Friday, May 29, 2009

விஷமக்காரக் கண்ணன்:)


இரண்டு வயசுப் பிள்ளைகள் துறு துறு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.
சிலது சத்தமில்லாமல் விஷமம் செய்யும்.
சிலது சொல்லிட்டுச் செய்யும்.
இதில இரண்டு வகையும் எங்க வீட்டில் இருப்பது வான் வழி வந்த செய்திகள்:)
பேத்தி சத்தம் போடாமல் இருந்தால் எதோ கிழி பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
என்னா ராஜாத்தி செய்யறேன்னா, சமத்தா இருக்கேன் பாட்டி என்று பதில் வரும்.
அவளுடைய பிடித்த ஆசைகள்.
பிடிக்காத உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லும்போது,தூக்கம் வருவது போல நடிப்பது.
பிடித்த நூடுல்ஸ் வந்தால், உடனே கண்கள் விழித்துவிடும்.:)
ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே விழுந்திடுமே என்று சிரிக்கிறது.
இந்த ஸ்விஸ் மாயப் பெண் ணைத் தாண்டிப் போனால்,
அங்கே சிகாகோல இருக்கானே மாயக் கண்ணன்.
அவன் இன்னும் தாங்க முடியாத விஷமம்.
கண்மூடித்திறப்பதற்குள் சகல விஷயங்களையும் கொட்டி விடுவான்.
நேற்று அவனை அழைத்துக் கொண்டு டார்கெட் கடைக்கு வீட்டூக்கு வேண்டிய பொருட்கள் வாங்கப் போயிருக்கிறாள் பெண். கூடவே பாடிகார்ட் அண்ணனும் வந்திருக்கிறான்.
வண்டியில் போதித்துக் கொண்டே வந்திருக்கிறாள்.
ஒன்றும் எடுக்கக் கூடாது. கொட்டக் கூடாது.
எடுத்தால் அங்கயே விட்டுவிட்டுவந்துவிடுவேன், என்று சொல்லி
மால்'உக்குள் நுழைந்ததது, அங்கே இருக்கிற தள்ளு வண்டி சிம்மாசந்த்தில் உட்கார்ந்தபடிப் பார்த்துக் கொண்டே வந்தவன்,
இவள் கவனமாக எடுத்து வைக்கும் ஷாம்பூ பாட்டில்களையும் பற்பசை டப்பாக்களையும் நோட்டம் இட்டிருக்கிறான்.
''இதெல்லாம் தொடக் கூடாது . கொட்டினா வேஸ்ட் ஆயிடும்'' என்ற படி சொல்லி இருக்கிறான்.
பிள்ளை திருந்தின மகிழ்ச்சியில் அவளும் கவனத்தைச் சற்றே தளர்த்தி, கவுண்டரில் பணம் செலுத்தும்
அந்தக் கணத்தில் நொடிக்குள் அந்தப் பிரம்மாண்ட பற்பசைப் பெட்டியைப் பிரித்து ஒரு பசை டியுபைத் திருகி, பசையை அந்த கார்ட்(cart) முzhuவதும் பிதுக்கியிருக்கிறான்.
தன்னைச் சுற்றி மிந்த்(mint) வாசனை பரவுகிறதே என்று அநேகர் திரும்பி இருக்கிறார்கள். ஐயா, அவ்வளவு பசையையும் அழகாக அந்த வண்டியின் ஓரங்களில் தடவி விட்டார்,
அண்ணனுக்கு பதட்டம்.
அம்மா ''லுக் அட் ஹிம்''. என்றவாறு அவனும் அந்தப் பசையில் கைவைத்துத் துடைக்கப் பார்த்திருக்கிறான்.
அதற்குள் உதவியாளர்கள் துடைக்கும் காகிதங்களைக் கொண்டுவர.
ஒரு வேலை முடிந்த கையோடு , ஷாம்பூ பாட்டிலையும் மூடி திறந்து கொட்ட முயற்சித்திருக்கிறான். நல்ல வேளை பெண் ,அதைப் பார்த்து
பறித்துக் கொண்டுவிட்டாள்.
இன்று யாஹூவில் பேசும்போது ''ஏண்ட பையா இந்த விஷமம் செய்யறேன்னு கேட்டால்,
நல்ல வாசனையா இருக்குப் பாட்டி, உங்கிட்ட ஷாம்பூ இருக்கா'' என்று கேட்டு என்னைக் கலக்கி இருக்கிறான்.
நினைத்தாலே சில் என்று இருக்கிறது.:))))
15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண்ணனை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.