இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் சீக்கிரம் சென்று விட்டன.
 நானும் பாட்டியும் மீண்டும் டவுனுக்குப் போய் வந்தோம்.
வெள்ளி  சாயந்திரம் வந்த அப்பாவிடம் சொல்ல நிறைய விஷயங்கள்
இருந்தன.  பாட்டி,நார்த்தங்காய், சுண்டைக்காய்,மணத்தக்காளி  எல்லாம் காகிதத்தில் வைத்து கயிறு கட்டிக்க கொடுத்தார்.
கசப்பு சமாசாரம்டா நாராயணா .  இரண்டணா  கொடுத்துட்டு  வாங்கிக்கோ
 என்று சிரித்தார்.
அடுத்த நாள் எனக்குக் கிடைத்த தாழம்பூவையும், மணி மாலைகள்
பட்டுப் பாவாடை எல்லாம் வைக்க ஒரு பெரிய பையும் கிடைத்தது.

மனசில்லாமல் தாத்தா பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு
,திருமங்கலம் வந்து சேர்ந்தோம்.
சித்தப்பா ஜீப்பில் கொண்டு விடுவதாகச் சொன்னதை அப்பா ஏற்கவில்லை.
வாரம் பூராவும் உழைக்கிறாய். ஓய்வு எடுத்துக்கோ.
லக்ஷ்மி அக்கா வந்த பிறகு பார்க்கலாம்.

இதுகளும் அதற்குள் மதராசுக்குச் சென்று வந்துவிடும் என்றதும் எங்களுக்குப்
பழைய மகிழ்ச்சி தொத்திக் கொண்டது. ஆஹா இன்னோரு பயணம்.
 சுபம். கூடத் தொடர்ந்து
வந்த அனைவருக்கும் நன்றி.
தாத்தா