Sunday, January 24, 2010

தீப்பெட்டி லேபல்களைச் சேர்த்தது உண்டாஇந்த நீலப் பறவையும் ஐந்து தம்படிதான்

ஐந்து தம்படி தீப்பெட்டி .
சிறிய வயது பழக்கங்கள்,ஆசைகள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
திருமங்கலத்தில் நங்கள் இருந்தபோது ,சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலையின் ஆதிக்கம் எங்கள் ஊர் வரை நீண்டிருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தாண்டியிருந்த ஒரு சின்ன போர்ஷனில்,திண்ணையில் வைத்து
இந்தத் தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் சட்டங்களும் தீக்குச்சிகளும்
ஒரு பெரிய லாரியில் வந்து இறங்கும். அந்த வீட்டிலிருந்த அனைவரும்

உடனே முனைப்பாக வேலையில் இறங்கி விடுவார்கள்.
நான் ,விடுமுறை நாட்களில் ,
பெற்றோர் மத்தியான தூக்கத்தில் ,ஆழ்ந்ததும் உச்சிவெயில் சுட்டெரிக்கும் 1 மணிக்கு,நான் வாயில் கதவைச் சத்தம் போடமல் திறந்து ,ஓடி விடுவேன் அந்த வீட்டிற்கு.

அம்மாவும் ,பெண்பிள்ளைகளும்,ஒரு அண்ணனுமாக கட்டைகளில் உள்ள பள்ளங்களில் ,
மருந்து இடப்படாத குச்சிகளை அவர்கள் அடுக்கும் வேகம் என்னை அதிசயிக்க வைக்கும்.
மிகவும் கெஞ்சிய பிறகு எனக்கு ஒரு சிறிய வேலை கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு குச்சியாக அத இடத்தில் வைத்து முப்பது குச்சிகள் கொண்ட

மரத்தகடை கொடுப்பதற்குள், அவர்கள் இருபது முடித்திருப்பார்கள்.
சரியாக நான்கு மணிக்கு,
அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் வண்டி வரும்.
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு ஐம்பது மரப் போர்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்குஒரு சிறிய தொகை கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு அன்றைக்கான மளி''சாமான்களை வாங்கப் பறக்கும் சிறுமிசெல்வியோடு நானும் போவேன்.

கொஞ்சம் வெங்காயம்,கொஞ்சம் பயறு, கொஞ்சம் கடலைப் பருப்பு, பொறுக்கி எடுத்த சின்னக் கத்திரிக்காய்,தக்காளி,மிளகாய்த்தூள்.மல்லித்தூள்,பூண்டு ரெண்டு பல்லு.,கொஞ்சம் மஞ்சள்தூள் என்று சிறிய பொட்டலங்களாகவே பையில் போட்டு வாங்கி வருவாள்.

என்ன செய்யப் போறீங்க செல்வின்னு நான் கேட்டால் ''குளம்பும் ,சோறும்தான்'' என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மறைவாள்.
சற்று நேரத்தில் விறகு வாசனை, புழுங்கல் அரிசி கொதிக்கும் அருமையான மணம், அதற்கு மேல் கத்திரிக்காயும், குழம்பு மசால அரைத்துவிட்ட கலவையின் மணம் மூக்கைத் தாக்கும்.

அப்போது வருவான் சின்னத்தம்பி,
'அப்பா...... ஆண்டாள் இங்க இருக்கான்னு ''கத்திக் கொண்டே வீட்டுக்கு விரைவான்.
நேரமாகிவிட்டதையும்,
அப்பா போட்டு வைத்த கணக்குப் பாடங்களையும் முடிக்காததை அப்போதுதான் உணர்வேன்.
பிறகென்ன ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு.

இது போல நாலைந்து ஞாயிறுகள் ஓடியபின், ஒரு நாள் செல்வி என்னிடம் சில தீப்பெட்டிப் படங்களைக் கொடுத்தாள்.
முன் பின் அது போலப் பார்த்ததில்லையா.'என்னப்பா இது?" என்று கேட்டால் தீபாவளி சமயத்தில் அந்தத் தீக்குச்சிகள் வைத்து வரும் அட்டைப் பெட்டியில் இந்தப் படங்கள் ஒட்டிவரும் என்று சொன்னாள்.
அதில் கிடைத்த படங்களின் அளவு,மூன்று அங்குலம் இண்டு இரண்டு அங்குலம் அளவில் இருக்கும். மறக்கமுடியாத தத்ரூபம்
ஒரு புலித்தலை, ஒரு சிறுத்தையும் மரவெட்டியும், இரண்டு அணில்கள், இப்படி வித விதமான படங்களை அவைகளின் புது கந்தக வாசத்துடன் கொடுத்ததை இன்று வரை மறக்க முடியவில்லை.

என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு
இவற்றையும் சேர்த்து நெடு நாட்கள் கவனமாகப் பாதுகாத்தேன்.

பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை.
இப்பொழுது பேரன் அனுப்பிய
அவனுடைய கலெக்ஷன் போட்டோக்களைப் பார்த்ததும் பழைய படங்கள் நினைவு வந்தது.:)
கூகிளில் கிடைத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பாரத மாதாவைப் போற்றும் யானை .

இதெல்லாம் விட நாங்கள் விரும்பிச் சேகரித்தது, பெரிய அளவில் வரும்

புலி போட்ட அட்டைகள் தான்.
எல்லோரும் வாழ வேண்டும்.