About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, July 01, 2008

சதுரங்கம்...நீயும் நானுமா?புதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும் மடிகணீனி சாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.

மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.

கண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.
இல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா
அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும், பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதான்..

இதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது
நானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த
மூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன்.(சீ)

இந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.
ஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்குப்பா..

முதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))
அப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.

பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.
செக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.

பின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.
இப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(

அடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
இதுக்காக மாக்ருடில போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.