About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, April 28, 2013

2009 இல் இட்ட பதிவு.இப்பவும் இதே.
எதற்கு இவ்வளவு குழப்பம்??

எல்லாம் ஒரு பெயரால் வந்ததுதான்.


சிறு வயதிலிருந்து முகங்களை நான் மறப்பதில்லை. ஆனால் பெயர்கள்??
அது பெரிய விஷயம்.:)

சரி, பத்து வயதில் நாலைந்து தோழிகள். நினைவில் நிற்கும் நபர்கள். பேய்க்கதைகளிலிருந்து, கல்லா மண்ணாக் காலங்கள் வரை
ஒன்றாகக் கழிந்த காலங்கள். யாரையும் மறக்கவில்லை.
அதற்கப்புறம் 18 வயது சினெகிதிகளையும் மறக்கவில்லை. இன்னும் சில நண்பிகளோடு கடித அளவிலாவது நட்பு தொடர்கிறது.

மறதி, ஒருத்தருக்குப் பதிலாக இன்னொருத்தரைச் சொல்வது ,
எங்கள் குழந்தைகள் வளர்ந்து அவர்களுடைய தோழர்கள், தோழிகள்
வர ஆரம்பித்ததும்தான் குழப்பம் ஆரம்பித்தது.

அது என்னவோ சொல்லி வைத்த மாதிரி 'சாந்தி'ல மூணு, 'சரவணன்'ல ரெண்டு, செந்தில் நாலு, கார்த்திக் ரெண்டு ,சம்பத் ரெண்டு என்று
போய்க் கொண்டிருந்தது.

பெண்ணின் தோழிகள் பற்றிக் கூட கவலை இல்லை. கூட்டமா வரும் ஒருத்தருக்கொருத்தர் அழைத்துப் பேசிக் கொள்வதிலிருந்தும் கேட்டுச் சமாளித்து விடுவேன்.

பத்துவருடங்கள் கழிந்து மயிலை மாட வீதிகளில் ஹலோ அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்னும் போது இது முத்து லட்சுமியா, பாமதியா,சௌம்யாவா என்று திணறிவிடுவேன்.

நல்ல வேளையாகக் கைகளில் குழந்தைகள் வைத்திருப்பார்கள்.
'அடச் செல்லமே எத்தனை வயசாகிறது. எல்லோரும் சுகமா'' என்று விசாரித்து விட்டு,பெண்ணின் குடும்ப விஷயங்களை நலங்களைச் சொல்லிவிட்டு 'வரேண்டா' அப்புறம் பார்க்கலாம்.'' என்று
சந்தோஷமாக நகர்ந்து விடுவேன்.

மாட்டிக் கொள்வது பெண் இந்தச் சந்திப்பை இமெயிலில் அந்தப் பெண்ணுடன் சம்பாஷித்த பிறகு,
''ஏம்மா வசுமதியைப் பார்த்தியாமே, என்னிடம் சொல்லவே இல்லையே''
என்பாள்.
ஓ, அது வசுமதியா. மறந்துவிட்டது, அவளுக்குத் தானே அக்கா கல்யாணத்தின் போது சூறைக்காற்று அடித்து இலையெல்லாம் பறந்ததே''
என்று சொன்னால் பெண் தலையில் கைவைத்துக்கொள்ளுவாள்.

''கடவுளே!! அவளிடம் அதைக் கேட்டியா. அது ஸ்ரீவித்யா மா''
என்பாள்.
என்னை அவ்வளவு இங்கிதம் தெரியாதவளா இந்தப் பொண்ணு சொல்கிறதே என்று யோசித்துவிட்டு, ''இல்லையம்மா , அவ அம்மா நியுசிலாந்திலிருந்து வந்து விட்டாளான்னு கேட்டேன்.'' என்பேன்.

அது வெறும் வித்யா. ..'ஒண்ணு பண்ணும்மா.நீ குடும்பமெல்லாம் விசாரிக்காதே. என் விஷயம் பற்றிக் கேட்டாச் சொல்லிவிட்டு ஃப்ரியா விடும்மா'' என்பாள்:)))

பெண் விஷயம் எப்படியாவது சமளித்து விடுவேன்.
இந்தப் பசங்க விஷயம் தான் என்னைப் பல இடர்களில் மாட்டி விட்டிருக்கிறது.

இரண்டு பேருக்கும் முருகனுடைய எல்லா நாமங்களிலும் தோழர்கள் உண்டு. இவனுக்கு ஒரு செந்தில் விஸ்காம் படித்தவன்.
அவனுக்கு ஒரு செந்தில் விவேகா தோழன்., இன்னோருத்தர் பாரதிதாசனில் எம் பிஏ சிநேகிதன்..அதைத்தவிர ஆத்மார்த்தமா வசந்தராஜ்னு ஒரு தோழன் .அவனும் விஸ்காம் லயோலாவில் படித்துவிட்டு மும்பைக்குப் போனவன். கார்த்திக்,சரவணன்,ஷண்முகசுந்தரம்,சிங்காரவேலன்.......
சாமி.. கடவுளே..

இந்தப் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் காலங்களிலும்,அதற்குப் பிறகு சென்னையில் வேலைக்குப் போகும்போதும்,
தொலைபேசியில் அழைப்பு வரும்போது தவித்துப் போய் விடுவேன்.
''அம்மா நான் செந்தில்மா. தலைவர்.........இருக்காரா..... மா''
இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கேட்டால் என்ன சொல்வது:)
''
விருதுநகர்ல இருந்து எப்ப வந்தப்பா. அம்மா அப்பா சௌக்கியமா''ன்னு கேட்பேன்.
அவன் நல்ல பிள்ளை. நீங்க சொல்றது செந்தில் குமார்மா. நான் சென்னைதான் .என்பான்.
அப்போ நீ பெரியவனைக் கேக்கறியான்னு துப்பறிவேன்..
ஆமாம்மா, கூப்பிடுங்க என்று சிரிக்கும் அந்தப் பையன்.

இதெல்லாம் பெரிய விஷயமில்லை. கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், பெண் பெற்றவர்கள், ஆண் குழந்தை பெற்றவர்கள் என்று இரண்டு வருடங்கள் தள்ளி வந்த பிரச்சினைகள் என்னைப் பயங்கரக் குழப்பத்தில் தள்ளிவிட்டன. அந்தக் கதை அப்புறம்:)இதைத்தவிர ........
**************************8

இதன் தொடர்ச்சி இந்தப் பதிவு....
***********************************88


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள் நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில ரேஸ் எல்லாம் ஓடுவியே.கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...
இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.
''
''
அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், ஆஹா இவந்தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும். '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று, வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள் இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாம்னார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''
''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''
எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழவேண்டும்
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
34 comments:

ஆயில்யன் said...

//''கடவுளே!! அவளிடம் அதைக் கேட்டியா. அது ஸ்ரீவித்யா மா''
என்பாள்.
என்னை அவ்வளவு இங்கிதம் தெரியாதவளா இந்தப் பொண்ணு சொல்கிறதே என்று யோசித்துவிட்டு, ''இல்லையம்மா , அவ அம்மா நியுசிலாந்திலிருந்து வந்து விட்டாளான்னு கேட்டேன்.'' என்பேன்.//

எல்லா டாட்டர்ஸும் இப்படித்தானா????

எங்க வீட்ல எங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் இதே வாக்குவாதம்தான் வரும் ஊருக்கு லீவுல வர்றப்ப :)

ஆயில்யன் said...

//விருதுநகர்ல இருந்து எப்ப வந்தப்பா. அம்மா அப்பா சௌக்கியமா''ன்னு கேட்பேன்.அவன் நல்ல பிள்ளை . நீங்க சொல்றது செந்தில் குமார்மா. நான் சென்னைதான் .என்பான்///

:)))))

தமிழ் பிரியன் said...

இந்த குழப்பம் எங்களுக்கு இப்பமே வர ஆரம்பிச்சிடுச்சு.. திடீரென்று ஒருத்தன் எப்படி இருக்க? என்று கேட்க என் பெயர் கணேசண்டா? என்று சொல்லி மறந்திட்டியேடா என்று வருத்தப்பட்டான்.. ;-)

அபி அப்பா said...

வல்லிம்மா நான் தொல்ஸ் என்கிற அபிஅப்பா! செம குண்டா இருப்பேன் நியாபகம் இருக்கா??:-)))

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ....

இங்கே இன்னும் இந்த அளவுக்கு ஆகலைன்னாலும்.....
எதாவது ஒரு அம்மா ( மகளின் தோழிகளின் அம்மாக்கள்) வழியில் பார்த்துட்டு மகளோட பேரை மறக்காமச் சொல்லி விசாரிப்பாங்க. அவுங்க பொண்களின் பெயர் எனக்கு 'பெப்பேப்பே'

பொத்தாம் பொதுவா ஹௌ ஈஸ் யுவர் டாட்டர்ன்னு (அசடு)வழிவேன்.

அவுங்க 'சட்'ன்னு ரேச்சல், லோரா, மீகன், எலிஷா ன்னு (ஏதோ ஒன்னு) ஆரம்பிக்கும்போது 'கப்'ன்னு பாய்ண்ட்டைப் பிடிச்சுக்கறதுதான்:-)))))

கதைக்காக அம்மாம் இடைவெளி விட்டால் எப்படிப்பா? :-))))))

ராமலக்ஷ்மி said...

"யாரு தெரியலையே"

தர்ம சங்கடம் இதைப் போல வேறில்லை:(!

உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் விசேஷ வீடுகளில் தூரத்து உறவினர்களை அடையாளம் தெரியாமல் இதுபோல திணறுவதுண்டு:)!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன்.
போதாக்குறைக்குப் பக்கத்து வீட்ல வேற ஒரு செந்தில் இருந்தான். அவன் அடிக்கடி அவன் அம்மாவை மாடிலேருந்து குதிப்பேன்னு பயமுறுத்துவான்.அதனால அவனுக்கு குதி !!செந்தில்னு பேரு:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ,பொண்ணுங்களுக்குப் பிறந்த வீட்ல அலம்பல் ஜஸ்திதான்:)ஆயில்யன்.

வல்லிசிம்ஹன் said...

அடப்பாவமே.
இப்பவேயா. என்ன தமிழ் பிரியன் சொல்றீங்க!!
வேற ஒண்ணுமில்ல. வேலை அப்படி.
எனக்கு வஞ்சனையே இல்ல. சிலசமயம் தெரியாதவங்களுக்குக் கூட ஹலோ சொல்லிவிடுவேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,தொல்ஸா!!
ஓ தெரியுமே. அந்த திருணாமலை ,செஞ்சி ட்ரிப்ல குரங்கு ராதாவோட கூத்தடிச்சது நினவு இருக்கே.
பாவம்பா அந்த வாத்தி.:)))

குண்டா, ம்ஹூம். உங்க அம்மா போட்ட செவ்வெண்ணெயெல்லாம் முழுங்கிட்டு ஒல்லியாவே இருந்தியேப்பா. மறக்க முடியுமா:)))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா இன்னோரு குழப்பவாதியா.:)
துளசி,

ம.தோ.அ வோட நிறைய வச்சுக்கறது இல்ல.

பொண்ணுங்க புராணம் ஆரம்பிச்சுடுவாங்க. நமக்கு ஒரு சந்தர்ப்பமும் நினைவுக்கு வராது. மாட்டிக்குவோம்.
விஜு அம்மா(நான்) ரொம்பத்தான் அலட்டல்னு வேற பேரு.
:(((

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
கல்யாண வீட்டுக் கதைகள் தனி.

எல்லாப்பாட்டிக்கும் நல்ல நினைவு. கம்ப்யூட்டரை விட பவர்ஃபுல்.
அச்சடிச்ச மாதிரி அப்படியே பாட்டியைக் கொண்டு இருக்கியேன்னு கேட்டா ஆ. ஆமாம் ஆமாம்னு
நழுவப் பார்த்தாலும் உன் பிள்ளைக்கு அப்புறம் ரெண்டாவது பிறந்ததோன்னு வேற கேப்பாங்க:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இது என்ன பிரமாதம் .. நான் சின்னவயசிலிருந்தே இப்படித்தான்.. இவ உன்கூட 5 வருசம் முன்ன படிச்சாளேன்னு அம்மா தான் அறிமுகப்படுத்தனும். இல்லாட்டி அவங்கவங்களே ஏடி என்ன மறந்துட்டியான்னு அறிமுகப்படுத்திப்பாஙக். இப்ப நிலைமை ரொம்ப மோசம்.. எதோ என் குடும்பத்தாரை மறக்காம இருக்கேனேன்னு மகிழ்ந்துக்கனும்.. :)

சென்ஷி said...

:-))

வல்லிம்மா! நான் ஷார்ஜாலேந்து சென்ஷி... அனேகமா நம்ம பேர்ல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நினைக்குறேன். நம்ம பதிவை படிக்க முடியாதது தவிர!

வல்லிசிம்ஹன் said...

கயல் முத்து, இது ரொம்ப மோசம். கூடப் படிச்சவங்களை மறக்கிறதுன்னா,
உங்களுக்கு மறதிதிலகம் பட்டம் கொடுக்க வேண்டியதுதான்:)

எங்க அம்மாவுக்கும் நல்ல மெமரி.
என் பிள்ளைகளுக்கும் அப்படியே.
இதுல நாந்தான் மிஸ்ஃபிட்.:)

வல்லிசிம்ஹன் said...

ம்ஹும். மறக்க முடியாத பேரு. ஆளே நினைவு இருக்கே.!!
ஆமாம்.
மறக்க முடியாத பெயர்.உங்களை இந்த லிஸ்டில் சேர்க்க முடியவில்லை:)

கீதா சாம்பசிவம் said...

வல்லி, நான் கீதா, அம்பத்தூரிலே இருந்து, என்னை நினைவிருக்கு இல்லை? எங்க வீட்டிலேயும் இதே கூத்துத் தான், ஆனால் நான் இல்லை, அவர். நீங்களாவது பெயரை ஒத்துக்கறீங்க. என்னவர் பெயரையே மாத்திடுவார். ஆசைத்தம்பிக்கு அன்பழகன், சந்திரசேகருக்கு, குமார், அப்படினு அவர் இஷ்டத்துக்குப் பெயர் வைப்பார். திராச சார் கூப்பிட்டப்போ அவரோட நண்பர் சந்திரசேகர்னு நினைச்சு, என்னடானு கூப்பிட்டுப் பேசி, அவர் என்னைக் கேட்டதும் தான் மனுஷனுக்கு உறைச்சிருக்கு. அசடு வழிஞ்சதே பார்ப்போம்!

உங்க பதிவைப் படிச்சுட்டுச் சிரிச்சுச் சிரிச்சு இருமல்! :)))))))))))))))))))))))))

மடல்காரன்_MadalKaran said...

நினைவும் மறதியும் இறைவன் பரிசு. எனக்கு ஞாபக மறதி இல்லை என்பதை மட்டும் இன்னும் சிலர் மறக்காமல் சொல்வார்கள் :)

அன்புடன், மடல்காரன்

கோபிநாத் said...

வல்லிம்மா...சூப்பராக எழுதியிருக்கிங்க....ஒரே சிரிப்பு
;-))))))))))))))))

\\அவனும் விஸ்காம் லயோலாவில் படித்துவிட்டு மும்பைக்குப் போனவன். கார்த்திக்,சரவணன்,ஷண்முகசுந்தரம்,சிங்காரவேலன்.......
சாமி.. கடவுளே..\\

ஆனாலும் கடவுள் உங்களை ரொம்ப சோதிச்சி இருக்காரு ;))

வல்லிசிம்ஹன் said...

கீதா, உடனே மறக்க வழக்கம் இல்லையே:)
கொஞ்ச வருடங்கள் ஆனால் கூட இப்ப இருக்கிற தோழிகளையெல்லாம் மறக்க மாட்டேன்.

நான் சொல்கிறது எனக்கு மறதி நிறைய இருந்த நாட்கள். ஒருபத்துப் பதினைந்து வருடங்களாக என்னுடன் இருந்தது. இன்னமும் கொஞ்ஜ்சம் இருக்கு.

உங்க இருமலைப் பத்திதான் கவலையாக இருந்தது.
கவனித்துக் கொள்ளவும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதன் மடல்காரன், மறதி நல்ல மருந்து. பாதி மற்திதான் அபாயம்:)))
இப்ப உங்களை நான் மறக்கவில்லை பாருங்க.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபிநாத்.
ஆங்க்!! இப்ப ஞாபகம் வருகிறது. பெரியவனுக்குக் கோபிநாத்னு ஒரு தோழன் இருக்கான்.
முகம் நினைவில்லை.
உங்களைஎனக்கு நினைவு இருக்கு. நீங்க திருச்சில இருக்கீங்க இல்ல:))))

மதுரையம்பதி said...

என் அப்பா-அம்மாவும் நீங்கள் எழுதியது போலதான் :-).

அருமை..ரசித்துப் படித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. நாங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அதான் இப்படி இருக்கோம்.

சந்தனமுல்லை said...

:-) நல்லாருந்துது வல்லியம்மா பதிவு! ஆமா, உங்க பொண்ணு சொன்னமாதிரி ஃப்ரீயா விடுங்க..ஆனா அபி அப்பா காமெடி தாங்கலை..:-))

வல்லிசிம்ஹன் said...

ஃப்ரீயா விட்டாச்சும்மா முல்லை:)
அபி அப்பா மாதிரி இனி எழுத யாராவது புதுசா வரணும். .
எனக்கு டல்லா இருந்தது என்றால் அவர் பதிவு போய்ப் படிச்சுடுவேன்:)

Geetha Sambasivam said...

//எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)//

ஹிஹிஹிஹிஹி, மறுபடியும் ரசிச்சுப் படிச்சுச் சிரிச்சேன். இனிய காலையாக ஆயிடுத்து. :)))

நம்ம எங்கள் ப்ளாக் "கெளதமன்" நம்ம ரங்க்ஸ் கிட்டே மாட்டிண்டு முழிச்சது தனிக்கதை. ஒரு நாள் விபரமாப் போடணும். நல்லவேளையா ஏதோ விபரீதம்னு புரிஞ்சு நான் ஓடி வந்து தொலைபேசியை வாங்கிக் கொண்டேனோ பிழைச்சார். :))))))))))

அதே மாதிரி திராச சார், மெளலி போன்றோர் மாட்டிக் கொண்டு விழிச்சிருக்காங்க. :)))))))

கோமதி அரசு said...

நல்ல நகைச்சுவை .
கலயாணபரிசில் தங்கவேலுவின் மனைவி தங்கவேலுவிடம் தன் மாமாவை அறிமுகம் படுத்தி வைக்க தங்கவேலு அது தான் தெரியுமே நம் கல்யாணத்தில் அங்கும் இங்கும் ஓடி காலை உடைத்துக் கொண்டாரே என்று சொல்வதும் அவர் மாப்பிள்ளை நான் கலயாணத்திற்கே வரவில்லையே என்பதும்,ஒரே சிரிப்பு. அந்த நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்து விட்டது.
எப்படியோ குடும்பத்தார் எல்லாம் நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் உங்களால்.

ஸ்ரீராம். said...

ஏப்ரல் 28, 2013 என்று இருக்கிறது. ஆனால் பழைய பின்னூட்டங்களாகத் தெரிகின்றன. என்ன இது? ஓ.... மீள் பதிவா? ரசித்தேன்!

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கோமதி. வாய் நிறைய போண்டாவை வைத்துக் கொண்டு,
ஏன் தெரியாது. இவர்தானெ கல்யாணத்தில அங்கயும் இங்கயும் அலைந்து கீழ விழ்ந்து காலை உடைச்சுக்கித்தார்'' என்று சொல்லும்போது சரோஜாம்மா முகத்தைப் பார்க்கணும்.
இப்போ அதுமாதிரி ஏது நகைச்சுவை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், இப்போது நாச்சியார் அப்டேட் ஆகிவிட்டதா.
ஆகியிருந்ததால்தான் பின்னூட்டம் இங்கே வந்திருக்கு.
ரொம்ப நன்றிமா.

கோவை2தில்லி said...

நல்ல சம்பவங்கள். ரசித்து சிரித்தேன். இப்போத் தான் எனக்கு கொஞ்சம் மறதி ஆரம்பிச்சிருக்கு...:) மகள் ஞாபகப்படுத்துவாள்...:))

கோவை2தில்லி said...

எங்க வீட்டு சம்பவத்தை மறந்திட்டேனே....

என் கணவருக்கு ஊருல இருக்கற எல்லார் பேரும் ஞாபகம் இருக்கும். சமயத்தில என் பெயர் மறந்திடும்....

அப்போ ”ஹலோ”ன்னு சொல்வார். இதை எங்கே போய் சொல்ல...:))

இதை பற்றி இந்த பதிவுல கூட சொல்லியிருப்பேன்..

http://kovai2delhi.blogspot.in/2011/03/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... நம்ம கதை கூட இங்கே படமா ஓடிட்டு இருக்கு போல இருக்கே!

நமக்கு மறதி ரொம்பவே ஜாஸ்தி. ரொம்ப நாள் நெய்வேலில இருந்துட்டு, தில்லி வந்தாச்சு. தில்லில இருந்து நெய்வேலி போகும்போது பலர் என்கிட்டே பேர் சொல்லி பேசுவாங்க, அவங்க யாரு, என்ன சொல்லி கூப்பிடறதுன்னு ஒரு பெரிய குழப்பமா இருக்கும். ஹி ஹி ஹின்னு இளிச்சு சமாளிப்பேன். சில சமயங்களில் ரொம்பவே சொதப்பினா, ‘தில்லி போனதும் ரொம்பவே மாறிட்டடா!’ ந்னு சொல்லும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கும்.....